You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லி கார் வெடிப்பில் இன்னும் விடை தெரியாத 4 முக்கிய கேள்விகள்
(எச்சரிக்கை : இந்த கட்டுரையில் உள்ள சில தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை தரலாம்)
டெல்லியில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே வெடிப்பு நடந்த இடத்தில் புலனாய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் தொடர்ந்து முகாமிட்டுள்ளனர். கார் வெடிப்பு குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
திங்கட்கிழமை மாலையில் செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே ஒரு வெடிப்பு நிகழ்ந்தது. அதில் எட்டு பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நிகழ்ந்த உடனேயே காவல்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகள் சம்பவ இடத்தை அடைந்தன.
இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சம்பவ இடத்தை பார்வையிட்டார். தடயவியல் அதிகாரிகள் சம்பவ இடத்திலிருந்து மாதிரிகளை சேகரித்து சோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர்.
ஆனால் பின்வரும் நான்கு கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.
1. இது ஒரு பயங்கரவாத தாக்குதலா?
இதுகுறித்து காவல்துறை தெளிவான அறிக்கை வெளியிடவில்லை. சம்பவம் குறித்து பல அமைப்புகள் விசாரணை நடத்தி வருவதாக டெல்லி காவல் ஆணையர் கூறியுள்ளார்.
தடயவியல் ஆய்வக அதிகாரி முகமது வாஹித் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சம்பவ இடத்திலிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்படுகின்றன. ஆய்வுக்குப் பிறகே கூடுதல் தகவல்கள் கிடைக்கும். மாதிரிகளை சோதித்த பின்னரே எந்த முடிவுக்கும் வர முடியும்." என்றார்.
வெடிப்பு குறித்து ஊடகங்களில் பல்வேறு ஊகங்கள் வெளியாகியுள்ளன. சில நேரில் கண்ட சாட்சிகள் வெடிப்பு சி.என்.ஜி.யால் (CNG) ஏற்பட்டதாகக் கூறினர். இருப்பினும் காவல்துறை இதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
செவ்வாய்க்கிழமை காலை, டெல்லி (வடக்கு) டி.சி.பி. ராஜா பந்தியா ஊடகங்களிடம் பேசுகையில், "டெல்லி குண்டுவெடிப்பில் UAPA, வெடிபொருள் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தடயவியல் நிபுணர்கள் மற்றும் பிற நிபுணர் குழுக்களும் சம்பவ இடத்தில் உள்ளன. நாங்கள் அனைத்து ஆதாரங்களையும் சேகரித்து வருகிறோம்." என்று கூறியுள்ளார்.
2. வெடிப்பு எப்படி நடந்தது?
டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்ச்சா செய்தியாளர்களிடம் பேசிய போது, "இந்த வெடிப்பு அருகிலுள்ள வாகனங்களையும் சேதப்படுத்தியது. தகவல் கிடைத்தவுடன், டெல்லி காவல்துறை, தடயவியல், என்ஐஏ மற்றும் என்எஸ்ஜி குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை மதிப்பிட்டு வருகின்றன. இந்த வெடிப்பு பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது. உரிய மதிப்பீட்டிற்குப் பிறகு, அது குறித்து விரைவில் தெரிவிக்கப்படும்." என்று கூறினார்.
ஆனால் கார் வெடிப்புக்கான காரணம் குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அது எப்படி நடந்தது? காரில் ஏற்கனவே ஏதேனும் வெடிக்கக் கூடிய பொருள் அல்லது வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்ததா? காரின் எரிபொருள் டேங்க் அல்லது சிஎன்ஜி டேங்க் வெடித்து, மற்ற வாகனங்களையும் சேதப்படுத்தியதா? காரில் இருந்தவர்களுக்கு அதுகுறித்து முன்கூட்டியே ஏதேனும் தகவல் தெரியுமா? என்பன போன்ற கேள்விகளுக்கு இதுவரை தெளிவான பதில் இல்லை.
3. காரின் உரிமையாளர் யார்?
இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுகையில், "திங்கட்கிழமை மாலை 7 மணியளவில், டெல்லி செங்கோட்டை அருகே உள்ள சுபாஷ் மார்க் போக்குவரத்து சிக்னலில் ஒரு ஐ-20 ஹூண்டாய் காரில் வெடிப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக, அருகிலுள்ள சில வாகனங்கள் சேதமடைந்தன. சிலர் காயமடைந்ததாக தகவல்கள் வந்துள்ளன. பெறப்பட்ட முதற்கட்ட தகவலின்படி, சிலர் உயிரிழந்துள்ளனர்." என்று குறிப்பிட்டார்.
அந்த கார் குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. கார் யாருடையது? அது எங்கிருந்து வந்தது? அது எங்கு சென்றது? காரில் எத்தனை பேர் இருந்தனர்? என்பது இன்னும் தெளிவாகவில்லை.
4. இலக்கு யார்?
டெல்லி செங்கோட்டை ரயில் நிலையம் அருகே வெடிப்பு சம்பவம் தற்செயலாக நிகழ்ந்ததா அல்லது வேண்டுமென்றே அங்கே நடத்தப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இது வேண்டுமென்றே செய்யப்பட்டதாக இருந்தால், யார் இலக்கு? பொதுமக்கள் மட்டுமே இலக்குகளாக இருந்தார்களா? மாநிலத்திற்கு அல்லது நாட்டிற்கு வெளியே தொடர்புகள் உள்ளதா? என்பன போன்ற விவரங்கள் இதுவரை தெரியவரவில்லை.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு