காணொளி: நட்பு நாடுகளாக இருந்த அமெரிக்காவும் இரானும் எதிரிகளானது எப்படி?
அமெரிக்கா மற்றும் இரான் இடையிலான உறவு எப்போதும் இவ்வளவு பதற்றமாக இருந்ததில்லை.
அப்படியானால், இந்த இரு நாடுகளுக்கிடையிலான உறவு எவ்வாறு இவ்வளவு கடுமையாக மோசமடைந்தது ? அது இன்று இரானில் நடைபெறும் போராட்டங்களுடன் எவ்வாறு தொடர்புடையது?
20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இரானின் தென்மேற்குப் பகுதியில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. இது உலக அரங்கில் அந்த நாட்டின் பங்கை மாற்றியமைத்தது. இதன் மூலம் மேற்கு நாடுகளுடனும், குறிப்பாக அமெரிக்காவுடனும், இரானின் உறவு ஒரு சிக்கலான பாதையில் செல்லத் தொடங்கியது.
பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்று, பின்னர் பிரிட்டிஷ் பெட்ரோலியம் ஆக மாறிய, இரானின் எண்ணெய் தொழில்துறையை உருவாக்கியது. ஆரம்பத்தில் வணிகம் நன்றாக சென்று கொண்டு இருந்தது . ஆனால் காலப்போக்கில், எண்ணெய் வளங்கள் மீது அதிக கட்டுப்பாடு செலுத்த வேண்டும் என்ற இரானியர்களின் கோரிக்கை வலுவடைந்தது.
இரானில் வலுவான குரல்களில் ஒருவரான பிரதமர் முகமது மொசத்தேக். 1951ஆம் ஆண்டு, இரானின் எண்ணெய் வளங்களை தேசியமயமாக்குவது தொடர்பான வாக்குறுதியுடன் மொசத்தேக் அதிகாரத்திற்கு வந்தார். அதை அவர் நடைமுறைப்படுத்தினார்.
இதன் விளைவாக, அமெரிக்காவின் ஆதரவுடன் பிரிட்டன், இரானிய எண்ணெய் மீது புறக்கணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் காரணமாக, அடுத்த இரண்டு ஆண்டுகளில் எண்ணெய் ஏற்றுமதி கிட்டத்தட்ட முற்றிலுமாக சரிந்தது. 1953ஆம் ஆண்டு, அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் உளவு அமைப்புகள், அவரை பதவியிலிருந்து அகற்றும் வகையில் ஒரு புரட்சி திட்டத்தை திட்டமிட்டனர்.
இந்த ஆட்சி கவிழ்ப்பு , மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் இருந்த இரான் மன்னர் முகமது ரேசா பஹ்லவியின் அதிகாரத்தை உறுதிப்படுத்தியது.
அடுத்த 26 ஆண்டுகளில் , அமெரிக்காவின் ஆதரவுடன், நாட்டில் உள்கட்டமைப்புகளை ஷா உருவாக்கினார். நில சீர்திருத்தங்களை தொடங்கி, கல்வியை மேம்படுத்தினார். பெண்களுக்கு வாக்குரிமையும் வழங்கினார்.
இந்தச் சீர்திருத்தங்கள் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தின. ஆனால், அதன் பயன் அனைவருக்கும் சமமாக கிடைக்கவில்லை. சில மதத் தலைவர்கள், இந்த மாற்றங்கள் இஸ்லாமிய மத மதிப்புகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கருதினர்.
அதன்பின், ஷா சமூகத்தின் மீதான அரசியல் கட்டுப்பாட்டை அதிகரித்தார்.
ஷாவின் பயமூட்டும் ரகசிய காவல் துறை, அவரது ஆடம்பர வாழ்க்கை மற்றும் மேற்கு நாடுகளுக்கு ஆதரவான கொள்கைகள், இரானிய சமூகத்தின் பல தரப்புகளிலும் கலவரங்கள், வேலைநிறுத்தங்கள் மற்றும் பெரும் போராட்டங்களை உருவாக்கின.
இவை அனைத்தும் 1979ஆம் ஆண்டு இரானிய புரட்சிக்கு வழிவகுத்தன. அது நாட்டை முழுமையாக மாற்றியது.
மதத் தலைவர் ஆயத்துல்லா ரூஹுல்லா கொமேனி நாடு கடத்தலில் இருந்து திரும்பி, ஒரு இஸ்லாமிய குடியரசை நிறுவினார். இது இரானை மட்டுமல்ல, உலகைப் பார்க்கும் அதன் பார்வையையும் மாற்றியது.
1979ஆம் ஆண்டு நவம்பரில், அமெரிக்கா இரானை அணுகிய விதத்தில் கோபமடைந்ததாக கூறிய மாணவர்கள் குழு ஒன்று, டெஹ்ரானில் உள்ள அமெரிக்க தூதரகத்தை கைப்பற்றி, அங்கு இருந்த பல அமெரிக்கர்களை ஒரு ஆண்டுக்கும் மேலாக பணயக்கைதிகளாக வைத்திருந்தது.
இதற்கு பதிலடியாக, அமெரிக்கா முதல் முறையாக இரானுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்தது. எண்ணெய் உட்பட, இரானுடன் நடைபெறும் அனைத்து வர்த்தகங்களையும் தடை செய்தது.
பணயக்கைதி நெருக்கடி முடிவடைவதற்கு முன்பே, இராக், இரானைத் தாக்கியது. இராக்கின் தலைவர் சதாம் ஹுசேன், இரானின் இஸ்லாமிய குடியரசால் அச்சுறுத்தப்படுவதாக உணர்ந்தார். புதிய ஆட்சி பலவீனமாக இருப்பதாகவும், விரைவில் தோற்கடிக்கலாம் என்றும் அவர் கருதினார்.
ஆனால், அந்தப் போர் எட்டு ஆண்டுகள் நீடித்தது. அதில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
அதிகாரப்பூர்வமாக நடுநிலையாக இருந்தபோதும், அமெரிக்கா ரகசியமாக இராக்குக்கு ஆதரவு வழங்கியது. நிதி உதவி, ஆயுதங்கள் மற்றும் உளவுத் தகவல்களை வழங்கியது.
இந்தப் போரின் இறுதிக்கட்டத்தில், 1988ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி, அமெரிக்கா ஒரு இரானிய மக்கள் பயணித்த விமானத்தை போர்விமானம் என தவறாக கருதி சுட்டு வீழ்த்தியது. இதில் 290 பேர் உயிரிழந்தனர்.
காலப்போக்கில், அமெரிக்காவுக்கும் அந்தப் பகுதியில் அதன் முக்கிய கூட்டாளியாக இருக்கும் இஸ்ரேலுக்கும் எதிரான போக்கு , இரானில் மேலும் வலுவடைந்தது.
1979ஆம் ஆண்டு புரட்சிக்குப் பிறகு, இஸ்ரேல் என்ற நாடு இருப்பதற்கான உரிமையையே இரான் மறுத்து வருகிறது.
இஸ்லாமிய குடியரசின் பார்வையில், அமெரிக்கா இரானின் இருப்புக்கே அச்சுறுத்தலாக உள்ளது.
அதேபோல், இஸ்ரேலும் இரானுக்கு ஒரு அச்சுறுத்தலாக இருப்பதாக அது கருதுகிறது. அந்தப் பகுதியில் உள்ள ஒரே ஷியா பாரசீக நாடாக இருப்பதால், எவரும் எங்களை விரும்பவில்லை என்ற உணர்வும் உள்ளது.
எனவே, இரான் தனது போராட்டத்தை தன் நாட்டின் எல்லைக்கு வெளியே கொண்டு செல்லாவிட்டால், எதிரிகளை தன் மண்ணிலேயே எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவாகும் என அது நம்புகிறது.
புரட்சிக்குப் பிறகு, தனது சிந்தனையை வெளிநாடுகளுக்கு பரப்பவும், எல்லைகளைத் தாண்டி தனது செல்வாக்கை விரிவுபடுத்தவும், இரான் ஆயுதம் கொண்ட குழுக்களின் ஒரு வலையமைப்புக்கு ஆதரவு அளித்து வருகிறது.
காலப்போக்கில், இதில் காசாவில் உள்ள ஹமாஸ், லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லா, ஏமனில் உள்ள ஹூத்திகள், மேலும் இராக் மற்றும் சிரியாவில் உள்ள பிற குழுக்களும் சேர்ந்தன. இவை அனைத்தும் ஒன்றாக 'எதிர்ப்பு கூட்டணி' (Axis of Resistance) என்று அழைக்கப்படுகிறது.
இதனுடன், இரான் அணுஆயுதத் திட்டத்தை உருவாக்கக்கூடும் என்ற அமெரிக்காவின் கவலையும் இணைந்து, இரு நாடுகளுக்கிடையிலான உறவை மேலும் பதற்றமாக்கியது. இதன் விளைவாக, கூடுதல் தடைகள் விதிக்கப்பட்டன. ஆனால், தனது அணுசக்தி திட்டம் முழுக்க முழுக்க அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே என இரான் மீண்டும் மீண்டும் கூறி வருகிறது.
உறவை சீர்செய்ய சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் உண்மையான முன்னேற்றம் 2015ஆம் ஆண்டில்தான் ஏற்பட்டது. பத்தாண்டுகளுக்கும் மேலான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இரான் தனது அணுத் திட்டத்தை கட்டுப்படுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இதற்குப் பதிலாக, அமெரிக்காவும் பிற நாடுகளும் கடுமையான பொருளாதார தடைகளை நீக்கின. அதன் மூலம், இரான் மீண்டும் சர்வதேச சந்தையில் எண்ணெய் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டது.
ஆனால், அதிபர் டொனால்ட் டிரம்பின் முதல் பதவிக்காலத்தில் இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது . அவர் அமெரிக்காவை அந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேற்றினார். பின்னர், மீண்டும் தடைகள் விதிக்கப்பட்டன.
