You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிபிசி-க்கு எங்கிருந்து பணம் வருகிறது?
கடந்த சில நாட்களாக பிபிசியின் நிதி ஆதாரங்கள் பேசுபொருளாக இருந்து வருவதுடன், ஊடகங்களில் பல தவறான செய்திகளும் வந்த வண்ணம் உள்ளன.
பல வகையான வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன. பிபிசி சீனாவிடம் இருந்து நிதியுதவி பெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
பிபிசியின் பணிகள் மற்றும் நிதியாதாரம் பற்றிய அனைத்து தகவல்களும் பொதுவெளியில் கிடைக்கின்றன.
உங்கள் வசதிக்காக, பிபிசியின் கட்டமைப்பு மற்றும் நிதியாதாரம் தொடர்பான அனைத்து தகவல்களையும் நாங்களே தொகுத்து வழங்குகிறோம்.
பிபிசியின் தோற்றம்
பிபிசி 18 அக்டோபர் 1922 இல் உருவாக்கப்பட்டது. அந்தக் காலத்தில், மார்கோனி உட்பட சிறந்த வயர்லெஸ் தயாரிப்பாளர்களால் இது உருவாக்கப்பட்டது.
அதன் உருவாக்கத்தின் போது, அதன் பெயர் பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங்க் கம்பெனி என்பதாகும்.
பிபிசியின் வழக்கமான ஒளிபரப்பு 1922 நவம்பர் 14 அன்று மார்கோனியின் லண்டன் ஸ்டுடியோவில் இருந்து தொடங்கியது.
33 வயதான ஸ்காட்டிஷ் பொறியியலாளர் ஜான் ரீத் பிபிசியின் பொது மேலாளராக நியமிக்கப்பட்டார்.
இன்றைய பிபிசி அதாவது பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் 1927 ஆம் ஆண்டு அரச சாசனத்தின் கீழ் உருவாக்கப்பட்டது, அதாவது பிரிட்டிஷ் அரசு அல்ல, பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் ஆணையின் படி இது உருவானது. இன்றும் அந்தப் பாரம்பரியம் தொடர்கிறது.
பிபிசி பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திற்குப் பதிலளிக்க வேண்டிய இடத்தில் இருந்தாலும், அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. அது முற்றிலும் தன்னாட்சி பெற்ற நிறுவனமாகும். தன் சுயாட்சியை உறுதிப்படுத்த மிகவும் கடுமையான விதிகள் மற்றும் தரநிலைகள் கொண்ட நிறுவனமாகும்.
சர் ஜான் ரீத் பிபிசியின் முதல் டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.
சார்ட்டர் எனப்படும் அரச குடும்ப சாசனம் பிபிசியின் நோக்கம், அதன் உரிமைகள் மற்றும் அதன் பொறுப்புகளை விவரித்தது. இந்நிறுவனத்தின் கொள்கை விளக்கமும் சாசனத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. அந்தக் கொள்கைகளைச் செயல்படுத்துவது இயக்குநர் ஜெனரல் மற்றும் மூத்த ஊழியர்களின் வேலை.
மிகவும் பிரபலமான சர்வதேச ஒளிபரப்பு நிறுவனம்
பிபிசி உலகின் மிகவும் பிரபலமான மற்றும் மிகப்பெரிய பொது சேவை சர்வதேச ஒளிபரப்பு நிறுவனமாகும்.
பிபிசியின் நோக்கம், பிரிட்டன் மற்றும் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு, சுதந்திரமான மற்றும் பாரபட்சமற்ற, பிரத்தியேகமான உலகளாவிய நிகழ்வுகளைக் கொண்டு சேர்ப்பதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்திப் பொழுதுபோக்குத் தளமாகவும் செயல்படுவதாகும்.
உலகம் முழுவதும், டிவி, ரேடியோ மற்றும் டிஜிட்டல் தளங்களில் பிபிசி செயல்பட்டு வருகிறது. இவற்றில், பிரிட்டனில் அதிகம் பார்க்கப்பட்ட சேனல் 'பிபிசி ஒன்' ஆகும், இது ஒரு தேசிய ஒளிபரப்பு ஆகும்.
இங்கிலாந்தைத் தவிர வடக்கு அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளிலும் பிபிசி தொலைக்காட்சி சேனல்களை நடத்துகிறது. இது தவிர, பிரிட்டனில் பிபிசியின் பல ரேடியோ நெட்வொர்க்குகள் உள்ளன.
பிபிசி மிகவும் சிறிய குழந்தைகளுக்கு சிபிபிஸ், சற்று மூத்த சிறார்களுக்கு சிபிபிசி மற்றும் இளம் வயதினருக்காக சேனல் 3 ஐயும் நடத்துகிறது.
இங்கிலாந்தில் உள்ள அனைத்து பிபிசி ஒளிபரப்புகளும் (ரேடியோ, டிவி, டிஜிட்டல்) முற்றிலும் விளம்பரங்கள் இல்லாதவை. ஏனெனில் அங்கு வசிக்கும் மக்கள் பிபிசியை இயக்க உரிமக் கட்டணம் செலுத்துகிறார்கள்.
இங்கிலாந்துக்கு வெளியே செயல்படும் அமைப்புகளில் பெறப்படும் விளம்பர வருவாய், பிபிசியில் முதலீடு செய்யப்படுகிறது. இதன் மூலம், உலகத்தரம் வாய்ந்த, நியாயமான மற்றும் சுதந்திரமான செய்திகளை வழங்குகிறது.
அனைத்து விளம்பரங்களும் மிகவும் தெளிவான வழிகாட்டுதலின் கீழ் தான் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. விளம்பரங்களுக்கும் நிறுவனத்தின் செயல்பாட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவை ஒன்றையொன்று சார்ந்திருக்கவில்லை.
ராயல் சார்ட்டர் என்பது என்ன?
பிபிசி உலக சேவை தொலைக்காட்சி, வானொலி மற்றும் டிஜிட்டல் தளங்களில் 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் செயல்படுகிறது.
ராயல் சார்ட்டர் விதிகளின்படி, பிபிசி தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் தயாரித்து ஒளிபரப்பத் தேவையான உரிமக் கட்டணப் பணத்தைப் பெறுகிறது.
ராயல் சார்ட்டர் விதிகளின்படி பிபிசி ஒவ்வொரு ஆண்டும் அதன் நிதி அறிக்கைகளை வெளியிட வேண்டும்.
தற்போதைய சார்ட்டர், ஜனவரி 1, 2017 அன்று தொடங்கி, டிசம்பர் 31, 2027 அன்று காலாவதியாகிறது.
ஆனால் அரசு இடைப்பட்ட காலத்திலும் சாசனத்தை மறுஆய்வு செய்கிறது.
உரிமக் கட்டணம் செலுத்தும் அனைவராலும் பிபிசியின் செயல்பாடு உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது.
தற்போது, தொலைக்காட்சி வைத்திருக்கும் அனைத்து வீடுகளும் உரிமக் கட்டணம் செலுத்த வேண்டும், உரிமக் கட்டணம் செலுத்தாதது குற்றமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது, அதை மாற்ற வேண்டும் என்று இப்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிபிசி உலக சேவைக்கு ஒரு வாரியம் உள்ளது. அனைத்து நிகழ்ச்சிகள் மற்றும் சேவைகளுக்கான செயல்பாட்டுக்கு இது பொறுப்பாகிறது.
பிபிசி உலக சேவை வாரியம் குளோபல் நியூஸ் டைரக்ஷன் குழுவிற்கு அறிக்கை அளிக்கிறது.
பிபிசி உலக சேவையின் தொடக்கம்
1932 டிசம்பர் 19 அன்று பிபிசி தனது எம்பயர் சேவையை (அந்தக் காலத்தில் உலக சேவை, எம்பயர் சர்வீஸ் என்று அழைக்கப்பட்டது) தொடங்கியது. அந்த நேரத்தில், இந்த சேவைக்குப் புதிய சிற்றலைத் தொழில்நுட்பத்தின் உதவியால் தொலைதூர ஒளிபரப்பு சாத்தியமானது.
இரண்டாம் உலகப் போரின் போது எம்பயர் சேவை மிகவும் பரவலாகியது. அப்போது இது ஓவர்சீஸ் சேவை என்று பெயர் மாற்றப்பட்டது.
இரண்டாம் உலகப் போரின் முடிவில், இந்த சேவை 40 மொழிகள் என்ற அளவில் விரிவடைந்தது.
1965 இல், அதன் பெயர் பிபிசி உலக சேவை என மாற்றப்பட்டது.
பனிப்போர் காலம் பிபிசி உலக சேவைக்குச் சவாலான காலமாக இருந்தது. பல நாடுகளில் சேவைகள் தடை செய்யப்பட்டன. பல நாடுகளில் பிபிசி பத்திரிகையாளர்கள் தனிப்பட்ட முறையில் குறிவைக்கப்பட்டனர்.
இதில் அதிகம் பேசப்பட்டவர் பிபிசியின் பல்கேரிய நிருபர் ஜார்ஜி மார்கோவ், 1978ல் லண்டனில் விஷம் வைத்துப் படுகொலை செய்யப்பட்டார்.
பனிப்போரின் முடிவைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் பல ஐரோப்பிய மொழிகளுக்கான சேவைகளை நிறுத்த வேண்டியிருந்தது. மேலும், பிபிசி உலக சேவை அதன் முன்னுரிமைகளை மாற்றியமைத்தது.
அதன்படி, 2008-ம் ஆண்டு அரபு மொழியிலும், 2009-ல் ஃபார்ஸி டிவியிலும் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கியது.
பிபிசி உலக சேவைத் தொலைக்காட்சியின் தொடக்கம்
இதற்கிடையில், 1991 இல் பிபிசி வேர்ல்ட் சர்வீஸ் தனது சொந்த தொலைக்காட்சி செய்தி சேனலையும் தொடங்கியது. இது ஐரோப்பாவில் உருவானது, ஆனால் பின்னர் அது ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் விரிவடைந்தது.
பிபிசி வேர்ல்ட் சர்வீஸ் டிவி நியூஸ் பிபிசியின் துணை நிறுவனமாக உருவாக்கப்பட்டது. இதற்கான பணம், சந்தாக்கள் மற்றும் விளம்பரங்களில் இருந்து வருகிறது.
வேர்ல்ட் சர்வீஸ் டெலிவிஷன் நியூஸ் முதலில் பிபிசி வேர்ல்ட் என்று பெயரிடப்பட்டது, பின்னர் 1998 இல் பிபிசி வேர்ல்ட் நியூஸ் என்று பெயர் மாற்றப்பட்டது.
பிபிசி வேர்ல்ட் நியூஸ் தற்போது 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கிடைக்கிறது. வாரந்தோறும் 76 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டுள்ளது.
லண்டனில் உள்ள புஷ் ஹவுஸ் 1941 ஆம் ஆண்டு முதல் பிபிசி உலக சேவையின் தலைமையகமாக இருந்தது, ஆனால் 2012 இல் உலக சேவை, புஷ் ஹவுஸை காலி செய்து, பிராட்காஸ்டிங் ஹவுஸுக்கு மாறியது, அங்கு மற்ற பிபிசி பத்திரிகையாளர்களும் பணியாற்றினர்.
பிபிசி வேர்ல்ட் சர்வீஸ் ஒரு சர்வதேச மல்டிமீடியா ஒளிபரப்பாளர். இது வானொலி, டிவி மற்றும் டிஜிட்டல் தளங்களில், பல மொழிகளிலும் பிராந்திய சேவைகளிலும் கிடைக்கிறது.
பிபிசி எவ்வளவு மக்களைச் சென்றடைந்துள்ளது?
அதன் பார்வையாளர்கள் மற்றும் நேயர்கள் உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் பரவியுள்ளனர்.
பிபிசி உலக சேவையின் வாராந்தரப் பார்வையாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் 15 முதல் 24 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.
உலக சேவையின் மற்றொரு பகுதியான BBC Learning English இன் நோக்கம் சர்வதேச பார்வையாளர்களுக்கு ஆங்கிலம் கற்பிப்பதாகும். இது, தன் பார்வையாளர்களுக்கு ஆங்கிலம் கற்பிப்பதற்காக இலவச ஆடியோ, வீடியோ மற்றும் உரைப் பொருட்களையும் வழங்குகிறது.
சமீபத்திய ஆண்டுகளில் பிபிசி உலக சேவை 1940 களுக்குப் பிறகு மிகப்பெரிய அளவில் விரிவடைந்துள்ளது.
பிபிசி உலக சேவையானது இப்போது உலகின் பல பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட மொழிகளில் உள்ளது. இது இப்போது கெய்ரோ, சியோல், பெல்கிரேட் மற்றும் பாங்காக்கில் சேவைகளைக் கொண்டுள்ளது.
இங்கிலாந்துக்கு வெளியே பிபிசி உலக சேவையின் மிகப்பெரிய செயல்பாடுகள் டெல்லி மற்றும் நைரோபியில் உள்ளன.
பிபிசி உலக சேவையின் டிஜிட்டல் ரீச் – 14.8 கோடி (வாரத்திற்கு)
பிபிசி வேர்ல்ட் சர்வீஸ் தொலைக்காட்சி ரீச் – 13 கோடி (வாரத்திற்கு)
பிபிசி வேர்ல்ட் சர்வீஸ் ரேடியோ ரீச் – 15.9 கோடி (வாரத்திற்கு)
பிபிசிக்கு நிதியுதவியும் உரிமக் கட்டணமும்
பிபிசி உலக சேவைக்கு இங்கிலாந்தின் உரிமக் கட்டணத்தின் மூலம் நிதியளிக்கப்படுகிறது. இதனுடன், 'வெளிநாட்டு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம்' (FCDO) யிலிருந்தும் நிதி பெறப்படுகிறது.
பிரிட்டனில் டிவி பார்க்கும் ஒவ்வொரு குடும்பமும் டிவி உரிமக் கட்டணம் செலுத்த வேண்டும். தற்போது, நிலையான வருடாந்திர உரிமக் கட்டணம் 159 பவுண்டுகள் அதாவது தோராயமாக 15 ஆயிரம் ரூபாய்.
முன்னதாக, பிரிட்டிஷ் அரசாங்கம் பிபிசி உலக சேவைக்குப் நாடாளுமன்றம் மூலம் மானியங்களை வழங்கியது.
வெளியுறவு மற்றும் காமன்வெல்த் அலுவலகம் (FCO) நாடாளுமன்றத்தில் இருந்து பெறப்பட்ட உதவிகளை வழங்கியது.
2014-15 ஆம் ஆண்டு முதல், பிபிசி உலக சேவை உரிமக் கட்டணத்தில் இருந்து மட்டுமே நிதியளிக்கப்படும் என்று 2010 ஆம் ஆண்டில் முடிவு செய்யப்பட்டது.
எவ்வாறாயினும், கடந்த ஆண்டு இங்கிலாந்து அரசாங்கம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு உரிமக் கட்டண உயர்வை முடக்கியது, அதாவது, அதை உயர்த்துவதைத் தடைசெய்தது.
கடந்த ஆண்டு மதிப்பாய்வுக்குப் பிறகு, மூன்று ஆண்டுகளில் பிபிசி உலக சேவைக்கு 283 மில்லியன் பவுண்டுகளை இங்கிலாந்து அரசாங்கம் அறிவித்தது. இது ஒவ்வொரு ஆண்டும் 94.4 மில்லியன் பவுண்டுகளாக இருக்கும் இருக்கிறது.
பிபிசியின் வர்த்தக நிறுவனங்கள்
உரிமக் கட்டணத்தைத் தவிர, பிபிசி அதன் மூன்று வணிக நிறுவனங்களிடமிருந்தும் வருவாய் ஈட்டுகிறது. இதில் பிபிசி ஸ்டுடியோஸ் மற்றும் பிபிசி ஸ்டுடியோவொர்க்ஸ் ஆகியவை அடங்கும்.
வணிக நிறுவனங்களின் வருமானத்தைப் புதிய திட்டங்கள் மற்றும் உள்ளடக்கத்தில் பிபிசி முதலீடு செய்கிறது.
பிபிசி வேர்ல்ட் நியூஸ் என்பது பிபிசியின் வணிகச் செய்தி மற்றும் தகவல் தொலைக்காட்சி சேனலாகும். இந்த சேனல் உலகின் பல நாடுகளில் 24 மணிநேரமும் ஒளிபரப்பப்படுகிறது.
பிபிசி உலகச் செய்திகளை 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பார்க்க முடியும். செய்தி, வணிகம், விளையாட்டு தவிர, இந்த சேனல் நடப்பு விவகாரங்கள் மற்றும் வாழ்க்கை முறை பற்றிய ஆவணப்படங்களையும் ஒளிபரப்புகிறது.
BBC.com என்பது பிபிசியின் வர்த்தக ரீதியிலான செய்தி இணையதளமாகும். இந்த இணையதளம் சர்வதேச பார்வையாளர்களுக்காகச் செய்திகளையும் தொகுப்புகளையும் வழங்குகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்