சுனிதா வில்லியம்ஸின் இந்திய பூர்வீகம் என்ன? அவரது வாழ்க்கை எப்படி இருந்தது?

காணொளிக் குறிப்பு,
சுனிதா வில்லியம்ஸின் இந்திய பூர்வீகம் என்ன? அவரது வாழ்க்கை எப்படி இருந்தது?

சுனிதா பிறந்து வளர்ந்தது என அனைத்தும் ஒரு அமெரிக்கராக என்றாலும், அவரது தந்தையின் பூர்வீகம் இந்தியா தான். குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள ஜுலாசன் கிராமம் தான் சுனிதாவின் தந்தை தீபக் பாண்ட்யா பிறந்து வளர்ந்த இடம். விண்வெளி பயணங்களுக்குப் பின்னரும் இந்த கிராமத்திற்கு ஓரிரு முறை சுனிதா வில்லியம்ஸ் வந்து சென்றிருப்பதாகக் கூறுகின்றனர் அவரது கிராமவாசிகள்.

சுனிதா தந்தையின் பூர்வீக வீடு சற்று பழுதடைந்த நிலையில் இன்னமும் இந்த கிராமத்தில் உள்ளது. 2007ம் ஆண்டு இங்குள்ள பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்று நன்கொடை அளித்த சுனிதா வில்லியம்ஸை நேரில் பார்த்து பேசும் வாய்ப்பு கிடைத்ததாக அவரது தூரத்து உறவினரான கிஷோர் பாண்ட்யா பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார்.

நான் சுனிதாவிடம் சென்று எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில்,"நான் உங்களின் சகோதரன்" என்று கூறினேன். என்னுடன் கைகுலுக்கிய சுனிதா"ஓ என்னுடைய சகோதரனே" என கூறியதாக மகிழ்ச்சி தெரிவித்தார் கிஷோர் பாண்ட்யா.

சுனிதாவில்லியம்ஸ்-ன் தந்தை தீபக் பாண்ட்யா 1957 ம் ஆண்டு மருத்துவ மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்கு உர்சுலின் போன்னியை மணந்து கொண்டார். இந்த தம்பதிக்கு 1965 ம் ஆண்டில் சுனிதா வில்லியம்ஸ் பிறந்தார்.

தற்போது சுனிதா வில்லியம்ஸ் தனது நெடிய விண்வெளி பயணத்தை முடித்துக் கொண்டு பாதுகாப்பாக பூமிக்கு திரும்புவதற்காக ஜுலாசன் கிராமத்தில் பிரார்த்தனைகள் நடைபெற்றன.

கடற்படையில் தொடங்கிய சாகச வாழ்க்கை

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி வீரராக துணிகர பயணங்களை மேற்கொண்டிருந்தாலும், அவரது தொழில்முறை வாழ்க்கை கடற்படையில் தான் தொடங்கியது என்பதைக் குறிப்பிடுகிறது பிரிட்டானிக்கா தகவல்களஞ்சியம்.

1983ம் ஆண்டு சுனிதா வில்லியம்ஸ் அன்னபோலீஸில் உள்ள அமெரிக்க கடற்படை அகாடமியில் இணைந்தார். இங்கு தமது பயிற்சியை முடித்துக் கொண்ட அவர், 1989ம் ஆண்டு கடற்படையில் பயிற்சி விமானியாக இணைந்தார். 1989ம் ஆண்டு முதல் போர்க்கள விமான பயிற்சியும் பெற்றார். பெர்சியன் வளைகுடா போருக்கான முன்கள பணியின் போது பலமுறை ஹெலிகாப்டர்களை இயக்கியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 1992ம் ஆண்டு மியாமியில் ஆண்ட்ரூ சூறாவளி தாக்கிய போது மீட்புப்பணிகளில் சுனிதா ஈடுபட்டுள்ளார்.

தமது கடற்படைப் பணியின் போது 30 வகையான வானூர்திகளை இயக்கியதோடு, 2,770 மணி நேரம் வான்வெளியில் பறந்து அனுபவம் பெற்றுள்ளார்.

விண்வெளி வீரர் ஆனது எப்படி?

விண்வெளி வீரர் பணிக்காக தேர்வு செய்யப்பட்டோது சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பலான யுஎஸ்எஸ் சைப்பானில் (USS Saipan) பணியமர்த்தப்பட்டு இருந்தார்.

ஃப்ளோரிடா தொழில்நுட்ப நிறுவனத்தில் எம்எஸ் பொறியியல் மேலாண்மைப் படிப்பை முடித்த அவர், 1998ம் ஆண்டில் விண்வெளி வீரருக்கான பயிற்சியில் இணைந்தார். மாஸ்கோவில் உள்ள ரஷ்ய அரசின் விண்வெளி ஆய்வு மையத்தில் இவருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

நாசா இணையதளத்தில் உள்ள தரவுகளின் படி, சுனிதா வில்லியம்ஸ்-க்கு விண்வெளி பயணத்திற்கான உடல் தகுதி மற்றும் மனவலிமைக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன.

2006ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி முதன்முறையாக டிஸ்கவரி விண்கலத்தின் மூலம் விண்வெளிக்கு பயணப்பட்டார். Expedition 14 குழுவுடன் பணிகளைத் தொடர்ந்த அவர் Expedition 15 விண்கலத்தில் பணிகளை முடித்துக் கொண்டு 2007ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி பூமிக்கு திரும்பினார்.

2012ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி இரண்டாவது விண்வெளிப் பயணத்தை ரஷ்யாவின் சோயுஸ் டிஎம்ஏ-05 எம் விண்கலத்தின் மூலம் மேற்கொண்டார் சுனிதா வில்லியம்ஸ். இந்த பயணத்தை முடித்துக் கொண்டு அதே ஆண்டில் நவம்பர் 19ம் தேதி சுனிதா பூமிக்கு திரும்பினார்.

2015ம் ஆண்டில் வணிகரீதியான விண்வெளி பயணங்களுக்கான முதல் விண்வெளி வீரராக சுனிதா வில்லியம்ஸ் அறிவிக்கப்பட்டார். இந்த திட்டத்தின் தொடர்ச்சியாக 2024ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணமானார்.

ஸ்டார் லைனர் விண்கலத்தின் த்ரஸ்டர்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இக்குழு இன்றி விண்கலம் பூமிக்கு திரும்பியது. இதனால் வெறும் 8 நாட்கள் மட்டுமே திட்டமிடப்பட்டிருந்த இந்த பயணம், 9 மாதங்களைக் கடந்திருக்கிறது. 59 வயதான சுனிதா வில்லியம்ஸ் தமது விண்வெளிப் பயணத்தில் அனுபவத்தில் பல சாதனைகளைப் படைத்துள்ளார். எதிர்பாராத விதமாக கூடுதல் நாட்கள் தங்க நேர்ந்த போதிலும், அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக நாசா கூறியுள்ளது.

தொழில்முறை விண்வெளி வாழ்க்கைக்கு நடுவே 1987ம் ஆண்டில் காதல் திருமணம் செய்தார் சுனிதா வில்லியம்ஸ். கடற்படையில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரத்தில் , காவல்துறையில் பணியாற்றும் மிஷல் ஜெ.வில்லியம்ஸை காதலித்து மணந்து கொண்டார். சுனிதா வில்லியம்ஸ் உலகப் புகழ்பெற்ற விண்வெளி வீரராக அறியப்பட்ட போதிலும், தனது தனிப்பட்ட வாழ்க்கையை வெளிப்படுத்திக் கொள்ள எப்போதும் ஆர்வம் காட்டியது இல்லை.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு