காணொளி: ஜப்பானில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை

காணொளிக் குறிப்பு, ஜப்பானில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை
காணொளி: ஜப்பானில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் காட்சிகள் இவை.

திங்களன்று 7.5 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக ஜப்பானில் குறைந்தது 30 பேர் காயமடைந்தனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இரவு 23:15 மணிக்கு, அமோரி பிராந்தியத்தின் கடற்கரையிலிருந்து சுமார் 80 கி.மீ தொலைவில், 50 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக ஜப்பானிய வானிலை ஆய்வு நிறுவனம் கூறியது.

இதையடுத்து சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன, ஆனால் பின்னர் அவை திரும்பப்பெறப்பட்டன.

சில ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன மற்றும் ஆயிரக்கணக்கான வீடுகள் மின்சாரம் இன்றி உள்ளன.

வரும் நாட்களில் மேலும் ஒரு வலுவான அதிர்வு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். குறைந்தது ஒரு வாரம் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடையே உரையாற்றிய ஜப்பான் பிரதமர் Sanae Takaichi, “ தினசரி நிலநடுக்க முன்னேற்பாடுகளை மீண்டும் சரிபார்த்து கொள்ளுங்கள். அதிர்வுகளை உணர்ந்தவுடன் உடனடியாக வெளியேற தயாராக இருங்கள்” என்றார்.

ராய்ட்டர்ஸ் செய்தி முகமையின் கூற்றுப்படி , சுமார் 90,000 பேருக்கு வெளியேற உத்தரவு வழங்கப்பட்டது.

சுமார் 2,700 வீடுகள் மின்சாரம் இன்றி உள்ளதாக ஆமோரி மாகாண நிர்வாகம் தெரிவித்தது. கிழக்கு ஜப்பான் ரயில்வே நிறுவனம் வடகிழக்கு கடற்கரையோரத்தில் சில சேவைகளை நிறுத்தியுள்ளது.

ஜப்பான் அரசு, பிரதமரின் நெருக்கடி மேலாண்மை மையத்தில் ஒரு பிரத்யேக செயல்பாட்டு அறையை அமைத்து அவசர குழுவை கூட்டியுள்ளதாக அமைச்சரவை செயலாளர் மினோரு கிஹாரா தெரிவித்துள்ளார்.

“சேதத்தை மதிப்பீடு செய்யவும், மீட்பு மற்றும் நிவாரண பணிகள் உள்ளிட்ட அவசர நடவடிக்கைகளை எடுக்கவும் அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம்,” என்றும் அவர் கூறினார்.

அதிர்வுகளுக்குப் பின்னர், தோஹோகு எலக்ட்ரிக் பவர் நிறுவனம் (Tohoku Electric Power), தனது ஹிகாஷிதோரீ (Higashidori) மற்றும் ஒனகாவா(Onagawa) அணு மின் நிலையங்களில் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளது.

சேதமடைந்த புகுஷிமா அணு மின் நிலையத்திலும் எந்த வித பாதிப்பும் இல்லை என்று ஜப்பான் அதிகாரிகள் சர்வதேச அணுவியல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளனர்.

2011 மார்ச் 11 அன்று ஜப்பானின் கிழக்கு கடற்கரை அருகே 9.0 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது புகுஷிமா கடுமையாக சேதமடைந்தது.

ஜப்பானில் பதிவான மிக வலுவான நிலநடுக்கமான அந்த அதிர்வு பெரிய சுனாமியை உருவாக்கி ஹொன்ஷூ தீவை மூழ்கடித்து 18,000 பேருக்கு மேல் உயிரிழக்க காரணமானது. பல நகரங்கள் முழுமையாக அழிந்தன.

ஜப்பான் உலகின் மிக அதிக நிலநடுக்கங்கள் ஏற்படும் நாடுகளில் ஒன்றாகும்.

இது 'ரிங் ஆஃப் ஃபையர்’ பகுதியில் அமைந்துள்ளதால் ஆண்டுக்கு சுமார் 1,500 நிலநடுக்கங்களை எதிர்கொள்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு