"குடும்ப பொறுப்பை ஏற்றுக் கொண்டாள்" ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த மைதிலியின் தந்தை கூறியது என்ன?
''எங்கள் இதயத்தின் ஒரு பகுதியை இழந்துவிட்டோம். அவள் தன்னுடைய கனவை நிறைவேற்றினாள். ஆனால் அது முழுமையடையவில்லை. சிறுவயதிலிருந்தே விமானப் பணிப்பெண்ணாக வேண்டும் என்று கனவு கண்டாள்.'' மைதிலி பாட்டீலின் பெற்றோரின் துயரக் குரல் இது.
ஆமதாபாத்தில் கடந்த வியாழக்கிழமை நேரிட்ட விமான விபத்தில் பலியானவர்களில் மைதிலியும் ஒருவர்.
ஏர் இந்தியா விமானத்தில் பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் உட்பட 242 பேர் பயணம் செய்தனர். விபத்தில் 241 பேர் கொல்லப்பட்டனர்.
மைதிலியின் தந்தை உடல்நிலை காரணமாக வேலையை விட வேண்டியிருந்தது. இருப்பினும், உறுதியுடன் தனது கல்வியை முடித்து, தனது லட்சியத்தை அடைந்தார் மைதிலி.
வேலை கிடைத்ததும் தனது குடும்பத்திற்கான முழு நிதிப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.
"மைதிலியின் தோழி என் மனைவிக்கு போன் செய்து எங்கள் மகள் துரதிர்ஷ்டவசமான விமானத்தில் இருப்பதாக கூறினார். என் மகள் கிருஷ்ணரின் தீவிர பக்தர். எப்போதும் தன்னுடன் பகவத் கீதை வைத்திருப்பாள். அவளுக்கு நிறைய கனவுகள் இருந்தன. அப்பா, நீங்கள் தனியாக எல்லாவற்றையும் நிர்வகிக்க முடியாது என்று கூறினாள். அவள் முழு குடும்பத்தையும் பார்த்துக் கொண்டாள்." எனத் தெரிவித்தார் மைதிலியின் தந்தை மோரேஷ்வர் பாட்டீல்.
பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய சூழல்
மைதிலி மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தின் நாவா கிராமத்தைச் சேர்ந்தவர்.
ஜூன் 11-ஆம் தேதி அன்று மும்பையில் இருந்து ஆமதாபாத்திற்கு பணிக்காக வந்தார். அவர் இந்தியாவில் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் செல்லும் ஏர் இந்தியா 171 என்ற விமானத்தில் ஜூன் 12-ஆம் தேதி பணியில் ஈடுபட்டார்.
மைதிலியின் குடும்பத்தில் அவருடைய பெற்றோர், இரண்டு தங்கைகள் மற்றும் ஒரு தம்பி உள்ளனர். மைதிலி மூத்த பெண் ஆவார். 12-ஆம் வகுப்பு வரை அவருடைய கிராமத்தில் இருந்த டி.எஸ். ரெஹ்மான் பள்ளியில் பயின்றார். சிறு வயதில் இருந்தே அவருக்கு விமானப் பணிப்பெண்ணாக வேண்டும் என்ற கனவு இருந்தது.
பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய சூழலில் இருந்தது அவருடைய குடும்பம். மிகவும் இக்கட்டான சூழலில் படித்து முடித்துவிட்டு பிறகு ஏர் இந்தியாவில் பணியாற்ற ஆரம்பித்தார்.
மைதிலி படித்த பள்ளியின் முதல்வர் டெய்ஸி பால், 'மைதிலி அமைதி, அறிவு மற்றும் மகிழ்ச்சி நிறைந்த மாணவியாக இருந்தார்' என்று நினைவு கூறுகிறார்.
முன்னாள் மாணவர்களின் சந்திப்பிற்காக, 2 மாதங்களுக்கு முன்பு, பள்ளிக்கு வந்த மைதிலி , மாணவர்களிடம் இந்த பிரிவில் இருக்கும் வேலை வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடியதாக கூறுகிறார் டெய்ஸி.
அவருடைய அப்பா மோரேஷ்வர் பாட்டீல் ஒப்பந்த அடிப்படையில் ஓ.என்.ஜி.சியில் பணியாற்றி வந்தார். அவருடைய அம்மா குடும்பத் தலைவியாக இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு மோரேஷ்வருக்கு உடல் நிலை மோசம் அடைந்ததால் அவரால் தொடர்ச்சியாக வேலைக்கு செல்ல இயலவில்லை.
பணியில் இருந்து அவர் விலகிய நிலையில் குடும்பத்திற்கு நிலையான வருமானம் இல்லாத நிலை இருந்தது. இந்த சூழலில் பணிக்குச் சேர்ந்த மைதிலி பாட்டீல் குடும்பத்தின் மொத்த நிதி சுமையையும் சுமந்து கொண்டிருந்தார். தற்போது மைதிலியும் இல்லாத நிலையில் அவருடைய குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