"இரான் ஒப்பந்தத்தின் மையத்தில் இருந்தது ஒரு பெரிய கற்பனையே. கொடூரமான ஒரு ஆட்சி, அமைதியான அணுசக்தி திட்டத்தை மட்டுமே விரும்புகிறது என்பதே அந்தக் கற்பனை."
அதிபர் டிரம்பின் "அதிகபட்ச அழுத்த" கொள்கையின் கீழ் பதற்றம் மேலும் அதிகரித்தது. ஏற்கெனவே பல தசாப்தங்களாக தடைகளாலும் தவறான நிர்வாகத்தாலும் பலவீனமடைந்திருந்த இரானின் பொருளாதாரம் மேலும் மோசமடைந்தது.
2019ஆம் ஆண்டு, அந்தப் பகுதியில் எண்ணெய் கப்பல்களையும், தனது ட்ரோன்களையும் இரான் தாக்கியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது.
2020ஆம் ஆண்டு, இரானின் உயர்மட்ட இராணுவ தளபதி ஜெனரல் காசிம் சுலைமானி, இராகில் நடைபெற்ற அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
அமெரிக்கர்களுக்கு எதிரான தாக்குதல்களின் பின்னணியில் சுலைமானி இருந்ததாக அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.
2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி, ஹமாஸ் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தியது. இதன் பின்னர், காசாவில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்தது.
இதில் ஈடுபாடு இல்லை என இரான் மறுத்தாலும், ஹமாஸின் நடவடிக்கைகளுக்கு அது வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தது.
இதற்குப் பதிலடியாக, இஸ்ரேல், காசாவில் ஹமாஸுக்கு எதிராகவும், அந்தப் பகுதியில் உள்ள இரானின் கூட்டாளிகள் மற்றும் பிரதிநிதி அமைப்புகளுக்கு எதிராகவும் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியது.
2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு, அணு ஆயுதப் பரவலைத் தடுக்கும் ஒப்பந்தத்தின் கீழ் உள்ள தனது கடமைகளை இரான் மீறியுள்ளதாக தெரிவித்தது.
அணுஆயுதம் உருவாக்கும் நோக்கம் தங்களுக்கு ஒருபோதும் இல்லை என்று இரான் தொடர்ந்து கூறி வருகிறது.
இதன் பிறகு , இஸ்ரேல் இரானில் பல தாக்குதல்களை நடத்தியது. இதன் விளைவாக, இரு நாடுகளுக்கும் இடையே 12 நாட்கள் நீடித்த போர் ஏற்பட்டது.
இது, இரானின் அணு நிலையங்கள் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்கள் உள்ளிட்ட, அமெரிக்காவின் நேரடி தலையீட்டில் முடிவடைந்தது.
2025 செப்டம்பரில், இரானின் அணுசக்தி நடவடிக்கைகள் அதிகரித்ததையடுத்து, 2015-ல் நீக்கப்பட்டிருந்த பல்வேறு தடைகளை இரான் மீது ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் விதித்தது.
இதனால் இரான் பொருளாதாரம் மேலும் மோசமடைந்தது. உணவுப் பொருட்களின் விலை உயர்வு 70 சதவிகிதம் வரை அதிகரித்தது.
மேலும், தடைகளின் தாக்கத்தால் இரான் நாணயம் கடுமையாக மதிப்பிழந்தது.
இதன் காரணமாக சமையல் எண்ணெய், கோதுமை, மருந்துகள் போன்ற இறக்குமதி பொருட்களின் விலைகள் ஒரே இரவில் பெரிதும் உயர்ந்தன.
இந்த விலை உயர்வுக்கு எதிராக, டிசம்பர் மாத இறுதியில் டெஹ்ரானில் கடைக்காரர்கள் மற்றும் வணிகர்கள் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர்.
பெரிய அளவிலான போராட்டமாக மாறி , நாடு முழுவதும் பரவின. உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயிக்கு எதிராக கூட்டங்கள் கோஷங்கள் எழுப்ப்பட்டன. அரசியல் மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்தன.
நாடு கடத்தப்பட்ட ஷாவின் மகனான ரேசா பஹ்லவி மீண்டும் திரும்ப வேண்டும் என சிலர் கோரிக்கை விடுத்தனர்.
அரசு, போராட்டக்காரர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுத்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், வன்முறையை பயன்படுத்த வேண்டாம் என்று இரான் அரசை எச்சரித்தார்
இரானில் நடந்தது போன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழ நாங்கள் விரும்பவில்லை. போராட்டம் நடத்துவது ஒரு விஷயம்.
ஆனால் ஆயிரக்கணக்கான மக்களை கொல்வதும், தூக்குத் தண்டனை பற்றிய தகவல்களும் வந்தால், அதன் விளைவுகள் நன்றாக இருக்காது. இந்த போராட்டங்களுக்கும் உயிரிழப்புகளுக்கும் அமெரிக்க அதிபர் டிரம்பே காரணம் என ஆயதுல்லா அலி காமனெயி குற்றம்சாட்டினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



