இந்தியா மீது அதிகரிக்கும் அழுத்தம் - டிரம்புக்கு செவிசாய்த்தால் மேலும் சிக்கலா?

காணொளிக் குறிப்பு,
இந்தியா மீது அதிகரிக்கும் அழுத்தம் - டிரம்புக்கு செவிசாய்த்தால் மேலும் சிக்கலா?

ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த வேண்டும் என இந்தியா மீதான அழுத்தம் அதிகரித்து வருகிறது. யுக்ரேனில் போரை நிறுத்த வேண்டும் என ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்குமாறு சீனா, பிரேசில் மற்றும் இந்தியாவை கேட்டுக் கொண்டுள்ள நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் மார்க் ரூட்டோ, அவ்வாறு செய்யவில்லை என்றால் அமெரிக்காவின் தடைகளுக்கு தயாராக இருக்குமாறு எச்சரித்துள்ளார்.

மறுபுறம், 50 நாட்களுக்குள் யுக்ரேன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ரஷ்யா மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். ரஷ்யாவுக்கு இத்தகைய எச்சரிக்கை என்றால், ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் எனவும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

மார்க் ரூட்டோவின் எச்சரிக்கை குறித்து ஜூலை 17ஆம் தேதி பேசிய இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், எரிசக்தி பாதுகாப்பே இந்தியாவின் முன்னுரிமை என்று கூறினார்.

"எண்ணெய் இறக்குமதியில், சந்தை மற்றும் சர்வதேச நிலைமைகளின் அடிப்படையிலேயே நாங்கள் செயல்படுகிறோம். இந்த விஷயத்தில் எந்த வகையான இரட்டை நிலைப்பாடுகளையும் நாங்கள் எதிர்க்கிறோம்" என்றும் ஜெய்ஸ்வால் கூறினார்.

மார்க் ரூட்டோவின் எச்சரிக்கை வெளியான அடுத்த நாள் இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய இந்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, "எங்களுக்கு எந்தவிதமான அழுத்தமும் இல்லை. ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டால், இந்தியாவுக்கு எந்தவித பிரச்னையும் இல்லை. ஏனெனில் நாங்கள் எண்ணெய்க்காக எந்தவொரு நாட்டையும் சார்ந்து இல்லை" என்று கூறினார்

இந்தியாவும் சீனாவும்தான், ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெயை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகளாக உள்ளன.

இந்திய பெட்ரோலிய அமைச்சக கூற்றுப்படி, இந்தியா தனது எண்ணெய் தேவைகளில் சுமார் 88 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. மறுபுறம், ரஷ்யாவின் மொத்த எண்ணெய் ஏற்றுமதியில் 38 சதவீதத்தை இந்தியா வாங்குகிறது.

கடந்த 2022 பிப்ரவரியில் யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு முன்பு, ரஷ்யாவில் இருந்து இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி இரண்டு சதவிகிதத்திற்கும் குறைவாகவே இருந்தது என்று சிந்தனைக் குழுவான சாத்தம் ஹவுஸ் (Chatham House) தெரிவித்துள்ளது. ரஷ்யா தனது எண்ணெய் ஏற்றுமதியில் சலுகைகளை வழங்கியதால், இந்தியாவின் சுத்திகரிப்பு நிறுவனங்கள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டன.

தற்போது ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500 சதவீத வரியை விதிக்கும் மசோதாவை அமெரிக்க செனட்டர்கள் உருவாக்கி வருகின்றனர்.

இதற்கு இந்தியா செவிசாய்க்குமா?

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ரஷ்ய மற்றும் மத்திய ஆசிய ஆய்வு மையத்தின் இணைப் பேராசிரியர் முனைவர் ராஜன் குமார், தற்போது இந்தியாவின் மீதான அழுத்தம் அதிகரித்துள்ளது என்றும், இந்த அழுத்தத்தை முற்றிலும் புறக்கணிக்க முடியாது என்றும் நம்புகிறார்.

இந்தியா இரு வேறு சவால்களை எதிர்கொள்ளும். ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி நிறுத்தப்பட்டால், இந்தியாவுக்கு எண்ணெய் மலிவாகக் கிடைக்காது. இதுதவிர, சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் அதிகரிக்கும். இதன் பொருள் இந்தியா அதிக விலையில் எண்ணெயை வாங்க வேண்டியிருக்கும், ஆனால் விஷயம் எண்ணெய் பற்றியது மட்டுமல்ல.

ரஷ்யாவுடனான வர்த்தகத்தை இந்தியா நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா கூறுகிறது. அத்தகைய சூழ்நிலையில், பாதுகாப்பு உபகரணங்களை இந்தியா எப்படிப் பெறுவது என்ற சவால் எழும். எனவே, அமெரிக்காவின் இந்த அழுத்தத்தை இந்தியா முழுமையாக ஏற்றுக்கொள்ளும் என்று எனக்குத் தோன்றவில்லை என்கிறார் முனைவர் ராஜன் குமார்.

சரி, அமெரிக்கா கொடுக்கும் அழுத்தத்திற்கு இந்தியா அடிபணிந்தால், அது ரஷ்யாவுடனான உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

முனைவர் ராஜன் குமாரின் கூற்றுப்படி, "அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அச்சுறுத்தல் உண்மையிலுமே செயல்படுத்தப்பட்டால், இந்தியாவுக்கு சிரமங்கள் அதிகரிக்கும்.

ஆனால், இந்தியாவின் நிர்ப்பந்தத்தை ரஷ்யா புரிந்துகொள்ளும் என்றே தான் கருதுவதாக ராஜன் குமார் கூறுகிறார்.

அதேவேளையில், இந்தச் சிக்கல் இந்தியாவுக்கு மட்டுமல்ல, சீனாவுக்கும் இருக்கிறது என்கிறார் ராஜன் குமார். சீனா, அமெரிக்க அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது. டிரம்பின் அச்சுறுத்தல்கள் ஒவ்வொன்றுக்கும் சீனா பதிலளித்துள்ளது. அத்துடன் அந்நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள வேண்டிய கட்டாயமும் டிரம்புக்கு ஏற்பட்டது. அதாவது, டிரம்ப் தனது நண்பர்களுடன் மிகவும் கண்டிப்பாக நடந்து கொள்கிறார். மறுபுறம், அவரது பாணியிலேயே அவருக்கு பதில் அளிப்பவர்களுடன் ஒப்பந்தங்களைச் செய்கிறார் என்கிறார் முனைவர் ராஜன்.

இந்த விவகாரத்தில் இந்தியா என்ன செய்ய வேண்டும்?

குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவின்( Global Trade Research Initiative) நிறுவனர் அஜய் ஸ்ரீவஸ்தவா பிபிசியிடம் பேசும் போது, இந்தியா இந்த அழுத்தத்தை ஏற்றுக்கொள்ளக் கூடாது, ஏனெனில் இதுவே அமெரிக்காவின் கடைசி அழுத்தமாக இருக்காது. அவர்களின் கோரிக்கைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும். ரஷ்யாவில் இருந்து எண்ணெய் குறைந்த விலைக்குக் கிடைக்கிறது, இந்தியா அதை வாங்க வேண்டும்.

ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்கவில்லை என்றால், எண்ணெய் விலை அதிகரித்து அது இந்திய மக்களை நேரடியாகப் பாதிக்கும். ஆனால் டிரம்பின் இரண்டாவது பதவிக் காலத்தில், இந்தியாவின் உத்தி கொஞ்சம் மாறிவிட்டதாகத் தெரிகிறது. ஜோ பைடன் ஆட்சியின் போது, இந்தியா அமெரிக்காவுக்கு உரிய பதிலை கொடுத்து வந்தது. ஆனால் இப்போது இந்தியா அமைதியாக உள்ளது" என்று கூறினார்.

யுக்ரேன், ரஷ்யா இடையிலான போரை நிறுத்த டிரம்ப் விரும்புகிறார், ஆனால் அதற்கு புதின் தயாராக இல்லை. எனவே, ரஷ்யாவை நேரடியாக குறிவைப்பதற்குப் பதிலாக, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளை தற்போது டிரம்ப் குறிவைக்கிறார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு