You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாரத ரத்னா: யாருக்கெல்லாம் வழங்கப்படும், விருது பெறுபவர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் என்ன?
இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுதான் பாரத ரத்னா. எந்த துறையாக இருந்தாலும் அதில் ஆற்றிய உயரிய சேவையை அங்கீகரிக்கும் விதமாக இவ்விருது வழங்கப்படுகிறது.
அரசியல், கலை, இலக்கியம் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், எழுத்தாளர்கள், சமூக சேவகர்கள் போன்றோருக்கு பாரத ரத்னா வழங்கப்படுகிறது.
பாரத ரத்னா விருது ஜனவரி 2, 1954 அன்று அப்போதைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் மூலம் தொடங்கப்பட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் சி.ராஜகோபாலாச்சாரி, குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் மற்றும் விஞ்ஞானி டாக்டர் சி.வி.ராமன் ஆகியோருக்கு முதன்முதலாக கடந்த 1954ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
அதன் பின்னர், தத்தமது துறையில் மெச்சக்கூடிய பங்களிப்பை வழங்கிய பல்வேறு நபர்களுக்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. 1954இல், உயிருடன் இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.
1955ல், இறந்தவர்களுக்கும் பாரத ரத்னா வழங்கலாம் என்ற பிரிவு சேர்க்கப்பட்டது.
சட்டமேதை என அழைக்கப்படும் அம்பேத்கர், தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் போன்றோருக்கு அவர்களின் இறப்புக்குப் பிறகு இவ்விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
பாரத ரத்னா விருது பெறுவோர் குறித்த அதிகாரபூர்வ தகவல் இந்திய அரசிதழில் வெளியிடுவதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
இந்த கௌரவம் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தின்போது வழங்கப்படுகிறது.
விருதுக்கு எப்படி தேர்வு செய்யப்படுகின்றனர்?
பாரத ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்படுவது என்பது பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்படுவதில் இருந்து மாறுபடுகிறது. இதில், பாரத ரத்னா விருதை இன்னாருக்கு வழங்கலாம் என்ற பரிந்துரையை குடியரசு தலைவருக்கு பிரதமர் செய்வார்.
சாதி, தொழில், பதவி அல்லது பாலினம் ஆகிய பாகுபாடின்றி எந்த ஒரு நபரும் இந்த விருதுக்கு தகுதியானவராக கருதப்படுவார். குறிப்பிட்ட ஓர் ஆண்டில் அதிகபட்சமாக 3 நபர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படலாம். அதேவேளையில், ஒவ்வோர் ஆண்டும் இந்த விருது வழங்கப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை.
இதுவரை 48 நபர்களுக்கு மட்டுமே பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. கடைசியாக 2019ஆம் ஆண்டு இந்த உயரிய விருது வழங்கப்பட்டது.
சமூக சேவை பிரிவில் நானாஜி தேஷ்முக்(இறப்புக்கு பின்னர்), கலை பிரிவில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கவிஞர் பூபென் ஹசாரிகா(இறப்புக்கு பின்னர்), பொதுச் சேவை பிரிவில் குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோருக்கு 2019இல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
பாரத ரத்னா விருதுபெறுவோருக்கு என்ன கிடைக்கும்?
பாரத ரத்னா விருது பெறுவோருக்கு அதற்கான சான்றிதழும் பதக்கமும் வழங்கப்படும். பணம் ஏதும் வழங்கப்படாது.
விருதை பெற்றவர்களுக்கு அரசு துறைகள் சார்பாக சில வசதிகள் செய்யப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, பாரத ரத்னா பெற்றவர்களுக்கு ரயில்வே துறை சார்பில் இலவச பயணத்துக்கான வசதி வழங்கப்படுகிறது.
அரசின் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க பாரத ரத்னா விருது பெற்றவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.
முன்னுரிமை வரிசையில் இவர்களை அரசாங்கம் வைக்கும். குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர், குடியரசு முன்னாள் தலைவர், துணைப் பிரதமர், தலைமை நீதிபதி, லோக்சபா சபாநாயகர், மத்திய அமைச்சர், மாநில முதலமைச்சர்கள், முன்னாள் பிரதமர், மக்களவை மற்றும் மாநிலங்களவையின் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் பாரத ரத்னா விருது பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அரசு மரியாதை அளிக்கப்படும்.
இதேபோல், மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் பாரத ரத்னா விருது பெற்றவர்களுக்கு சில சிறப்பு வசதிகளை வழங்கும்.
விதி 18 (1)-இன் படி விருது பெற்றோர் தங்களின் பெயருக்கு முன்போ, பின்போ பாரத ரத்னா அடைமொழியைப் பயன்படுத்தக் கூடாது.
அவசியம் கருதினால் “பாரத ரத்னா விருதைப் பெற்றவர் அல்லது குடியரசுத் தலைவர் மூலம் பாரத ரத்னா விருது வழங்கப்பெற்றவர்” என்ற சொற்றொடரைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பாரத ரத்னா பதக்கம் எப்படி இருக்கும்?
செப்பு உலோகத்தால் ஆன இலையின் மேல், பிளாட்டினம் உலோகத்தால் ஆன சூரியன் இடம் பெற்றிருக்கும். இலையின் ஓரங்களும் பிளாட்டினத்தால் செய்யப்பட்டிருக்கும்.
'பாரத ரத்னா' என்ற வார்த்தை இந்தியில் வெள்ளியால் எழுதப்பட்டிருக்கும். அதன் பின்புறம், அசோகச் சக்கரத்தின் கீழ் 'சத்யமேவ ஜெயதே' என்று இந்தியில் எழுதப்பட்டிருக்கும்.
பாரத ரத்னா தொடர்பான முக்கிய தகவல்கள்:
- முதன்முறையாக 2013ஆம் ஆண்டில், விளையாட்டு துறையில் சிறப்பான பங்களிப்பை ஆற்றியவர்களுக்கும் பாரத ரத்னா விருது வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.
- இதை தொடர்ந்து, 2014ஆம் ஆண்டில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
- இந்தியர் அல்லாதவர்களுக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.
- வெளிநாட்டில் பிறந்து, பின்னர் இந்திய குடியுரிமை பெற்ற அன்னை தெரேசாவுக்கு 1980ல் பாரத ரத்னா வழங்கப்பட்டது.
- விடுதலை போராட்ட வீரர் கான் அப்துல் கஃபார் கான்(சுதந்திரத்துக்கு முன்பு இந்தியாவில் பிறந்து பின்பு பாகிஸ்தானுக்கு சென்றவர்), தென் ஆப்ரிக்காவின் குடியரசு முன்னாள் தலைவர் நெல்சன் மண்டேலா ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.
- 1956, 1959, 1960, 1964, 1965, 1967, 1968-70, 1972-74, 1977-79, 1981, 1982, 1984-86, 1993-96,2000,2002-2008,2010-13,2020-2022 ஆகிய ஆண்டுகளில் பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை.
- இதுவரை பாரத ரத்னா விருது வழங்கப்படுவது இரண்டு முறை நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் வழங்கப்பட்டது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்