போலீஸ் என்கவுன்டர்: காக்கா தோப்பு பாலாஜி யார்? அவர் மீதான வழக்குகள் என்ன?

காக்கா தோப்பு பாலாஜி
படக்குறிப்பு, காக்கா தோப்பு பாலாஜி
    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

சென்னையில் குற்ற வழக்குகளில் தொடர்புடையதாக கூறப்படும் பாலாஜி என்கிற காக்கா தோப்பு பாலாஜி என்கவுன்டரின்போது கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காக்கா தோப்பு பாலாஜி மீது 58 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் போலீஸ் வாகனத்தை நோக்கி அவர் சுட்டதால் அவர் மீது துப்பாக்கிச் சூடு (என்கவுன்டர்) நடத்தப்பட்டதாகவும் கூறுகிறார், சென்னை காவல்துறை வடக்கு இணை ஆணையர் பிரவேஷ்குமார்.

ஆனால், "இது திட்டமிட்ட படுகொலை. நீதிமன்றத்தில் முறையிடுவோம்" என கூறுகிறார் பாலாஜி தரப்பு வழக்கறிஞர்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

என்கவுன்டரின் பின்னணி என்ன?

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ஆம் தேதி பெரம்பூரில் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப்ராய் ரத்தோர் மாற்றப்பட்டு புதிய ஆணையராக அருண் ஐ.பி.எஸ் நியமிக்கப்பட்டார்.

காவல் ஆணையராக பதவியேற்ற அருண், சென்னையில் ரவுடிகளை கட்டுப்படுத்துவதே தனது முதன்மையான பணி என்றும் ரவுடிகளுக்கு எந்த மொழி புரியுமோ அதே மொழியில் நடவடிக்கை எடுப்போம் எனக் கூறியிருந்தார்.

அடுத்த ஒரே வாரத்தில் திருவேங்கடம் என்பவர், மாதவரம் அருகே என்கவுன்டர் செய்யப்பட்டார்.

ஆம்ஸ்ட்ராங் கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்களைப் பறிமுதல் செய்வதற்காக சென்றபோது போலீசாரை திருவேங்கடம் தாக்கியதாகவும் தற்காப்புக்காக போலீஸ் சுட்டதில் அவர் இறந்துவிட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.

காவல்துறை கூறுவது என்ன?

இந்நிலையில், புதன்கிழமையன்று காலை காக்கா தோப்பு பாலாஜி கொல்லப்பட்டார். கொடுங்கையூர் அருகில் உள்ள முல்லை நகர் பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தபோது, அந்த வழியே வேகமாக வந்த கார் நிற்காமல் சென்றதால் அதனை விரட்டிச் சென்றதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

வியாசர்பாடி அருகே காரை தடுத்து நிறுத்தியபோது, உள்ளே இருந்த பாலாஜி போலீஸ் வாகனம் நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் தற்காப்புக்காக திருப்பி சுட்டதில் அவர் இறந்துவிட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆனால், பாலாஜியை திட்டமிட்டே போலீசார் என்கவுன்டர் செய்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்ட பாலாஜியின் உடலைக் காண அவரது உறவினர்களும் ஆதரவாளர்களும் குவிந்தனர். அங்கே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

58 குற்ற வழக்குகள் - காவல்துறை தகவல்

என்கவுன்டர் சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வடக்கு இணை ஆணையர் பிரவேஷ்குமார், "போலீஸ் வாகனம் மீது பாலாஜி சுட்டதால் என்கவுன்டர் நடத்தப்பட்டது. அவர் மீது 58 குற்ற வழக்குகள் வழக்குகள் உள்ளன. பாலாஜியுடன் காரில் வந்த மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது காரில் இருந்து கள்ளத்துப்பாக்கியும் 10 கிலோ கஞ்சா உள்பட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வியாசர்பாடி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது" என்கிறார்.

இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய பாலாஜியின் தாய் கண்மணி, "அவன் மீது 50 கேஸ் (வழக்கு) இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், எந்த வழக்கும் அவன் மீது இல்லை. சம்பவம் செந்தில் (ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் நபர்) என்பவரை போலீசாரால் பிடிக்க முடியவில்லை. 'என் மகன் இறந்தால் சம்பவம் செந்தில் வருவார்' என்பதால் சதி செய்து பாலாஜியை கொன்றுவிட்டனர். அவன் கையில் துப்பாக்கி வைத்திருந்ததாகச் சொல்வது தவறு. எந்த தப்பும் செய்யாமல் பத்து ஆண்டுகளாகத் திருந்தி வாழ்ந்தான்" என்றார்.

கடைசியாக பேசியது என்ன?

"பாலாஜி எப்பவும் வீட்டில் தங்க மாட்டான். என்னைக்காவது வந்து, பழைய துணிகளை துவைப்பதற்கு போட்டுவிட்டுப் போவான். நேற்று காலை எட்டு மணிக்கு எனக்கு போன் செய்து, 'என் துணிகளை எடுத்து வர்றேன். யாருக்காவது கொடுத்துவிடு' என்று சொன்னான். அதுக்குப் பிறகு அவனைப் பத்தி தகவல் தெரியாததால் வக்கீல்கள் கிட்ட கேட்டேன். திருப்பதி கோயிலுக்கு போய் விட்டு வருவார் என கூறினார்கள். ஆனா, வராமலேயே போய்விட்டான்" எனக் கூறினார் கண்மணி.

