டெல்லி: 6 குழந்தைகள் பலியான மருத்துவமனை தீ விபத்தில் என்ன நடந்தது?
டெல்லியில் உள்ள தனியார் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 6 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சனிக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது.
மருத்துவமனையில் விபத்து ஏற்பட்ட பிரிவில் 12 குழந்தைகள் இருந்ததாக மூத்த போலீஸ் அதிகாரி சுரேந்திர சௌத்ரி தெரிவித்துள்ளார். அதில் ஆறு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், ஆறு குழந்தைகள் சிகிச்சை பெற்று வருவதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
மருத்துவமனையின் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தீ விபத்து ஏற்பட்டதும் மருத்துமனையின் உரிமையாளர் தலைமறைவாகி விட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்தக் கோர தீ விபத்து தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அந்தக் காணொளிகளில் மருத்துவமனை வளாகத்தில் தீப்பிடித்து முழு கட்டடத்தையும் புகை சூழ்ந்துள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



