காணொளி: அமெரிக்க டாலரின் இடத்தை யுவான் பிடிக்க முடியுமா? தங்கத்தை வாங்கி குவிக்கும் சீனா
அமெரிக்க கடன் பத்திரங்கள் மீதான முதலீட்டை கணிசமாக குறைத்து வரும் சீனா, தங்க கையிருப்பை அதிகப்படுத்தி வருகிறது.
சீனாவின் மத்திய வங்கியான People's Bank of China வெளியிட்ட சமீபத்திய தரவுகளின்படி, டிசம்பர் 2025-ல் சீனாவின் தங்க கையிருப்பு 74.15 மில்லியன் அவுன்ஸாக இருந்தது. இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது 30,000 அவுன்ஸ் அதிகமாகும். சீனா தங்கத்தின் கையிருப்பை அதிகரிப்பது ஏன்? அது என்ன தாக்கத்தை ஏற்படுத்த கூடும்?
சீன ஆய்வாளர்கள் கூற்றுபடி, தங்கத்தின் கையிருப்பை அதிகரிப்பது டாலரை சார்ந்திருப்பதைக் குறைப்பதோடு, டாலர் தொடர்புடைய சொத்துகள் மீதான அபாயங்களை நிர்வகிக்கவும் நாடுகளுக்கு உதவுகிறது.
2022-ஆம் ஆண்டு ரஷ்யாவின் சொத்துகளை அமெரிக்கா முடக்கியதை தொடர்ந்து, அனைத்து மத்திய வங்கிகளுமே தங்கத்தை வாங்குவதை வேகப்படுத்த ஆரம்பித்துள்ளன.
இந்த மாற்றம் உலகளாவிய நாணய அமைப்பில் அதிக பன்முகத்தன்மைக்கு வழிவகுக்கலாம் என கருதப்படுகிறது.
சீனாவின் அதிகரித்து வரும் தங்க கையிருப்பு, சீனாவின் நாணயமான ரென்மின்பி மீதான நம்பிக்கையை உலக நிதி அமைப்பில் வலுப்படுத்துவதாக கருதப்படுகிறது.
2024-ஆம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் தலைமை பொறுப்பில் ரஷ்யா இருந்த போது பிசிபிபிஐ (BCBPI) எனப்படும் BRICS Cross-Border Payments Initiative-வை முன்மொழிந்தது.
இந்த முன்மொழிவு பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகத்தை எளிமையாக்குவதையும், அமெரிக்க டாலர்களை அடிப்படையாக கொண்ட நிதி அமைப்பு மீதான சார்பை குறைப்பதையும் நோக்கமாக கொண்டிருந்தது.
இந்த புதிய போக்கு சீனாவின் ரென்மின்பி நாணயத்தின் மீதான சர்வதேச பயன்பாட்டிற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
இருப்பினும் , சீன நாணயத்தை முழுமையாக சர்வதேசமயமாக்க தற்போதைய நிலை இன்னும் போதுமானதாக இல்லை.
பிரிக்ஸ் நாடுகளில், குறிப்பாக உலகின் மிகப்பெரிய இரண்டு தங்க உற்பத்தியாளர்களான சீனா மற்றும் ரஷ்யா, தங்களின் தங்கக் கையிருப்புகளை அதிகரிப்பது புதிதானது அல்ல.
2008-ஆம் ஆண்டு உலகளாவிய நிதி நெருக்கடிக்குப் பிறகு, இரு நாடுகளும் தங்களின் தங்கக் கையிருப்பை அதிகரிக்க தொடங்கின.
இருப்பினும், இந்த இரு நாடுகளின் அணுகுமுறைகள் வேறுபட்டதாக இருந்தன. ரஷ்யா, பெரிய அளவிலும் தொடர்ச்சியான முறையிலும் தங்கம் வாங்கும் கொள்கையைப் பின்பற்றியது. யுக்ரேன் படையெடுப்பு, மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார தடைகளுக்கு மத்தியில், ரஷ்யாவின் தங்கக் கையிருப்பு உச்ச நிலையை எட்டியது.
சீனாவின் அணுகுமுறை திட்டமிட்டதும், விலையை அடிப்படையாகக் கொண்டதுமாக இருந்தது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறையும் போது, வாங்கும் போக்கை சீனா அதிகரித்தது.
2023-ஆம் ஆண்டிற்குப் பிறகு, சீனா தங்கம் வாங்கும் வேகத்தை குறைத்தாலும், குறைந்த அளவில் தங்கத்தை வாங்குவதை தொடர்ந்து வந்தது. இது நீண்டகால அடிப்படையில் தங்க கையிருப்புகளை அதிகரிக்கும் திட்டத்தில் சீனா உறுதியாக இருப்பதை காட்டுகிறது.
பிரிக்ஸ் நாடுகளைத் தாண்டியும் எல்லைத் தாண்டிய பரிவர்த்தனைகளில் ரென்மின்பியின் பயன்பாட்டை அதிகரிக்க தனது நிதி அமைப்பை சீனா தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.
முழு விவரம் காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



