You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மேற்கு வங்கம்: கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது சரக்கு ரயில் மோதியதில் 9 பேர் பலி - சமீபத்திய தகவல்கள்
(இந்தச் செய்தி சமீபத்திய தகவல்களுடன் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது.)
திங்கள்கிழமை (ஜூன் 17) காலை 9 மணியளவில், திரிபுராவின் அகர்தலாவில் இருந்து மேற்கு வங்கம், கொல்கத்தாவின் சீல்டா செல்லும் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் (13174), மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பைகுரி அருகே ஒரு சரக்கு ரயிலுடன் மோதியது.
இந்த விபத்தில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
என்ன நடந்தது?
செய்தியாளர்களிடம் பேசிய டார்ஜிலிங் கூடுதல் எஸ்.பி. அபிஷேக் ராய், “காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் நின்றுகொண்டிருந்த போது, பின்னால் இருந்து வந்த ஒரு சரக்கு ரயில் அதன்மீது மோதியது. மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மீட்புப் பணிகளில் ரயில்வே ஊழியர்களுடன், உள்ளூர் போலீஸாரும் கலந்து கொண்டனர்,” என்றார்.
மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உள்ளதாகவும் இந்திய ரயில்வே வாரிய சி.ஐ.ஓ ஜெய வர்மா சின்ஹா தெரிவித்துள்ளார்.
ரயில்வே வாரிய தலைமை நிர்வாக அதிகாரி ஜெய வர்மா சின்ஹா செய்தியாளர்களிடம் கூறும்போது, “மீட்புப் பணிகள் முற்றிலும் முடிந்து விட்டன. இதுவரை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உள்ளது. காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 என்று கூறப்படுகிறது, ஆனால் சுமார் 50 பேர் மருத்துவமனையில் உள்ளனர். பாதுகாப்பு எங்களுக்கு முன்னுரிமை. முதல்கட்டத் தகவல்களின் படி, இது மனிதத் தவறால் நிகழ்ந்திருக்கலாம் என்று தெரிகிறது. சிக்னலை மீறி சரக்கு ரயில் முன்னோக்கி நகர்ந்தது. லோகோ பைலட் மற்றும் ஒரு காவலரும் இறந்துவிட்டார்கள், அதனால் என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை. விசாரணை முடிந்த பிறகுதான் ஏதாவது சொல்ல முடியும்,” என்றார்.
“இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க நாங்கள் முயற்சி செய்கிறோம். ‘கவச்’ பாதுகாப்பு அமைப்பை மேலும் மேம்படுத்த முயல்கிறோம். இந்த ஆண்டு நாங்கள் 3,000 கி.மீ. கவச் அமைப்பை நிறுவுவோம்,” என்றார்.
குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்
இந்த விபத்து குறித்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆழ்ந்த இரங்கலையும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் நடந்த ரயில் விபத்து தன்னை மிகவும் பாதித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். விபத்து குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசியதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் சம்பவ இடத்துக்குச் சென்று வருவதாகவும் பிரதமர் மோதி கூறினார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். மருத்துவர்கள் குழுவும் பேரிடர் மீட்புக் குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
உதவி எண்கள் அறிவிப்பு
மேற்குவங்க ரயில் விபத்து குறித்து தகவல்களை அறிந்துகொள்ள உதவி எண்கள் ரயில்வே துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன.
கீழ்கண்ட எண்களைத் தொடர்புகொண்டு தகவல்களை அறியலாம்.
033-2350-8794 , 033-238-33326
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)