"வெளியேற முடியாது" - இந்தியாவில் பாலியல் தொழிலாளர்களின் நிலை என்ன?

- எழுதியவர், பிரேரணா
- பதவி, பிபிசி செய்தியாளர்
எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்.
(சமூகம் மற்றும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 17 அன்று, பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டு வரவும், அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் உலகம் முழுவதும் குரல் எழுப்பப்படுகிறது.)
அரசு புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் சுமார் 10 லட்சம் பெண் பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால், தொண்டு நிறுவனங்களின் (NGO) கணக்குப்படி இந்த எண்ணிக்கை முப்பது லட்சம்.
இந்தியாவில் பெரும்பாலான பெண் பாலியல் தொழிலாளர்கள் இந்தத் தொழிலுக்குள் வலுக்கட்டாயமாகத் தள்ளப்படுகிறார்கள்.
இவர்களின் வாழ்க்கை, சுரண்டல், அன்றாட வன்முறை, ஒருபோதும் முடிவுக்கு வராத சமூகப் பாகுபாடு ஆகியவை நிறைந்ததாக உள்ளது.
டெல்லியின் ஜி.பி. ரோடு இந்தியாவின் மிகப்பெரிய சிவப்பு விளக்குப் பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இங்குள்ள பாழடைந்த கட்டடங்களில், ஒவ்வொரு நாளும் சுரண்டல்களைச் சகித்துக்கொண்டு, சுமார் 2,500 பெண் பாலியல் தொழிலாளர்கள் வசிக்கின்றனர்.
ருக்ஷானாவுக்கு சுமார் 13 வயது இருக்கும்போது, "அவரது கணவரே அவரை ஜி.பி. ரோட்டில் உள்ள ஒரு விலைமாதர் விடுதியில் விற்றுவிட்டதாக" கூறுகிறார்.
ஆரம்பத்தில், அவர் எங்கும் தப்பி ஓடிவிடாமல் இருக்க, பல நாட்களுக்குச் சிறிய இருட்டறை ஒன்றில் பூட்டி வைக்கப்பட்டதை அவர் நினைவுகூர்ந்தார்.
இதைச் சொல்லும்போது அவரது குரல் கனத்து, கண்களில் கண்ணீர் வழிந்தது.
"மாதவிடாய் காலத்தில்கூட நான் வேலை செய்ய வேண்டியிருந்தது" என்கிறார் ருக்ஷானா.

'இருபதுக்கும் மேற்பட்ட கருக்கலைப்புகள்'
ருக்ஷானாவின் கூற்றுப்படி, ஆரம்பக் கட்டத்தில் இருக்கும் பெண்கள் ஆண்களுடன் செல்ல மறுத்தால், அவர்களின் குடிநீரில் போதை மாத்திரைகள் கலக்கப்படுகின்றன.
கடுமையான போதைப் பழக்கம், தினசரி தாக்குதல், இருபதுக்கும் மேற்பட்ட கருக்கலைப்புகள் மற்றும் முடிவற்ற சுரண்டல் - 13 வயதில் பாலியல் தொழிலுக்கு விற்கப்பட்ட ருக்ஷானா தனது வாழ்வின் அடுத்த 14 ஆண்டுகளை இவ்வாறே கழித்தார்.
இந்த இன்னல்களை அவர் மட்டும் அனுபவிக்கவில்லை. ஜி.பி. ரோட்டில் உள்ள பல பெண்களின் கதை இதைப் போலவே இருக்கிறது.

எடுத்துக்காட்டாக ஜோதி என்பவரை, அவர் பதினான்கு வயதாக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவரது கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஜி.பி. ரோட்டில் உள்ள ஒரு தரகரிடம் விற்றுவிட்டார்.
தன்னை விற்ற பெண்ணின் கணவர் முதலில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறுகிறார் ஜோதி. அது நடந்த பிறகு, அவர் பல நாட்கள் உடல்நலமின்றி இருந்தார்.
பின்னர் அவர் ஜி.பி. ரோட்டின் குறுகிய படிக்கட்டுகள் வழியாக ஒரு பாலியல் தொழிலாளிகளின் விடுதிக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
"அந்த நாட்களை நினைத்துப் பார்க்கும்போது... அப்படிப்பட்ட நாட்களை யாருமே அனுபவிக்கக் கூடாது எனத் தோன்றும். அவ்வளவு சிறிய வயதில் 12 முதல் 15 வாடிக்கையாளர்கள் வரை வருவார்கள். மறுப்பு தெரிவித்தால் அடிப்பார்கள், உணவு தரமாட்டார்கள். இதெல்லாம் சாதாரண விஷயம். சில ஆண்டுகள் கழிந்ததும் குழந்தை பெற்றுக்கொள்ளுமாறு அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார்கள். கர்ப்ப காலத்தின் கடைசி மாதம் வரை நான் வேலை செய்தேன்" என்கிறார் அவர்.
"பிரசவம் முடிந்த சில நாட்களிலேயே அந்த விடுதியின் உரிமையாளர் குழந்தையைத் தாயிடம் இருந்து பிரித்துவிடுவார். அப்போதுதான் அவர்கள் மீண்டும் வேலையைத் தொடங்குவார்கள், குழந்தைப் பாசத்தில் அப்படியே பல ஆண்டுகள் சிக்கிக் கிடக்க மாட்டார்கள் என்பதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது."

ஜி.பி. ரோடு - சுரண்டல் புதைகுழி
ருக்ஷானா, ஜோதி ஆகிய இருவருமே இன்று ஜி.பி. ரோட்டில் இருந்து விடுதலையாகிவிட்டனர். ஆனால் இந்த விடுதலை அனைவருக்கும் கிடைப்பதில்லை.
ஜி.பி. ரோட்டில் பணிபுரியும் ஒரு பாலியல் தொழிலாளி தனது அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டாம் என்ற நிபந்தனையுடன் பேசினார். அப்போது அவர், "ஒருமுறை ஜி.பி. ரோட்டுக்கு வந்துவிட்ட பெண் இங்கிருந்து வெளியேறுவது மிகவும் கடினம்" என்றார்.
மேலும், "முதலாவது, உங்களால் வெளியேற முடியாத அளவுக்கு நிறைய காவல்காரர்கள் உள்ளனர். அப்படியே வெளியேறினாலும், அந்தச் சாலையின் ஒவ்வோர் அங்குலத்திலும் தரகர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் உங்களை அடையாளம் கண்டு மீண்டும் இங்கேயே கொண்டு வந்துவிடுவார்கள்.
ஜி.பி. ரோடு என்று முத்திரை குத்தப்பட்ட பிறகு, குடும்பத்தினரும் நாங்கள் இறந்துவிட்டதாகவே கருதுகிறார்கள். உங்கள் ஆவணம் ஒவ்வொன்றிலும் முகவரி என்ற பகுதியில் ஜி.பி. ரோடு என எழுதப்பட்டிருக்கும். இதனால் நீங்கள் மட்டுமல்ல, உங்கள் குழந்தையும் வெறுப்புடன் பார்க்கப்படும்" என்று அவர் குறிப்பிட்டார்.
இதன் விளைவாக, பெண்கள் ஆண்டுதோறும் வன்முறை, சுரண்டல் என்னும் புதைகுழியில் மூழ்கிக்கொண்டே இருக்கிறார்கள். சில நேரங்களில் உயிரையும் இழக்க நேரிடுகிறது.
பாலியல் வணிகம் மற்றும் வன்முறை
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜி.பி. ரோடு விடுதி ஒன்றுக்குள் சில வாடிக்கையாளர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் 30 வயது பாலியல் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
அதே ஆண்டில் காசியாபாத் சான் விஹார் கால்வாயில் ஒரு பெண் பாலியல் தொழிலாளியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
அந்தப் பெண்ணை அவரது வாடிக்கையாளரே கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
ஐக்கிய நாடுகளின் யுஎன்எய்ட்ஸ் அறிக்கைப்படி, கடந்த ஓர் ஆண்டில் ஐந்தில் ஒரு பாலியல் தொழிலாளி உடல் ரீதியான அல்லது பாலியல் ரீதியான வன்முறையை எதிர்கொண்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையம் நடத்திய ஓர் ஆய்வுப்படி, இந்தியாவில் 50% பாலியல் தொழிலாளர்கள் ஏதோவொரு கட்டத்தில் வன்முறையை ஏதோவொரு வடிவில் சந்தித்துள்ளனர்.
காவல்துறை சோதனைகளின்போது பிடிபடும் பல பாலியல் தொழிலாளர்கள் வன்முறை மற்றும் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

காசியாபாத் சிவில் லைன்ஸ் பிரிவின் காவல் உதவி ஆணையர் பிரியாஸ்ரீ பால் கூறுகையில், "போலீஸ் வன்முறை தொடர்பான வழக்குகள் எதுவும் என் பார்வைக்கு வரவில்லை, ஆனால் பாரபட்சம் மற்றும் முன்முடிவுகள் காரணமாகப் பலருக்கு இத்தகைய சூழல் ஏற்பட்டிருக்கலாம் என்பதை என்னால் முற்றிலுமாக நிராகரிக்க முடியாது. இருப்பினும் 2026ஐ நோக்கி நகரும் நிலையில், மிஷன் சக்தி மற்றும் அதுபோன்ற பிற திட்டங்கள் மூலம் சமூகத்தின் நலிந்த பிரிவினர், குறிப்பாகப் பெண்களுக்கு நிலைமை மேம்படும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று தெரிவித்தார்.
ஆனால் அரசால் நடத்தப்படும் இந்தத் திட்டங்கள் மற்றும் முயற்சிகள் போதுமானவையாக இல்லை என்று தன்னார்வ நிறுவனங்கள் கூறுகின்றன.
பாலியல் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக நீண்ட காலமாகப் பணியாற்றி வரும் மீனா ஷேஷு இதுகுறித்துப் பேசியபோது, "சக்தி மிஷன் மூலம் பாலியல் தொழிலில் உள்ளார்ந்து இருக்கும் வன்முறையை மட்டுமின்றி அந்தத் தொழிலையே முற்றிலுமாக ஒழிக்க விரும்புகிறோம். இந்தத் திட்டத்தின் மூலம் பெண்களை இந்தப் புதைகுழியில் இருந்து மீட்டுப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல விரும்புகிறோம்.
ஆனால் அவர்களுடைய குழந்தைகளின் நிலை என்ன? அவர்களின் செலவுகளை யார் கவனிப்பார்கள்? பல பெண்கள் வறுமை காரணமாகவே இந்தத் தொழிலுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு நிரந்தர வேலை வழங்கப்படுமா? அவர்களுடைய குடும்பப் பராமரிப்புப் பொறுப்பு ஏற்கப்படுமா? பெண்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பது மட்டுமே போதாது" என்று கூறினார்.
