முதுநிலை நீட் தேர்வில் பூஜ்ய மதிப்பெண் பெற்றாலும் சீட் - எப்படி சாத்தியமானது?

    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

முதுநிலை நீட் தேர்வில் பூஜ்யம் மற்றும் அதற்கும் குறைவாக, அதாவது மைனஸ் மதிப்பெண் பெற்ற 27 பேருக்கு தனியார் கல்லூரிகளில் எம்.டி, எம்.எஸ் படிப்புகளில் சேர இடம் கிடைத்துள்ளது.

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் சீட் கிடைத்தும் அதில் சேராததால்தான் பூஜ்ய மதிப்பெண் எடுத்தவர்களுக்கும் கூட இடம் கிடைத்திருப்பதாக மருத்துவர் சங்கங்கள் கூறுகின்றன.

அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் சீட் கிடைத்தும் சேராதது ஏன்? முதுநிலை மருத்துவ கலந்தாய்வு குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு கூறுவது என்ன? முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் என்ன நடந்தது?

தகுதி மதிப்பெண் பூஜ்யமாக குறைப்பு

2023-24 கல்வியாண்டில் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர, பொதுப்பிரிவினர் 50 பர்சன்டைல், இட ஒதுக்கீட்டுப் பிரிவில் இல்லாத, மாற்றுத் திறனாளிகள் 45 பர்சன்டைல், எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் 40 பர்சன்டைல் பெற்றிருப்பது குறைந்தபட்ச தகுதியாக, முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் இது அனைத்துப் பிரிவினருக்கும் பூஜ்ய பர்சன்டைல் என்று குறைக்கப்பட்டதால் மூன்றாவது சுற்றில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள், முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர முடிந்தது. இவற்றில் பெரும்பாலான இடங்கள், தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்பட்டன.

முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர குறைந்தபட்ச தகுதியாக, நீட் தேர்வில் 50 பர்சன்டைல் நிர்ணயிக்கப்பட்டிருந்த போது, 800 மதிப்பெண்ணுக்கு குறைந்தது 291 மதிப்பெண் பெறுவது கட்டாயமாக இருந்தது. இந்த அளவுகோலை பூஜ்ஜியமாக குறைத்ததால் மைனஸ் 40 மதிப்பெண் பெற்றவர்களும் மருத்துவப் படிப்பில் இணைந்தனர்.

தவறான பதில் அளித்தாலும் சீட்

2023-24 மற்றும் 2024-25 ஆகிய கல்வி ஆண்டுகளில் மிகக் குறைவான மதிப்பெண் பெற்று முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்ந்த மாணவர்களின் விவரம் வெளிவந்துள்ளது.

Medical careers 360 இணையதளத்தில் இடம் பெற்றுள்ள, அந்த கல்வியாண்டுகளில் கலந்தாய்வுக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியலை ஆய்வு செய்ததில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன.

அதன்படி, 2023-24 ஆம் கல்வியாண்டில் முதுநிலை நீட் தேர்வில் பூஜ்ய மதிப்பெண் மற்றும் அதற்கும் குறைவாக, அதாவது மைனஸ் மதிப்பெண் பெற்ற 27 பேருக்கு முதுநிலை மருத்துவப் படிப்பில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

800 மதிப்பெண்ணுக்கு மைனஸ் 40, மைனஸ் 25 என வாங்கிய 13 பேருக்கும் பூஜ்ய மதிப்பெண் பெற்ற 14 பேருக்கும் முதுநிலை மருத்துவப் படிப்பில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

2024-25ஆம் கல்வியாண்டில் 5 பர்சன்டைல் எடுத்திருந்தால் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரலாம் என்பது குறைந்தபட்ச தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டது.

அதன்படி, 5 பர்சன்டைல் பெற்ற 8 பேருக்கு காஷ்மீர், டெல்லி, சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான தரவரிசையில் 2 லட்சத்துக்கும் கீழாக பின்தங்கியவர்களும் எம்.டி, எம்.எஸ் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

'தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதீத கட்டணம்'

"முதுநிலை நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களால் தனியார் கல்லூரியில் பணம் செலுத்தி படிக்க முடிவதில்லை. காரணம், தனியார் கல்வி நிறுவனங்களில் எம்.டி, எம்.எஸ் படிப்புகளுக்கு அதீத கட்டணம் வசூலிக்கப்படுகிறது" எனக் கூறுகிறார், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

"அதனால்தான், அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்காவிட்டால் மறுதேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் ஒதுங்கிக் கொள்கின்றனர். அவர்களை விடக் குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு தனியார் கல்லூரிகளில் எம்.டி, எம்.எஸ் இடம் கிடைக்கிறது" எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "அதீத கட்டணம் வசூலிக்கப்படுவதன் காரணமாக மாணவர்கள் சேர தயங்குவதால்தான் தனியார் கல்லூரிகளில் ஒப்பீட்டளவில் அதிக இடங்கள் காலியாக உள்ளன. அவர்கள் வசூலிக்கும் அதீத கட்டணத்தை செலுத்த முடியாமல் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் ஒதுங்கிக் கொள்வதால்தான், முதுநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுதினாலே எம்.டி, எம்.எஸ் படிப்பில் சேர்ந்துவிடலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது." என்றார்.

மைனஸ் மதிப்பெண் எவ்வாறு வருகிறது?

முதுநிலை நீட் தேர்வு என்பது 800 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படுகிறது. இதில் பூஜ்ய மதிப்பெண் மற்றும் மைனஸ் மதிப்பெண் குறித்து விவரித்த பிரின்ஸ் கஜேந்திரபாபு, "ஒரு கேள்விக்கு சரியான பதில் அளித்தால் நான்கு மதிப்பெண் வழங்கப்படுகிறது. அதுவே ஒரு கேள்விக்கு தவறாக பதில் அளித்தால் 1 மதிப்பெண் கழிக்கப்படுகிறது" என்கிறார்.

ஒரு மாணவர் நான்கு மதிப்பெண் பெற்றிருக்கும் நிலையில், 5 கேள்விகளுக்கு தவறான பதில் அளித்தால் மைனஸ் 1 என்ற நிலைக்கு தள்ளப்படுவார் என்று அவர் விளக்கம் அளித்தார்.

'கட்டணம் தான் பிரச்னை'

இந்தியாவில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சுமார் 70 ஆயிரம் இடங்கள் ஆண்டுதோறும் நிரப்பப்படுகின்றன. இவற்றில் அரசு மற்றும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் உள்ள 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படுகின்றன.

"தனியார் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களுக்கு அந்தந்த கல்லூரிகளே கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம் என தேசிய மருத்துவ ஆணையம் கூறுகிறது. மீதம் உள்ள 50 சதவீத இடங்களில் அம்மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை வசூலிக்கலாம் எனவும் தெரிவித்தது" என்கிறார், சமூக சமத்துவத்துக்கான மருத்துவர் சங்கத்தின் செயலர் சாந்தி.

"தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் வரும் 50 சதவீத இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் கட்டண நிர்ணயம் செய்யவில்லை. இதனால், தனியார் கல்வி நிறுவனங்கள் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு (மூன்று ஆண்டுகள்) பெருமளவில் கட்டணம் வசூலிக்கின்றன" மருத்துவர் சாந்தி கூறுகிறார்.

'நீட் தேர்வையும், மாணவர் சேர்க்கையையும் ஒன்றாக பார்க்கக் கூடாது'

"அதேநேரம், முதுநிலை நீட் தேர்வையும் மாணவர் சேர்க்கையையும் இணைத்து சிலர் பேசி வருகின்றனர். இரண்டையும் ஒன்றாகப் பார்க்க வேண்டியதில்லை. தேசிய மருத்துவ ஆணையத்தால் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. மருத்துவம் படிக்க வேண்டும் என்றால் நீட் தேர்வு எழுதியிருக்க வேண்டும் என்பது சட்டமாக உள்ளது" என்கிறார் மருத்துவர் சாந்தி.

தொடர்ந்து பேசிய அவர், "மதிப்பெண்ணை குறைத்து அனைவருக்கும் இடங்களை ஒதுக்குமாறு சட்டம் கூறவில்லை. தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டதே பூஜ்யம் மற்றும் அதற்கும் குறைவான மதிப்பெண் பெற்றவர்களும் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரலாம் என்ற நிலை வர காரணம்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

"அரசு ஒதுக்கீட்டின் கீழ் வரும் இடங்கள் நிரம்பவில்லை என்ற நிலை வந்ததே இல்லை. தனியார் கல்லூரிகளில் கட்டணம் அதிகமாக உள்ளதால் அதைக் கட்ட முடியாமல் சிலர் இடம் கிடைத்தும் சேராமல் விட்டுவிடுகின்றனர்" என்கிறார் மருத்துவர் சாந்தி.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு என்ன?

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடர்பாக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பு மீதான மேல் முறையீட்டில் கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தேசிய அளவில் கலந்தாய்வு அட்டவணையுடன் அனைத்துவிதமான கட்டணங்களையும் வெளியிட வேண்டும் என்று நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மகாதேவன் அமர்வு உத்தரவிட்டது.

தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்

  • நாடு முழுவதும் ஒருங்கிணைந்த கலந்தாய்வு அட்டவணையை வெளியிட வேண்டும்.
  • அனைத்து மருத்துவக் கல்வி நிலையங்களும் கட்டண விவரங்களை முன்கூட்டியே வெளியிடுவது கட்டாயம்.
  • கலந்தாய்வு கட்டணம், விடுதி கட்டணம், கல்வி கட்டணம் ஆகியவற்றை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
  • நாடு முழுவதும் கட்டண ஒழுங்குமுறை கட்டமைப்பை தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க வேண்டும்.
  • தவறு செய்யும் கல்லூரிகளுக்கு தண்டனை விதிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதுநிலை நீட் தேர்வு 2025-26

2025-26ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. நாடு முழுவதும் 1,052 தேர்வு மையங்களில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வை எழுதினர்.

தேர்வு முடிவுகள் தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியத்தின் (National Board of Examinations in Medical Sciences) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தேதி இன்னும் வெளியாகவில்லை.

இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் கலந்தாய்வு தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், கட்டணத்தை ஒழுங்குபடுத்துவது குறித்த அறிவிப்பு எதுவும் தேசிய மருத்துவ ஆணையத்தால் இதுவரை வெளியிடப்படவில்லை.

'காலி இடங்களை வீணடிக்க கூடாது என்பதே நோக்கம்'

"தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை பெருகிவிட்டதால் அங்கு இடங்களும் அதிகரித்துவிட்டன. இதனால் அதிகளவில் இடங்கள் காலியாக உள்ளன" எனக் கூறுகிறார், தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் அதிகாரி ஒருவர்.

பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கடந்த ஓரிரு ஆண்டுகளாக முதுநிலை நீட் தேர்வு எழுதினாலே சீட் கிடைத்துவிடும் என்ற சூழல் ஏற்பட்டுவிட்டது. இதற்கான தீர்வை தேசிய மருத்துவ கல்வி ஆணையம் தான் கொடுக்க வேண்டும்" என்கிறார்.

"காலி இடங்களை வீணடிக்க வேண்டாம் என்பதால் கட் ஆஃப் மதிப்பெண்ணை குறைக்கின்றனர்." எனவும் அவர் குறிப்பிட்டார்.

'கட்டணத்தை தேசிய மருத்துவ ஆணையம் முறைப்படுத்தும்'

மத்தியில் ஆளுங்கட்சியாக உள்ள பா.ஜ.கவின் தமிழக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதீத கட்டணம் வசூலிக்கப்படுவது முதுநிலை நீட் தேர்வுக்கான நோக்கத்திற்கே சவாலாக உள்ளதாக கூறினார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தனியார் கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலிப்பதை தேசிய மருத்துவ ஆணையம் முறைப்படுத்தும் என எதிர்பார்க்கிறோம். இதன்மூலம் முதுநிலை நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் தனியார் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கான வாய்ப்பு உறுதி செய்யப்படும்." என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு