You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மந்திரம் பெயரில் மோசடி: பெண்கள் எச்சரிக்கையுடன் இருப்பது எப்படி?
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
தீய ஆவிகளை விரட்டுகிறோம் என்ற பெயரிலோ அல்லது சிறுமிகள் அல்லது பெண்களின் நோய்களை குணமாக்குகிறோம் எனும் பெயரிலோ, அவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் சம்பவங்கள் குறித்து, இந்தியாவின் பல்வேறு மூலைகளில் இருந்தும் பலவித கதைகளை கேட்டிருப்பீர்கள்.
இத்தகைய சம்பவங்கள் நம்மை ஆச்சர்யப்படுத்தினாலும், இவை நமக்குப் புதிது அல்ல. இந்திய சமூகத்தில் இன்றும் மூடநம்பிக்கை எந்தளவுக்கு வேரூன்றியுள்ளது என்பதையும் எளிதில் ஆபத்துக்கு உள்ளாகக் கூடிய பெண்கள் மற்றும் சிறுமிகளை சுரண்டுவதற்கு இவை எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் இந்த சம்பவங்கள் நினைவுபடுத்துகின்றன. அத்தகைய ஒரு சம்பவம் சென்னை வடபழனியில் நிகழ்ந்துள்ளது. ஆனால், இங்கு ஒரு கேள்வி எழுகிறது. மோசடி நபர்களிடம் மக்கள் ஏன் சிக்குகிறார்கள்?
தீய ஆவிகளை (Evil Spirit) அழிப்பதற்கு பரிகாரம் செய்வதாகக் கூறி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரில், கோவில் அர்ச்சகர் மீது வடபழனி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குடும்ப கஷ்டங்களுக்குத் தீர்வு கிடைப்பதற்கு மாற்று வழிகளைத் தேடும் போது இதுபோன்ற மோசடிகள் நடப்பதாக மனநல மருத்துவர்கள் கூறுகின்றனர். 'தீய ஆவிகளை விரட்டுகிறோம்' எனக் கூறும் நபர்களிடம் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?
சென்னை பள்ளிக்கரணை பெண் அளித்த புகார் என்ன?
சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த, 30 வயதுக்குட்பட்ட இளம்பெண் ஒருவர், தனது வீட்டுக்கு அருகில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
அங்கு கோவிலில் அர்ச்சராக பணிபுரியும் அசோக் பாரதி (வயது 32) என்பவரின் அறிமுகம் இளம்பெண்ணுக்கு கிடைத்துள்ளது. தனது குடும்பத்தில் பிரச்னைகள் தொடர்வதால் அதற்கான தீர்வு குறித்து அர்ச்சகரிடம் இளம்பெண் கேட்டுள்ளார்.
கடந்த மாதம் 28 ஆம் தேதி அவரைச் சந்தித்த போது, 'உன்னைச் சுற்றியுள்ள தீய சக்திகளை அழிப்பதற்கு சில பரிகாரங்களை செய்ய வேண்டும்' எனக் கூறியதாக, அண்மையில் சென்னை தெற்கு மண்டல காவல் இணை ஆணையரிடம் அளித்துள்ள புகார் மனுவில் இளம்பெண் கூறியுள்ளார்.
இதையடுத்து, வடபழனி முருகன் கோவிலுக்கு சில பரிகாரங்களை மேற்கொள்வதற்காக அர்ச்சகர் அழைத்துச் சென்றதாகவும் அப்போது கோவில் பூட்டப்பட்டிருந்ததால் அருகில் இருந்த பக்தவத்சலம் தெருவில் உள்ள அவரின் உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகவும் புகார் மனுவில் கூறியுள்ளார்.
அங்கு யாரும் இல்லாத நிலையில், தன்னை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரில் தெரிவித்துள்ளார். அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், பாலியல் வன்கொடுமை சட்டப் பிரிவுகளில் அர்ச்சகர் அசோக் பாரதி மீது வடபழனி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பாதிரியார் மீது பாலியல் புகார்
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி சென்னை மந்தைவெளிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண், மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், 'மாதா சர்ச் சாலையில் உள்ள ஆட்டுக்குட்டி சபை தேவாலயத்துக்கு வழிபாடு நடத்தச் செல்வது வழக்கம். அங்கு பாதிரியாராக இருந்தவரிடம், மனஉளைச்சலாக உள்ளதாகக் கூறினேன். அவர், 'உன் உடம்பில் ஆவி, பிசாசு புகுந்திருக்கும். என் வீட்டுக்கு வந்தால் ஜெபித்து சரி செய்கிறேன்' எனக் கூறினார்" எனத் தெரிவித்துள்ளார்.