அரசு அல்லது தன்னார்வ நிறுவனங்கள் தரப்பில் முயற்சிகளே மேற்கொள்ளப்படவில்லை என்று கூறிவிட முடியாது என்கிறார், கடந்த பத்து ஆண்டுகளாக ஜி.பி. ரோடு பெண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாகப் பணியாற்றி வரும் 'கட்-கதா' அமைப்பின் கள மேலாளர் பிரக்யா பசேரியா. "முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. ஆனால், நீண்டகால மறுவாழ்வுக்கான திட்டம் வகுக்கப்படுவதில்லை," என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேற்கொண்டு பேசிய அவர், "பாலியல் தொழிலாளர்களைச் சமூகத்தின் முக்கியமான ஓர் அங்கமாக நீங்கள் இணைக்க விரும்பினால், அவர்களுடைய மனநலம் முதல் குழந்தைகளின் பராமரிப்பு, வேலை வாய்ப்புகள், வசிப்பிடம் என அனைத்தையும் கவனிக்க வேண்டும். உதாரணமாக, நாங்கள் 'டிரீம் வில்லேஜ்'-ஐ (Dream Village) உருவாக்கினோம்; ஜி.பி. ரோட்டை விட்டு வெளியே வரும் பெண்களுக்குத் தங்குமிடம், உணவு வசதி, 10 ஆயிரம் ரூபாய் நிதியுதவி, திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்குகிறோம். இருப்பினும் பல பெண்கள் மீண்டும் ஜி.பி. ரோட்டுக்கு திரும்புகிறார்கள். ஏனெனில் அவர்களுடைய செலவுகள் இதில் ஈடுகட்டப்படுவதில்லை" என்றார்.
அதோடு, "விடுதி உரிமையாளர் அவர்களுக்கு அதிக பண ஆசை காட்டி அழைத்துக் கொள்கிறார். இந்த உலகம் அவர்களுக்கானது அல்ல என்றும், இங்கு அவர்களுக்கு ஒருபோதும் மரியாதை கிடைக்காது என்றும் அவர்கள் உணர வைக்கப்படுகிறார்கள்" என்கிறார் பிரக்யா.
இந்தியாவில் 'பாலியல் தொழில்' முற்றிலுமாக சட்டவிரோதமானது அல்ல. ஆனால் கடத்தல் தடுப்புச் சட்டம், 1956இன் படி ( ITPA,1956) பாலியல் விடுதி நடத்துவது, தரகு வேலை செய்வது, ஒருவரை வலுக்கட்டாயமாக இந்தத் தொழிலில் தள்ளுவது, பொது இடங்களில் வாடிக்கையாளர்களைத் தேடுவது மற்றும் 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்களை இதில் ஈடுபடுத்துவது குற்றமாகும்.

மேலும், சுரண்டல், வன்முறை அல்லது கடத்தல் மூலமாக ஒருவரை இந்தத் தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்துவது கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு 2022இல், இந்திய உச்ச நீதிமன்றம் முதல்முறையாக பாலியல் தொழிலை ஒரு தொழிலாக அங்கீகரித்து அவர்களுக்கும் சுயமரியாதையுடனும் கண்ணியத்துடனும் வாழ உரிமை உண்டு என்று கூறியது.
ஆனால், உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்குப் பிறகும், பாலியல் தொழிலாளர்களுக்கு மரியாதையும் கண்ணியமும் கிடைக்கவில்லை.
இரண்டு நாட்களுக்கு முன்பு, தான் சாலையைக் கடந்து செல்லும்போது, ஒரு நபர் தன்னை அடையாளம் கண்டு, "நீ அந்த விடுதியில் இருந்தவள்தானே?" என்று கேட்டதை ஜோதி நினைவுகூர்கிறார்.
"அது என்னை மிகவும் வருந்தச் செய்தது" என்கிறார் அவர்.
(என்.சி.ஆர்.பி அறிக்கையின்படி, இந்தியாவில் 2023ஆம் ஆண்டில் 3,24,763 பெண்கள் காணாமல் போயுள்ளனர். அதே 2023 அறிக்கைப்படி, அந்த ஆண்டில் 2,189 பெண்கள் பாலியல் தொழிலுக்காகக் கடத்தப்பட்டுள்ளனர். மேலும், 12 சிறுமிகள் இந்தத் தொழிலுக்காக விற்கப்பட்டுள்ளனர். 3,038 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். இருப்பினும், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்குமென்று தன்னார்வ அமைப்புகள் கூறுகின்றன.)
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












