83 வயதில் தந்தையான நடிகர் - எந்த வயதுக்குள் குழந்தை பெற்றுக் கொள்வது நல்லது?

பிரபல ஹாலிவுட் நடிகரான அல் பசினோ, தான் தந்தையாகியிருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். அவருடைய வயது 83! இவர் தன்னுடைய 29 வயது காதலி நூர் அல்ஃபல்லாவுடன் தன்னுடைய குழந்தையை பெற்றிருக்கிறார். முன்னதாக மற்றொரு ஹாலிவுட் நடிகரான 79 வயது ஆல்பெர்ட் டி நிரோவும், தான் தந்தையாகி இருப்பதை கடந்த மாதம் அறிவித்தார்.

இந்த உலகில் முதுமையான வயதில் குழந்தை பெற்றுக்கொண்டது இவர்கள் மட்டுமல்ல. இதற்கு முன்னதாக எத்தனையோ பேர் முதுமையில் பெற்றோர்கள் ஆகியிருக்கின்றனர். குறிப்பாக அமெரிக்காவில் நடிகர்கள், இசைத்துறையைச் சார்ந்தவர்கள், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகள் கூட தங்களுடைய வாழ்க்கையில் மிக தாமதமான வயதில், பெற்றோர்கள் ஆகியிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

இங்கே நாம் மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது. உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக தந்தை ஆகிறவர்களின் வயது அதிகரித்துக்கொண்டே போகிறது. அதாவது 20 ஆண்டுகளுக்கு முன்னால் புதிதாக குழந்தை பெற்றுக்கொண்ட ஆண்களின் சராசரி வயது 26 ஆக இருந்தால், தற்போதைய நிலையில் புதிதாக குழந்தை பெற்றுக்கொண்டவர்களின் சராசரி வயது 29 ஆக இருக்கிறது.

1972 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டிற்கு இடையில், இது 3.5 ஆண்டுகள் வரை அதிகரித்துள்ளது. இன்று அமெரிக்காவில் சராசரி தந்தையின் வயது 30.9 ஆக உள்ளது. மேலும் இதில் 9 சதவீத அப்பாக்கள் தங்கள் குழந்தை பிறக்கும் போது குறைந்தது 40 வயதுடையவர்களாக இருக்கிறார்கள்.

அதிக வயதில் குழந்தை பெற்றவர் யார்?

கின்னஸ் உலக சாதனைகளின்படி, இதுவரை உலகில் அதிக வயதில் குழந்தை பெற்றுக்கொண்டவராக 92 வயது முதியவர் ஒருவர் இருக்கிறார். ஆனால் இதைவிட வயதானவர்கள் எல்லாம் தங்களுடைய முதிய வயதில் குழந்தை பெற்றிருக்கிறார்கள் என அதிகாரப்பூர்வமற்ற பல தகவல்கள் சொல்கின்றன.

ஆனால் முதிய வயதில் தந்தை ஆவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல, அதில் நிறைய ஆபத்துக்கள் இருக்கின்றன என அறிவியல் உலகமும், மருத்துவமும் சொல்கிறது.

2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், உட்டா பல்கலைக்கழகமும் மற்ற பிற நிறுவனங்களும் இணைந்து, "advanced paternal age" (ஆண்கள் முதிய வயதில் குழந்தை பெறுவது) , மற்றும் அதனால் கருவுருதலில் வரும் சிக்கல்கள், கர்ப்பகாலத்தில் வரும் பிரச்னைகள், குழந்தைகளின் ஆரோக்கியத்தில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டது.

ஆனால் இதுபோன்ற ஆய்வுகள் அனைத்துமே, அல் பாசினோ போன்று இத்தனை முதிய வயதில் குழந்தை பெற்றுக்கொள்வது அத்தனை நல்ல விஷயம் அல்ல என்பதை மட்டுமே வலியுறுத்துகின்றன. இதுவெல்லாம் ஒரு அசாதாரணமான செயல் என்றும் குறிப்பிடுகின்றன.

ஏனெனில் பொதுவாகவே 40, 50 வயதுகளுக்கு பிறகே ஆண்களுக்கு அவர்களுடைய விந்தணுக்களில் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. அந்த வயதுகளில் ஆண்களுடைய விந்தணுவின் எண்ணிக்கைகளில் குறைபாடு ஏற்படுவதுடன், அதன் அளவு, இயக்கம் ஆகியவற்றிலும் தரம் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

முதுமையில் குழந்தை பெற்றால் என்ன சிக்கல்?

எனவே ஆண்கள் தங்களுடைய முதுமையான வயதில் குழந்தை பெற்றுக்கொள்ள நினைப்பது பல ஆபத்துகளுக்கு வழிவகுக்கும் என மருத்துவர்கள் சொல்கின்றனர்.

இதில் சிலருக்கு மலட்டுத்தன்மை இருக்கலாம். அதையும் தாண்டி கருவுறுதல் நடக்கும்போது, அதில் நிறைய பேருக்கு கர்ப்பம் கலைந்துபோகும் ஆபத்துக்கள் இருக்கின்றன என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். முதிய வயதில் ஒருவர் தந்தையாக முயலும்போது, அவருடைய இணையருக்கு கரு கலைந்து போவது போன்ற நிகழ்வுகள் அதிகளவில் நடந்திருக்கின்றன என பல ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

அதேசமயம் ஒருவேளை குழந்தை பிறந்துவிட்டாலும், அந்த குழந்தை நோய்வாய்படுவதற்கான வாய்ப்பும் இதில் அதிகளவு இருக்கிறது. 1950களுக்கு பிறகு மேற்கொள்ளப்பட்ட பல ஆராய்ச்சி முடிவுகள், முதிய வயதில் ஆண்கள் பெற்றுக்கொண்ட குழந்தைகளுக்கு Achondroplasia என்னும் ’மரபணு கோளாறு’ பிரச்னை அதிகமாக இருப்பதாக கூறுகின்றன. ஆனால் இதுதவிர வேறு சில மோசமான விளைவுகளும் அவர்களுக்கு ஏற்படுகின்றன.

”முதுமையான வயதில் பெண்கள், குழந்தைகள் பெற்றுக்கொள்ள நினைத்தால் அந்த குழந்தைகளுக்கு என்னென்ன பிரச்னைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறதோ, கிட்டதட்ட அத்தனை வாய்ப்புகளும் ஆண்களுக்கும் இருக்கின்றன. அவர்களின் நலிந்துபோன உடல் ஆரோக்கியம் நிச்சயமாக குழந்தைகளை பாதிக்கும்” என உட்டா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

அதேபோல் ஸ்டாண்ட்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில், “முதுமையான வயதில் ஆண்கள் பெற்றுக்கொள்ளும் குழந்தைகள், மிக குறைவான எடையில் பிறப்பதாக தெரிவிக்கின்றன. மேலும் அந்த குழந்தைகளுக்கு வலிப்பு போன்ற பிரச்னைகளும் ஏற்படுவதாக குறிப்பிடப்படுகிறது.

இதுதவிர அத்தகைய குழந்தைகளுக்கு இதயம் சம்பந்தப்பட்ட நோய்களும், சிறுவயதிலேயே கேன்சர் போன்ற மோசமான நோய்களும் வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் ஸ்டாண்ட்ஃபோர்ட் பல்கலைக்கழக ஆய்வுகள் கூறுகின்றன.

எனவே பெற்றோர்களின் உடல்நலம் குழந்தைகளை பாதிக்கிறது என்று பல ஆய்வுகள் கூறினாலும், அது ஏன், எப்படி என்பது குறித்த தெளிவான வழிமுறைகள் எதுவும் இதுவரை அறியப்படவில்லை. இதில் பெற்றோர்களின் வாழ்வியல் முறையும், சுற்றுச்சூழலும் கூட தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

மேலும், “முதிய வயதில் ஆண்கள் குழந்தைகள் பெற்றுக்கொள்ளும்போது, அந்த குழந்தைகளின் மரபணுக்களில் சேதம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்றும், அது வழிவழியாக அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படும்” எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பொதுவாக நம் சமூகத்தில் குழந்தை பேறு இல்லாதபோது, பெண்களை நோக்கியே அதிக கேள்விகள் எழுப்பப்படுகிறது. ஆனால் உண்மையில் இங்கே சமீப ஆண்டுகளில் ஆண்களுக்குத்தான் நிறைய பிரச்னைகள் உள்ளன. இதில் அவர்களுடைய வயதும் ஒரு முக்கிய காரணம்.

எந்த வயதில் குழந்தை பெற்றுக் கொள்வது நல்லது?

”அல் பேசினோ போன்றும், ஆல்பெர்ட் டி நிரோ போன்றும் தங்களுடைய 80களிலும், 90களிலும் குழந்தை பெற்றுக்கொள்வது அவ்வளவு எளிதான விஷயமல்ல. மிகவும் அவசிய தேவை இருந்தால் மட்டும் தங்களுடைய முதிய வயதில் ஆண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும்” என கூறுகிறார் பாலியல் மருத்துவர் காமராஜ்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், “ஆண்களில் 70, 80களில் மட்டுமல்ல தங்களுடைய 90 வயதிற்கு மேலும் அவர்களால் உடலுறவு வைத்துக்கொள்ள முடியும், குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். இதுபோன்ற செய்திகளை அவ்வபோது நாம் பார்க்க முடியும். 80 வயதுகளுக்கு மேல் உலக தலைவர்கள் பலர் குழந்தை பெற்றிருக்கின்றனர்."

"பொதுவாக ஆண்களின் விந்தணு எண்ணிக்கையானது அவர்களது 26 வது வயதில் உச்சத்தில் இருக்கும். அதற்கு பிறகு சிறிது சிறிதாக குறைய துவங்கும். 40, 50 வயதுகளுக்கு பின்னால் அதில் மேலும் சில குறைவுகள் ஏற்படும். ஆனால் அதனால் பெரிதாக எந்த விளைவுகளும் இல்லை. 100 வயதில் கூட குழந்தை பெற்றுக்கொண்ட ஆண்கள் இருக்கிறார்கள்."

"ஆனால் மிகவும் முதிய வயதில் குழந்தைகள் பெற்றுக்கொள்ளும்போது, அவர்களுக்கு மனநல ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிப்புகள் ஏற்படுவதற்கு 30 -40 சதவீதம் வரை வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனென்றால் வயது மூப்பு ஏற்பட ஏற்பட விந்தணுக்களில் உள்ள மரபணு உள்ளடக்கத்தில் பாதிப்பு ஏற்படும். அதனால் 45வயதிற்குள்ளாகவே குழந்தைகள் பெற்றுக்கொள்வது நல்லது” என்று விவரிக்கிறார் மருத்துவர் காமராஜ்.

அதேசமயம் இதில் சில குழந்தைகள் எந்த பிரச்னையும் இல்லாமல், இயல்பாகவும் பிறக்கின்றன என்பதையும் அவர் குறிப்பிடுகிறார்.

”ஆனால் எதுவாக இருந்தாலும் மிக அவசிய தேவை இருந்தால் மட்டுமே, தங்களுடைய வயதான காலத்தில் குழந்தைக்கு முயற்சிக்க வேண்டும். சிலருக்கு வயது மூப்பு ஏற்பட்ட பிறகு, வாரிசு வேண்டும் என்பது போன்ற சூழ்நிலைகள் ஏற்படும், அவர்களை போன்றோர் குழந்தைக்கு முயற்சிக்கலாம். ஆனால் கர்ப்பம் தரித்த பிறகு முறையான பரிசோதனைகளை அவ்வபோது மேற்கொண்டு, குழந்தையின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று கூறுகிறார் மருத்துவர் காமராஜ்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: