You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவிலும் குரங்கம்மை பாதிப்பா? வெளிநாட்டில் இருந்து வந்த நபருக்கு தீவிர பரிசோதனை
- எழுதியவர், டோர்காஸ் வாங்கிரா மற்றும் கரோலின் கியாம்போ
- பதவி, சுகாதார செய்தியாளர், பிபிசி ஆப்பிரிக்கா
குரங்கம்மை(எம்பாக்ஸ்) பரவலை உலகளாவிய சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், இந்தியாவில் ஒருவருக்கு அந்த நோய் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அந்த நபர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நபர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட நாட்டிலிருந்து இந்தியா வந்தவர் ஆவார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது.
அவரிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளைக் கொண்டு அவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருக்கிறதா என்பதை உறுதி செய்ய பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதனுடன், அவருக்கு நோய்த்தொற்று எவ்வாறு பரவியது? அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்? என்பன போன்ற விவரங்களை சேகரிக்கும் பணியும் நடந்து வருகிறது.
இது கவலைப்பட ஒன்றும் இல்லை, இதுபோன்ற பிரச்னைகளை கையாள சுகாதார கட்டமைப்பு தயாராக உள்ளது என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கோவிட் - குரங்கம்மை என்ன வேறுபாடு?
உலக சுகாதார நிறுவனம் (WHO) இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது முறையாக குரங்கம்மையை (mpox) உலகளாவிய சுகாதார அவசர நிலையாக அறிவித்த போது, பலரின் மனதில் எழுந்த கேள்வி, இது புதிய கோவிட்-19 தொற்றா? என்பதுதான்.
விஞ்ஞானிகளும் சுகாதார நிபுணர்களும் கோவிட் சூழலோடு குரங்கம்மையை ஒப்பிட்டு கவலைப்படுவது சரிதான் என்கிறார்கள். அதே சமயம் கோவிட்-19 மற்றும் குரங்கம்மை ஆகியஇரண்டும் ஒன்று கிடையாது என்கின்றனர்.
“எம்பாக்ஸ் தொற்றை `புதிய கோவிட்’ என்று சொல்வது சரி அல்ல. கோவிட்டை ஒப்பிடும் போது இதில் பொது மக்களுக்கான ஆபத்து குறைவு” என்று ஐரோப்பாவுக்கான உலக சுகாதார நிறுவனத்தின் பிராந்திய இயக்குனர் டாக்டர் ஹான்ஸ் க்ளூக் கூறுகிறார்.
"எம்பாக்ஸை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது எங்களுக்குத் தெரியும். ஐரோப்பாவில், அதன் பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகளை நாங்கள் அறிவோம்.”
இரண்டு நோய்களும் வைரஸ் தொற்றால் ஏற்படுகின்றன. இரு தொற்றுகளும் வெவ்வேறு அறிகுறிகளை கொண்டுள்ளன. அவை வெவ்வேறு வழிகளில் பரவுகின்றன.
கென்யாவின் ஆகா கான் பல்கலைக்கழக மருத்துவமனையின் தொற்று நோய் நிபுணர் ஆலோசகரான பேராசிரியர் ரோட்னி ஆடம் கூறுகையில், "இரண்டு நோய் தொற்றுகளுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமைகளை விட வேறுபாடுகள் குறிப்பிடத்தக்கவை. என்றார்.
கோவிட் , குரங்கம்மை இடையிலான ஐந்து வேறுபாடுகளை விரிவாகப் பார்க்கலாம்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
1. எம்பாக்ஸ் ஒரு புதிய வைரஸ் அல்ல
டென்மார்க்கில் பிடிக்கப்பட்ட குரங்குகளில் இந்த வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டது. 1958 ஆம் ஆண்டு இது கண்டறியப்பட்ட போது இதனை குரங்கம்மை என்று அழைத்தனர். தற்போது எம்பாக்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
காங்கோ ஜனநாயகக் குடியரசு நாட்டில் 1970 ஆம் ஆண்டு முதன்முதலில் ஒருவருக்கு எம்பாக்ஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் தொற்று பரவியது. 2022 ஆம் ஆண்டில் இது உலகளாவிய சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்டது, அதன்பிறகு இந்த நோய் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியது.
இதற்கு நேர்மாறாக, சீனாவின் வுஹானில் 2019 ஆம் ஆண்டு பரவிய கோவிட் -19, மிக விரைவில் உலகளாவிய தொற்றுநோயாக மாறியது, இது ஒரு புதிய வகை வைரஸால் ஏற்பட்டது. ``SARS-CoV2’’ - இதற்கு முன்னர் இந்த நோய்தொற்று மனிதர்களுக்கு மத்தியில் கண்டறியப்படவில்லை.