வழக்கறிஞர் பா.புகழேந்தி
படக்குறிப்பு, வழக்கறிஞர் பா.புகழேந்தி

'நீதிமன்றத்தில் முறையிடுவோம்'

"இது திட்டமிட்டு நடத்தப்பட்ட என்கவுன்டராக பார்க்கிறோம். சென்னை மாநகர கமிஷனராக அருண் வந்ததில் இருந்தே என்கவுன்டர் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. சட்டத்தைக் கையில் எடுத்து தண்டனை கொடுக்கும் வழக்கம் என்பது மிக தவறானது. இந்த என்கவுன்டர் குறித்து நீதிமன்றத்தில் முறையிட இருக்கிறோம்" என்கிறார் பாலாஜியின் வழக்குகளைக் கையாண்ட வழக்கறிஞர் பா.புகழேந்தி.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "காக்கா தோப்பு பாலாஜி மீது வழக்குகள் உள்ளன. அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அது சட்டப்படியானதாக இருக்க வேண்டும். காவல்துறை, தனது கையில் சட்டத்தை எடுத்துக் கொண்டு தண்டிப்பது தவறு. திட்டமிட்டே இதை நடத்துவதாக பார்க்கிறோம். இந்த விவகாரத்தில் சட்டரீதியான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்து வருகிறோம்" என்கிறார்.

'அப்போதே எச்சரித்தோம்' -முன்னாள் டி.ஜி.பி ரவி

"2006-07 ஆம் ஆண்டுகளில் தீவிர குற்ற நடவடிக்கைகளில் காக்கா தோப்பு பாலாஜி ஈடுபட்டு வந்தார். நான் சென்னை வடக்கு இணை ஆணையராக இருந்தபோது திருந்தி வாழ்வதாக கூறியதால் அவரை விட்டு வைத்திருந்தோம்" என்கிறார், முன்னாள் டி.ஜி.பி ரவி.

" குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள், நேரடியாக காவல்துறையை தாக்க வரும்போது, திருப்பி தாக்குவதால் என்கவுன்டர் சம்பவங்கள் நடக்கின்றன" என்கிறார் ரவி.

என்கவுன்டர் குறித்து எழுப்பப்படும் சர்ச்சைக்குப் பதில் அளித்த ரவி, "போலீசாரை காக்கா தோப்பு பாலாஜி தாக்கியிருந்தால் எதிர்த் தாக்குதல் நடத்தப்பட்டதில் தவறு இல்லை. அவ்வாறு இல்லாமல் திட்டமிட்ட என்கவுன்டராக இருந்தால் ஏற்க முடியாது. இந்த வழக்கில் நீதித்துறை நடுவரின் விசாரணை நடக்கும். இது போலி என்கவுன்டராக இருந்தால் எளிதில் வெளியில் தெரிந்துவிடும்.

தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்தக் காலகட்டத்தில் போலி என்கவுன்டர் சாத்தியம் இல்லை. 'போலீஸ் தன்னை என்கவுன்டர் செய்யலாம்' என உளவியல் ரீதியாக குற்றப் பின்னணி உள்ள நபர்களுக்கு பயம் இருக்கும். அதற்காக தற்காப்புக்காக துப்பாக்கியை வைத்திருக்கலாம். தன்னை போலீஸ் கொல்ல வருவதாக நினைத்து துப்பாக்கியைப் பயன்படுத்தும் போது பதில் தாக்குதல் நடத்தப்படுகிறது" என்கிறார்.

முன்னாள் டி.ஜி.பி ரவி.
படக்குறிப்பு, முன்னாள் டி.ஜி.பி ரவி.

ஏ பிளஸ் ரவுடிகள் யார்?

"சென்னையில் நூற்றுக்கணக்கான ரவுடிகள் உள்ளனர். இரண்டு கொலைகளில் ஈடுபட்டிருந்தால் அவர்களை ஏ பிளஸ் ரவுடிகள் பட்டியலில் வைப்பது வழக்கம். கடும் காயம் விளைவித்த வகையில் ஐந்து வழக்குகள் பதிவாகி இருந்தாலும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். அதில் காக்கா தோப்பு பாலாஜியும் ஒருவர். தொடக்கத்தில் கும்பலாக சென்று அடிப்பது, பணம் பறிப்பது ஆகியவைதான் பாலாஜியின் தொழிலாக இருந்தன. ரியல் எஸ்டேட் விவகாரங்களில் தலையிட்டு பணம் பறிக்கும் வேலைகள் நடந்தன. சினிமாவில் வருவதைப் போன்றே செயல்பட்டு வந்தனர்." என்கிறார், முன்னாள் டி.ஜி.பி ரவி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)