அமெரிக்காவுக்கு இந்தியாவின் கொத்தவரங்காய் ஏன் தேவை? கொத்தவரை பிசினை வைத்து என்ன செய்கிறது?

    • எழுதியவர், ஜான்வி மூலே
    • பதவி, பிபிசி செய்தியாளர்

நீங்களும் கொத்தவரங்காயை உணவாக உட்கொண்டிருக்கலாம். ஆனால், இந்தியாவுக்கு பல கோடி டாலர்களை ஈட்டித்தரும் இந்தக் காய், அமெரிக்காவுக்கு பெரிய அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

கொத்தவரங்காய், இந்தியாவில் காய்கறியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்தக் காய்களிலிருந்து பெறப்படும் விதைகளைக் கொண்டு கொத்தவரை பிசின் என்ற பொருள் தயாரிக்கப்படுகிறது.

பொடி வடிவில் உள்ள கொத்தவரை பிசின், பல்வேறு தொழில்களில் திரவங்களை கெட்டியாக்கும் ஸ்டெபிலைசர் (Stabilizer) மற்றும் இணைப்பு பொருளாக (Binder) பயன்படுத்தப்படுவதால் அதற்கு பெரும் தேவை உள்ளது.

புதைபடிவ எரிபொருள் (Fossil Fuel) எடுக்கும் தொழிலில் கொத்தவரை பிசின் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, ஷேல் வகை பாறைகளிலிருந்து ஹைட்ராலிக் ஃப்ராக்சரிங் (Hydraulic Fracturing) என்ற செயல்முறையை பயன்படுத்தி பூமியிலிருந்து எரிவாயு மற்றும் கச்சா எண்ணெயை எடுக்க இது பயன்படுத்தப்படுகிறது.

இந்த செயல்முறையில், கொத்தவரை பிசின் உள்ளிட்ட பிற பொருட்களின் கலவை பாறைகளின் விரிசல்களில் செலுத்தப்படுகிறது, இதனால் எண்ணெய் மற்றும் எரிவாயுவை சீராக வெளியேற்ற முடியும்.

பெட்ரோலியத் தொழிலைத் தவிர, உணவு, மருந்து, காகிதம், துணி மற்றும் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பிலும் கொத்தவரை பிசின் பயன்படுத்தப்படுகிறது. இந்தியா இந்த கொத்தவரை பிசினின் மிகப்பெரிய மூலமாக உள்ளது.

பாகிஸ்தான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சீனா மற்றும் ஆப்பிரிக்காவிலும் கொத்தவரங்காய் பயிரிடப்படுகிறது. ஆனால், APEDA-வின் (வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம்) புள்ளிவிவரங்களின்படி, உலகின் 80 சதவிகித கொத்தவரங்காய் இந்தியாவில் விளைவிக்கப்படுகிறது. இந்தியாவில் 72 சதவிகித கொத்தவரங்காய் உற்பத்தி ராஜஸ்தானில் நடைபெறுகிறது.

குஜராத், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் மஹாராஷ்டிராவிலும் கொத்தவரங்காய் பயிரிடப்படுகிறது. தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், உத்தரப் பிரதேசம் மற்றும் பஞ்சாபிலும் இந்த காய் விளைவிக்கப்படுகிறது.

கொத்தவரங்காய் பயிருக்கு தாராளமான வெயில் மற்றும் மிதமான மழை தேவை. அதிக மழை பெய்தால், செடிகளில் அதிக இலைகள் வளர்ந்து, காய்கள் மற்றும் விதைகளின் அளவு பெரிதாகாது.

எனவே, பருவமழையின் நடுவில் மழையின் வேகம் சற்று குறையும் போது, அதாவது ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் கொத்தவரங்காய் பயிரிடப்பட்டு, அக்டோபர்-நவம்பர் மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது.

இந்தியாவில் உற்பத்தியாகும் கொத்தவரை பிசினில் 90 சதவிகிதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கொத்தவரங்காய் மற்றும் கொத்தவரை பிசின் இந்தியாவிலிருந்து பல வடிவங்களில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஏபிஇடிஏ-வின் இணையதள புள்ளிவிவரங்களின்படி, 2023-24 ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து 4,17,674 மெட்ரிக் டன் கொத்தவரை பிசின் ஏற்றுமதி செய்யப்பட்டது, இதன் மதிப்பு 54.165 கோடி அமெரிக்க டாலர்கள் ஆகும்.

கொத்தவரை பிசினை மிக அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. அதேசமயம், அமெரிக்கா இதன் மிகப்பெரிய இறக்குமதியாளராக உள்ளது. இதுதவிர, ஜெர்மனி, ரஷ்யா, நார்வே மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கும் இந்தியாவிலிருந்து கொத்தவரங்காய் பிசின் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

2023-24 ஆம் ஆண்டில் இந்தியா அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்த கொத்தவரை பிசினின் மதிப்பு 106 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, அமெரிக்காவில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தொழில்களின் மீதான கட்டுப்பாடுகளை நீக்கினார். இதனால், கொத்தவரை பிசினுக்கு பெரும் தேவை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், டிரம்ப் இந்தியாவின் மீது இறக்குமதி வரிகளை விதிக்க முடிவு செய்ததால், இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தில் என்ன நடக்கும் என்பது குறித்து நிச்சயமற்ற நிலை நிலவுகிறது. கொத்தவரை பிசின் சந்தையிலும் இதன் தாக்கம் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு