ஒரே ஓவரில் மாறிய ஆட்டம்: டெல்லியிடம் தோற்ற ராஜஸ்தானின் பிளேஆஃப் வாய்ப்பு விவரம்

RR vs DC, ஐபிஎல், பிளேஆஃப் வாய்ப்பு யாருக்கு?

பட மூலாதாரம், ANI

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஐபிஎல் 2026 சீசனின் 62வது போட்டியில் இன்று (மே 17) டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொண்டது ராஜஸ்தான் ராயல்ஸ். டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது.

அடுத்து விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியது. அந்த அணியின் ஓப்பனர்கள் கே.எல்.ராகுல், அபிஷேக் பொரெல் இருவருமே அரைசதம் அடித்தனர்.

இந்த வெற்றியின் மூலம் டெல்லி கேபிட்டல்ஸ் அணி இன்னும் பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்கிறது. 13 போட்டிகளில் விளையாடியிருக்கும் கேபிட்டல்ஸ் 6 வெற்றிகள் பெற்றிருக்கிறது. 12 புள்ளிகள் பெற்றிருக்கும் அந்த அணி தற்போது புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தில் இடத்துக்கு முன்னேறியிருக்கிறது.

அதேசமயம் டாப் 4 இடங்களுக்குள் நுழைவதற்கான வாய்ப்பிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ், இந்தப் போட்டியில் தோற்றதன் காரணமாக ஐந்தாவது இடத்தில் இருந்து ஆறாவது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டது. இதுவரை 12 போட்டிகளில் விளையாடியிருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்றிருக்கிறது. இன்னும் 2 போட்டிகளில் ஆட வேண்டியுள்ள நிலையில், அதிகபட்சம் 16 புள்ளிகள் பெற முடியும் என்பதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளேஆஃப் போட்டியில் நீடிக்கிறது.

ஏற்றமும் இறக்கமும் நிறைந்த ராயல்ஸ் இன்னிங்ஸ்

இந்தப் போட்டியில் 26 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார் ரியான் பராக்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்தப் போட்டியில் 26 பந்துகளில் 52 ரன்கள் எடுத்தார் ரியான் பராக்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டாவது ஓவரிலேயே யஷஸ்வி ஜெய்ஸ்வால் விக்கெட்டை இழந்தது. 12 ரன்கள் எடுத்திருந்த ஜெய்ஸ்வால், லுங்கி எங்கிடி பந்துவீச்சில் ஸ்டார்க் வசம் கேட்சாகி வெளியேறினார்.

அதன்பிறகு ஜோடி சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி, துருவ் ஜுரெல் இருவரும் அதிரடியாக விளையாடினார்கள். இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த பார்ட்னர்ஷிப் 34 பந்துகளிலேயே 70 ரன்கள் விளாசியது. வழக்கம்போல் அதிரடியாக பவுண்டரிகளும், சிக்ஸர்களும் விளாசிய சூர்யவன்ஷி, 21 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவர் விக்கெட்டை இளம் ஆல்ரவுண்டர் மாதவ் திவாரி கைப்பற்றினார்.

அதன்பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரியான் பராக் தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்டினார். அவரும், ஜுரெலும் அதிரடியாக ஆடியதால் ராயல்ஸின் ரன்ரேட் வெகுவாக உயர்ந்தது. முகேஷ் குவார் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்து 1 பவுண்டரி, 3 சிக்ஸர் என விளாசினார் பராக். அதன் காரணமாக, 14 ஓவர்கள் முடிவில் 160/2 என்ற மிகச் சிறந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ்.

ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய ஸ்டார்க்

RR vs DC, ஐபிஎல், பிளேஆஃப் வாய்ப்பு யாருக்கு?

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, 15வது ஓவரில் ஆட்டத்தை மொத்தமாக மாற்றினார் மிட்செல் ஸ்டார்க்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

ஆனால், 15வது ஓவரில் ஆட்டத்தை மொத்தமாக மாற்றினார் மிட்செல் ஸ்டார்க். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் ரியான் பராக் விக்கெட்டை வீழ்த்தினார் ஸ்டார்க். 26 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் பராக். அதற்கடுத்து களமிறங்கிய டானவன் ஃபெரீரா முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி வெளியேறினார். ஸ்டார்க்கின் ஹாட்ரிக் பந்தை சந்தித்த ரவி சிங், அந்தப் பந்தில் பவுண்டரி அடித்து ஹாட்ரிக்கைத் தவிர்த்தார். ஆனால், அடுத்த பந்திலேயே அவரது விக்கெட்டையும் கைப்பற்றினார் ஸ்டார்க். அவர், 4 பந்துகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்த 165/5 என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது ராயல்ஸ்.

அதன்பிறகு அந்த அணியால் சரிவிலிருந்து மீளவே முடியவில்லை. கடைசி கட்டத்தில் பந்துவீசிய மாதவ் திவாரி, ஸ்டார்க், லுங்கி எங்கிடி அனைவரும் சிறப்பாகப் பந்துவீசினார்கள். அதனால், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்களே எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ். ஒருபக்கம் துருவ் ஜுரெல் மட்டும் போராடி அந்த அணியை இந்த ஸ்கோருக்கு எடுத்துவந்தார். கடைசி ஓவரில் ஆட்டமிழந்த ஜுரெல், 40 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார்.

கடைசி 35 பந்துகளில் 32 ரன்கள் மட்டுமே எடுத்த ராயல்ஸ், 6 விக்கெட்டுகளை இழந்தது. டெல்லி கேபிட்டல்ஸ் பந்துவீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். லுங்கு எங்கிடி, மாதவ் திவாரி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.

