'ஏஜெண்ட்டுக்கு ரூ.42 லட்சம் கொடுத்தேன்' - அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர் கூறுவது என்ன?
அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக 2023ஆம் ஆண்டு சென்ற ஹரியானாவின் கைதலைச் சேர்ந்த சந்தீப் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
2023ஆம் ஆண்டு 'கழுதை வழி' எனப்படும், சட்ட விரோத பாதையில் இவர் அமெரிக்கா சென்று, கலிஃபோர்னியாவில் குடியேறியுள்ளார். அங்கு வேலை செய்வதற்கான பணி அனுமதியும் பெற்றபின், அவர் தஞ்சம் கோரிய மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
"160 நாட்களுக்குப் பிறகு, எனக்கு வேலை செய்வதற்கான அனுமதி கிடைத்தது. எனக்கு ஓட்டுநர் உரிமமும் கிடைத்தது. எல்லாம் நன்றாக சென்றுகொண்டிருந்தது. தஞ்சம் கோரிய மனு நிராகரிக்கப்பட்டு, நவம்பர் 20 ஆம் தேதி நான் கைது செய்யப்பட்டு, 72 நாட்கள் சிறையில் வைக்கப்பட்டேன். அதன் பிறகு என்னை நாடு கடத்திவிட்டார்கள்"
2 ஏக்கர் விவசாய நிலத்தை விற்று, ரூபாய் 42 லட்சம் முகவர்களுக்கு கொடுத்ததாக, சந்தீப் குடும்பத்தினர் தெரிவித்தனர். நிலம் போய்விட்ட பின்னும் கூட சந்தீப் பாதுகாப்பாக திரும்பியதால் மகிழ்ச்சியடைவதாக அவரது தாயார் கூறுகிறார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பின், அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்த அமெரிக்கா தொடங்கியதால், சந்தீப் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி விமானத்தில் ஏற்றப்பட்டு அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளார்.
குடியேற்றம் தொடர்பான டிரம்பின் உத்தரவுகள்
டொனால்ட் டிரம்பின் தேர்தல் பிரசாரத்தின் முக்கிய அம்சமாக குடியேற்ற விவகாரம் இருந்து வந்தது. "குடியேற்ற விதிகளை கடுமையாக்குவோம், 'மெக்சிகோவிலேயே இருங்கள்' என்ற தனது முந்தைய ஆட்சியில் அமல்படுத்திய கொள்கையை நடைமுறைப்படுத்துவோம், எல்லையில் பாதுகாப்பும் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்படும்" என்பன டிரம்பின் தேர்தல் வாக்குறுதிகளாக இருந்தன.
டிரம்ப் அதிபரான முதல் நாளில் கையெழுத்திட்ட உத்தரவுகளில் குடியேற்றம் சம்பந்தப்பட்ட உத்தரவுகள் முக்கியமானவை. "அமெரிக்க வரலாற்றில் நாட்டைவிட்டு பெருமளவில் நிகழ்த்தப்படும் வெளியேற்றத் திட்டத்தை" அதிபராகத் தனது முதல் நாளிலேயே தொடங்கப் போவதாக டிரம்ப் தெரிவித்திருந்தார்.
நாட்டின் தெற்கு எல்லைப் பகுதியில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டார். சட்டவிரோதமாகக் குடியேறியவர்களுக்கு அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு இயல்பாக அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்படுவதற்கு எதிராகவும் அவர் உத்தரவு பிறப்பித்தார். அமெரிக்க அகதிகள் மறுகுடியமர்த்தல் திட்டத்தை நான்கு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கும் உத்தரவிலும் டிரம்ப் கையெழுத்திட்டார்.
எல்லையை மூடும்படி ராணுவத்துக்கு உத்தரவிட்ட டிரம்ப், சட்டவிரோத போதைப் பொருட்கள், மனிதக் கடத்தல், எல்லையைக் கடக்கும் குற்றங்கள் உள்ளிட்டவற்றை அதற்கு காரணமாகக் கூறினார்.
போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் மற்றும் சர்வதேச சட்டவிரோத கும்பல்களை அந்நிய பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கும் உத்தரவிலும் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார்.
'மெக்சிகோவிலேயே இருங்கள்' என்ற தனது கொள்கையை முதல் நாளிலேயே ஒரு செயல் உத்தரவு மூலம் டிரம்ப் அமல்படுத்தினார்.
அவரது முதல் ஆட்சிக்காலத்தின் நடவடிக்கைகளில் ஒன்றான இதன் மூலம், எல்லைக்கு வெளியே தஞ்சம் கேட்கத் தங்களது முறைக்காக காத்திருந்த சுமார் 70,000 மெக்சிகோவை சேராதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
கடந்த வாரம் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியிருக்கும் கொலம்பியா நாட்டவர்களை அமெரிக்கா திருப்பி அனுப்பியது.
அமெரிக்க ராணுவ விமானங்கள் தரையிறங்க அனுமதி அளிக்காத அந்நாட்டின் அதிபர், தங்கள் நாட்டு குடிமக்களை ராணுவ விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கக்கூடாது எனவும், தன்னுடைய விமானத்தையே அவர்களுக்காக அனுப்பத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
வரி விதிப்பு குறித்த எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்திருந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் ராணுவ விமானங்கள் மூலம் குடியேறிகளை ஏற்றுக்கொள்ள கொலம்பியா ஒப்புக்கொண்டது. அதற்கு அடுத்த முறை, கொலம்பியா தனது விமானப் படையின் விமானங்களை அனுப்பி தங்கள் நாட்டவரை திருப்பி அழைத்து வந்தது.
ராய்ட்டர்ஸ் முகமையின் செய்திப்படி, கொலம்பியா தவிர்த்து, குவாட்டமாலா, பெரு, ஹோண்டுராஸ் ஆகிய இடங்களுக்கு அமெரிக்க ராணுவ விமானம் சட்டவிரோத குடியேறிகளைத் திருப்பி அனுப்பியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



