நடுவானில் குலுங்கிய இந்திய விமானம் - பாகிஸ்தான் அனுமதி மறுத்ததா?
கடந்த புதன்கிழமை டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானம், டர்புலன்ஸ் (Turbulence) காரணமாக குலுங்க, அதில் இருந்த பயணிகள் பயத்தில் அலறிய தருணம் இது.
திரிணமூல் காங்கிரசை சேர்ந்த நான்கு எம்பிக்கள், மேற்குவங்க அமைச்சர் உட்பட, 220-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்த விமானம் திடீரென ஆலங்கட்டி புயலை எதிர்கொண்டது. விமானம் கடுமையாக குலுங்கிய போது, அது மரணத்தை நெருங்கிய அனுபவமாக இருந்தது, வாழ்வே முடிந்துவிட்டது என நினைத்தேன், மக்கள் பயத்தில் கதறிக் கொண்டும் பிரார்தித்துக் கொண்டும் இருந்தனர் என எம்பி சகாரிகா கோஸ் தெரிவித்தார்.
இந்த நிலையில், விமான குலுங்கல் காரணமாக பாகிஸ்தான் வான்பரப்பை பயன்படுத்த விமானி அனுமதி கேட்டதாகவும், ஆனால், பாகிஸ்தான் மறுத்துவிட்டதாகவும் இந்திய சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) கூறியுள்ளது.
பதான்கோட் அருகே டர்புலன்ஸ் மற்றும் ஆலங்கட்டி புயலை விமானம் எதிர்கொண்டுள்ளது. பின்னர் சர்வதேச எல்லையை நோக்கிச் செல்ல ஐஏஎப்-இன் (IAF) வடக்கு கட்டுப்பாட்டு அறையிடம் விமானி அனுமதி கேட்டுள்ளார். ஆனால், அதற்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை.
பின்னர், டர்புலன்ஸை தவிர்க்க பாகிஸ்தான் வான்பரப்புக்குள் நுழைய விமானி அனுமதி கேட்டுள்ளார். ஆனால், பாகிஸ்தான் அதை மறுத்துவிட்டதாக விமான குழுவினரை மேற்கோள்காட்டி டிஜிசிஏ கூறுகிறது. இது தொடர்பாக பாகிஸ்தான் இதுவரை எந்தக் கருத்தும் வெளியிடவில்லை.
பின்னர் விமானம் ஸ்ரீநகரில் பாதுகாப்பாக தரையிறங்கியது. நல்வாய்ப்பாக, எந்த பயணியும் இதில் காயமடையவில்லை. விமானத்தின் முன் பக்கம் சேதம் ஏற்பட்டிருப்பதாகவும், இந்த விவகாரம் குறித்து விசாரித்து வருவதகவும் டிஜிசிஏ கூறுகிறது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



