காஸா: இஸ்ரேல் தாக்குதலால் கருவிலேயே பறிபோன 4,000 உயிர்கள் - பெற்றோர் ஏக்கம்
காஸாவில் போர் தொடங்குவதுக்கு முன் நூரா ஐவிஎஃப் மூலம் கருத்தரித்தார். அவரும் அவரது கணவர் முகமதுவும் மருந்து கிடைக்காமல் பல முறை தப்பி ஓட வேண்டியிருந்தது. 7 மாத கர்ப்பமாக இருந்தபோது, கருவிலேயே தனது இரட்டை குழந்தைகளை நூரா இழந்தார்.
இந்த தம்பதிக்கு ஐவிஎஃப் சிகிச்சை வழங்கி வந்த கருத்தரிப்பு மையம் அழிந்து போய்விட்டது. ஐவிஎஃப் மூலம் உருவாக்கப்பட்ட 4,000 கருக்கள் அழிந்துவிட்டன என்றும் அதில் முகமது மற்றும் நூராவின் கருவும் அடங்கும் என்றும் ஊழியர்கள் கூறினர்.
இஸ்ரேல் திட்டமிட்டே கருத்தரிப்பு மையத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக ஐ.நா குற்றம்சாட்டியுள்ளது. இதை இஸ்ரேல் பாதுகாப்புப் படையான ஐடிஎஃப் மறுத்துள்ளது.
காஸாவில் உள்ள பலரும் பெற்றோராக இருந்த ஒரே ஒரு வாய்ப்பை இழந்துள்ளனர்.
"இஸ்ரேலிய அதிகாரிகள் காஸாவில் பாலத்தீனர்களின் இனப்பெருக்க திறனின் ஒரு பகுதியை சேதப்படுத்தி விட்டனர். இது பாலியல் மற்றும் இனப்பெருக்கம் தொடர்பான சுகாதார சேவைகளை முறையாக அழித்ததன் மூலம் செய்யப்பட்டுள்ளது. இது இரண்டும் இனப்படுகொலை செயலுக்குச் சமம்" என பாலத்தீனத்துக்கான ஐ.நா.வின் சுயாதீன சர்வதேச விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.
"இஸ்ரேலிய பாதுகாப்புப் படை திட்டமிட்டுக் கருத்தரிப்பு மையத்தைத் தாக்கவில்லை. அதேபோல, காஸாவின் மக்கள் பிறப்பு விகிதத்தைக் குறைக்கவும் முயலவில்லை. இஸ்ரேலிய பாதுகாப்புப் படை திட்டமிட்டு இந்த தளங்களைத் தாக்குகிறது என்ற குற்றச்சாட்டு அடிப்படையற்றது" என இஸ்ரேலிய பாதுகாப்புப் படை கூறுகிறது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



