You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சச்சினையே விட்டு வைக்காத 'இம்போஸ்டர் சிண்ட்ரோம்' உங்களுக்கும் இருக்கிறதா?
- எழுதியவர், சிராஜ்
- பதவி, பிபிசி தமிழ்
"எனக்கு ஏன் இத்தனை பாராட்டுக்கள் கிடைக்கின்றன? இதையெல்லாம் அனுபவிக்கலாமா வேண்டாமா? நான் இதற்கு தகுதியானவன் தானா அல்லது அதிர்ஷ்டமா? ஒருவேளை நான் தகுதியில்லாதவன் என கண்டுபிடித்துவிட்டால் என்னவாகும்?"
உங்களது பணியிடத்தில் அல்லது தனிப்பட்ட வாழ்க்கையில், இதுபோன்ற கேள்விகள், சந்தேகங்கள், தொடர்ந்து மனதில் தோன்றினால், அது 'இம்போஸ்டர் சிண்ட்ரோமாக' (Imposter Syndrome) இருக்கலாம். ஆனால், இதை நீங்கள் மட்டுமல்ல, வாழ்வில் சாதித்த அல்லது சாதிக்க வேண்டுமென நினைக்கும் தனிநபர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்கொண்டிருப்பார்கள் என ஒரு ஆய்வு கூறுகிறது.
'இம்போஸ்டர் சிண்ட்ரோம்' என்றால் என்ன? அதிலிருந்து மீண்டு வருவது எப்படி?
இம்போஸ்டர் சிண்ட்ரோம் அல்லது 'ஃபிராடு சிண்ட்ரோம்'
'நான் இந்த இடத்திற்கு தகுதியானவன் இல்லை'- சாதனையாளர்களிடம் இந்த எண்ணம் எந்தளவுக்கு பொதுவானது என்றால், சச்சின் டெண்டுல்கரே இதை தனது கிரிக்கெட் வாழ்வில் எதிர்கொண்டிருக்கிறார்.
இந்தியா- பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டிகளுக்கான எதிர்பார்ப்பு குறித்து நாம் தனியாக விவரிக்கத் தேவையில்லை. 1989ஆம் ஆண்டு, அப்படிப்பட்ட ஒரு டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கினார் சச்சின். 16 ஆண்டுகள், 205 நாட்களே நிரம்பிய ஒரு சிறுவனுக்கு முதல் சர்வதேச போட்டியே, பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி எனும்போது சச்சின் மீது பலரின் கவனம் இருந்தது.
"நான் முதல் முறையாக பேட் செய்ய மைதானத்திற்கு சென்றபோது, எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மணிக்கு 90-95 மைல் வேகத்தில் வரும் பந்துகளை நான் எதிர்கொள்ள மிகவும் தடுமாறினேன். 15 ரன்களில் அவுட்டாகி விட்டேன்.
பெவிலியன் நோக்கி செல்லும்போது, கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டேன். அறைக்குச் சென்று, கண்ணாடியைப் பார்த்து அழுதேன். 'இது உனக்கான வேலை இல்லை, இந்த வாய்ப்பிற்கு நீ தகுதியானவன் இல்லை' என்று என்னை திட்டிக்கொண்டேன்" என்று ஒரு நேர்காணலில் தனது முதல் டெஸ்ட் போட்டி குறித்து பேசியிருப்பார் சச்சின்.
ஆனால், 'இம்போஸ்டர் சிண்ட்ரோம்' என்ற பிரச்னை, அவரை சாதனையாளர் ஆக்கவில்லை, அதைக் கடந்து வர முடிந்ததால் தான் அவர் ஜெயித்தார். அது எப்படி என்பதை இந்தக் கட்டுரையின் பின்வரும் பகுதிகளில் பார்க்கலாம்.
'இம்போஸ்டர் சிண்ட்ரோம்' என்பதற்கான விளக்கம் முதன்முதலில் 1978ஆம் ஆண்டில், அமெரிக்காவைச் சேர்ந்த சுசான் ஐம்ஸ், பவுலின் ரோஸ் கிளான்ஸ் எனும் இரு உளவியலாளர்களால் வழங்கப்பட்டது.
அமெரிக்காவின் பெண்களிடையே (குறிப்பிட்ட குழுவிடம்) அவர்கள் நடத்திய ஆய்வில், 'பல பெண்கள் வாழ்வில் வெற்றி பெற்றிருந்தும் கூட, தங்கள் சொந்தத் திறமையை நம்பாமல், அந்த வெற்றிக்கு அதிர்ஷ்டம் அல்லது வேறு சில காரணங்கள் இருப்பதாக நம்பியது' கண்டறியப்பட்டது.
தங்களது ஆய்வின் அடிப்படையில்,'சாதிக்கும் பெண்களிடையயே இம்போஸ்டர் சிண்ட்ரோம்' குறித்த ( The Impostor Phenomenon in High Achieving Women: Dynamics and Therapeutic Intervention) ஆய்வுக் கட்டுரையை அவர்கள் வெளியிட்டனர்.
இம்போஸ்டர் சிண்ட்ரோம் ஏன் ஏற்படுகிறது?
"இம்போஸ்டர் சிண்ட்ரோம் என்பது மனநோய் அல்ல, ஆனால் ஒரு மனநோயின் பகுதியாக அது இருக்கலாம். அதை ஒரு தனிநபரே சரிசெய்துகொள்ள முடியும். அதை கண்டுக்கொள்ளாமல் விடும்போது நாள்பட்ட மனச்சோர்வாக மாறவும் வாய்ப்பு உள்ளது." என்கிறார் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த உளவியல் மருத்துவர் கிருபாகரன்.
இந்த பிரச்னையின் முதல் அறிகுறியே 'சுய சந்தேகம்' தான் என்கிறார் கிருபாகரன்.
"தனது திறமை, அறிவு, சாதனை குறித்து அவர்களுக்கு பெரும் சந்தேகம் இருக்கும். தான் வாழ்வில் எதுவுமே பெரிதாக சாதிக்கவில்லை, இதுவரை சாதித்ததற்கு அதிர்ஷடமோ அல்லது பிறரது உதவிகளோ தான் காரணம் என நினைப்பார்கள். என்றாவது ஒருநாள் இது மற்றவர்களுக்கு தெரிந்துவிடும், என்னை மோசடிக்காரன் (ஃபிராடு) என எண்ணி விடுவார்கள் என்ற பயத்தில் இருப்பார்கள்" என்று இம்போஸ்டர் சிண்ட்ரோம் பாதிப்பு குறித்து விளக்குகிறார் கிருபாகரன்.
இத்தகைய சுய-சந்தேக உணர்வுகள், பதற்றம் மற்றும் மனச்சோர்வை அதிகரிக்கும் என்றும், வேலை அல்லது தொழில் வாழ்க்கையில் 'ரிஸ்க்' எடுக்கக்கூடிய தைரியத்தை அது குலைத்துவிடும் என்றும் அவர் எச்சரிக்கிறார்.
இந்த எண்ணங்களுக்கான காரணத்தை விளக்கிய கிருபாகரன், "பெற்றோர் வளர்ப்பு, கலாச்சாரம் மற்றும் வளர்ந்த சூழல், (உதாரணத்திற்கு தன்னடக்கமாக இருப்பதே சிறந்தது என்ற பொதுப்புத்தி), பணியிடச் சூழல் மற்றும் அழுத்தம், 'பெர்ஃபக்டாக' (Perfect) இருப்பதே வெற்றி என்ற எண்ணம், போன்றவை தான்" என்கிறார்.
இம்போஸ்டர் சிண்ட்ரோம்- வகைகள்
அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர். வேலரி யங் என்பவர், இம்போஸ்டர் சிண்ட்ரோம் குறித்த ஆய்வுகளில் முன்னோடியாகக் கருதப்படுகிறார். 'இம்போஸ்டர் சிண்ட்ரோம் இன்ஸ்டிடியூட்' எனும் அமைப்பின் இணை நிறுவனரான இவர், இந்த சிண்ட்ரோம் தொடர்பாக 'The Secret Thoughts of Successful Women' என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.
இவர் இம்போஸ்டர் சிண்ட்ரோமை 5 வகைகளாகப் பிரிக்கிறார்.
1. 'தி பெர்ஃபக்ஷனிஸ்ட்' (The Perfectionist)
"நான் இதைச் சரியாக அல்லது பரிபூரணமாக செய்யவில்லை என்றால், நான் ஒரு தோற்றுபோனவன்", இதுவே பாதிக்கப்பட்டவர்களின் எண்ணமாக இருக்கும்.
'பெர்ஃபக்ஷனிஸ்ட்' என்பவருக்கு எந்த ஒரு வேலையையும் 100 சதவீதம் செய்ய வேண்டும். இதனால் அவர் தனக்குத் தானே, கடினமான அல்லது அசாத்தியமான இலக்குகளை நிர்ணயித்துக் கொள்வார். தான் நினைத்ததில் ஒரு சதவீதம் குறைந்தாலும், அதை ஒரு தோல்வியாக எடுத்துக்கொள்வார். அவர் செய்த 99% செயலுக்கு பாராட்டுக்கள் கிடைத்தாலும், இது எனக்கானதல்ல, நான் திறமையற்றவன் என்ற எண்ணமே மேலோங்கும். காரணம், அவர் தவறவிட்ட அந்த 1%.
