காணொளி: 6000 விமானங்கள் பாதிப்பு - சூரிய கதிர்வீச்சுக்கு என்ன தொடர்பு?
இந்தியா உட்பட உலகம் முழுவதும் இன்று ஆயிரக்கணக்கான விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு காரணம் புயலோ, மழையோ, மோசமான வானிலையோ அல்ல, சூர்யகதிர்வீச்சுதான்.
சூரிய கதிர்வீச்சால் விமான சேவை பாதிக்கப்பட்டது எப்படி? எந்தெந்த விமான சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளன? முழு விவரத்தை இந்த காணொளியில் பார்க்கலாம்.
ஏ320 விமானத்தில் என்ன பிரச்னை?
ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் விமானம்தான் ஏர்பஸ். இந்த நிறுவனத்தின் A320 ரகத்தின் சுமார் 6000 விமானங்கள் பாதிப்புக்குள்ளானதாக கருதப்படுகிறது.
A320 மாடலை அதிகம் பயன்படுத்தும் நான்கு பெரிய விமான நிறுவனங்களான அமெரிக்கன் ஏர்லைன்ஸ், டெல்டா ஏர்லைன்ஸ், ஜெட் ப்ளூ, யூனைடெட் ஏர்லைன்ஸ் ஆகியவையும் இதில் அடங்கும்.
A320 மட்டுமல்லாமல், நிறுவனத்தின் அதிகம் விற்கப்படும் விமானங்களான A318, A319 மற்றும் A321 வகை விமானங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
A320 விமானங்களில் கண்டறியப்பட்ட பிரச்னை, விமானத்தின் உயரத்தை கணக்கிடும் கணினி மென்பொருளுடன் தொடர்புடையது. அதிக உயரங்களில் பறக்கும் போது, சூரிய கதிர்வீச்சு, ஏ320 விமானங்களின் விமான கட்டுப்பாட்டு டேட்டாக்களை அழிக்கும் அபாயம் உள்ளதை ஏர்பஸ் நிறுவனம் கண்டறிந்துள்ளது.
இதனால் ஆயிரக்கணக்கான விமானங்களில் உடனடியாக சாஃப்ட்வேர்களை அப்டேட் செய்ய வேண்டியிருப்பதால், விமானப் போக்குவரத்தில் தடங்கல்கள் ஏற்படும் என்று அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.
இதில் 5100 விமானங்களில் சுமார் மூன்று மணி நேரத்தில் சாஃப்ட்வேர் அப்டேட்டின் மூலம் பிரச்னையை சரி செய்ய முடியும் என நம்பப்படுகிறது.
ஆனால் மீதமுள்ள 900 பழைய விமானங்களில், பறக்கும் முன் அங்குள்ள கணினிகளை முழுவதும் மாற்ற வேண்டியுள்ளது. அதுவரை பயணிகளை விமானங்களில் ஏற்ற முடியாது. அதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும் என்பது மாற்று கணினிகள் எவ்வளவு நேரத்தில் கிடைக்கும் என்பதைப் பொறுத்தது.
பிரச்னையை கண்டறிந்தது எப்படி?
கடந்த அக்டோபர் மாதம் மெக்சிகோவிலிருந்து அமெரிக்கா சென்ற ஜெட் ப்ளூ விமானம் திடீரென உயரம் குறைவாக பறந்தது. இதனால் ஃப்ளோரிடாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டதில் 15 பேர் காயமடைந்தனர்.
அப்போதுதான் இந்த பிரச்னை கண்டறியப்பட்டது.
உயரத்தில், சூரியனில் இருந்து வரும் கடுமையான கதிர்வீச்சால் விமானத்தின் கணினிகளில் உள்ள தரவு பாதிக்கப்படக்கூடும் என ஏர்பஸ் கண்டறிந்தது.
A320 ரக விமானங்கள் "fly-by-wire" வகையைச் சேர்ந்தவை. அதாவது காக்பிட் கட்டுப்பாடுகளுக்கும், விமானத்தை இயக்கும் பகுதிகளுக்கும் நேரடியாக எந்த இயந்திர இணைப்பும் கிடையாது. பைலட்டின் செயல்பாடுகள் கணினி மூலமே மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த பிரச்னையை சரி செய்யும்வரை பயணிகளை ஏற்ற அனுமதி வழங்கக்கூடாது என ஐரோப்பிய ஒன்றிய விமானப் பாதுகாப்பு நிறுவனம் (EASA) அவசர அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
விமான சேவைகள் பாதிப்பு
இந்த தொழில்நுட்பக் கோளாறால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் அதிகம் பாதிக்கப்படவில்லை. விஸ் ஏர் மற்றும் ஏர் இந்தியா ஏற்கெனவே சாஃப்ட்வேர்களை புதுப்பிக்கும் பணிகளை தொடங்கிவிட்டன. தங்களின் ஒருசில விமானங்களின் பயண நேரத்தில் மாற்றம் இருக்கலாம் என இண்டிகோ நிறுவனம் கூறியுள்ளது.
ஏர் பிரான்ஸ் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் பாரிஸ் முனையத்தில் இருந்து சனிக்கிழமை காலை புறப்படும் 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக பயண பத்திரிகையாளர் சைமன் கால்டர் பிபிசியிடம் தெரிவித்தார்.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் 340 விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது. ஆஸ்திரேலியாவில், ஜெட்ஸ்டார் விமான நிறுவனம் 90 விமானங்களை ரத்து செய்தது. ஜப்பானிலும் விமான சேவை பாதிக்கப்பட்டது.
ஏர்பஸ் நிறுவனம் தடங்களுக்காக வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



