You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்க அதிபர் தேர்தல்: சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் இருந்தபடியே எவ்வாறு வாக்களிப்பார்?
போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் பல மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கியுள்ளனர்.
இதனால் இவர்கள் 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தான் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் இவர்கள் எவ்வாறு வாக்களிப்பார்கள்?
இதற்கு நாசாவிடம் ஒரு வழி இருக்கிறது, அதுதான் 'ஆப்சன்டீ வாக்குகள்' (absentee ballot) எனப்படும் தொலைதூர வாக்களிக்கும் முறை.
ஒரு வாக்காளர் அவருக்கு வழக்கமாக ஒதுக்கப்படும் வாக்குச் சாவடியில் வாக்களிக்க இயலாத நிலையில் இந்த முறையின் மூலம் அவர்கள் வாக்களிப்பார்கள்.
இது எவ்வாறு நடைபெறும்?
அமெரிக்க அதிபர் தேர்தலில் இவர்கள் வாக்களிக்க நாசா கட்டுப்பாட்டு மையம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பாதுகாக்கப்பட்ட மின்னஞ்சல் (encrypted email) மூலம் வாக்குச்சீட்டுகளை அனுப்பிவைக்கும்.
இந்தஇரு விண்வெளி வீரர்களும் அவர்களது கணினியின் மூலம் வாக்குச்சீட்டை நிரப்பி, பாதுகாப்பாக பூமிக்கு மீண்டும் மின்னஞ்சல் மூலமே நாசாவுக்கு அனுப்புவார்கள்.
நாசா இதைப் பெற்றவுடன், அவற்றை விண்வெளி வீரர்களின் சொந்த மாகாணத்தில் உள்ள அவர்களது பகுதியின் (கவுண்டி) தேர்தல் அலுவலகத்திற்கு அனுப்புவர். பின்னர் இவை வழக்கமான வாக்குகள் போலவே கருதி எண்ணப்படும்.
"வாக்கு செலுத்துவது என்பது குடிமக்களாக நமக்கு இருக்கும் ஒரு முக்கிய கடமை," என்று சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்தார்.
"எனது வாக்குச்சீட்டை அனுப்பி வைக்குமாறு கோரிக்கையை விடுத்துள்ளேன். இந்த முறையில் வாக்குச் செலுத்துவதை நினைத்து எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது," என்று புட்ச் வில்மோர் கூறியுள்ளார்.
தேர்தல் நாள் அன்று அவர்கள் அமெரிக்க நேரத்தில் இரவு 7 மணிக்குள் வாக்குகளைச் செலுத்த வேண்டும். வாக்குச்சீட்டில் முகவரியில் அவர்கள் 'பூமியின் சுற்றுப்பாதை' என்று குறிப்பிடுவர்.
1997-ஆம் ஆண்டு டேவிட் வுல்ஃப் என்ற விண்வெளி வீரர் முதன்முதலில் விண்வெளியில் இருந்து வாக்களித்த முதல் அமெரிக்கர் ஆவார். சமீபத்தில், 2016 மற்றும் 2020-ஆம் ஆண்டிலும் கேட் ரூபின்ஸ் என்பவரும் விண்வெளியில் இருந்து வாக்களித்துள்ளார்.
விண்வெளி வாழ்க்கை
ஜூன் 5-ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பாரி புட்ச் வில்மோர் ஆகிய இரண்டு அமெரிக்க விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஒரு சோதனைப் பயணத்திற்காகச் சென்றபோது, சில நாட்களில் பூமிக்குத் திரும்பிவிடுவோம் என்ற எதிர்பார்ப்பில்தான் சென்றனர்.
ஆனால் விஷயங்கள் திட்டமிட்டபடி நடக்கவில்லை.
அவர்கள் சென்ற ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்னும் பூமிக்குத் திரும்பாமல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளார்கள். அவர்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) விண்கலம் மூலம் பூமிக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
இதற்கு முன் இவர்கள் இருவரும் இரண்டு முறை நீண்ட காலத்திற்கு விண்வெளியில் இருந்ததாகவும், நிர்ணயிக்கப்பட்ட வரம்பைவிட அதிக நேரம் விண்வெளியில் தங்கியிருப்பது உள்ளிட்ட சோதனை விமானங்கள் தொடர்பான அபாயங்களை அவர்கள் புரிந்து இருப்பதாகவும் நாசா ஏற்கனவே கூறியுள்ளது.
"விண்வெளியில் உள்ள காலத்தில் அவர்கள் விண்வெளி நிலையத்தில் அறிவியல் சார்ந்த பணிகள், விண்வெளியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வார்கள் என்றும் அவர்கள் 'விண்வெளி நடைபயணம்' கூடச் செய்வார்கள்," என்றும் நாசா தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல்
அமெரிக்காவின் வாக்காளர்கள் தங்களது அடுத்த அதிபரைத் தேர்வு செய்வதற்காக எதிர்வரும் நவம்பர் 5-ஆம் தேதி வாக்களிக்க உள்ளனர்.
இதில் ஜனநாயக கட்சி சார்பாக தற்போதைய அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசுக் கட்சி சார்பாக முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார்.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸுக்கு இடையிலான போட்டி மிகவும் கடுமையானதாக மாறியுள்ளது. முழுவீச்சில் இருவரும் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)