சர்வதேச அளவில் பொது சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்ட போது கோவிட்-19 பற்றி நாம் அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. ஆனால் எம்பாக்ஸ் பற்றி தற்போது எங்களுக்கு அதிகம் தெரியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
2. கோவிட்-19 போன்று எம்பாக்ஸ் அதிகம் பரவக்கூடியது அல்ல
இரண்டு நோய்களும் நெருங்கிய தொடர்பு மூலம் பரவினாலும், கோவிட்-19 காற்றின் வாயிலாக பரவுவதால் வேகமாக பரவுடத.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து இருமல், தும்மல், பேசுவது, பாடுவது அல்லது சுவாசிப்பது போன்றவற்றின் மூலம் கோவிட்-19 அடுத்தவருக்கு பரவலாம்.
எம்பாக்ஸ் பாதிக்கப்பட்ட நபருடன் மிக நெருக்கமான அல்லது நீடித்த தொடர்பினால் பரவுகிறது, அதாவது உடலுறவு, அசுத்தமான படுக்கை மற்றும் ஆடைகளுடன் தொடர்பு, மற்றும் நீண்ட நேரமாக நேருக்கு நேர் தொடர்பு ஆகியவற்றின் மூலம் பரவுகிறது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, டிசம்பர் 2019 மற்றும் ஆகஸ்ட் 2023 க்கு இடையில் உலகளவில் 76 கோடிக்கும் அதிகமான கோவிட்-19 பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேசமயம் உலகளவில் எம்பாக்ஸ் நோய்த்தொற்றுகள் 1,00,000 ஐ எட்டுவதற்கு மே 2022 முதல் இரண்டு ஆண்டுகள் ஆனது.
2024 ஆம் ஆண்டில், ஆப்பிரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களில் (ஆப்பிரிக்கா CDC) 18,910 நோயாளிகள் மற்றும் கிட்டத்தட்ட 600 இறப்புகள் பதிவாகியுள்ளன.
3. எம்பாக்ஸ் தடுப்பூசிகள் ஏற்கனவே உள்ளன
கோவிட்-19 தொற்றுநோயின் தொடக்கத்தில் தடுப்பூசிகளை உருவாக்க பெரும் போட்டி நிலவியது.
ஆனால் எம்பாக்ஸுக்கு எதிரான பாதுகாப்பை வழங்கும் தடுப்பூசிகள் இப்போது கிடைக்கின்றன.
எம்பாக்ஸ் பெரியம்மை நோயுடன் தொடர்புடையது. பெரியம்மை என்பது 1980இல் தடுப்பூசி மூலம் உலகம் முழுவதும் ஒழிக்கப்பட்ட நோயாகும்.
பெரியம்மைக்கு எதிராக செயல்பட்ட தடுப்பூசிகள் குரங்கம்மைக்கு எதிரான பாதுகாப்பையும் அளித்தன. குறிப்பாக 2022இல் நோய் தொற்று பரவிய போது, பெரியம்மை தடுப்பூசி போடப்பட்டது.
"இது 100% பாதுகாப்பானது அல்ல, ஆனால் 2022 முதல் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் ஏற்பட்ட பெரிய பரவலின் அடிப்படையில், வயதானவர்களுக்கு தற்காப்பு தருகிறது. பெரியம்மை தடுப்பூசியால் அவர்கள் குரங்கம்மை பரவாமல் தடுப்பதற்கு, ஓரளவு பாதுகாப்பை பெறுகின்றனர்." என்று பேராசிரியர் ஆடம் கூறுகிறார்.
பவேரியன் நோர்டிக் என்னும் நிறுவனம் ``MVA-BN’’ என்னும் தடுப்பூசியின் 15 மில்லியனுக்கும் அதிகமான டோஸ்களை வழங்கியது. பெரியம்மை தடுப்பூசியை அடிப்படையாகக் கொண்ட ஒரு எம்பாக்ஸ் தடுப்பூசி - 2022 பரவலின் போது உலகம் முழுவதும் 76 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு வழங்கப்பட்டது.
4. எம்பாக்ஸ் வைரஸ் கொரோனா வைரஸை விட மெதுவாக வீரியம் அடைகிறது
வைரஸ்கள் காலப்போக்கில் வீரியம் அடைந்து உருமாறுகின்றன, ஆனால் சில வைரஸ்கள் அதி வேகமாக மாறுகின்றன.
எம்பாக்ஸ் டிஎன்ஏ வைரஸால் ஏற்படுகிறது மற்றும் கோவிட்-19 ஆர்என்ஏ வைரஸால் ஏற்படுகிறது.
அமெரிக்கன் சொசைட்டி ஃபார் மைக்ரோபயாலஜி கூற்றுப்படி டிஎன்ஏ வைரஸ்கள், ஆர்என்ஏ வைரஸ்கள் போல சுதந்திரமாக உருமாறுவதில்லை.
எம்பாக்ஸ் வைரஸின் அறியப்பட்ட இரண்டு குடும்பங்கள் அல்லது கிளேடுகள் (clade) உள்ளன - கிளேட் 1 மற்றும் கிளேட் 2. SARS-CoV2 வைரஸ் 20 க்கும் மேற்பட்ட அறியப்பட்ட கிளேட்களைக் கொண்டுள்ளது.
தற்போதைய பரவல் பெரும்பாலும் `கிளேட் 1 பி’ எனப்படும் கிளேட் 1 வைரஸால் இயக்கப்படுகிறது.
"கிளாட் 1பி ரக வைரஸ் பெரும்பாலும் பாலியல் ரீதியான பரவுதலில் இருந்து வெளிவருகிறது. அதே சமயம் ஒரே வீட்டுக்குள் இருக்கும் நபர்களுக்கு மத்தியில் பரவுவதையும் நாங்கள் காண்கிறோம் : தாயிடமிருந்து குழந்தைக்கு, குழந்தைகளிடம் இருந்து பிற குழந்தைக்கு பரவும்" என்கிறார் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் உலகளாவிய சுகாதார ஆராய்ச்சி பேராசிரியர் ட்ரூடி லாங்.
உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் 1பி ரக வைரஸ்கள் மற்ற ரகங்களை விட எளிதில் பரவுகிறதா என்பது தெரியவில்லை என்று கூறுகிறார்கள்.
அவர்கள் அறிந்தது என்னவென்றால், சமீபத்திய பரவலில் பாதிக்கப்பட்டவர்கள் நோய் இருப்பதாக அறிவிக்கும் நேரத்தில் ஏற்கனவே கடுமையான அறிகுறிகளை கொண்டுள்ளனர்.
5. பொது முடக்கம் போன்ற சூழல் வர வாய்ப்பில்லை
கோவிட் தொற்றுநோயின் போது நாம் பார்த்தது போல, எம்பாக்ஸ் பரவல் பொது ஊரடங்கு சூழலை உருவாக்கும், உலகத்தை ஸ்தம்பிக்க வைக்கும் என்று பலர் கவலைப்படுகிறார்கள்.
ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த நோய் ஆப்பிரிக்காவின் 16 நாடுகளில் பரவியிருந்தாலும் எந்த எல்லைகளையும் மூட பரிந்துரைக்கப்படவில்லை.
"ஆப்ரிக்காவின் நோய் பரவலை கட்டுப்படுத்துதல் மற்றும் தடுப்பு மைய சிடிசி ஆய்வுகளின்படி எம்பாக்ஸ் மக்கள் மற்றும் பொருட்களின் இயக்கத்திற்கு இடையூறு விளைவிக்காது" என்று ஏஜென்சியின் தலைமை இயக்குநர் டாக்டர் ஜீன் கசேயா கூறினார்.
"கடந்த காலத்தில் இருந்ததைப் போலவே மக்களின் இயல்பு வாழ்க்கை தொடரும். அதே நேரத்தில் இந்த தொற்று பரவலை எதிர்த்துப் போராடுவதற்கான கருவிகளை நாங்கள் வழங்குகிறோம்." என்றார் அவர்.
உலக சுகாதார அமைப்பின் சுகாதார அவசரநிலை திட்டத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் மைக் ரியான் இதனை ஒப்புக்கொள்கிறார்.
"எம்பாக்ஸ் என்பது ஒரு வைரஸ் ஆகும், இது நாம் சரியான நேரத்தில் சரியான விஷயங்களைச் செய்து நம் அனைவரையும் ஒன்றிணைத்தால் கட்டுப்படுத்தலாம். கோவிட்க்காக நாம் செய்ததைப் போல போராட வேண்டும்” என்று மைக் ரியான் கூறுகிறார்.
எம்பாக்ஸ் பொதுவாக குறைவான அபாயம் கொண்ட நோய்தொற்று. பெரும்பாலான மக்கள் இரண்டு முதல் நான்கு வாரங்களுக்குள் குணமடைகிறார்கள். சிலர் கடுமையான நோய்தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
பாதிக்கப்பட்ட நபர்கள், பொருட்கள் அல்லது விலங்குகளுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்ப்பதன் மூலம் தொற்றுநோயிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். புண்கள் மற்றும் காயங்களைத் தொட்ட பிறகு, கைகளைக் கழுவுதல் அல்லது சானிட்டைசர்களை பயன்படுத்துவது குறித்தும் அறிவுறுத்தப்படுகிறது.
"தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானவை என்பதை நாங்கள் அறிவோம், எனவே தற்போது எங்களிடம் சிறந்த நோய் தடுப்பு கருவிகள் உள்ளன" என்கிறார். "எனவே, கோவிட் போன்ற ஒரு தொற்றுநோய் சூழல் ஏற்பட இம்முறை சாத்தியமில்லை என்று நான் நினைக்கிறேன்." என்கிறார் பேராசிரியர் ரோட்னி.
- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)