அமெரிக்கா vs சீனா: வல்லரசுகளை மோத வைக்கும் சின்னஞ்சிறு 'சிப்'

    • எழுதியவர், சுரஞ்சனா திவாரி மற்றும் ஜொனாதன் ஜோசப்ஸ்
    • பதவி, பிபிசி

அலைபேசிகள் முதல் போர் ஆயுதங்கள் வரை அனைத்திற்கும் இன்றியமையாததான குறைக்கடத்தி (Semiconductor) துறையில் சீனாவின் முன்னேற்றத்தைத் தடுக்கும் முயற்சிகளை அமெரிக்கா வேகமாகச் செய்து வருகிறது. அக்டோபரில், சில விரிவான ஏற்றுமதி கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு அறிவித்தது. அதன்படி, உலகின் எந்த மூலையில் 'சிப்'கள் தயாரிக்கப்பட்டிருந்தாலும் அமெரிக்கக் கருவிகள் அல்லது மென்பொருளைப் பயன்படுத்தி அவற்றை சீனாவிற்கு ஏற்றுமதி செய்ய அமெரிக்க நிறுவனங்களுக்கு உரிமங்கள் பெறுவது கட்டாயமாக்கப்பட்டது. அமெரிக்கக் குடிமக்கள் மற்றும் அந்நாட்டின் 'கிரீன் கார்டு' வைத்திருப்பவர்கள் சில சீன சிப் நிறுவனங்களில் பணியாற்றுவதை அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கைகள் தடுக்கின்றன . கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள்; அவர்கள் நாட்டில் வேலை செய்ய உரிமை உண்டு. அமெரிக்கர்களின் திறமையை சீன நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்வதற்கான மிக முக்கிய வழியை இவ்வறிவிப்பு தடுப்பதோடு அந்நிறுவனங்களின் உயர்நிலை குறைக்கடத்தி பிரிவின் வளர்ச்சியைத் தடுக்கும்.

அமெரிக்கா ஏன் இப்படிச் செய்கிறது?

சூப்பர் கம்ப்யூட்டர்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் ராணுவ தளவாடங்களில் இந்த மேம்படுத்தப்பட்ட சிப்கள் பயன்படுகின்றன. சீனா இந்த தொழில்நுட்பத்தை சொந்தம் கொண்டாடுவது தனது தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்கா கூறுகிறது. அமெரிக்க வர்த்தகத் துறையின் துணைச் செயலர் ஆலன் எஸ்டீவ்ஸ் இந்த புதிய விதிகளை அறிவிக்கையில், "ராணுவப் பயன்பாடுகளுடன் கூடிய உணர்திறன் வாய்ந்த தொழில்நுட்பங்களை," சீனா கையகப்படுத்துவதைத் தடுக்க அமெரிக்கா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வதை உறுதி செய்வதே இதன் நோக்கம் என்று கூறினார். "அச்சுறுத்தல் சூழல் எப்பொழுதும் மாறிக்கொண்டே இருக்கிறது. நாமும் அந்த சவால்களை எதிர்கொள்வதை உறுதிப்படுத்த நம் கொள்கைகளை புதுப்பிக்கிறோம்," என்று அவர் கூறினார். இதற்கிடையில், அமெரிக்காவின் இந்த கட்டுப்பாடுகளை சீனா "தொழில்நுட்ப பயங்கரவாதம்" என்று விமர்சித்துள்ளது. தைவான், சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா போன்ற சிப் உற்பத்தி செய்யும் ஆசியாவில் உள்ள நாடுகள் இந்த கசப்பான போர் உலகளாவிய விநியோகச் சங்கிலியைப் பாதிப்பது குறித்து கவலைகளை எழுப்பியுள்ளன. இந்நிலையில், சீனாவின் மிக முக்கிய சிப் உற்பத்தியாளரான YMTC உட்பட மேலும் 36 சீன நிறுவனங்களை வர்த்தக தடைப் பட்டியலில் சேர்த்துள்ளது ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம். இதனால், அந்நிறுவனங்களுக்கு சில தொழில்நுட்பங்களை விற்க அமெரிக்க நிறுவனங்களுக்கு அரசாங்க அனுமதி தேவைப்படும். இந்த அனுமதிகளைப் பெறுவது மிகவும் கடினமானதாகும். அமெரிக்கக் கட்டுப்பாடுகள் பரந்த தாக்கங்களைக் கொண்டுள்ளன. பிரிட்டனில் இருந்து இயங்கும் கம்ப்யூட்டர் சிப் டிசைனர் நிறுவனமான ஆர்ம், அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் விதிமுறைகள் காரணமாகத் தொழில்நுட்ப நிறுவனமான அலிபாபா உள்ளிட்ட சீன நிறுவனங்களுக்கு அதன் மேம்பட்ட வடிவமைப்புகளை விற்கவில்லை என்பதை கடந்த வாரம் உறுதிப்படுத்தியது. தாங்கள் செயல்படும் நாட்டின் அனைத்து ஏற்றுமதி சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை கடைப்பிடிக்க உறுதி பூண்டுள்ளோம் என்கிறது ஆர்ம் நிறுவனம்.

