You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியர்களின் 'கத்தி விழுங்கும் கலை' மருத்துவத்துறையை மாற்றி அமைத்தது எப்படி?
- எழுதியவர், வக்கார் முஸ்தபா
- பதவி, பத்திரிகையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர்
19-ஆம் நூற்றாண்டில் நடந்த ஒரு சம்பவம்.
ஒரு நபர் தன் தொண்டைக்குள் லாவகமாகச் செலுத்திகொண்ட கத்தி சில நிமிடங்களில் மீண்டும் வெளியே வந்தது.
டாக்டர் அடோல்ஃப் குஸ்மால் ஒரு மாலை வேளையில் ஜெர்மனியின் ஹைடெல்பெர்க் தெருக்களில் நடந்து சென்று கொண்டிருந்தபோது இந்த காட்சியைக் கண்டார்.
ஒரு நபர் கத்தியை விழுங்குவதைக் கண்டு டாக்டர் குஸ்மால் அதிர்ச்சியடைந்தார். "இந்த அணுகுமுறையை மனித உடலுக்குள் செய்யப்படும் பரிசோதனைகளுக்காக பயன்படுத்த முடியுமா?" என்ற கேள்வி அப்போது அவரது மனதில் எழுந்ததாக ராபர்ட் யங்சன் தனது 'தி மெடிக்கல் மேவரிக்ஸ்' (The Medical Mavericks) புத்தகத்தில் கூறுகிறார்.
வாள் அல்லது கத்தியை விழுங்குவது ஒரு பழங்காலத் திறமை என்றும் இந்தக் கலை சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தொடங்கியது என்றும் ஆராய்ச்சியாளர்கள் லாங் மற்றும் பைன் கூறுகின்றனர்.
இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்கு வந்த கலை
19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வெளியான ஒரு பத்திரிகை கட்டுரையில் "வாளை விழுங்கும் கலை இந்தியாவிலிருந்து பிரிட்டனை அடைந்தபோது இந்தச் செயல் நம்பமுடியாத ஒன்றாகக் பார்க்கப்பட்டது" யில் கூறப்பட்டுள்ளது.
1813-ஆம் ஆண்டில் லண்டனில் வசித்த இந்திய கழைக்கூத்தாட்டக் கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட 'வாளை விழுங்கும்' சாகசங்கள், யாரும் செய்ய முடியாத ஒரு புதிய மற்றும் வியக்கத்தக்க சாதனை என விளம்பரப்படுத்தப்பட்டன.
இதேபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலும் சுற்றுப்பயணம் செய்துள்ளனர். வாளை விழுங்கும் புதுமையான செயல் மக்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்தது என 'தி டைம்ஸ்' பத்திரிகை கூறுகிறது.
இந்திய மேஜிக் நிபுணர்கள் வாள் விழுங்கும் நிகழ்ச்சியால் லண்டன் நகரத்தை திகைக்க வைத்தனர். 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில், இந்தக் கலை ஐரோப்பா உட்பட உலகம் முழுவதும் பரவியது.
நோய் கண்டறிய பயன்பட்ட வாள் விழுங்கும் கலை
"டாக்டர் குஸ்மால், வாள் விழுங்கும் கலையை அறிந்த 'அயர்ன் ஹென்றி' (இரும்பு ஹென்றி) என்பவரது உதவியுடன், நோய் ஆய்வுகளுக்காக உணவுக்குழாய் வழியாக உடலில் ஆழமாகச் செல்லக்கூடிய வகையில் ஒரு சாதனத்தை உருவாக்கினார்," என ஆராய்ச்சியாளர்கள் லாங் மற்றும் பைன் கூறினார்கள். 1868-இல் 'அயர்ன் ஹென்றி'க்கு எண்டோஸ்கோபி செய்யப்பட்டது என்று எழுதுகிறார் எலிசா பெர்மன்.
“டாக்டர் குஸ்மாலால் ஒரு நோயாளியின் உணவுக்குழாயில் இருந்த புற்றுநோய் கட்டியை சரியாக பார்க்க முடியவில்லை. எனவே அயன் ஹென்றி உதவியுடன் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 47 செ.மீ. நீளமுள்ள ஒரு குழாயை விழுங்கினார் அயன் ஹென்றி. கண்ணாடி மற்றும் எண்ணெய் விளக்கின் உதவியுடன், வயிற்றில் உள்ள உணவுக்குழாயை குஸ்மாலால் தெளிவாக பார்க்க முடிந்தது," என எலிசா கூறுகிறார்.
அதேசமயம், வாளை விழுங்குவது ஒரு ஆபத்தான வித்தையாகும். அது மரணத்திற்கு கூட வழிவகுக்கும். பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், கத்திகளை விழுங்குபவர்களுக்கு குடலில் இரத்தப்போக்கு மற்றும் உணவுக்குழாயில் கடுமையான காயங்கள் ஏற்படுகின்றன என தெரியவந்தது.
மருத்துவ பரிசோதனைகளில் வாள் விழுங்குபவர்கள் மிக முக்கிய பங்கு வகித்தனர். ஆனால் இது மிகவும் ஆபத்தானது. யாரேனும் இதை சுயமாக முயற்சி செய்தால் உயிருக்கு ஆபத்தானதாக மாறிவிடும்.
1897-இல் ஸ்டீவன்ஸ் என்ற ஸ்காட்டிஷ் மருத்துவர், வாளை விழுங்கும் வித்தை அறிந்த ஒரு நபரின் உதவியோடு தொடர்ச்சியான பரிசோதனைகளை மேற்கொண்டார் என ஆல்பர்ட் ஹாப்கின்ஸ் கூறுகிறார்.
'எலக்ட்ரோ கார்டியோகிராம்' என்ற சொல் பெரும்பாலும் மருத்துவர்களுக்குத் தெரியும். அந்த நேரத்தில் அவர்களில் பெரும்பாலோர் அதை 'ஈசிஜி' என்று புரிந்து கொண்டனர். 1906ஆம் ஆண்டில், எம்.கிராமர் என்ற ஜெர்மன் மருத்துவர் இதய செயல்பாட்டைப் பதிவுசெய்ய வாள் விழுங்குபவரின் உணவுக்குழாயில் மின்முனையைச் செலுத்தி பரிசோதனை செய்தார்.
'வாள் விழுங்குவதால் எண்டோஸ்கோபி எளிதாக உள்ளது'
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர் டாக்டர். ஷரோன் கேப்லான். 2007ஆம் ஆண்டில் கடுமையான தொண்டைக் காயங்கள் உள்ள நோயாளிகளுக்கு உதவ வாள் விழுங்குதலை சிகிச்சை முறையில் பயன்படுத்தலாமா என்பதை முடிவுசெய்ய வாள் விழுங்கும் கலைஞரான ஆண்ட்ரூஸுடன் இணைந்து பணியாற்றினார்.
வாள் விழுங்கும் கலைஞரான டோட் ராபின்ஸ், "எண்டோஸ்கோபி தனக்கு மிகவும் எளிதானது" என்கிறார். அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் வாள் விழுங்கும் கலையின் வரலாறு குறித்து விரிவுரை நடத்தினார் ராபின்ஸ். அவரை பத்திரிகையாளர் ஒலிவியா பி.வாக்ஸ்மேன் பேட்டி கண்டார்.
"எனக்கு எண்டோஸ்கோபி செய்ய வேண்டியிருந்தது. குழாயைச் செருகுவதற்கு முன்பு நோயாளிகள் பொதுவாக மயக்கமடைந்துவிடுவார்கள். ஆனால் என்னால் ஒரு கத்தியை விழுங்க முடியும் என்பதால், மருத்துவர் கொடுத்த எண்டோஸ்கோபி எளிதாக இருந்தது" என்று ராபின்ஸ் கூறினார்.
ஆனால் இப்போது இந்தக் கலை அழிவின் விளிம்பில் உள்ளது. வாள் விழுங்குபவர்களின் சர்வதேச சங்கத்தின் கூற்றுப்படி, இப்போது சில டஜன் வாள் விழுங்குபவர்கள் மட்டுமே உள்ளனர்.
சர்வதேச வாள் விழுங்குவோர் தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் கடைசி சனிக்கிழமையன்று கொண்டாடப்படுகிறது.
"அறிவியல் மற்றும் மருத்துவத்திற்கு வாள் விழுங்குவோரின் பங்களிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் இந்த பழமையான கலை தினத்தை கொண்டாடுவதன் நோக்கம்," என்று வாள் விழுங்குவோர் சங்கம் கூறுகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)