ஒரு இளவரசரின் கொலையால் உலகமே போரில் இறங்கி சுமார் ஒரு கோடி பேர் மாண்ட வரலாறு

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜெய்தீப் வசந்த்
- பதவி, பிபிசி குஜராத்தி
சுமார் 110 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஆஸ்திரிய தம்பதி கொல்லப்பட்டதால் முதலாம் உலகப் போர் ஏற்பட்டது. இதில் 1 கோடிக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். கிட்டத்தட்ட 2 கோடிப் பேர் காயமடைந்தனர்.
ஆஸ்திரிய ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ஆர்ச் ட்யூக் ஃபெர்டினான்ட் - சோஃபியா தம்பதி அதற்கு முன்பாக கொலை முயற்சிகளில் இருந்து உயிர் தப்பியுள்ளனர். இவர்களின் காதல் கதை ஒரு சினிமாவின் திரைக்கதைக்கு ஒப்பானது. அவர்களின் கதையைப் போல, அவர்கள் இறந்த நாளும் வரலாற்றில் மிகவும் முக்கியமானதாக மாறிப் போனது.
சர்ச்சையின் ஊற்றுக்கண்

பட மூலாதாரம், Alamy
1867-ஆம் ஆண்டு ஆஸ்திரியா மற்றும் ஹங்கேரி இணைந்து ஒரு ஒப்பந்தம் மூலம் இருநாடுகளின் ஒன்றியம் ஆக மாறின. இருநாடுகளும் ஒரே குடும்பத்தால் ஆளப்பட்டன. தற்போதைய ஐரோப்பாவில் உள்ள பல நாடுகள் முன்பு இவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. ஆஸ்திரியாவின் ஆட்சியிலிருந்து விடுபட்டு சுதந்திரம் அடைய போஸ்னியா விரும்பியது. அதற்கு ரஷ்ய ஆதரவு பெற்ற செர்பியா போன்ற நாடுகள் பக்க பலமாக இருந்தன.
1903-ஆம் ஆண்டு, செர்பியாவின் ராஜா, ராணி மற்றும் ராணுவத் தலைவர்கள் கொல்லப்பட்டனர். புதிதாக ஆட்சிக்கு வந்த மன்னர் ரஷ்ய ஆதரவு பெற்றவராக இருந்தார்.
1908-ஆம் ஆண்டில் போஸ்னியா மற்றும் ஹெர்ஸகொவினாவை ஆஸ்திரியா-ஹங்கேரி ஆக்கிரமித்தது. இவை முன்னர் ஓட்டோமான் பேரரசில் ஒரு அங்கமாக இருந்தன. 1912 மற்றும் 1913 இடையே இரண்டு பால்கன் யுத்தங்கள் நடந்தன. 1912-இல் நடந்த முதல் பால்கன் யுத்தத்தில் பல்கேரியா, மான்டனேக்ரோ, செர்பியா நாடுகள் ஓட்டோமான் பேரரசை வீழ்த்தி அதன் கீழிருந்த ஐரோப்பாவின் பெரும்பகுதியைக் கைப்பற்றின.
கைப்பற்றிய பகுதிகளைக் கட்டுப்பாட்டில் வைப்பது தொடர்பான தகராறால் அடுத்த ஆண்டே மேலுமொரு யுத்தம் நடந்தது. கிரீஸ் மற்றும் செர்பியா ஆகிய நாடுகள் சண்டையிட்டன. இதனால் பால்கன் பிராந்தியத்தில் நிலையற்ற தன்மை நிலவியது.
1914-ஆம் ஆண்டு, ஜூன் கடைசி வாரத்தில் ஆஸ்திரிய-ஹங்கேரி அரியணையின் வாரிசான ஆர்ச் ட்யூக் ஃபெர்டினான்ட் தனது மனைவியுடன் போஸ்னியா தலைநகரான சரயேவோவிற்கு வந்தார்.
போஸ்னியா மக்கள் செர்பியாவுடன் இணைய விரும்பினர். இதனால் செர்பியர்கள் 'ப்ளாக் ஹாண்ட்' என்கிற அமைப்பை உருவாக்கினர். இதன் மூலம் புரட்சிகர சித்தாந்தத்தை பரப்பி வந்தனர். சரயேவோவில் மூன்று இனக் குழுக்கள் இருந்ததால் இந்த இடம் ஐரோப்பாவின் ஜெருசலேம் என அழைக்கப்பட்டது.
அவர்கள் ஆர்ச் ட்யூக் ஃபெர்டினன்ட் போஸ்னியா வருகிறபோது அவரை கொலை செய்ய திட்டமிட்டனர். ஆர்ச் ட்யூக் உடன் அவரின் மனைவி சோஃபியாவும் வந்திருந்தார்.
குழப்பத்திற்கு நடுவே மலர்ந்த காதல்

பட மூலாதாரம், Getty Images
ஆஸ்திரியா-ஹங்கேரியை ஆண்ட அரச குடும்பத்தினர் தங்களது சாம்ராஜ்ஜியத்தின் எல்லையை விரிவாக்கம் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்த போது, சோஃபியா என்கிற பெண்ணை ஆர்ச் ட்யூக் ஃபெர்டினான்ட் காதலித்தார். அவர் அரச வம்சத்தைச் சேர்ந்தவர் அல்ல என்பதால் அவர்களின் திருமணத்திற்கு அரச குடும்பத்தில் பலத்த எதிர்ப்பு நிலவியது.
இறுதியாக, சோஃபியாவிற்கு பிறக்கும் குழந்தை ஆட்சிக்கு வாரிசு ஆகாது என்கிற நிபந்தனையுடன் அவர்களின் திருமணத்திற்கு அனுமதி கிடைத்தது. சோஃபியா, ஹோஹென்பர்கின் டச்சஸ் (Duchess) ஆனார். அவர் உள்நாட்டில் அரச குடும்பத்தின் வாகனத்தைக் கூட பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. ஆனால் ராணுவ பிரிவின் தலைவராக ஆர்ச் ட்யூக் ஃபெர்டினான்ட் இருந்ததால், சோஃபியா வெளிநாட்டு பயணங்களின்போது மட்டும் அரச விருந்தோம்பல் பெற அனுமதிக்கப்பட்டது.
ஆர்ச் ட்யூக் - சோஃபியா தம்பதிக்கு ஒரு மகன், இரு மகள்கள் என மொத்தம் மூன்று குழந்தைகள் பிறந்தனர். சோஃபியா அரச குடும்பத்தில் சேர்க்கப்படாததால் அவரின் மறைவிற்குப் பிறகு அரச கல்லறையில் புதைக்கப்பட அனுமதிக்கப்படவில்லை. இதனால் வியன்னாவில் உள்ள தனது கோட்டையில் அமைந்துள்ள தேவாலயத்தில் இருவரையும் அருகருகே புதைக்க ஆர்ச்ட்யூக் ஏற்பாடு செய்திருந்தார்.
இருவரும் தங்களது 14வது திருமண நாளன்று சரயேவோ நகருக்குச் சென்றிருந்தனர். அன்றைய தினம் நடந்த கொலை முயற்சியில் இருவரும் உயிர் தப்பினர்.
முந்தைய கொலை முயற்சிகள்

பட மூலாதாரம், Topfoto
அதற்கு முன்னரும் அவர்கள் மீது கொலை முயற்சிகள் நடந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு ஓராண்டுக்கு முன்பு, 1913-ஆம் ஆண்டு நவம்பரில் இங்கிலாந்தின் போர்ட்லாண்ட் டியூக்கின் (Duke) அழைப்பை ஏற்று இருவரும் நாட்டிங்ஹாம்ஷையர் சென்றிருந்தனர். இதுகுறித்து போர்ட்லாண்ட் டியூக் தனது 'மேன், வுமன் அன்ட் திங்ஸ்' என்கிற புத்தகத்தில் எழுதியுள்ளார்.
"நாங்கள் பறவை வேட்டையாட சென்றபோது எங்கள் கன் லோடர் (Gun Loader) விழுந்ததால் இரு பேரல்களில் இருந்தும் தோட்டாக்கள் வெளியேறின. நான் மற்றும் ஆர்ச்ட்யூக் இருவரிடம் இருந்தும் சில அடி தூரம் தள்ளி அவை சென்றன. அதனால், நாங்கள் இருவரும் தப்பினோம்" என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
ஆர்ச் ட்யூக் ஃபெர்டினான்ட் - சோஃபியா இருவரும் சரயேவோ நகர வீதிகளில் காரில் சென்ற போது 'மால்டா போஸ்னியா' என்ற குழுவைச் சேர்ந்தவர்கள் குண்டு வீசித் தாக்கினர். அதில் அவர்கள் தப்பித்தாலும் உடன் வந்தவருக்குக் காயம் ஏற்பட்டது.
ஆர்ச் ட்யூக் ஃபெர்டினான்ட் தன் மீது நடந்த தாக்குதலுக்காக சரயேவோ அதிகாரிகளைக் கடுமையாக சாடினார். காயமடைந்த கர்னல் ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அதன் பின்னர் இருவரும் நடந்து சென்றபோது கவ்ரிலோ ப்ரின்சிப் (Gavrilo Princip) என்கிற நபர் துப்பாக்கியால் சுட்டதில் இருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த நிகழ்வு ஐரோப்பா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
முதலாம் உலகப் போரின் தொடக்கப் புள்ளி

பட மூலாதாரம், IWM
இந்தப் படுகொலை சம்பவம் தான் முதலாம் உலகப் போர் ஏற்பட உடனடி காரணமாக அமைந்தது.
ஆர்ச் ட்யூக் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்த ஆஸ்திரியா-ஹங்கேரியின் அரசர் ஜோசப், செர்பியாவுக்கு 10 கடுமையான நிபந்தனைகளை விதித்தார். அவர்கள் 48 மணி நேரத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் போர் தொடங்கும் என்றும் அவர் மிரட்டினார். அடுத்தடுத்த இரண்டு பால்கன் போர்களால் சோர்வடைந்திருந்த செர்பியா 9 நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டது. ஆனாலும் செர்பியாவுக்கு எதிராக ஆஸ்திரியா-ஹங்கேரி போரை அறிவித்தது.
ஜெர்மனி என்ற நாடு உலக வரைபடத்தில் 1871-ஆம் ஆண்டுதான் உருவாகியிருந்தது. அதற்கு முன்பே பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஆசியா மற்றும் ஆப்ரிக்காவில் பல பகுதிகளை தங்களது காலனிகளாக மாற்றியிருந்தன. இதே காலகட்டத்தில் வளர்ந்துவந்த ஜெர்மனியும் தனது எல்லையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று விரும்பியது. 'ஆஸ்திரியாவின் நடவடிக்கைகளை' ஆதரிப்பதாக ஜெர்மனி அறிவித்தது. இது போருக்கான ஆதரவானதாகவே பார்க்கப்பட்டது.
மறுபுறம் செர்பியா உதவி கேட்டதால் ரஷ்யாவும் தனது ராணுவத்தை அனுப்பியது. ஆஸ்திரிய-ஹங்கேரியின் நோக்கங்களை ரஷ்யா சந்தேகத்துடன் பார்த்தது. ஆக்ஸ்ட் 1-ஆம் தேதி ரஷ்யா மீது ஜெர்மனி போரை அறிவித்தது.
பெல்ஜியம் மற்றும் லக்சம்பர்க் வழியாக பிரான்ஸை நோக்கி தனது படைகளை நகர்த்தியது ஜெர்மனி. பெல்ஜியத்தின் நடுநிலைத்தன்மை மீறப்பட்டதால் ஜெர்மனி மீது போரை அறிவித்தது பிரிட்டன். இதனால் இந்தியா உட்பட பிரிட்டனின் காலனிகளாக இருந்த பல நாடுகள் போரில் ஈடுபடுத்தப்பட்டன.
முதலாம் உலகப் போரில் இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் ஜப்பான் 'நேச நாடுகளாகவும்' ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் துருக்கி 'அச்சு நாடுகளாகவும்' அறியப்பட்டன. சில மாதங்களில் முடியும் எனக் கருதப்பட்ட போர் நான்கரை ஆண்டுகள் நீடித்தது. சுமார் 6 கோடி வீரர்கள் பங்கேற்ற இந்தப் போரில் கிட்டத்தட்ட ஒரு கோடிப் பேர் உயிரிழந்தனர். 2 கோடிப் பேர் காயமடைந்தனர்.
பிரிட்டனுக்காக சுமார் 13 லட்சம் இந்திய வீரர்கள் போரில் கலந்து கொண்டனர். இதில் 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
போர்ட்லாண்டின் டியூக் தனது புத்தகத்தில், "ஆர்ச் ட்யூக் அப்போது கொல்லப்படாமல் இருந்திருந்தாலும் உலகப் போர் தவிர்க்கப்பட்டிருக்காது, சிறிது காலம் தள்ளிவைக்கப்பட்டிருக்கலாம்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












