காணொளி: டிரம்பின் உலகளாவிய வரிகள் ரத்து - இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆகும்?
அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த உலகளாவிய வரிகளுக்கு எதிராக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ள நிலையில், அமெரிக்கா, இந்தியா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தின் நிலை என்னவாகும் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
இந்தியாவுடன் ஓர் இடைக்கால ஒப்பந்தம் எட்டப்பட்டிருப்பதாக அண்மையில் டிரம்ப் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, இந்தியா மீது விதிக்கப்பட்ட வரியை 18 சதவீதமாக குறைத்தார்.
டிரம்பின் உலகளாவிய வரியை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததும், வர்த்தகச் சட்டம் 1974-ன் பிரிவு 122-ஐ பயன்படுத்தி புதிதாக 10 சதவீத வரியை விதித்தார் டிரம்ப். பின்னர் சனிக்கிழமை அதை 15 சதவீதமாக உயர்த்தினார்.
வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியான பிறகு, வெள்ளை மாளிகையில் டிரம்ப் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து கேள்வி எழுப்பபட்டது.
அதற்குப் பதிலளித்த டிரம்ப், இந்தியாவுடனான ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் இந்தியா தொடர்ந்து வரி செலுத்தும் என்றும் கூறினார்.
அமெரிக்க-இந்திய வர்த்தக ஒப்பந்தம் குறித்து கேள்வி எழுப்பிய இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை ஏன் காத்திருக்கவில்லை என இந்திய அரசைக் கேட்டுள்ளது.
இந்த வர்த்தக ஒப்பந்தத்தை மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் என்று காங்கிரஸ் கூறியது. ஆனால், மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் செளகான் ஆகியோர், இந்த ஒப்பந்தத்தில் விவசாயம் மற்றும் பால் பண்ணை துறைகள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
காங்கிரஸை சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், அமெரிக்கா இந்தியா இடையே அறிவிக்கப்பட்ட ஒப்பந்தத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஏற்படுத்தும் தாக்கம் குறித்து இந்திய அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும் என கோரியுள்ளார்.
இந்த விவகாரத்தில் நிபுணர்களும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
அமெரிக்க உச்ச நீதிமன்றம் வரிகளின் சட்டப்பூர்வத்தன்மை குறித்து தீர்ப்பளிக்கப் போகிறது என்பதை அறிந்திருந்தும், வர்த்தக ஒப்பந்தத்திற்கான கட்டமைப்புக்கு இந்தியா ஏன் ஒப்புக்கொண்டது என சர்வதேச விவகார நிபுணர் பிரம்மா செலானி கேள்வி எழுப்புகிறார்.
சரி, தற்போது இந்தியா மீதான வரி என்ன?
பிபிசி செய்தியாளர் கிரேஸ் எலிசா குட்வின் அளித்த செய்தியின்படி, வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறுகையில், அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ள பிரிட்டன், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்டவற்றுக்கு பிரிவு 122-ன் கீழ் 10 சதவீத உலகளாவிய வரி பொருந்தும் என்று தெரிவித்தார். இதை தற்போது 15 சதவீதமாக டிரம்ப் உயர்த்திவிட்டார்.
இருப்பினும், உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த அஜய் ஸ்ரீவஸ்தவா, அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார்.
பிபிசியிடம் பேசிய அவர், பரஸ்பர வரியை 25 என்பதிலிருந்து 18 சதவீதமாகக் குறைப்பதாக டிரம்ப் உறுதியளித்திருந்தார், அது நடக்கவிருந்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அது அமலாவதற்கு முன்பே வந்துவிட்டதால், பரஸ்பர வரி சட்டவிரோதமானதாகிவிட்டது. ஆனால், அதிபர் டிரம்ப் புதிதாக 15 சதவீத வரியை அறிவித்துள்ளார். இது தற்காலிகமானது. தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைவருக்கும் பொருந்தும் என்றார்.
தற்போது இந்தியப் பொருட்கள் மீதான வரி கணக்கீட்டில் உள்ள குழப்பத்தை விளக்கிய அஜய் ஸ்ரீவஸ்தவா, அமெரிக்காவிற்குச் செல்லும் இந்திய ஏற்றுமதியில் 55 சதவீதபங்கிற்கு 25 சதவீத பரஸ்பர வரி விதிக்கப்பட்டிருந்தது. இப்போது அதற்குப் பதிலாக 15 சதவீத வரி விதிக்கப்படும்," என்றார்.
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தில் எதுவும் மாறாது, அவர்கள் தொடர்ந்து வரி செலுத்துவார்கள்; ஆனால் அமெரிக்கா எதையும் செலுத்த வேண்டியதில்லை என டிரம்ப் கூறி இருந்தார்.
இருப்பினும், டிரம்பின் இந்த வாதத்திற்கு எந்தவிதமான சட்டப்பூர்வ அடிப்படையும் இல்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தையில் உள்ள வர்த்தக ஒப்பந்தத்திற்கு, பிப்ரவரி 6-ஆம் தேதி வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கை மட்டுமே ஒரே சட்டப்பூர்வ அடிப்படை என்கிறார் அஜய் ஸ்ரீவஸ்தவா.
அவரது கூற்றுப்படி, "அந்தக் கூட்டு அறிக்கையில் ஒரு மிகத் தெளிவான நிபந்தனை உள்ளது. அதாவது, இரு நாடுகளில் யாராவது ஒருவர் தங்கள் வரிகளை மாற்றியமைத்தால், மற்றொரு நாடு தங்கள் நிலைப்பாட்டை மாற்ற உரிமை உண்டு. இப்போது அமெரிக்காவில் வரிகள் மாற்றப்பட்டுவிட்டன. இந்த அடிப்படையில் பார்த்தால், எங்களுக்கு இதில் எந்த லாபமும் இல்லை, எனவே இந்த ஒப்பந்தத்தை மறுபரீசீலனை செய்ய வேண்டும் என இந்தியா கூறலாம்."
அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள புதிய 15 சதவீத உலகளாவிய வரிக்கும் மிக பலவீனமான அடித்தளமே உள்ளது என்றும், இந்த வரிவிதிப்பும் நீதிமன்றத்தில் கேள்விக்கு உள்ளாக்கப்படும் என்றும் அஜய் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார்.
அப்படியென்றால் இந்தியா இப்போது என்ன செய்ய வேண்டும்?
அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்குப் பிறகு உலகளாவிய வர்த்தகத்தில் நிச்சயமற்ற தன்மை அதிகரித்துள்ள நிலையில், இந்தியா தனது வர்த்தக ஒப்பந்த நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிறார் அஜய் ஸ்ரீவஸ்தவா.
இந்த விவகாரத்தில் மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்க உச்ச நீதிமன்றம் வரிகள் தொடர்பாக அளித்துள்ள தீர்ப்பை நாங்கள் கவனித்தோம். இது குறித்து அதிபர் டிரம்ப் செய்தியாளர் சந்திப்பை நடத்தி உள்ளோர். அமெரிக்க அரசு சில புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்.'' என கூறப்பட்டுள்ளது.
அதே நேரம், டிரம்ப் சமீபத்தில் வெளியிட்டுள்ள ட்ரூத் சோசியல் பதிவில், உச்ச நீதிமன்றத்தின் அபத்தமான தீர்ப்பை வைத்து எந்தவொரு நாடும் விளையாட நினைத்தால் சமீபத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டதைவிட அதிக வரியை எதிர்கொள்ள நேரிடும் என பகிரங்கமாக எச்சரித்துள்ளார்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