உலக வர்த்தக அமைப்பிடம் புகார் அளித்த சீனா

செமிகண்டக்டர்கள் மற்றும் அது தொடர்புடைய தொழில்நுட்பங்கள் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகள் குறித்து உலக வர்த்தக அமைப்பில் (WTO) அமெரிக்காவிற்கு எதிராக சீனா புகார் அளித்துள்ளது. ஜனவரி 2021இல் ஜோ பைடன் அதிபராக பதவியேற்ற பிறகு, அமெரிக்காவிற்கு எதிராக உலக வர்த்தக அமைப்பில் சீனா தொடுத்துள்ள முதல் வழக்கு இதுவாகும். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் உற்பத்தித் துறைகளில் அதன் ஆதிக்கத்தைத் தக்கவைக்க, ஏற்றுமதி கட்டுப்பாடுகளை அமெரிக்கா தவறாகப் பயன்படுத்துகிறது என்றும் சீனா குற்றம் சாட்டியுள்ளது. மேலும், அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள் உலகளாவிய தொழில்துறை விநியோகச் சங்கிலிகளின் ஸ்திரத்தன்மையை அச்சுறுத்துவதாக சீனா அந்த புகாரில் குறிப்பிட்டிருக்கிறது. தேசியப் பாதுகாப்பு தொடர்பான கவலைகளைத் தீர்ப்பதற்கு வர்த்தக அமைப்பு "பொருத்தமான சபை அல்ல" என்று அமெரிக்கா இதற்கு பதிலளித்துள்ளது. மேம்பட்ட தொழில்நுட்பங்களுக்கான அணுகலைத் தடுத்து தீர்க்கமாகச் செயல்படுவது என்பது அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு நலன்களுக்குத் தேவைப்படுகிறது என்கிறார் ஏற்றுமதி நிர்வாகத்திற்கான அமெரிக்கத் துணை வணிகச் செயலர் தியா கெண்ட்லர். ஏறக்குறைய 2,800 சீனப் பொருட்களின் ஏற்றுமதிக்கு அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆனால் இவற்றில் 1,800 மட்டுமே சர்வதேச வர்த்தக விதிகளின் கீழ் அனுமதிக்கப்பட்டதாக சீனாவின் புகார் குறிப்பிடுகிறது. இந்த விவகாரத்தில் தீர்வு காண அமெரிக்காவுக்கு 60 நாட்கள் அவகாசம் உள்ளது. இல்லையெனில், சீனா தனது வழக்கை மறுபரிசீலனை செய்ய ஒரு குழுவைக் கோர அனுமதிக்கப்படும். முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக்காலத்தில் இரும்பு மற்றும் அலுமினியம் மீது அமெரிக்கா விதித்த வரிகள் உலகளாவிய வர்த்தக விதிகளை மீறுவதாக இந்த மாதத்தின் தொடக்கத்தில் உலக வர்த்தக அமைப்பு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை வலுவாக நிராகரிப்பதாகவும் அந்த விதிமுறைகளை அகற்றும் எண்ணம் இல்லை என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

ஜப்பான் மற்றும் நெதர்லாந்துடன் பேச்சுவார்த்தை

ஜப்பான் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளும் சீனா மீது ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கலாம். ஜப்பானிய மற்றும் டச்சு நிறுவனங்களின் மேம்பட்ட தயாரிப்புகளை சீன சந்தையில் விற்கும் திறனை இது கட்டுப்படுத்துகிறது. சீனா மீதான தங்களின் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவது தொடர்பாக சிப் தயாரிக்கும் உபகரணங்களை விற்பனை செய்யும் இரு முக்கிய சப்ளையர்களுடன் அமெரிக்கா விவாதித்ததாக வெள்ளை மாளிகையின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் திங்களன்று கூறினார். தான் எந்த அறிவிப்புகளையும் வெளியிடப்போவதில்லை எனச் செய்தியாளர்களிடம் கூறிய ஜேக் சல்லிவன், "இந்த பேச்சுவார்த்தையின் நேர்மை, கருத்தியல் மற்றும் தீவிரம் ஆகியவற்றால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்," என்றார். அமெரிக்காவின் இந்த கட்டுப்பாடுகள் சிப் உற்பத்தியாளர்களை மட்டும் பாதிக்கவில்லை. அவை சிப் தயாரிக்கும் உபகரணங்களின் உற்பத்தியாளர்களையும் பாதிக்கின்றன. ஜப்பான் அல்லது நெதர்லாந்தில் உள்ள பெரிய நிறுவனங்கள் தங்கள் உயர்நிலை இயந்திரங்களுக்கான பெரிய மற்றும் லாபகரமான வாடிக்கையாளரை இழக்கக்கூடும். நெதர்லாந்தும் சீனாவுக்கான ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த வேண்டுமா என்று அந்நாட்டின் புகழ்பெற்ற சிப் உற்பத்தி கருவி தயாரிப்பாளரான ஏ.எஸ்.எல்.எம் ஹோல்டிங் என்.வி இன் தலைமை நிர்வாகி பீட்டர் வென்னிங்க் கேள்வி எழுப்பியுள்ளார் அமெரிக்க அழுத்தத்தின் காரணமாக, டச்சு அரசாங்கம் 2019 ஆம் ஆண்டு முதல் ஏ.எஸ்.எல்.எம் அதன் அதிநவீன லித்தோகிராபி இயந்திரங்களைச் சீனாவிற்கு விற்பனை செய்வதை ஏற்கனவே நிறுத்திவிட்டதாக வென்னிங்க் கூறினார். "ஏ.எஸ்.எல்.எம் ஏற்கனவே இதற்காக தியாகம் செய்துவிட்டது," என்று அவர் டச்சு ஊடகம் ஒன்றிடம் கூறினார்.

எதை நோக்கி செல்கிறது இவ்விவகாரம்?

புதிய தயாரிப்புகளை ஆதரிக்கும் வகையில் மேம்பட்ட சிப்களை உருவாக்க வேண்டிய அழுத்தத்தில் சிப் உற்பத்தியாளர்கள் உள்ளனர். உதாரணமாக, ஆப்பிளின் புதிய மடிக்கணினிகள் சிப் தொழில்துறையில் முன்னணியில் இருக்கும் தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனத்தின் 3 நானோ மீட்டர் அளவுள்ள சிப்களை பெற உள்ளது. (அளவீட்டு புரிதலுக்காக ஓர் ஒப்பீடு - ஒரு மனித முடி தோராயமாக 50,000 முதல் 100,000 நானோமீட்டர்கள் வரை இருக்கும்.) சீனா செமிகண்டக்டர்களின் உற்பத்திக்கு முன்னுரிமை அளித்து, இந்தத் துறையில் வல்லரசாக மாற விரும்புவதாக வெளிப்படையாகக் கூறியிருந்தாலும், அமெரிக்காவின் கட்டுப்பாடுகள் சீனாவை மற்ற சிப் உற்பத்தி செய்யும் நாடுகளுக்குப் பின்னால் தள்ளக்கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சமீபத்திய நடவடிக்கைகள் அக்டோபரில் அறிவிக்கப்பட்டதைப் போல் பெரியதாக இல்லாவிட்டாலும், அமெரிக்கா ஏற்கனவே சீனாவின் சிப் தொழில் துறையைக் கணிசமாகத் தனிமைப்படுத்தியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: