இரான் மீது 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பொருளாதார தடை
ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் ராணுவத் தடைகள் இரான் மீது 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விதிக்கப்பட்டுள்ளன.
இரான் தொடர்ச்சியான அணுசக்தி விரிவாக்கத்தில் ஈடுபடுகிறது, முறையான ஒத்துழைப்பு வழங்கவில்லை என கூறி மூன்று ஐரோப்பிய கூட்டாளிகளான பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகியவை "ஸ்னாப்பேக்" மெக்கானிசம் என்ற சிறப்பு விதியை செயல்படுத்தியதால் இந்த புதிய நடவடிக்கைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் 2015-ல் உள்ள ஸ்னாப்பேக் மெக்கானிசம் என்ற சிறப்பு விதி, இரான் ஒப்பந்தத்தை மீறினால், அதன் மீது ஐநாவின் தடைகளை மீண்டும் கொண்டு வர மற்ற நாடுகளை அனுமதிக்கிறது.
கடந்த ஜூன் மாதம் இஸ்ரேலும் அமெரிக்காவும் இரானின் அணுசக்தி தளங்கள் குண்டுவீசித் தாக்கின. இதையடுத்து, 2015 ஒப்பந்த விதிமுறைகளின் கீழ் ஒரு சட்டப்பூர்வ கடமையாக இருந்த அணுசக்தி நிலையங்களை சர்வதேச ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய அனுமதிப்பதை இரான் நிறுத்தியது.
இந்தத் தடையானது, இரான் மற்றும் மேற்குலநாடுகள் உறவில் திருப்புமுனையை உண்டாக்கிய அணுசக்தி ஒப்பந்தத்தில் ஏற்பட்ட பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இந்த அணுசக்தி ஒப்பந்தம் இரானின் அணுசக்தி நிறுவல்கள், அதன் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் இருப்புகள் மற்றும் அது மேற்கொள்ளக்கூடிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அளவு ஆகியவற்றில் வரம்புகளை விதிக்கிறது. மேலும், அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடாமல் அணுசக்தி உட்கட்டமைப்பை உருவாக்க இரானை அனுமதிக்கிறது.
2018ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவை இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேற்றிய பின்னர், தனது தடைசெய்யப்பட்ட அணுசக்தி நடவடிக்கைகளை இரான் தீவிரப்படுத்தியது.
முன்னாள் அதிபர் ஒபாமா ஏற்படுத்திய இந்த ஒப்பந்தத்தை குறைகள் கொண்டது எனத் தொடர்ந்து விமர்சிக்கும் டிரம்ப், சிறந்த விதிமுறைகள் குறித்து இரானுடன் பேச்சுவார்த்தை நடத்த போவதாகவும் உறுதியளித்துள்ளார்.
அதே நேரம் தடைகள் மீண்டும் விதிக்கப்பட்டாலும், பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் பேச்சுவார்த்தைகள் பதற்றத்தை தணிக்கும் என இன்னும் நம்புகின்றன.
"எந்தவொரு தீவிர நடவடிக்கையில் ஈடுபடுவதையும் தவிர்க்குமாறு இரானை கேட்டுக்கொள்கிறோம் என அவர்கள் ஒரு கூட்டு அறிக்கையில் கூறினர். மேலும் ஐ.நா. தடைகளை மீண்டும் விதிப்பது ராஜ்ஜீய விவகாரம் முடிவுக்கு வருகிறது என்று அர்த்தமல்ல என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்த வார தொடக்கத்தில் இந்த மூன்று நாடுகளுக்கும் இரானுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை, ஒப்பந்தம் எட்டும் அளவுக்குச் செல்லவில்லை. ஒருவேளை அப்படி நிகழ்ந்திருந்தால் தடைகள் மீண்டும் விதிக்கப்படுவதை அது தாமதப்படுத்தி இருக்கும்.
இரான் தனது உறுதிமொழிகளை மீண்டும் மீண்டும் மீறியுள்ளதால், ஸ்னாப்பேக் நடைமுறையைத் தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லை என இந்த 3 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டறிக்கையில் கூறினர்.
குறிப்பாக, ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடன் ஒத்துழைக்க இரான் மறுத்ததை அவர்கள் குறிப்பிட்டனர்.
தற்போது அமலுக்கு வந்த தடைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள இரான், சட்டவிரோத மற்றும் நியாயமற்ற தடைகளை நாங்கள் ஏற்கவில்லை என்று கூறியது.
தனது மக்களின் உரிமைகள் மற்றும் நலன்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கையும் உறுதியான மற்றும் பொருத்தமான பதிலை எதிர்கொள்ள நேரிடும் என இரான் வெளியுறவு அமைச்சகம் எச்சரித்துள்ளது.
இத்தகைய தடை அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆபத்தில் ஆழ்த்தும் என அதிபர் பெஷேஷ்கியன் கூறுகிறார்.
பொருளாதாரத் தடைகளிலிருந்து மூன்று மாத விலக்குக்கு ஈடாக இரானின் அனைத்து செறிவூட்டப்பட்ட யுரேனியக் கையிருப்புகளையும் ஒப்படைக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரிக்கும் பெஷேஷ்கியன், நாங்கள் ஏன் இப்படி ஒரு வலையில் சிக்கிக்கொண்டு ஒவ்வொரு மாதமும் எங்கள் கழுத்தில் ஒரு கயிற்றைக் கொண்டிருக்க வேண்டும் என்கிறார்.
சரி இரான் மீது என்னென்ன தடைகள் விதிக்கப்படும்?
2006 முதல் 2010 வரை கொண்டுவரப்பட்ட ஆறு தீர்மானங்கள் மூலம் ஐநா பாதுகாப்பு சபையால் விதிக்கப்பட்ட தடைகள் மீண்டும் கொண்டு வரப்படும்.
அதன்படி, யுரேனியம் செறிவூட்டல் மற்றும் மறு செயலாக்க தடை, அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் ஏவுகணைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்நுட்ப பரிமாற்றங்களுக்கான தடை, சில இரானியர்கள் மற்றும் இரானிய நிறுவனங்களின் சொத்து முடக்கம் மற்றும் பயணத்திற்கான தடை, தடை செய்யப்பட்ட பொருட்களைக் கண்காணிப்பதற்காக இரானிய விமானம் மற்றும் சரக்குக் கப்பலை பரிசோதிக்க உலக நாடுகளுக்கு அனுமதி வழங்குவது மற்றும் ஆயுதத் தடை போன்ற தடைகள் மீண்டும் நடைமுறைக்கு வரும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