"நம்மில் பலரும் 'பெர்ஃபக்ஷனிஸ்ட்'-ஆக இருப்பது பெருமை என நினைக்கிறோம். ஆனால், அவர்கள் 100 சதவீதம் வேண்டும் என்பதற்காக பெரும் மனஅழுத்தத்தை எடுத்துக்கொள்வார்கள். இதனால் வேலையை தள்ளிப்போடுவார்கள் அல்லது தனது வேலையை திருத்திக் கொண்டே இருப்பார்கள்" என்கிறார் உளவியல் மருத்துவர் கிருபாகரன்.
இவர்கள் அதிக நேரம் வேலை செய்வதால், மனச்சோர்வுக்கு ஆளாகி, வேலையை வெறுக்கும் நிலை கூட ஏற்படும் என்கிறார் கிருபாகரன்.
தீர்வு:
உண்மையில் பெர்ஃபக்ஷனிஸம் (Perfectionism) அல்லது பரிபூரணம் என்பது வெற்றிக்கு ஒரு தடையாகவே இருக்கும். எனவே முழுமை என்பதை விட 'ஒரு வேலையில் முன்னேற்றம்' இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்.
தவறுகள் என்பது திறமையின்மை அல்லது தகுதியின்மையை குறிக்காது, அவை வளர்ச்சியின் ஒரு பகுதியே என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் கிருபாகரன்.
2. சூப்பர்வுமன்/சூப்பர்மேன்
"நான் வாழ்க்கையில் எந்த வேலையில், பதவியில், குடும்ப உறவுகளில் அல்லது எந்த இடத்தில் இருந்தாலும் அங்கு நான் சிறந்து விளங்க வேண்டும். எல்லாவற்றுக்கும் 'என்னால் முடியும்' அல்லது ஆம் (Yes) சொல்லவேண்டும். பல வேலைகளை ஒரு சேர பார்க்கவேண்டும். என்னை நிரூபிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், நான் சரியான ஒரு நபர் அல்ல, ஏமாற்றுக்காரன்"- இதுவே இந்த வகை பாதிப்பின் வெளிப்பாடு.
"தான் ஒரு ஏமாற்றுக்காரர் அல்ல என்பதை நிரூபிக்க, மற்றவர்களை விட கடினமாக உழைக்க, தங்களை அவர்கள் வருத்திக்கொள்வார்கள். அவர்களால் யாருக்கும் முடியாது (No) என சொல்ல முடியாது. ஓய்வு எடுக்க அல்லது உதவி கேட்க தயங்குவார்கள். எல்லா நேரமும் வேலை செய்வது தான் மதிப்பு என நினைப்பார்கள்" என்கிறார் உளவியல் மருத்துவர் கிருபாகரன்.
தீர்வு:
எல்லா நேரமும் வேலை செய்வது அல்லது அதிக வேலை செய்வது என்பது பெருமையான விஷயம் அல்ல, ஓய்வு அல்லது 'முடியாது' எனச் சொல்வது மோசமான விஷயமல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். வேலைகளை குறைத்துக்கொள்வதால், எது முக்கியம் என்பதை உணர்ந்து செயல்பட முடியும் என்கிறார் கிருபாகரன்.
3. 'தி எக்ஸ்பெர்ட்' (The Expert)
"உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் அல்லது அதுகுறித்த அனுபவம் இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு இருக்கும். அவ்வாறு ஏதேனும் ஒரு விஷயம் குறித்து தெரியவில்லை என்றால் அதை அவமானமாக கருதுவீர்கள். எங்கே உங்களை ஏமாற்றுக்காரர் அல்லது அனுபவமற்றவர் என்று கூறிவிடுவார்களோ என்ற பயம் ஏற்படும்.
ஒரு விஷயத்தை செய்வதற்கு முன்னால் அதைப் பற்றி 100 சதவீதம் தெரிந்தால் மட்டுமே செயலில் இறங்குவேன் என நினைப்பது"- 'தி எக்ஸ்பெர்ட்' வகை இம்போஸ்டர் சிண்ட்ரோம் குறித்து டாக்டர். வேலரி இவ்வாறு விவரிக்கிறார்.
தீர்வு:
கற்றலுக்கு எல்லையே கிடையாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும் என்பதை விட, நமக்கு தெரிந்ததை தன்னம்பிக்கையோடு வெளிப்படுத்த வேண்டும். ஒரு வேலையை செய்யும்போது கூட கற்றுக்கொள்ள முடியும் என்பதை உணர வேண்டும் என்கிறார் உளவியல் மருத்துவர் கிருபாகரன்.
4. 'தி ஸோலோயிஸ்ட்' (The Soloist)
"ஒரு வேலையை தனியாக தான் செய்ய வேண்டும் என்று நீங்கள் நம்புகிறீர்கள். அப்படி உதவி கிடைத்து, அந்த வேலை வெற்றிபெற்றால், அதற்கான பாராட்டைப் பெற மறுப்பீர்கள். அதாவது தனியாக செய்தால் மட்டுமே அது வெற்றி. உங்கள் மனதில், நீங்கள் சொந்தமாக செய்த சாதனைகள் மட்டுமே கணக்கில்கொள்ளப்படும்."- இதுதான் 'தி ஸோலோயிஸ்ட்' வகைக்கான விளக்கம்.
தீர்வு:
"உண்மையில் திறமையானவர்கள் தங்களுக்கு என்ன உதவி தேவை என்பதை கேட்டுப் பெறுவார்கள் என்பதை உணர வேண்டும். தனக்கு ஒரு விஷயம் தெரியவில்லையென்றால் அதை தெரிந்தவரிடம் கேட்கலாம். கூட்டு முயற்சி என்பது என்பது ஒரு பலம், பலவீனம் அல்ல என்ற புரிதல் அவசியம்" என்கிறார் உளவியல் மருத்துவர் கிருபாகரன்.
5. 'தி நேச்சுரல் ஜீனியஸ்' (The Natural Genius)
"நான் ஒரு விஷயம் செய்தால், அது எனக்கு எளிதாக இருக்கவேண்டும். நான் இயற்கையிலேயே புத்திசாலி என்பதால் அது கடினமாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அல்லது நான் தடுமாறினால், இது எனக்கானது இல்லை." இதுதான் 'தி நேச்சுரல் ஜீனியஸ்' வகைக்கான விளக்கம்.
தீர்வு:
"ஒரு வேலையில் அல்லது கலையில் நிபுணத்துவம் பெறுவது என்பது பிறப்பில் வரும் திறமை அல்ல. அதை கொஞ்சம் கொஞ்சமாக தான் வளர்த்துக்கொள்ள முடியும் என்பதை உணர முடியும். ஒரு வேலையில் தடுமாறுகிறீர்கள் என்றால், அதை நடைமுறையில் சரிசெய்ய என்ன செய்யலாம், எங்கே தவறு என யோசிக்க வேண்டும். அதை விட்டு வெளியேறுவது ஒரு தீர்வு அல்ல" என்கிறார் உளவியல் மருத்துவர் கிருபாகரன்.
இங்கே கிருபாகரன் கூறுவதோடு, சச்சின் டெண்டுல்கர் தனது முதல் டெஸ்ட் போட்டியில் பெற்ற அனுபவத்தை பொருத்திப் பார்க்கலாம்.
"அடுத்தப் போட்டியிலேயே, அரை மணிநேரம் மைதானத்தில் நின்றால் போதும், ரன்கள் முக்கியமில்லை என முடிவெடுத்து பேட்டிங் செய்யச் சென்றேன். ஸ்கோர்போர்டு பார்க்கவே இல்லை. அன்று அரை மணிநேரம் கடந்தும் களத்தில் நின்றேன், 59 ரன்கள் எடுத்தேன். அந்தப் போட்டி, எனது சிந்தனையை மாற்றியது", இவை சச்சின் கூறிய வார்த்தைகள்.
70 முதல் 80% மக்கள் தங்கள் வாழ்க்கையில் இம்போஸ்டர் சிண்ட்ரோம் பிரச்னையை எதிர்கொள்கிறார்கள் என அமெரிக்க உளவியல் சங்கத்தின் இணையதளம் கூறுகிறது.
"முன்பே கூறியது போல, இந்த இம்போஸ்டர் சிண்ட்ரோம் மனநோய் அல்ல. இதற்கென பிரத்யேகமான மனநல சிகிச்சைகளும் இல்லை. ஆனால், தேவைப்பட்டால் ஒரு உளவியல் மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம். நடைமுறை வாழ்க்கையில் சிறு சிறு மாற்றங்கள், புரிதல்கள் மூலம் சரிசெய்தால், அது மனஅழுத்தமாக மாறுவதைத் தவிர்க்க முடியும்." என்கிறார் உளவியல் மருத்துவர் கிருபாகரன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.