செங்கோட்டையன் கெடு விதித்ததன் பின்னணியில் பாஜக? யூகங்களுக்கு வித்திடும் 'சந்திப்புகள்'

- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தேர்தலில் வெல்லவேண்டுமானால் அ.தி.மு.கவிலிருந்து பிரிந்து சென்றவர்களை கட்சிக்குள் மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார் அக்கட்சியின் மூத்த தலைவரான கே.ஏ. செங்கோட்டையன். இதன் பின்னணியில் பா.ஜ.க. இருப்பதாக தமிழக காங்கிரஸ் கூறுகிறது. பா.ஜ.க. சொல்வது என்ன?
மனம் திறந்த செங்கோட்டையன்
வெள்ளிக்கிழமையன்று காலையில் கோபிச்செட்டிப்பாளையத்தில் தொண்டர்களையும் செய்தியாளர்களையும் சந்தித்த அ.தி.மு.கவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன், "கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சிக்குள் சேர்க்க வேண்டும். அப்போதுதான் வரும் தேர்தல்களில் கட்சியால் வெற்றிபெற முடியும். பத்து நாட்களுக்குள் இதற்கான முயற்சிகளைத் துவங்க வேண்டும். அப்படி நடக்காவிட்டால் எடப்பாடி கே. பழனிச்சாமியின் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன். இதே மனநிலையில் உள்ளவர்களுடன் சேர்ந்து, பிரிந்து சென்றவர்களை இணைப்பதற்கான முயற்சிகளைச் செய்வேன்" என்று கூறியிருக்கிறார்.
'ஒற்றுமையே பலம்' - எச்.ராஜா

பா.ஜ.கவின் சில தலைவர்களிடம் இது குறித்துக் கேட்கப்பட்டபோது அவர்கள் நழுவும் வகையிலேயே பதிலளித்தார்கள். பா.ஜ.கவின் மூத்த தலைவரான எச். ராஜாவிடம் கேட்டபோது, "அவர் அ.தி.மு.கவிலேயே இருக்கிறார், அவருடைய உணர்வுகள் எனக்குப் புரிகிறது. என்றைக்கும் ஒற்றுமையே பலம். தமிழ்நாட்டில் தே.ஜ.கூவை தலைமை ஏற்றிருப்பது அ.தி.மு.க. செங்கோட்டையனும் அதிமுகவில்தான் இருக்கிறார். அவருடைய கோரிக்கைக்கு அதற்கான தாக்கம் இருக்குமெனத் தெரிகிறது. தே.ஜ.கூவை எல்லோருமே பலப்படுத்த வேண்டும். பலவீனப்படுத்தக் கூடாது. கருத்து வேறுபாடு இருந்தால் உட்கார்ந்து பேசுவோம். பேசினால் பிரச்னை தீரும்" என்று பதிலளித்தார்.
ஆனால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரான கு. செல்வப்பெருந்தகை, இந்த விவகாரத்தின் பின்னணியில் பா.ஜ.க. இருப்பதாகக் குற்றம்சாட்டினார்.
"பா.ஜ.க. பின்புலமாக இருந்து கே.ஏ. செங்கோட்டையன் மூலமாக இந்த கலகக் குரலை விதைத்திருக்கிறது. இப்போது ஒரு 'செக்' வைத்திருக்கிறார்கள். நீங்கள் ஏதாவது எதிராகப் பேசினால் நாங்கள் என்ன செய்வோம் என்பதற்கு இது ஒரு உதாரணம் என்று சொல்லியிருக்கிறார்கள். பா.ஜ.க. பின்புலம் இல்லாமலா, 6 மாதங்களுக்கு முன்பு டெல்லி சென்று பா.ஜ.க., தலைவர்களை அவர் சந்தித்தார்?" என்றார் செல்வப்பெருந்தகை.
ஆனால், பா.ஜ.கவின் மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரன் மிகக் கவனமாக இது குறித்துப் பேசினார். "இது அ.தி.மு.கவின் உள்கட்சி விவகாரம். அதில் நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது. அவர்களுக்குள் பேச வேண்டிய விவகாரம். எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால் இந்த தி.மு.க. ஆட்சியை நிச்சயமாக அகற்ற முடியும்" என்றார் நயினார்.
அவருடைய பதிலும் மழுப்பலாக இருந்தாலும், "எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால் இந்தத் தி.மு.க. ஆட்சியை அகற்ற முடியும்" என்று அவர் தெரிவித்த கருத்து செங்கோட்டையனுக்கு ஆதரவான கருத்தைப்போல பரவ ஆரம்பித்தது.

பாஜக மீது சந்தேகம் ஏன்?
இந்த விவகாரத்திற்குப் பின்னால் பா.ஜ.க. இருக்கிறது என்ற சந்தேகத்தைப் புறம்தள்ள முடியாது என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ப்ரியன்.
" இந்தச் சூழலில் 'எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால் தி.மு.க. ஆட்சியை அகற்ற முடியும்' என்பது எடப்பாடிக்கு எதிரான ஒரு நிலைப்பாடகத்தான் பார்க்கப்படும். சில மாதங்களுக்கு முன்பாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார் செங்கோட்டையன். அப்போது கூட்டணியில் இல்லாத எடப்பாடி கே. பழனிசாமியை, கூட்டணிக்கு கொண்டுவர பா.ஜ.க. செய்த முயற்சியாகவே பார்க்கப்பட்டது. ஆகவே இப்போதும் அந்த சந்தேகம் இருக்கிறது" என்கிறார் ப்ரியன்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கும் கே.ஏ. செங்கோட்டையனுக்கும் இடையில் முரண்பாடுகள் இருப்பதாகச் செய்திகள் வெளியாயின. அந்தத் தருணத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் பேசிய முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சென்னையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்ததை உறுதிசெய்தார். அந்தச் சமயத்தில் கட்சியின் நலன் குறித்து பேசியதாகவும் ஜி.எஸ்.டி வரி குறித்துப் பேசியதாகவும் தெரிவித்த கே.ஏ. செங்கோட்டையன், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியிடம் சொல்லிவிட்டு இவர்களைச் சந்தித்தாரா என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை.
யூகங்களுக்கு வித்திடும் 'சந்திப்புகள்'
தற்போது கே.ஏ. செங்கோட்டையன் 'மனம் திறந்து' பேசியிருக்கும் நிலையில், வேறு சில சந்திப்புகள் நடந்ததாகச் சொல்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.
"கே.ஏ. செங்கோட்டையனும் அ.தி.மு.கவின் முன்னாள் எம்.எல்.ஏவும் முன்னாள் மேயருமான ஒருவரும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கு நெருக்கமான ஒரு பத்திரிகையாளரைச் சந்தித்தனர். அப்போது, ஓ.பி.எஸ். வி.கே. சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோர் ஒன்றாக இணைந்தால், அ.தி.மு.க. முக்குலத்தோருக்கு எதிரான கட்சி என்ற பிம்பத்தைப் பெறும். கடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே அ.ம.மு.க., 23 தொகுதிகளில் கணிசமான வாக்குகளைப் பெற்றது என்பதெல்லாம் விவாதிக்கப்பட்டது. வி.கே. சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோர் நீக்கத்தின் பின்னணியில் இருந்தது பா.ஜ.கதான். அப்படியிருக்கும் போது எல்லோரையும் சேர்க்க வேண்டும் என்ற முயற்சியையும் பா.ஜ.க. ஏன் மேற்கொள்ள வேண்டும்? ஒருவேளை வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வெல்ல வேண்டும் என்பது காரணமாக இருக்கலாம்" என்றார் குபேந்திரன்.
ஆனால், செங்கோட்டையனுக்குப் பின்னால் பா.ஜ.க. இருப்பதாகத் தான் கருதவில்லை என்கிறார் மூத்த பத்திரிகையாளரான டி. ராமகிருஷ்ணன். "இதற்குப் பின்னால் பா.ஜ.க. இருப்பதாக நான் நம்பவில்லை. ஆனால், அ.தி.மு.க. தானாக பலவீனமடைவதை நாம் தடுக்கத் தேவையில்லை என அவர்கள் நினைக்கலாம். அதனால், இந்த விவகாரத்தில் நாம் எதற்குத் தலையிட வேண்டும் என நினைப்பார்கள். இப்போது அதிருப்தி குரல் எழுப்பும் தலைவர்கள் யாருக்கும் பா.ஜ.க. அரசியல் சொல்லித்தர வேண்டியதில்லை. தவிர, பா.ஜ.கவை ஒருபோதும் விமர்சிக்காத ஓ. பன்னீர்செல்வம் சமீபத்தில்தான் அக்கட்சியை கடுமையாக விமர்சித்துவிட்டு, கூட்டணியைவிட்டு வெளியேறியிருக்கிறார். அம்மாதிரி சூழலில் அவர்களையும் சேர்க்க வேண்டுமென பா.ஜ.க. ஏன் முயற்சிக்கப் போகிறது?" என்கிறார் டி. ராமகிருஷ்ணன்.
பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளரான நாராயணன் திருப்பதி இந்த யூகங்களை எல்லாம் புறந்தள்ளுகிறார். "கே.ஏ. செங்கோட்டையனின் நிலைப்பாட்டை வரவேற்கும் தொனியில் மாநிலத் தலைவர் எதுவும் சொல்லவில்லை. இந்த விவகாரத்தின் பின்னணியில் பா.ஜ.கவும் கிடையாது. அ.தி.மு.க. எங்கள் கூட்டணிக் கட்சி. அவர்கள் விவகாரத்தில் கருத்துச் சொல்வதும் சரியாக இருக்காது. செங்கோட்டையன் மத்திய அமைச்சர்களைச் சந்தித்ததில் இதுபோன்ற எந்த அரசியலும் கிடையாது" என்கிறார் அவர்.

அதிமுக - பாஜக உறவு கடந்து வந்த பாதை
தமிழ்நாட்டில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையில் ஏற்பட்ட கூட்டணி தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துவருகிறது. 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் இணைந்து சந்தித்தன. டி.டி.வி. தினகரன் தனித்துப் போட்டியிட்டார். 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலையும் அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் இணைந்தே சந்தித்தன.
ஆனால், பா.ஜ.கவின் மாநிலத் தலைவராக கே. அண்ணாமலை வந்ததும், இரு கட்சிகளுக்கு இடையிலும் முரண்பாடுகள் முற்றின. 2023ல் கூட்டணி முறிந்தது. இதனால், 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க. தனித்து கூட்டணி அமைத்தது. பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைந்து போட்டியிட்டது. அ.தி.மு.கவிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்த ஓ. பன்னீர்செல்வமும் இந்தக் கூட்டணியில் சுயேச்சையாக இணைந்து போட்டியிட்டார். ஆனால், தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய இரு கூட்டணிகளுக்குமே சாதகமாக வரவில்லை.
தேர்தல் முடிந்த பிறகும் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில்தான் தாங்கள் தொடர்வதாக ஓ. பன்னீர்செல்வமும் டி.டி.வி. தினகரனும் கூறிவந்தனர். இதற்கிடையில், அ.தி.மு.க. மீண்டும் இந்தக் கூட்டணியில் இணைந்தது. அதற்குப் பிறகு தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி முதலில் ஓ. பன்னீர்செல்வமும் பிறகு டி.டி.வி. தினகரனும் கூட்டணியிலிருந்து விலகினர். இந்நிலையில் தான் செங்கோட்டையன் விலகிச் சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று குரல் எழுப்பியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