அந்த தேவாலயத்தில் பாதிரியாராக இருந்த கெனித் ராஜ் என்பவர் இவ்வாறு செய்ததாக, அப்பெண்ணின் புகார் அடிப்படையில் போலீஸார் கூறுகின்றனர்.
'பாதிரியார் வீட்டுக்குச் சென்றபோது, தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்ததால், அங்கிருந்து வந்துவிட்டேன். ஆவி, பிசாசு ஓட்டுவதாகக் கூறி தவறாக நடக்க முயன்ற பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனப் புகார் மனுவில் இளம்பெண் கூறியுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட அந்த பாதிரியாரின் மீது பிஎன்எஸ் சட்டப்பிரிவுகள் 296, 75, 76, 351(2), பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவரைக் கைது செய்தனர். ஆபாசமான செயல்கள், பாலியல் தொல்லை ஆகியவற்றை இந்தச் சட்டப்பிரிவுகள் குறிக்கின்றன.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நாகர்கோவில் வடசேரி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரையும் பாலியல் புகாரில் தாங்கள் கைது செய்ததாக போலீஸார் கூறுகின்றனர். தன் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாமல் போவதாகவும் அதற்குப் பரிகார பூஜை செய்யுமாறும் மணிகண்டனிடம் தொழிலாளி ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
'உங்கள் மனைவிக்கு பேய் பிடித்துள்ளதால் அதை விரட்டுகிறேன்' எனக் கூறி வீட்டுக்கு வந்த மணிகண்டன் தனது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அந்த தொழிலாளி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக, சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் போலீஸார் மணிகண்டனை கைது செய்தனர்.
மோசடி நபர்களை நம்பி மக்கள் ஏமாறுவது ஏன்?
"தீய ஆவிகளை விரட்டுவதாக் கூறும் நபர்களை நம்பி மக்கள் ஏமாறுவது ஏன்?" என சென்னை மருத்துவக் கல்லூரியின் பேராசிரியரும் கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையின் முன்னாள் இயக்குநருமான பூர்ண சந்திரிகாவிடம் பிபிசி தமிழ் பேசியது.
"இத்தகைய சம்பவங்கள் முன்பும் நடந்திருந்தாலும் கொரோனா காலத்துக்குப் பிறகு அதிகரித்திருப்பதாக கருதுகிறேன். ஏனெனில், கொரோனா காலகட்டத்துக்குப் பிறகு தொழில்ரீதியான பிரச்னைகள், நிதி சார்ந்த பிரச்னைகளை மக்கள் எதிர்கொள்கின்றனர். இவற்றுக்குத் தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற நபர்களை நாடிச் செல்கின்றனர்" எனக் கூறுகிறார்.
"கோவிலுக்குப் போனால் பாஸ்போர்ட் கிடைக்கும், ராசியான ஆடையை அணிந்து சென்றால் தேர்வை நன்றாக எழுதலாம் என்றெல்லாம் கூட சிலர் நம்புகின்றனர்." என அவர் குறிப்பிட்டார்.
பெண்கள் தற்காத்துக் கொள்வது எப்படி?
தன்னை நாடி வரும் நபரின் பலவீனத்தை புரிந்து கொண்டு, தன் விருப்பத்துக்கு இணங்கினால் சரியாகிவிடும் எனக் கூறி சில மோசடி நபர்கள் பாலியல் ரீதியாக தொல்லை தருவதாகக் கூறும் பூர்ண சந்திரிகா, "யாரை நம்புவது, யாரை நம்பக் கூடாது என்பதில் பெண்களுக்கு தெளிவு வர வேண்டும்" என்கிறார்.
தனியாக ஓர் இடத்துக்கு வருமாறு கூறும் போதும் பூஜை செய்யும் போது தனியாக வந்து அமருமாறு கூறும்போதும் அவற்றை ஆராய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
"மந்திரவாதிகளை அப்படியே நம்பினால் பல பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும்" எனக் கூறும் பூர்ண சந்திரிகா, "ஒவ்வொரு மதத்திலும் இதற்கென பெயர்கள் உள்ளன." என்கிறார்.
"இதை அவ்வளவு எளிதில் மாற்றிவிட முடியாது. இதுபோன்ற செயல்களால் பலன் இல்லை என்பதை தொடர்ந்து கூறும்போது மட்டுமே மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படும்" எனவும் அவர் குறிப்பிட்டார்.
"ஒருவர், தனக்கு செய்வினை வைத்ததால் உடல்நலனும் தொழிலும் கெட்டுவிட்டதாக நம்பினால், அதற்கு மனநல ரீதியாக சிகிச்சை எடுப்பது அவசியம். உலகில் ஒருவருக்கொருவர் செய்வினை வைத்துக்கொண்டே சென்றால் யாராலும் வாழ முடியாது என்பதை புரிய வைக்க வேண்டும்" எனக் கூறுகிறார் பூர்ண சந்திரிகா.
"தனக்கு ஏதோ செய்வினை வைத்துவிட்டார்கள் என நம்பி மனநல ரீதியாக பாதிப்படையும் போது, மோசடி நபர்களிடம் சென்று ஏமாறுகின்றனர். இதனால் நோயின் தன்மை தீவிரம் அடைந்துவிடும். முன்னதாக, மனநல மருத்துவரை அணுகும்போது அவற்றை குணப்படுத்த முடியும்" எனவும் அவர் தெரிவித்தார்.
அறிவியல்பூர்வ காரணங்கள் உள்ளதா?
பேய், செய்வினை போன்றவற்றை நம்புவதற்கு அறிவியல்பூர்மான காரணங்கள் உள்ளதா என மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியரான த.வி.வெங்கடேஸ்வரனிடம் பிபிசி தமிழ் கேட்டது.
"பேய், செய்வினை, ஜோதிடம் ஆகியவை மீதான நம்பிக்கைகள் குறித்து ஏராளமான ஆய்வுகள் நடந்துள்ளன. எந்த மாதிரியான காலகட்டங்களில் இதுபோன்ற நம்பிக்கை அதிகரிக்கிறது என ஆராய்ந்த போது, அவலம் அவநம்பிக்கை போன்ற காலங்களில் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது" எனக் கூறுகிறார்.
மக்களுக்கு ஏதாவது பற்று வேண்டும் என்னும்போது இதுபோன்ற நம்பிக்கைகள் அதிகரிப்பதாகக் கூறும் த.வி.வெங்கடேஸ்வரன், "பஞ்சம், பொருளாதார பிரச்னை, வேலையின்மை, சம்பளம் குறைவு போன்றவை அவலமாகவும் இதுபோன்ற பிரச்னைகளை சமாளிக்க முடியாத நிலை அவநம்பிக்கையாகயும் பார்க்கப்படுகிறது" என்கிறார்.
அதேநேரம், நம்பிக்கைகளை கேள்வி எழுப்பக் கூடாது, விமர்சிக்கக் கூடாது, கேள்வி எழுப்பினால் புண்படும் என சிலர் பேசுவதாகக் கூறும் த.வி.வெங்கடேஸ்வரன், "மந்திரம் செய்து ஏதாவது ஒரு பொருளை கொண்டு வருகிறார் என்றால் அது எங்கிருந்து வந்தது,? அதை ஏன் அனைவருக்கும் அவர் கொடுக்கக் கூடாது எனக் கேள்வி எழுப்ப வேண்டும்" என்கிறார்.
"எதிரிகளை அழிப்பதற்கு ராணுவத்தைப் பயன்படுத்தாமல் மந்திரவாதிகளைப் பயன்படுத்தி அழிக்கலாமே?" எனக் கேள்வி எழுப்பும் த.வி.வெங்கடேஸ்வரன், "தன்னுடைய கஷ்டங்களை போக்குவதற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற உந்துதலில் உள்ளவர்களை ஏமாற்றும் வகையில் மோசடி செய்கின்றனர். இவை அறிவியலுக்கு எதிரானவை" எனவும் குறிப்பிட்டார்
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு