You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அதிகம் எதிர்பார்க்கப்படும் 5 வீரர்கள் யார்? ஐபிஎல் மினி ஏலத்தில் கடைசி நேர மாற்றம்
- எழுதியவர், பிரதீப் கிருஷ்ணா
- பதவி, பிபிசி தமிழ்
ஐபிஎல் தொடருக்கான (2026) மினி ஏலம் இன்று (டிசம்பர் 16) நடக்கிறது. அபு தாபியில் நடக்கும் இந்த ஏலத்துக்கான பட்டியலில் 369 வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். முன்பு, 350 வீரர்கள் மட்டுமே அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்த நிலையில், கடைசி நேரத்தில் கூடுதலாக 19 வீரர்களை அந்தப் பட்டியலில் ஐபிஎல் நிர்வாகம் புதிதாக சேர்த்துள்ளது.
அணிகளைப் பொறுத்தவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அதிகபட்சமாக 13 காலியிடங்கள் இருக்கின்றன. அந்த அணிதான் அதிகபட்ச தொகையோடு (ரூ 64.3 கோடி) ஏலத்துக்குள் நுழையப்போகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இன்னும் 9 இடங்கள் காலியாக இருக்கின்றன. அவர்களுக்கு 43.4 கோடி ரூபாய் மீதமிருக்கிறது. மும்பை இந்தியன்ஸுக்கோ 2.75 கோடி ரூபாய் மட்டுமே மீதமிருக்கிறது.
இந்நிலையில், இந்த ஏலத்தில் அதிக அணிகளின் கவனத்தை ஈர்க்கப்போகும், அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தப்போகும் ஐந்து வீரர்கள் யார்?
முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் வித்யுத் சிவராமகிருஷ்ணன், வர்ணனையாளர் நானி, பத்திரிகையாளரும் வர்ணனையாளருமான பகவதி பிரசாத் மூவரும் பிபிசி தமிழுக்கு அவர்களின் கருத்துகளைத் தெரிவித்தார்கள். அவர்கள் பட்டியலில் பொதுவாக இருந்த 5 வீரர்களின் பட்டியல் இது. அதற்காக அவர்கள் கொடுத்த காரணங்கள் என்ன?
1. கேமரூன் கிரீன்
இந்த ஏலத்தில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பது கேமரூன் கிரீன். எந்த இடத்திலும் களமிறங்கக்கூடிய அதிரடி பேட்டர், வேகப்பந்துவீச்சாளர் மற்றும் நல்ல ஃபீல்டர் என்பதால் அவரை வாங்க எந்த அணியுமே ஆசைப்படும்.
தனது மேலாளர் செய்த தவறால் ஏலத்தில் தான் பேட்டராக பதிவு செய்யப்பட்டுவிட்டதாகக் கூறிய கிரீன், தான் பந்துவீசத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
அதேசமயம், "கிரீன் பேட்டராகப் பதிவு செய்யப்பட்டிருப்பது அவர் பெரிய தொகைக்குப் போவதற்கு உதவும். ஏனெனில், அவர் பெயர் முதல் செட்டிலேயே இடம்பெற்றிருக்கிறது. அதனால், கொல்கத்தா, சென்னை போன்ற அணிகள் தங்களின் தொகையை செலவு செய்வதற்கு முன்பே இவர் பெயர் வந்துவிடும் என்பதால், நிச்சயம் இரு அணிகளுக்கும் இடையே ஏலத்தின்போது இவரை வாங்க கடும் போட்டி இருக்கும்" என்கிறார் பகவதி பிரசாத்.
இந்த அணிகள் போக சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் ஆகிய அணிகள் ஓரளவு கிரீனுக்காக முயற்சி செய்யலாம்.
ஆனால், சென்னை, கொல்கத்தா போல் இவர்களால் அந்த ஒற்றை வீரர் மீது பெரும் முதலீடு செய்யமுடியாது என்று வல்லுநர்கள் கருதுகிறார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு வேறு சில தேவைகள் இருப்பதாகவும் சொல்லும் நானி, கொல்கத்தாவை நிறைய செலவளிக்க வைப்பதற்காக சென்னை இவரை வாங்க ஏலம் கூறலாம் என்கிறார்.
ஆண்ட்ரே ரஸல் போன்ற ஒரு வீரரின் இடத்தை நிரப்பவேண்டும் என்ற கட்டாயம் கொல்கத்தாவுக்கு இருப்பதால், அவர்கள் கிரீனை வாங்கவேண்டும் என்று காத்திருப்பார்கள் என்கிறார் அவர்.
2. லியாம் லிவிங்ஸ்டன்
அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மற்றொரு வெளிநாட்டு வீரர் லியாம் லிவிங்ஸ்டன். கடந்த மெகா ஏலத்தில் அவரை பெங்களூரு வாங்கியிருந்தது. ஆனால், பின்னர் அவரை ரிலீஸ் செய்துவிட்டார்கள். அதனால் பல அணிகளும் தற்போது இவரை வாங்க நினைப்பார்கள்.
"ஒரு நல்ல மிடில் ஆர்டர் அதிரடி பேட்டர், லெக் ஸ்பின், ஆஃப் ஸ்பின் இரண்டுமே வீசக்கூடியவர் என்பதால் இவருக்கு நல்ல வரவேற்பு ஏற்பட்டிருக்கிறது" என்கிறார் வித்யுத்.
சென்னை, கொல்கத்தா,ஹைதராபாத், டெல்லி போன்ற அணிகள் இவரைக் குறிவைக்கலாம். தங்கள் நம்பர் 4 இடத்தை பலப்படுத்தவேண்டும் என்று நினைத்தால் குஜராத் டைட்டன்ஸும் இவரை வாங்க நினைக்கலாம்.
ஃபினிஷராகப் பயன்படுத்த முடியும் என்பதால் எல்லா அணிகளுமே லிவிங்ஸ்டனை வாங்க நினைப்பார்கள் என்பது வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது.
"அவர் இதுவரை ஐபிஎல் அரங்கில் பெரிய தாக்கம் ஏற்படுத்தவில்லை. ஆனால், மிகச் சிறந்த திறமைசாலி. ஆட்டத்தை மாற்றக்கூடிய வல்லமை பெற்றவர்'' என்கிறார் நானி.
3. வெங்கடேஷ் ஐயர்
மெகா ஏலத்தில் 23.75 கோடி ரூபாய்க்கு வாங்கிய வெங்கடேஷ் ஐயரை, இப்போது ரிலீஸ் செய்திருக்கிறது கொல்கத்தா.
"அவரால் டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் என எங்குமே விளையாட முடியும். எந்த இடத்திலும் விளையாடக்கூடிய ஒரு இந்திய வீரரை எல்லா அணிகளுக்குமே பிடிக்கும். என்ன, அவர்கள் அவரை எப்படிப் பயன்படுத்தப் பார்க்கிறார்கள் என்பதைப் பொறுத்தே ஏலத்தில் அவருக்காக போட்டியிடுவார்கள்" என்று கூறினார் பகவதி பிரசாத்.
"கடந்த முறைபோல் அல்லாமல் அவர் 8-10 கோடி ரூபாய்க்குள் ஏலம் போனால் நல்லது" என்கிறார் நானி.
"போன முறை அந்தப் பெரிய தொகையே அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது. இம்முறை குறைவான தொகைக்கு ஏலம் போவது, அவரது செயல்பாட்டுக்கு நல்லது" என்று அவர் கூறினார்.
இவருக்கும் சென்னை vs கொல்கத்தா இடையே போட்டி நிலவலாம். அதேசமயம், லக்னோ, ஹைதராபாத், பெங்களூரு போன்ற அணிகளுமே இவரை வாங்க முயற்சி செய்யலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
4. மதீஷா பதிரனா
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நீண்ட காலம் பயணிப்பார் என கருதப்பட்டவரை அந்த அணி வெளியே விட்டது ஆச்சர்யமாகக் கருதப்பட்டது.
கடந்த மெகா ஏலத்துக்கு முன்னதாக அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் தக்கவைத்திருந்தது.
"பதிரனா தற்போது அவரது பௌலிங் ஆக்ஷனை மாற்றியதால் அவரது செயல்பாட்டில் சரிவு ஏற்பட்டுவிட்டது. அதனால் முன்பு ஏற்படுத்திய தாக்கத்தை அவரால் ஏற்படுத்த முடியவில்லை" என்று கூறினார் பகவதி பிரசாத். இருந்தாலும் 'எக்ஸ் ஃபேக்டர்' என்று கருதப்படும் ஒரு வீரரை வாங்க நிச்சயம் அணிகள் ஆர்வம் காட்டுவார்கள் என்றும் அவர் கூறினார்.
கிட்டத்தட்ட எல்லா அணிகளுக்குமே வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளரின் தேவை இருக்கிறது என்பதால் பதிரானாவுக்கு கொஞ்சம் போட்டி இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
5. ஜேசன் ஹோல்டர்
"இம்முறை ஹோல்டர் சிறந்த ஃபார்மில் இருப்பதால், முன்பை விட அவருக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கலாம்" என்கிறார் பகவதி பிரசாத்.
எப்போதுமே வெளிநாட்டு ஆல்ரவுண்டர்களுக்கான தேவை ஐபிஎல் ஏலத்தில் அதிகமாக இருக்கும். ஹோல்டர் இதுவரை பல அணிகளுக்கு விளையாடியிருந்தாலும், பெரிய தாக்கம் ஏற்படுத்தியதில்லை. ஆனால், இம்முறை அவரது ஃபார்ம், அவர் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தும் என்கிறார் அவர்.
"முன்பெல்லாம் இல்லாததுபோல் ஹோல்டர் தற்போது பேட்டிங், பௌலிங் இரண்டிலும் முன்னேற்றம் கண்டுள்ளார். நன்கு பௌன்சர்களையும், யார்க்கர்களையும் பயன்படுத்துகிறார். நன்கு சிக்ஸர்களும் அடிக்கத் தொடங்கியிருக்கிறார்" என்று நானியும் சொல்கிறார். கிட்டத்தட்ட எல்லா அணிகளுமே அவருக்கு போட்டியிடக்கூடும் என்கிறார் அவர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு