You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விஜய்யின் 'லியோ' டைட்டில் ப்ரொமோ: தெலுங்கு படத்தின் காப்பியா? - விவாதிக்கும் ரசிகர்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் விஜய்யின் 67வது படத்திற்கு லியோ எனப் பெயரிட்டு டைட்டில் ப்ரொமோவை வெளியிட்டுள்ளது படக்குழு. வெளியான 18 மணி நேரத்தில் லியோ டைட்டில் ப்ரொமோ 13 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
விஜய் படத்தின் டைட்டில் என்ன?
விஜய்யின் 67வது படம் குறித்து கடந்த ஒரு வாரமாக பல்வேறு அப்டேட்களை பட நிறுவனம் தொடர்ந்து வெளியிட்டு வந்தது. இந்தப் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்பது அதிகாரபூர்வமாக முதல் அப்டேட் மூலம் உறுதியானது.
அதைத் தொடர்ந்து படக்குழுவினர் காஷ்மீருக்கு முதல்கட்ட படப்பிடிப்பிற்காக புறப்பட்டுச் சென்ற புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின.
படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், பிரியா ஆனந்த், மிஷ்கின் உள்ளிட்ட நடிகர்-நடிகைகள் நடிப்பதாக படக்குழு அறிவித்தது.
பின்பு விஜய்யின் 67வது பட பூஜையின் புகைப்படங்களை வெளியிட்டு, விரைவில் படத்தின் பெயரை ப்ரொமோவாக வெளியிட உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது.
அறிவித்தபடி, இந்தப் படத்தின் டைட்டில் ப்ரொமோ நேற்று வெளியிட்டது படக்குழு. நடிகர் விஜய் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்திருந்தார்.
விஜய்யின் புதிய படத்திற்கு 'லியோ' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டே லியோ படம் அக்டோபர் 19 அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
மேலும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் நேரடியாக வெளியாகிறது. இதனால் இந்தப் படம் பான் இந்தியா படமாக வெளிவர உள்ளது தெரிகிறது.
லியோ டைட்டில் ப்ரொமோவில் என்ன இருக்கிறது?
2 நிமிடம் 48 நொடிகள் நீளமிருக்கும் இந்த டைட்டில் ப்ரொமோ முழுவதும் நடிகர் விஜய் மட்டுமே வருகிறார். வேறு எந்த முகங்களும் இதில் இடம்பெறவில்லை.
தனியாக அமைந்திருக்கும் கட்டடத்தில் நடிகர் விஜய் சாக்லேட் தயாரித்துக் கொண்டிருப்பது போலவும், அவரைத் தேடி கார்களில் பலர் வருவது போலவும் காட்சிகள் வருகின்றன.
தேர்ந்தெடுத்த சாக்லெட் கொட்டைகளில் இருந்து விஜய் சாக்லேட் தயாரிப்பது போல ஒரு காட்சி அமைப்பும், மறுபுறம் இரும்பை காய்ச்சி அதிலிருந்து வாளை தயாரிப்பது போல காட்சி அமைப்பும் தனித்தனியாக வருகிறது. இறுதியாக தான் தயாரித்த சாக்லேட்டை வைத்து வாளின் சூட்டை தணிப்பது போல காட்சிகள் ப்ரொமோவில் இடம்பெற்றுள்ளன.
இறுதியாக வாளில் இருக்கும் சாக்லேட்டை சுவைத்துப் பார்த்து நடிகர் விஜய், ‘பிளடி ஸ்வீட்’ என்ற வசனத்தைப் பேசுகிறார்.
இந்த ப்ரொமோ வெளியானதில் இருந்து 15 மில்லியன்(1 கோடியே 50 லட்சம்) பார்வைகளை யுட்யூப் தளத்தில் பெற்றுள்ளது. இதை இதுவரை 1.2 மில்லியன்(12 லட்சம்) பேர் லைக் செய்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் வரவேற்பு எப்படி இருக்கிறது?
லியோ ப்ரொமோவில் வரும் ஆங்கில பாடலும், அதற்கான காட்சி அமைப்பும் பாலே நடனத்தைப் போல இருப்பதாக மேயாத மான் படத்தின் இயக்குநர் ரத்னகுமார் பதிவிட்டுள்ளார்.
லியோ என்பது சிங்கத்தைக் குறிக்கும் சொல் என்பதால், லியோ பட டைட்டில் டிசைனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது சின்னமான(mascot) சிங்கத்தை வைத்து ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளது.
தெலுங்கு பட டீசர் காப்பியா?
லியோ படத்திற்கு வரவேற்பு ஒரு பக்கம் கிடைத்து வந்தாலும், ஒரு சிலர் இந்த படத்தின் ப்ரொமோ நாகார்ஜூனா நடித்து வெளியான 'தி கோஸ்ட்' படத்தின் டைட்டில் ப்ரொமோவை காப்பியடித்து வெளிவந்துள்ளதாக டிவிட்டரில் பதிவிட்டிருந்தனர்.
மற்றொரு பயனர், “நல்லா இருக்கு அண்ணா, நிஜமா நல்லா இருக்கு #Leo #Bloodysweet” என தெலுங்கில் குறிப்பிட்டு ‘தி கோஸ்ட்’ படத்தின் டீசரை பதிவிட்டு இருந்தார்.
ஒரு டிவிட்டர் பதிவில் லியோ, தி கோஸ்ட் என இரண்டு படத்தின் டீசரில் வரும் காட்சிகளில் விஜய்யும், நாகர்ஜுனாவும் வாளை தயாரிக்கும் காட்சிகளை ஒப்பிட்டு பயனர் பதிவிட்டிருந்தார்.
LCUவில் வருகிறதா லியோ?
விமர்சனங்களைத் தாண்டி விஜய்யின் லியோ படம், லோகேஷ் கனகராஜின் LCUவில் வருகிறதா என டீசரில் உள்ள குறியீடுகளை வைத்து ரசிகர்கள் விவாதம் செய்து கொண்டிருந்தனர்.
LCU என்பது Lokesh Cinematic Universe. அதாவது லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களான கைதி, விக்ரம் படங்களில் வரும் காட்சி அமைப்புகளும், கதாபாத்திரங்களான டில்லி, விக்ரம், ரோலக்ஸ் ஆகியோருக்கு இடையில் தொடர்புகள் இருக்கும் வகையில் படத்தில் காட்சிகள் வந்திருக்கும்.
இதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ், தனது முந்தைய படங்களுடன் தொடர்பு இருக்கும் தனது புதிய படங்களில் டைட்டில் கார்டில் LCU என்று குறிப்பிட உள்ளதாக பேசியிருந்தார்.
ஆனால் லியோ படத்தின் டைட்டில் கார்டில் LCU என எந்தக் குறிப்பும் இடம்பெறவில்லை. படக்குழுவும், இயக்குநரும் இது தொடர்பாக அறிவிப்புகள் ஏதும் வெளியிடவில்லை.
ஆயினும், ரசிகர்கள் தங்கள் யூகங்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு லியோ LCUவில் வருவதாகக் கூறுகின்றனர்.
தளபதி பிளட் கார்த்தி என்ற பயனரின் பதிவில், விக்ரம் பட கமல் கழுகாகவும், லியோ பட விஜய் சிங்கமாகவும், விக்ரம் படத்தில் வரும் சூர்யாவும், விஜய் சேதுபதியும் முறையே தங்கள் உடலில் தேளையும், பாம்பையும் பச்சை குத்தி இருப்பதைச் சுட்டிக்காட்டி பதிவிட்டுள்ளார். லியோ படத்தின் டீசரில் பாம்பும், கழுகும் வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
மாஃபியா குழுவில் பயன்படுத்தும் சங்கேத மொழியில் லியோ என்றால் தலைவன் என்றும், தேள் என்றால் உண்மையான தலைவன் யார் என்று தெரிந்து கொண்டவன் என்றும் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பயனரின் பதிவில், லியோ டீசரில் வரும் சாக்லேட், கொக்கெயின்(cocaine) சாக்லேட் என்றும், அது ரோலக்ஸ் சூர்யாவிடம் இருந்து கைப்பற்றியது. அதை மீட்க சூர்யா அனுப்பிய அடியாட்கள் விஜய் வீட்டுக்கு வருகிறார்கள். விக்ரம் படத்தில் கமல் பேசிய வசனமான, 'காடுனா சிங்கம் இருக்கும்' என்ற வசனத்தில் வரும் சிங்கம் தான் லியோ விஜய் என கேலியாக பதிவிட்டுள்ளார்.
இப்படி லியோ படத்தை LCU எனக் கூறி பலரும் தங்களது அவதானிப்புகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
தற்போது லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்