4 ஓவர்கள் வீசிய எங்கிடி 24 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, 4 ஓவர்கள் வீசிய எங்கிடி 24 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்

பிளே ஆஃப் போட்டியில் நீடிக்கும் டெல்லி

194 ரன்கள் என்ற இலக்கை சேஸ் செய்த டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு கே.எல்.ராகுல், அபிஷேக் பொரெல் இருவரும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். இந்தக் கூட்டணி 10.1 ஓவர்களில் 105 ரன்கள் குவித்து தங்கள் அணிக்கு ஒரு நல்ல அடித்தளம் அமைத்தது.

முதல் ஓவரில், ரன் ஏதும் எடுக்காத நிலையில் ராகுல் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஃபைன் லெக் திசையில் இருந்த யஷ் ராஜ் புஞ்சா தவறவிட்டார். அது அந்த அணிக்கு பெரும் சிக்கலாக அமைந்தது.

பொரெல், ராகுல் இருவருமே அதிரடியாக விளையாடியதால் அந்த அணி 4வது ஓவர் முடிவிலேயே 50 ரன்களைக் கடந்தது. பவர்பிளே முடிவில் விக்கெட்டே இழக்காமல் 72 ரன்கள் எடுத்தது டெல்லி கேபிட்டல்ஸ்.

ஐபிஎல் அரங்கில் தன்னுடைய 50வது 50+ ஸ்கோரை பதிவு செய்தார் கே.எல்.ராகுல்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஐபிஎல் அரங்கில் தன்னுடைய 50வது 50+ ஸ்கோரை பதிவு செய்தார் கே.எல்.ராகுல்

பேட்டிங் செய்தபோது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஷனகாவை இம்பேக்ட் வீரராகப் பயன்படுத்திவிட்டதால், அவர்களுக்கு ஒரு பௌலர் குறைவாகவே இருந்தது. அதனால் 5வது பௌலரின் 4 ஓவர்களுக்கு ஷனகா, டானவன் ஃபெரீரா ஆகியோரைப் பயன்படுத்தவேண்டிய சூழ்நிலை அவர்களுக்கு ஏற்பட்டது.

பவர்பிளேவுக்குப் பின் பந்துவீச வந்த ஷனகாவின் முதல் ஓவரிலும் டெல்லி ஓப்பனர்கள் 13 ரன்கள் எடுத்தார்கள். அதனால், எந்த பந்துவீச்சு மாற்றமும் அவர்களுக்கு எடுபடவில்லை.

தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவந்த டெல்லி ஓப்பனர்களை 11வது ஓவரில் பிரித்தார் பிரிஜேஷ் ஷர்மா. 31 பந்துகளில் 51 ரன்கள் எடுத்த பொரெல், டானவன் ஃபெரீராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

பொரெல் ஆட்டமிழந்த பிறகு டெல்லி அணியின் ரன்ரேட் மெல்ல குறையத் தொடங்கியது. ராயல்ஸ் பந்துவீச்சாளர்கள் ஓரளவு சிக்கனமாகப் பந்துவீசி நெருக்கடி ஏற்படுத்தத் தொடங்கினார்கள். 13வது ஓவரில் மீண்டும் பந்துவீச வந்த ஆர்ச்சர் சாஹில் பரக் விக்கெட்டைக் கைப்பற்றினார்.

பொரெல் - ராகுல் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 64 பந்துகளில் 105 ரன்கள் எடுத்தது

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, பொரெல் - ராகுல் கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 64 பந்துகளில் 105 ரன்கள் எடுத்தது

15வது ஓவரில் கே.எல்.ராகுல் விக்கெட்டை ஷனகா வீழ்த்த, டெல்லி அணிக்கு நெருக்கடி மேலும் சற்றுக் கூடியது. 42 பந்துகளை சந்தித்த ராகுல் 56 ரன்கள் எடுத்தார். ஐபிஎல் தொடரில் அவர் அடித்த 50வது 50+ ஸ்கோர் இது.

கடைசி 4 ஓவர்களுக்கு 43 ரன்கள் தேவை என்ற நிலையில், 17வது ஓவரில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் விக்கெட்டை வீழ்த்தினார் ஆர்ச்சர். அந்த ஓவரில் 8 ரன்கள் எடுக்கப்பட்டன.

3 ஓவர்களில் 35 ரன்கள் தேவைப்பட்டது. அக்‌ஷர் பட்டேல், டேவிட் மில்லர் என இரண்டு இடது கை பேட்டர்கள் களத்தில் இருந்ததால் ஆஃப் ஸ்பின்னரான டானவன் ஃபெரீராவுக்கு ஓவர் கொடுத்தார் ரியான் பராக். அந்த ஓவரில் மில்லர், அக்‌ஷர் இருவரும் தலா 1 சிக்ஸர் அடித்ததால் 16 ரன்கள் கிடைத்தது.

கடைசி 2 ஓவர்களில் 19 ரன்கள் தேவை என்ற நிலையில், 19வது ஓவரில் 12 ரன்கள் கொடுத்து மில்லரின் விக்கெட்டைக் கைப்பற்றினார் பிரிஜேஷ் ஷர்மா. டெல்லி அணி வெற்றி பெற, கடைசி 6 பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரின் முதலிரு பந்துகளில் பவுண்டரியும், சிக்ஸரும் அடித்து ஆட்டத்தை முடித்துக்கொடுத்தார் அஷுதோஷ் ஷர்மா. அதனால், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது டெல்லி கேபிட்டல்ஸ். அக்‌ஷர் பட்டேல் 34 ரன்களுடனும், அஷுதோஷ் ஷர்மா 18 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு