You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
Asia Cup: பாகிஸ்தானை மீண்டும் வீழ்த்தியது இந்திய அணி; மைதானத்தில் உரசல், கன்ஷாட் கொண்டாட்டம் என குறையாத பரபரப்பு
ஆசிய கோப்பை 2025 பரபரப்பான சூப்பர் 4 கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. நடப்பு தொடரில் இன்று 2வது முறையாக பாகிஸ்தானை எதிர்கொண்டது இந்திய அணி.
துபையில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
டாஸ் வீசுகையில் கடந்த போட்டியைப் போலவே இன்றும் இரு கேப்டன்களும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை.
பாகிஸ்தான் அணி சிறப்பான துவக்கம்
பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தொடங்கிய நிலையில் ஃபகர் சமாம் மற்றும் ஃபர்ஹான் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்தியா மீண்டும் முதல் ஓவருக்கு பந்து வீச ஹர்திக் பாண்ட்யாவை அழைத்தது.
ஃபர்ஹான் பாகிஸ்தான் அணிக்கு சிறப்பாக தொடக்கத்தை அளித்தார். பும்ராவின் பந்துகளையும் அவர் சிறப்பாக எதிர்கொண்டார்.
குறைவான நேரமே விளையாடிய சமாமின் விக்கெட்டை ஹர்திக் பாண்ட்யா வீழ்த்தினார்.
வருண் சக்ரவர்த்தியின் பந்துவீச்சில் பாகிஸ்தான் பேட்டர்கள் சற்று தடுமாறினர்.
பவர்பிளே முடிவில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட் இழப்புக்கு 55 ரன்களை எடுத்தது. இது இந்தியாவுக்கு எதிராக அந்த அணியின் சிறந்த பவர்பிளே ஸ்கோர் என கிரிக் இன்ஃபோ இணையதளம் சுட்டிக்காட்டுகிறது.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஃபர்ஹான் 34 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார். அக்சர்பட்டேல் வீசிய பந்தில் பிரமாண்ட சிக்சர் ஒன்றை விளாசி அரை சதத்தை எட்டிய அவர், இதன் பின்னர் பேட்டை துப்பாக்கி போல பிடித்து கன் ஷாட் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை எடுத்தது. இதனால் இந்திய அணிக்கு 172 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
துவம்சம் செய்த இந்தியாவின் தொடக்க ஜோடி
172 ரன்கள் இலக்குடன் இந்திய அணி பேட்டிங்கைத் தொடங்கியது. அபிஷேக் ஷர்மா மற்றும் சுப்மன் கில் இணை மிகச் சிறப்பான தொடக்கத்தை அளித்தது.
குறிப்பாக அபிஷேக் ஷர்மா சிக்சர்களும், பவுண்டரிகளுமாக பறக்கவிட்டு வாணவேடிக்கை நிகழ்த்தினார்.
பவர்பிளே முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் எடுத்தது. இந்த ஆசிய கோப்பை தொடரில் ஒரு அணியின் சிறந்த பவர்பிளே ஸ்கோர் இதுவே ஆகும்.
இதன் பின்னரும் வேகத்தைக் குறைக்காத இந்திய பேட்டர்கள் முதல் விக்கெட்டுக்கு 105 ரன்களைக் குவித்தனர். இதனிடையே மைதானத்தில் அபிஷேக் ஷர்மா மற்றும் பாகிஸ்தான் வீரர் ஹரிஷ் ரவுஃப் இடையே உரசல் ஏற்பட்டது. இருப்பினும் சுப்மன் அவர்களை சமாதானப்படுத்தினார்.
அரைசதம் எடுக்காமலே சுப்மன் கில் ஆட்டமிழந்த நிலையில், அபிஷேக் ஷர்மா 39 பந்துகளில் 74 ரன்களைக் குவித்து ஆட்டமிழந்தார். இதன் பின்னரும் சஞ்சு சாம்சன், திலக்வர்மா என இந்தியாவின் பேட்டிங் வரிசை நீண்டு கொண்டே சென்றது பாகிஸ்தான் அணிக்கு சவால் அளித்தது. 7 பந்துகள் மீதம் இருக்கையில் இந்திய அணி வெற்றி இலக்கை எட்டி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கைகுலுக்காததாக சர்ச்சை
கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இந்தியா – பாகிஸ்தான் லீக் போட்டி தொடங்கியபோதும், அதன் பிறகும் இரு அணியின் வீரர்களும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொள்ளவில்லை.
டாஸ் நேரத்திலும் கூட, இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா ஆகிய இருவரும் கைகுலுக்கவில்லை. இன்றும் அதுவே நடந்தது.
டாஸ் போடும் போது 'கைகுலுக்க வேண்டாம்' என்று போட்டி நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் கேப்டன்களிடம் கூறியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது.
இதற்காக பாகிஸ்தான் அணி, போட்டி நடுவரை ஆசியக் கோப்பையிலிருந்து நீக்க வேண்டும் என்று ஐசிசியிடம் புகார் கொடுத்தது. இந்த விவகாரத்தில் ஐசிசி இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.
"போட்டி நடுவர், ஐசிசி நடத்தை விதிகள் மற்றும் எம்சிசி கிரிக்கெட் சட்டங்களை மீறியதாக புகார் அளித்துள்ளோம். நம் நாட்டின் கௌரவத்தை விட எனக்கு வேறொன்றும் முக்கியமில்லை," என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசியபோது, "சில விஷயங்கள் ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை விடப் பெரியவை." எனக் கூறினார்.
3 போட்டிகளிலும் வெற்றி.. ஒரு முன்னோட்டம்:
அதுமட்டுமன்றி இந்தியா குரூப் சுற்றில் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருப்பதால் சூர்ய குமார் தலைமையிலான இந்திய அணி பலம் வாய்ந்த அணியாக கருதப்படுகிறது.
கடந்த செப். 10ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. ஐக்கிய அரபு அமீரக அணி 13.1 ஓவர்களில் அடித்திருந்த 57 ரன்கள் என்ற இலக்கை, 4.3 ஓவர்களில் எட்டிப்பிடித்தது.
அதன்பிறகு கடந்த செப். 14ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்கள் சேர்த்தது. 128 என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 15.5 ஓவர்களில் 131 ரன்கள் சேர்த்து, வெற்றியுடன் ஆட்டத்தை நிறைவு செய்தது. அபாரமாக 4 விக்கெட்களை வீழ்த்தியிருந்த குல்தீப் யாதவ் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த போட்டியில் பந்துவீச்சாளர்கள் அபாரம் காட்டியிருந்தனர். குல்தீப் யாதவ் 3 விக்கெட்கள், பும்ரா மற்றும் அக்ஸர் படேல் தலா 2 விக்கெட்கள், ஹர்திக் மற்றும் வருண் சக்கரவர்த்தி தலா 1 விக்கெட்டை கைப்பற்றி அசத்தியிருந்தனர். அதிகபட்சமாக சூர்ய குமார் யாதவ் 47 ரன்கள் விளாசியிருந்தார். இந்த போட்டியிலும் குல்தீப் யாதவ் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஓமனை எதிர்கொண்டது. இதில் முதலில் களமிறங்கி 8 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் சேர்த்தது இந்தியா. பின் களமிறங்கிய ஓமன் அணியை 167 ரன்களுக்குள் சுருட்டி, 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் 56 ரன்கள் விளாசியிருந்த சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகனாக தேர்தெடுக்கப்பட்டார்.
இந்திய அணியின் பலம்
அபிஷேக் சர்மாவின் அபாரமான தொடக்கம் மற்றும் முந்தைய ஆட்டத்தில் சஞ்சு சாம்சனின் அரைசதம் என இந்திய அணியின் பேட்டிங் வரிசை வலுவாக உள்ளது. பந்துவீச்சை பொருத்தவரை குல்தீப் யாதவ் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் சிறிய ஓய்வுக்குப் பிறகு ஜஸ்பிரித் பும்ரா மற்றும் வருண் சக்கரவர்த்தி இன்றைய ஆட்டத்தில் இணையவுள்ளதால் இந்திய அணி தனது முழு பலத்தையும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூப்பர் 4 போட்டி வெறும் ஒரு போட்டி மட்டுமல்ல. இத்தொடரில் இந்தியா தனது வெற்றியை உறுதி செய்வதற்கான தனது பிடியை மேலும் வலுப்படுத்தும் போட்டியாக பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தானின் பலம்:
நடப்பு தொடரின் லீக் சுற்றில் இந்தியாவுடன் மட்டுமே பாகிஸ்தான் தோல்வியை தழுவியது. அதுதவிர போட்டியிட்ட ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் என 2 அணிகளுடனும் வெற்றி பெற்றது.
ஃபகர் ஜமான், சல்மான் ஆகா, முகமது ஹாரிஸ் போன்ற அனுபவ வீரர்களுடன், சாஹிப்சாதா ஃபர்கான், சைம் அயுப் போன்ற இளம் வீரர்களும் அணிக்கு பலம் சேர்க்கின்றனர்.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டியில், பாகிஸ்தான் அணி ஹாரிஸ் ரவூஃப் மற்றும் குஷ்தில் ஷா ஆகியோரை மீண்டும் சேர்த்தது. சுஃபியான் முகீம் மற்றும் ஃபஹீம் அஷ்ரஃப் ஆகியோரை நீக்கியது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு