பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு - இந்தியா பற்றி அந்நாட்டு பிரதமர் கூறியது என்ன?

பாகிஸ்தான் குண்டுவெடிப்பு

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே நடந்த தற்கொலைத் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் என்றும் குறைந்தது 27 பேர் காயமடைந்தனர் என்றும் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்கொலை குண்டுதாரர் மாவட்ட நீதிமன்றத்தின் உள்ளே நுழையத் திட்டமிட்டதாகவும், ஆனால் அவரால் உள்ளே செல்ல முடியவில்லை என்றும் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி கூறினார்.

"நீதிமன்றத்தில் மதியம் 12:39 மணிக்கு தற்கொலை தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை வழங்க வேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார்." என்றார் மொஹ்சின் நக்வி.

வெடிகுண்டு தாக்குதல் நடத்தியவரை அடையாளம் காண்பதற்கு அதிகாரிகள் முன்னுரிமை அளிப்பார்கள் என்றும், இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் நக்வி தெரிவித்தார்.

இஸ்லாமாபாத்தில் அண்மைய ஆண்டுகளில் தற்கொலைத் தாக்குதல்கள் அரிதாகவே நிகழ்ந்துள்ளன. செவ்வாய்க்கிழமை தற்கொலை தாக்குதல் நடந்த சம்பவ இடத்தில் இருந்து வெளியான காட்சிகளில் எரிந்த காரின் எச்சங்கள் மற்றும் போலீஸ் பாதுகாப்பு வளையம் போடப்பட்டிருந்ததைக் காட்டின.

காயமடைந்த 27 பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக நக்வி கூறினார்.

பாகிஸ்தான் குண்டுவெடிப்பு

பட மூலாதாரம், Getty Images

'15 நிமிடங்கள் காத்திருந்து'

தாக்குதல் நடத்தியவர் சுமார் 15 நிமிடங்கள் காத்திருந்து, ஒரு போலீஸ் காருக்கு அருகில் குண்டை வெடிக்கச் செய்ததாகவும் நக்வி மேலும் தெரிவித்தார்.

சம்பவத்திற்குப் பிந்தைய காட்சிகளில், பாதுகாப்புத் தடுப்புக்குப் பின்னால் கருகிய வாகனத்திலிருந்து புகை மண்டலம் எழுவதைக் காண முடிந்தது.

பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி இந்தத் தற்கொலைத் தாக்குதலை "வன்மையாக கண்டிப்பதாக" கூறினார்.

சம்பவம் நடந்தபோது நீதிமன்றத்திற்கு வெளியே தனது காரை நிறுத்தியதாகக் கூறிய ஒரு வழக்கறிஞர், "பெரிய சத்தம்" கேட்டதாக விவரித்தார்.

ருஸ்டம் மாலிக் என்பவர் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "அங்கு முழுமையான குழப்பம் நிலவியது," என்றார்.

மேலும் அவர், "வழக்கறிஞர்களும் மக்களும் வளாகத்திற்குள் ஓடினார்கள். கேட் மீது இரண்டு சடலங்கள் கிடப்பதையும், பல கார்கள் தீப்பிடித்து எரிவதையும் நான் கண்டேன்." என்றார்.

பிரதமர் அலுவலகம் கூறியது என்ன?

செவ்வாய்க்கிழமை நடந்த இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

"இந்தியா தீவிரமாக ஆதரிக்கும்" தீவிரவாதக் குழுக்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாகப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அலுவலகம் குற்றம்சாட்டியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு இந்தியா இதுவரை பதிலளிக்கவில்லை. இதுபோன்ற குற்றச்சாட்டுகளை இந்தியா முன்னதாக மறுத்துள்ளது.

பாகிஸ்தான் தலைநகரை கடைசியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் குறி வைத்தது. அப்போது ஒரு போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டார் மற்றும் பலர் காயமடைந்தனர். அதன் பிறகு நாட்டின் மற்ற பகுதிகளில் தற்கொலைத் தாக்குதல்கள் நடந்தாலும், இஸ்லாமாபாத்தில் நடைபெறவில்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு