You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ருதுராஜ் கெய்க்வாட்: ஒரே ஓவரில் 7 சிக்சர்களை விளாசியவர் - தோனியிடம் கற்றுக்கொண்டது என்ன?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருத்ராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஐபிஎல் மற்றும் சி.எஸ்.கே.வின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் குறித்த இந்தக் கட்டுரை மீண்டும் பகிரப்படுகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி நடந்த விஜய் ஹசாரே கோப்பையின் காலிறுதிப் போட்டியில் இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ந்து ஏழு சிக்சர்களை அடித்து லிஸ்ட்-ஏ கிரிக்கெட் சாதனை படைத்தார்.
உத்தர பிரதேச பந்துவீச்சாளர் ஷிவா சிங், இந்த அதிரடியை எதிர்கொண்டார். அவருடைய பந்தில் தான் ருதுராஜ் கெய்க்வாட் ஒரே ஓவரில் ஒரு நோ பால் உட்பட அனைத்திலும் சிக்சர்களை விளாசினார். இதன்மூலம், கெய்க்வாட் ஒயிட்-பால் கிரிக்கெட் வரலாற்றில் இந்தச் சாதனையை நிகழ்த்திய முதல் பேட்ஸ்மேன் ஆனார்.
மகாராஷ்டிர தொடக்க ஆட்டக்காரரான கெய்க்வாட், 159 பந்துகளில் 220 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இறுதிவரை தனது அதிரடி ஆட்டத்தை ஆடினார். அதில், 10 பவுண்டரிகள், 16 சிக்சர்களும் அடக்கம். அவருடைய அணி 50 ஓவர்களில் ஐந்து விக்கெட்களை இழந்து மொத்தம் 330 ரன்களை எடுத்தது.
அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் ஒரு ஓவரில் அதிக சிக்சர்களை அடித்த உலக சாதனைக்கு சொந்தக்காரர் முன்னாள் நியூசிலாந்து விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் லீ ஜெர்மோன். அவர், 1989-90 சீசனில் விளையாடிய ஃபர்ஸ்ட்-கிளாஸ் போட்டியில் ஒரு ஓவரில் 17 நோ-பால் உட்பட அனைத்திலும் சேர்த்து 8 சிக்சர்களை அடித்து, 77 ரன்களை எடுத்திருந்தார்.
இதற்கு முன்பு 2018ஆம் ஆண்டில் நியூசிலாந்தின் தி ஃபோர்ட் கோப்பையின் போது இத்தகைய சாதனை நடந்தது. அப்போது பிரட் ஹாம்ப்டன் (23 ரன்கள்), ஜோ கார்ட்(18 ரன்கள்) இருவரும் இணைந்து 41 ரன்களை எடுத்தனர். அந்த ஓவரில் இரண்டு நோ பால் மூலம் கிடைத்த இரண்டு ரன்களோடு சேர்த்து மொத்தம் 43 ரன்களை அவர்கள் எடுத்தனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்சர்களை அடித்த சாதனையை நான்கு வீரர்கள் மட்டுமே செய்துள்ளனர். தென்னாப்பிரிக்காவின் ஹெர்ஷல் கிப்ஸ், இந்தியாவின் யுவராஜ் சிங், மேற்கிந்தியத் தீவுகளின் கீரன் பொல்லார்ட், அமெரிக்காவின் ஜஸ்கரன் மல்ஹோத்ரா.
யார் இந்த ருதுராஜ் கெய்க்வாட்?
- கெய்க்வாட், 1997ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதியன்று புனேவில் பிறந்தார். வலது கை பேட்ஸ்மேனான இவர், மகாராஷ்டிர அணியின் 16 வயதுக்குட்பட்டோர் மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவுகளில் விளையாடியுள்ளார்.
- இவர், 2021ஆம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 635 ரன்களைக் குவித்தபோது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். அந்த ஐபிஎல் சீசனில் அவர் ஆரஞ்ச் கேப்பை பெற்றார்.
- அதற்கு முந்தைய சீசனில், அவரை தேவைப்படும்போது தாக்கி ஆடக்கூடிய நங்கூரத்தைப் போன்ற தொடக்க வீரராக அவரை சிஎஸ்கே தேர்ந்தெடுத்தது. அவருக்கு வழங்கப்பட்ட ஆறு ஆட்டங்களில், 200 ரன்களுக்கு மேல் எடுத்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.
- 2021 போட்டியின் முடிவில், டெல்லி கேப்பிடல்ஸுக்கு எதிரான தகுதிச் சுற்றில் கெய்க்வாட் 70 ரன்களை எடுத்தார். இறுதிப் போட்டியில் டு ப்ளெசிஸுடன் 61 ரன்களை எடுத்து சிஎஸ்கே அணி 192 ரன்கள் குவிக்க உதவினார். அதைத் தொடர்ந்து மகாராஷ்டிர அணிக்கு கேப்டனாக இருந்து சையது முஷ்டாக் அலி டி20 போட்டியில் 259 ரன்களைக் குவித்தார்.
- முதல் தர போட்டி, லிஸ்ட்- ஏ போட்டி மற்றும் டி20 போட்டியில் கெய்க்வாட் 2016-17ஆம் ஆண்டில் அறிமுகமானார். அதுமட்டுமின்றி அந்த ஆண்டிலேயே அவர் 444 ரன்களோடு விஜய் ஹசாரே கோப்பையில் அதிகபட்ச ரன்களை எடுத்த மூன்றாவது நபராக வலம் வந்தார்.
- ஜூன் 2019இல் லிஸ்ட் ஏ ஆட்டத்தில் இலங்கை ஏ அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 187 ரன்களை எடுத்தபோதும் சரி, 2019ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ரஞ்சி கோப்பை போட்டிகளில் சத்தீஸ்கருக்கு எதிராக ஒரு சதமும் ஒரு அரை சதமும் அடித்தபோதும் சரி, அனைத்துத் தேவைகளுக்குமான ஆட்டம் தன்னிடம் இருப்பதாக நிரூபித்தார்.
- சமீபத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ராவுடன் அவரது யூட்யூப் சேனலில் நடத்திய உரையாடலின்போது, அனைத்து சூழ்நிலைகளின்போதும் எப்படி சமநிலை தவறாமல் இருக்க வேண்டும் என்பதை சென்னை சூப்பர் கிங்ஸ் அனிக்காக தோனி தலைமையின்கீழ் விளையாடியபோது கற்றுக்கொண்டதாக கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
- அதில் பேசும்போது, “ஆட்டத்தில் தோல்வியடைந்தால், அனைவரும் சுமார் 15 நிமிடங்களுக்கு அமைதியாக இருந்தனர். ஆனால், மஹி பாய் விளக்கக் காட்சியிலிருந்து திரும்பிய பிறகு ‘ரிலாக்ஸ் பாய்ஸ், இதெல்லாம் நடக்கத்தான் செய்யும்’ என்று எங்களுக்கு ஆறுதல் கூறுவார். சந்தேகத்திற்கு இடமின்றி நிறைய ஏமாற்றம் இருந்தது. ஆனால், அவரிடம் எந்த எதிர்மறை எண்ணமும் இல்லை, குற்றம் சாட்டவும் இல்லை,” என்று குறிப்பிட்டுள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)