உத்தரபிரதேசம்: மசூதி ஆய்வின் போது வெடித்த வன்முறையில் கொல்லப்பட்டவர்கள் யார்? பிபிசி கள ஆய்வு

    • எழுதியவர், தில்நவாஸ் பாஷா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

மேற்கு உத்தரபிரதேசத்தில் சம்பல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஷாஹி ஜாமா மசூதிக்கு வெளியே பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மசூதியின் முகப்பில் ஆங்காங்கே கற்கள் சிதறிக் கிடக்கின்றன. சாலையில் எரிந்த நிலையில் இருக்கும் வாகனங்கள் அகற்றப்பட்டாலும் அவற்றின் தடயங்கள் இன்னும் உள்ளன.

ஞாயிற்றுக்கிழமை காலை மசூதியில் நீதிமன்ற உத்தரவுப்படி நடந்த ஆய்வுப் பணிகளின் போது காவல் துறையினருக்கும் ஒரு கும்பலுக்கு இடையே நடந்த மோதலில் இதுவரை குறைந்தது நான்கு பேர் இறந்திருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இருபதுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் பிலால், நயீம், கைஃப் மற்றும் அயான் (16 வயது) ஆகியோர் இறந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறை துப்பாக்கிசூடு நடத்தவில்லை என மொராதாபாத் சரக டிஐஜி முனிராஜ் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புக்காக அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து காவல்துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். தெருக்களில் ஆள் நடமாட்டம் இல்லை. காவல்துறை அதிகாரிகளை தவிர, ஒரு சிலரே சாலைகளில் வந்து செல்வதைப் பார்க்க முடிகிறது.

உள்ளூர் நிர்வாகம் சம்பலில் இணைய சேவையை முடக்கியுள்ளது. வெளியாட்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் சம்பலுக்குள் வருவதற்கு டிசம்பர் 1-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.

தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் எந்த பிரச்னையும் இல்லை எனவும் காவல்துறை தெரிவிக்கிறது.

காவல்துறை கூறுவது என்ன?

"நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது, காவல்துறையின் படைகள் குவிக்கப்பட்டுள்ளன" என்று மொராதாபாத் சரக டிஐடி முனிராஜ் திங்கட்கிழமை காலை ஊடகங்களிடம் தெரிவித்தார். இந்த வன்முறையில் இதுவரை 4 பேர் உயிரிழந்ததை டிஐஜி உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் ஜியாவுர் ரஹ்மான் பார்க் உட்பட 2700க்கும் மேற்பட்டோர் மீது சம்பல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை மாலை வரை, 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வன்முறை நடந்த அன்று அதாவது ஞாயிற்றுக்கிழமை உத்தர பிரதேசத்தில்தான் இல்லை என்றும், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பெங்களூரு வந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பார்க் கூறுகிறார்.

டிரோன் காட்சிகள் மற்றும் சம்பவத்தின் வீடியோ அடிப்படையில் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்படுவார்கள் என்றும் வன்முறையில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும் சம்பல் காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ண குமார் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சொல்வது என்ன?

இதனிடையே இந்த வன்முறை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

சம்பலின் தபேலா கோட் என்னும் பகுதியில் உள்ள ஒரு கடையின் ஷட்டரில் தோட்டாப் பாய்ந்த அடையாளம் காணப்படுகிறது. இங்கு நடந்த வன்முறையை அது பிரதிபலிக்கிறது.

வன்முறை நடந்த பகுதியில் வசித்து வந்த 34 வயது நயீம் காஜி என்பவரும் ஞாயிற்றுக்கிழமை நடந்த வன்முறையில் உயிரிழந்தார். அவர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

நயீமின் தாய், தன் வீட்டுக்கு வெளியே ஒரு இளைஞர் மீது சாய்ந்தபடி அழுதுகொண்டிருந்தார். அவர் தன் மகன் நயீமின் இறப்பை தாங்க முடியாமல், ''சிங்கம் போல இருந்த எனது மகன் ஜாமா மசூதி அருகே சுற்றி வளைக்கப்பட்டு கொல்லப்பட்டான்” என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருந்தார்.

நாங்கள் அவரை சந்தித்தபோது, ​​நயீமின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யும் இடத்தில் இருந்தது. ''குடும்பத்தில் வருமானம் ஈட்டிய ஒரே நபர் என் மகன்தான். இனி அவனது நான்கு குழந்தைகளுக்கு எப்படி உணவளிப்பேன்'' என்கிறார் அவரது தாயார் இட்ரோ காஸி

"என் மகன் இனிப்புக் கடை நடத்தி வந்தான், அவன் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் எண்ணெய் வாங்கச் சென்றான். அதன் பின்னர் என் மகன் சுடப்பட்டதாக காலை 11 மணிக்கு எங்களுக்கு தகவல் வந்தது” என்றார் அவர்

நயீமுக்கு நான்கு குழந்தைகள். "நடப்பது அநீதி, முஸ்லிம்கள் ஒருதலைப்பட்சமாக குறிவைக்கப்படுகிறார்கள், இது அடக்குமுறை" என்று மட்டும் சொன்னார் அவரது மனைவி

இட்ரோ தன் மருமகளுக்கு ஆறுதல் கூறி, "நாங்கள் வழக்குப் பதிவு செய்ய மாட்டோம், நாங்கள் பொறுமையாக இருப்போம், காவல்துறை மற்றும் அரசாங்கத்துடன் சண்டையிட எங்களுக்கு தைரியம் இல்லை எனவே வீட்டிலேயே அமைதியாகக் காத்திருப்போம்" என்று கூறுகிறார்.

'காவல்துறை என் மகனின் மார்பில் சுட்டனர்'

இங்கிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாகிச்சா சரயாத்ரின் பகுதியில் உள்ள ஒரு மசூதிக்கு வெளியே மக்கள் கூட்டம் அமைதியாக நின்றது.

நஃபீஸ் என்பவர் மசூதியின் படிக்கட்டில் தலை குனிந்து அமர்ந்திருந்தார்.

அவரது 22 வயது மகன் பிலாலும் இந்த வன்முறையில் உயிரிழந்தார்.

மகனின் பெயரைச் சொன்னவுடனேயே அழத் தொடங்கினார் நஃபீஸ். இவரது மகன் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார்.

''காவல்துறை என் மகனின் மார்பில் சுட்டனர். என் மகன் அப்பாவி, துணி வாங்க கடைக்கு சென்றிருந்தான். என் மகனின் சாவுக்கு காவல்துறைதான் காரணம்” என்றார் நஃபீஸ்.

இதற்கு யார் பொறுப்பு என்ற கேள்விக்கு, நீண்ட அமைதிக்குப் பிறகு, “யாரைப் பொறுப்பேற்க சொல்வது? யார் பொறுப்பு என்பது அனைவருக்குமே தெரியும். எங்களுக்கு யாரும் இல்லை, எங்களுக்கு அல்லா மட்டுமே இருக்கிறார். எனக்கு ஒரு இளம் வயது மகன் இருந்தான், அவனுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டோம். இப்போது அவன் எங்களுடன் இல்லை. இறந்துவிட்டான். வண்டி இழுக்கும் வேலை செய்து , கடின உழைப்பில் என் மகனை வளர்த்தேன். ஆனால் காவல்துறை தோட்டா அவனை எங்களிடமிருந்து பறித்துச் சென்றது” என்றார்.

இந்த வன்முறையில் 17 வயதான முகமது கைஃப் என்பவரும் உயிரிழந்தார்.

துர்டிபுரா பகுதியை சேர்ந்த முகமது கைஃப் என்பவரது வீட்டில் துக்கம் நிலவுகிறது.

கைஃபின் தந்தை அங்கிருந்தவர்களை நோக்கி, "என் மகன் போய்விட்டான், அவன் இப்போது திரும்பி வரமாட்டான். நாம் பொறுமையாக இருக்க வேண்டும். நாம் என் மகனை அமைதியாக அடக்கம் செய்ய வேண்டும்" என்றார்.

நாங்கள் கைஃப் வீட்டை அடைந்தபோது, ​​அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்தில் இருந்தது. கைஃபின் தாயார் அனிசா அழுது கொண்டே இருந்தார்.

"என் மகன் சாலையோர வியாபாரி. அழகுசாதன பொருட்களை விற்பான். அன்று மாலை வரை அவன் இறந்தது கூட எங்களுக்குத் தெரியாது. நாள் முழுவதும் அவனைத் தேடிக்கொண்டிருந்தோம்" என்கிறார் அனிசா.

அன்று மதியம் காவல்துறை வந்து, வீட்டின் கதவை உடைத்து, தனது மூத்த மகனை வீட்டை விட்டு வெளியே இழுத்துச் சென்றதாக அனிசா குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கிடையில், கைஃபின் மாமா முகமது வசீம் கூறுகையில் "எனது மருமகன்களில் ஒருவர் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார், மற்றொருவர் வீட்டை விட்டு இழுத்துச் செல்லப்பட்டார், நாங்கள் செய்த ஒரே குற்றம் நாங்கள் முஸ்லிம்கள் என்பதுதான், எங்களை மனிதர்களாகக் கூட அவர்கள் கருதவில்லை." என்றார்.

அவர்களை கொன்றது யாருடைய தோட்டாக்கள்?

காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில்தான் அவர்கள் உயிரிழந்ததாக, இறந்தவர்களின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இருப்பினும் வன்முறை கும்பல் தரப்பில் இருந்துதான் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை தெரிவிக்கின்றது.

ஞாயிற்றுக்கிழமை நடந்த வன்முறை சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை உறுதிபடுத்தியுள்ளது. அவர்கள் எவ்வாறு இறந்தார்கள் என்பது விசாரணைக்குப் பிறகே உறுதியாக தெரியவரும்.

சம்பலின் ஹயாத்நகரில் பதான்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஒரு இடுகாட்டில் நாற்பது வயதான ரோமன் கான், அடக்கம் செய்யப்பட்டார். அவரது கல்லறை அருகே அழுது கொண்டிருந்த அவரது மகளை அருகிலிருந்தவர்கள் அமைதிப்படுத்தினர்.

சம்பல் வன்முறையில் கொல்லப்பட்டவர்களில் ரோமன் கானின் பெயரை மொராதாபாத் ஆணையர் ஆஞ்சநேய குமார் ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களிடம் பேசியபோது குறிப்பிட்டார்.

ரோமன் கானின் இறுதிச் சடங்கிற்கு வந்தவர்கள் அவர் காவல்துறை துப்பாக்கியின் தோட்டாக்களால்தான் இறந்தார் என்று மெல்லிய குரலில் கூறினர்.

ஆனால் ரோமன் கானின் மரணம் குறித்து பேச அவரது குடும்பத்தினர் தயாராக இல்லை. ரோமன் கான் பிரேத பரிசோதனை செய்யப்படாமல் அடக்கம் செய்யப்பட்டார்.

"பிரேத பரிசோதனை நடத்தப்படுவதை குடும்பத்தினர் விரும்பவில்லை, யார் மீதும் வழக்குப் பதிவு செய்வதையும் அவர்கள் விரும்பவில்லை. நாங்கள் அனைவரும் நிதானம் காத்து அவரது உடலை அடக்கம் செய்தோம்”, என பெயர் குறிப்பிட விரும்பாத ரோமன் கானின் உறவினர்களில் ஒருவர் கூறினார்.

தங்களை கேமராவில் பார்த்தால், விசாரணை என்ற பெயரில் காவல்துறை தங்களை கைது செய்து விடுவார்களோ என்று இறுதி சடங்கிற்கு வந்தவர்கள் அச்சத்தில் இருந்தனர்.

“உயிரிழந்தவர் எவ்வாறு இறந்தார் என்று கூட சொல்ல தயாராக இல்லாத அளவுக்கு மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது”, என்று இறுதி சடங்கில் கலந்து கொண்ட உள்ளூர் காங்கிரஸ் தலைவர் தவுகீர் அகமது கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)