தேர்தலின்போது வேட்பாளர் இறந்த பிறகும் அவரையே வெற்றி பெற வைத்த தொகுதி மக்கள்

    • எழுதியவர், அருண் சாண்டில்யா
    • பதவி, பிபிசிக்காக

2014-ம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் அலகட்டா வாக்காளர்கள் வழங்கிய முடிவுகள் தனித்துவமானது. அந்தத் தேர்தலில் இறந்து போன வேட்பாளர் ஒருவரை அதிக பெரும்பான்மையில் வெற்றிபெற செய்தனர் அந்த தொகுதி மக்கள்.

ஆம் நீங்கள் வாசிப்பது சரிதான். வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு இறந்துபோன வேட்பாளர் ஒருவரையே அந்த மக்கள் வெற்றி பெற செய்தனர். இதனால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது.

அந்த மாநிலம் பிரிந்த சமயத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தலில் பங்கேற்றிருந்தனர். அதில் முதன்முறையாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டி போட்டது.

வேட்பாளர் இறந்தது எப்படி?

சோபனாகி ரெட்டி ஏற்கெனவே நான்கு முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற ஒரு வெற்றி வேட்பாளர். இது அவருக்கு ஐந்தாவது தேர்தல். வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு, வாக்குப்பதிவுக்கு இரண்டு வாரங்களே இருந்த நிலையில் , தீவிரமான பரப்புரையில் ஈடுபட்டிருந்தார் அவர்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி முதல் முறையாக அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுவதால், சோபனாகி தனது அலகட்டா தொகுதி மட்டுமின்றி, இதர தொகுதிகளிலும் தீவிர பிரசாரம் செய்தார்.

நந்தியாலாவில் ஏப்ரல் 23, 2014 அன்று கட்சித் தலைவர் ஜெகனின் சகோதரி ஷர்மிளா ரெட்டி ஏற்பாடு செய்திருந்த ஜனபேரி பகுதி கூட்டத்தில் சோபனாகி ரெட்டி பங்கேற்றிருந்தார்.

அந்த கூட்டம் முடிந்து நந்தியாலாவில் இருந்து அலகட்டாவுக்கு சாலை வழியாக திரும்பினர்.

நந்தியாலாவில் இருந்து அலகட்டாவிற்கு சுமார் 40 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். இந்நிலையில் ​​தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருக்கையில் குபகுண்டம் மிட்டா என்ற இடத்தில் அவர் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது.

அங்கு விவசாயிகள் சாலையில் தானியங்களை உலர்த்திக் கொண்டிருந்த போது, சோபனாகி ரெட்டி சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதனால், வாகனத்தின் உள்ளே இருந்து தூக்கி வீசப்பட்ட சோபனாகி ரெட்டியின் விலா எலும்பில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

உடனடியாக அவரை ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி மறுநாள் காலை உயிரிழந்தார் அவர்.

வேட்பாளர் இறந்த போதும் தேர்தல் நடந்தது

2014 தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 12ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 19ஆம் தேதியோடு முடிவடைந்தது. வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான காலக்கெடுவும் ஏப்ரல் 23ம் தேதியுடன் முடிவடைந்தது. இதற்கிடையில் தான் சோபனாகி விபத்தில் சிக்கி மரணமடைந்தார்.

இந்நிலையில் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவும், மே 16ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் மட்டுமே மீதமிருந்தது.

ஒரு வேட்பாளர் இறந்த சூழ்நிலையிலும் கூட தேர்தல் ஆணையம் வழக்கம் போல் அந்தத் தொகுதியில் வாக்குப்பதிவை நடத்தியது. அந்தத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் கங்குலா பிரபாகர் ரெட்டி போட்டியிட்டார்.

மறைந்தாலும் வெற்றி

எல்லோரும் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்க, அந்த தேர்தலில் மக்கள் கொடுத்த முடிவு பலரையும் அதிர்ச்சியடைய செய்தது. ஆம் மக்கள் இறந்து போன சோபனாகியை பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தனர்.

அந்தத் தொகுதியில் மொத்தம் பதிவான 1,73,270 வாக்குகளில், 92,108 வாக்குகள் சோபனாகி ரெட்டிக்கு கிடைத்தது.

தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரான கங்குலா பிரபாகர ரெட்டிக்கு 74,180 வாக்குகள் கிடைத்தது.

சோபனாகி ரெட்டி 17,928 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால், அந்த வெற்றியைக் காண அவர்தான் அங்கு இல்லை.

சோபனாகி ரெட்டியின் அரசியல் வாழ்க்கை

பூமா சோபனாகி ரெட்டி முதன் முதலாக 1996 ஆம் ஆண்டு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்ட அவர், அலகட்டா எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார்.

2004 இல், ஷோபனாகி ரெட்டி நந்தியாலா மக்களவைக்கு போட்டியிட்டார், அவரது கணவர் நாகிரெட்டி அலகட்டா சட்டமன்றத்திற்கு போட்டியிட்டார். ஆனால், அந்தத் தேர்தலில் இருவருமே தோல்வியடைந்தனர்.

பின்னர் அவர்கள் இருவரும் சிரஞ்சீவி நிறுவிய பிரஜா ராஜ்ஜியம் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர். 2009 தேர்தலில் பிரஜா ராஜ்ஜியம் கட்சி சார்பாக அலகட்டா தொகுதியில் போட்டியிட்ட சோபனாகி ரெட்டி வெற்றி பெற்றார்.

ஆனால் 2011-ம் ஆண்டு சிரஞ்சீவி தனது கட்சியை காங்கிரஸுடன் இணைத்ததை தொடர்ந்து, இந்த தம்பதியினர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

2012ல், ஜெகன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ராஜினாமா செய்ததால் நடந்த இடைத்தேர்தலில் அலகட்டா தொகுதியில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஷோபனாகி ரெட்டி போட்டியிட்டார்.

2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் அதே கட்சி சார்பில் போட்டியிட்ட அவர், வாக்குப்பதிவுக்கு முன்னரே விபத்தில் மரணமடைந்தார்.

மகளுக்கு வாய்ப்பு கொடுத்த மக்கள்

என்னதான் 2014 சட்டமன்றத் தேர்தலில் சோபனாகி ரெட்டி வெற்றி பெற்றிருந்தாலும், அவர் இறந்து போனதால் அங்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் இருந்தது.

எனவே 2014 அக்டோபரில் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ஷோபனாகி ரெட்டியின் மகளான பூமா அகிலப்ரியாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், தெலுங்கு தேசம் உள்ளிட்ட மற்ற கட்சிகள் எதுவும் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.

இதன் மூலம் அகிலபிரியா போட்டியின்றி வெற்றி பெற்றார். ஆனால், 2016ல் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அகிலபிரியா, ஆளும் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து சுற்றுலா, தெலுங்கு மொழி மற்றும் கலாச்சாரத் துறைக்கு அமைச்சராக பதவியேற்றார்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் சொல்வது என்ன?

மக்களவை மற்றும் சட்டப் பேரவைத் தேர்தல்களின் போது வேட்பாளர்கள் இறந்தால் என்ன செய்ய வேண்டும் என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு-52 இல் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, வேட்புமனு தாக்கல் முடிந்து, இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட பின், வேட்பாளர்கள் யாராவது இறந்தால், தேர்தலை ஒத்திவைப்பதா இல்லையா என்பதை தேர்தல் நடத்தும் அதிகாரியே முடிவு செய்வார்.

அதே போல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளர் இறந்துவிட்டால், புதிய வேட்பாளரை பரிந்துரைக்க தேர்தல் ஆணையம் ஒரு வாரம் கால அவகாசம் அளிக்கிறது.

இது எல்லா சந்தர்ப்பங்களுக்கும் பொருந்தாது. வேட்பாளர் இறப்புக்கான காரணம் குறித்து தேர்தல் அதிகாரி வழங்கும் அறிக்கையின் அடிப்படையில், இந்திய தேர்தல் ஆணையம் இதன் மீது முடிவெடுக்கும். எதிர்கட்சிகளின் தலைவர்கள் கொலை செய்யப்பட்டது உள்ளிட்ட காரணங்கள் இருந்தால் தேர்தல் ஒத்திவைக்கப்படும்.

ஆனால், ஷோபனாகி ரெட்டியின் மரணத்துக்குக் காரணம் சாலை விபத்து என்பதாலும், தேர்தல் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாலும், இங்கு தேர்தல் ஒத்திவைக்கப்படவில்லை.

2024 மக்களவைத் தேர்தல்

தேர்தல்களில் வேட்பாளர் மரணம் போன்ற நிகழ்வுகள் மிக அரிதாகவே நிகழும் ஒன்று. தற்போது நடந்து வரும் 2024 மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசத்தின் மொராதாபாத் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் குன்வர் சர்வேஷ் சிங் சமீபத்தில் காலமானார்.

மொராதாபாத்தில் ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது, அதற்கு அடுத்த நாள் ஏப்ரல் 20இல் உடல்நலக்குறைவு காரணமாக அவர் இயற்கை எய்தினார்.

இந்த தேர்தலுக்கான முடிவுகள் ஜூன் 4ம் தேதி தெரியவரும்.

இதேபோல், 2023 ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் உள்ள ஹசன்பூர் நகர் நகராட்சி தேர்தலில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் ஒருவர், வாக்குப்பதிவுக்கு முன்பு மரணமடைந்தார். ஆனால் உள்ளூர் மக்கள் அவரையே வெற்றி பெற செய்தனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)