காணொளி: இந்தியாவின் முதல் சட்டப்பூர்வ ‘விவாகரத்து’ : யார் அந்த பெண்?
இந்தியாவில் ‘Divorce’ என்ற வார்த்தை தோன்றுவதற்கு முன்பே கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்வதற்காக சட்டப்போராட்டம் நடத்தி, அதில் வெற்றியும் பெற்ற ஒரு பெண்ணைப் பற்றி உங்களுக்கு தெரியுமா?
ருக்மாபாய் ராவத். இந்தியாவில் முதன்முதலாக திருமணத்திற்கு பிறகு கணவரிடம் இருந்து சட்டப்படி பிரிந்து வாழ்ந்த பெண் இவர்தான்.
இவர் 1864இல் மகாராஷ்டிராவில் பிறந்தார். இந்தியாவில் குழந்தை திருமணம் சாதாரணமாக இருந்த காலகட்டம் அது. இவருக்கு 11 வயதில் திருமணம் ஆனது. ஆனால் கணவர் உடன் வாழாமல், தனது தாயுடனேயே வாழ்ந்து வந்துள்ளார்.
பின் கணவருடன் வாழவேண்டாம் என முடிவெடுத்தார்.
மார்ச் 1884-இல், ருக்மாபாயை தன்னுடன் வாழ அனுமதிக்குமாறு அவரது கணவர் தாதாஜி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றமும் ருக்மாபாய் இதற்கு இணங்க வேண்டும் அல்லது சிறைக்குச் செல்ல வேண்டும் எனக் கூறியது. ஆனால் இவர் அதை மறுத்துவிட்டார்.
விவாகரத்துக்காக நீதிமன்றத்தில் இவர் நடத்திய சட்டப்போராட்டம் பலன் அளிக்கவில்லை. அதனால் நீதிமன்றத்தை நிர்வகித்த ராணி விக்டோரியாவுக்கு கடிதம் எழுதி இதற்கு தீர்வு கண்டார். அப்போது இவருக்கு வயது 22.
அந்த சமயத்தில் பிரிட்டிஷ் இந்தியாவில் பெண்கள் உடலுறவு கொள்வதற்கான சட்டப்பூர்வமான வயது 10-இல் இருந்து 12-ஆக உயர்த்தப்பட்டது. இந்த மாற்றத்துக்கு இவருடைய வழக்கும் ஒரு உந்துதலாக இருந்தது.
ருக்மாபாய் ராவத்தின் இந்த சட்டப்போராட்டம், குழந்தை திருமணத்துக்கு எதிரான ஒரு போராளியாக இவரை மாற்றியது. அதேநேரத்தில் சமூகத்தால் இவர் புறக்கணிக்கப்பட்டார்.
பிறகு 1889ஆம் ஆண்டு லண்டன் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பயின்றார். அதன்பின் பெல்ஜியத்தில் எம்டி பட்டம் பெற்றார்.
படிப்பை முடித்துவிட்டு மருத்துவராக பணியாற்ற இந்தியா திரும்பினார். பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் பயிற்சி பெண் மருத்துவர்களில் ஒருவராக ருக்மாபாய் திகழ்ந்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



