மியான்மர்: பூகம்பத்தின் நடுவே பிறந்த குழந்தை
மார்ச் 28 அன்று மியான்மர் நாட்டின் மையப் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 2,389 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் ராணுவ ஆட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
செஞ்சிலுவைச் சங்கத்தின் அறிக்கையின் படி மாண்டலே பிராந்தியத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் இடிபாடுகளில் சுமார் 90 பேர் உயிருடன் சிக்கியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. மியான்மர் ராணுவம் அளித்த தகவல்களின் படி இந்த பிராந்தியத்தில் மட்டும் 1500 வீடுகள் சேதமடைந்துள்ளன.
பிபிசியின் பர்மீஸ் சேவை செய்தியாளர் யாங்கோன் அளித்துள்ள தகவலின்படி, மாண்டலே பிராந்தியத்தில் இடிந்து விழுந்த மழலையர் பள்ளி ஒன்றிலிருந்து 12 குழந்தைகள் மற்றும் ஆசிரியரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
சேதமடைந்த இந்த பள்ளிக்கட்டடத்தினுள் மொத்தம் 50 குழந்தைகள் மற்றும் 6 ஆசிரியர்கள் இருந்ததாகவும், எனினும் எஞ்சியவர்களும் உயிருடன் மீட்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவுதான் எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதனிடையே நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியின் நடுவே குழந்தை ஒன்று பிறந்தது.
மியான்மர் நிலநடுக்கத்தின் தீவிரம் தாய்லாந்தின் பேங்காக் நகரிலும் கடுமையாக உணரப்பட்டது. இதனிடையே பேங்காக்கில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவருக்கு சாலையில் குழந்தை பிறந்தது. நிலநடுக்கத்தின் காரணமாக அந்த பெண்ணை மருத்துவப் பணியாளர்கள் சாலைக்கு அழைத்து வந்திருந்தனர். அங்கேயே அந்த பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



