ஷேக் ஹசீனா விவகாரத்தில் இனி இந்தியா முன் உள்ள வாய்ப்புகள் என்ன?

ஷேக் ஹசீனா, வங்கதேசம், முகமது யூனுஸ், இந்தியா, பாகிஸ்தான், சீனா ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இந்தியாவில் வசித்து வருகிறார்.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, ஷேக் ஹசீனா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இந்தியாவில் வசித்து வருகிறார்.

வங்கதேசத்தை உலுக்கிய அரசியல் நெருக்கடி கடந்த வாரம் மீண்டும் தலை தூக்கியது. வங்கதேச சர்வதேச குற்றங்கள் தீர்ப்பாயம் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை வழங்கியிருந்தது.

வங்கதேசத்திலிருந்து வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில் அவர் ஆஜராகாமலே இந்த வழக்கு நடத்தப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்புக்குப் பிறகு ஷேக் ஹசீனா வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஆண்டு மாணவர் போராட்டங்களின்போது பாதுகாப்பு படைகள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் என்பதை ஒப்புக்கொண்டார். ஆனால் அதற்கான பொறுப்பை மறுத்துவிட்டார்.

வங்கதேச அரசு ஷேக் ஹசீனாவை ஒப்படைக்குமாறு இந்திய அரசிடம் கோரி வந்தாலும், இந்தியா அதை தவிர்க்கும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இத்தகைய சூழலில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்த உள்ளது.

இது பல கேள்விகளை எழுப்புகிறது. இந்த முடிவை இந்தியா எப்படிப் பார்க்கிறது? இது ஷேக் ஹசீனாவின் அரசியல் வாழ்க்கையின் முடிவைக் குறிக்கிறதா? இது சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு வாய்ப்பை தருகிறதா? இந்த விவகாரத்தில் இந்தியா ராஜ்ஜிய நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமா?

பிபிசி ஹிந்தியின் வாராந்திர நிகழ்ச்சியான 'தி லென்சில்' கலெக்டிவ் நியூஸ்ரூமின் ஜர்னலிசம் இயக்குநர் முகேஷ் சர்மா இந்த விவகாரங்களை விவாதித்தார்.

இதில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும், இந்தியாவின் முன்னாள் சிறப்பு பிரதிநிதியுமான எஸ்.டி.முனி, வங்கதேசத்துக்கான இந்தியாவின் முன்னாள் தூதர் ரிவா கங்குலி தாஸ் மற்றும் தி இந்து நாளிதழின் வெளிநாட்டு விவகாரங்கள் பிரிவு உதவி ஆசிரியரான கலோல் பட்டாச்சார்ஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஷேக் ஹசீனாவின் தண்டனையும் இந்தியா எதிர்கொள்ளும் கேள்விகளும்

வங்கதேசத்தில் தனது ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சி தீவிரமடைந்தபோது கடந்த ஆண்டு ஆகஸ்டு 5-ஆம் தேதி ஷேக் ஹசீனா தனது நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

அப்போதிலிருந்து இங்கு தான் வசித்து வருகிறார். வங்கதேசத்தின் இடைக்கால அரசு இந்த விவகாரத்தை இந்திய அரசிடம் தொடர்ந்து எழுப்பி வருகிறது.

ஷேக் ஹசீனாவிற்கு தண்டனை வழங்கப்பட்ட பிறகு அவரை இந்தியாவிலிருந்து நாடு கடத்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதைப்பற்றி பேசிய ரிவா கங்குலி தாஸ், "இந்த முடிவு யாருக்கும் ஆச்சரியமளிக்கவில்லை. இந்த நீதிமன்றம் அமைக்கப்பட்ட விதத்தை பார்க்கையில் ஷேக் ஹசீனா தரப்புக்கு விருப்பமான வழக்கறிஞரை தேர்வு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த வழக்கு முடிந்த பிறகு அரசு நியமித்த வழக்கறிஞர் சிரித்தவாறே இந்த வழக்கின் முடிவு தனக்கு சோகமளிப்பதாகக் கூறுவது போன்ற காணொளி வெளியானது. இந்த ஒட்டுமொத்த வழக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்டதைப் போல தெரிகிறது." என்றார்.

இந்த வழக்கு நடத்தப்பட்ட நடைமுறையை பார்க்கையில் இந்த முடிவு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றைப் போலவே தெரிந்தது என்றும் தெரிவித்தார்.

ஆனால் வங்கதேசத்தின் மாணவ தலைவர்கள் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளனர். வங்கதேசத்தில் தற்போதும் ஷேக் ஹசீனாவிற்கு எதிரான கோபம் வலுவாகவே இருந்து வருகிறது.

எனினும் ஒரு தரப்பு மட்டுமே ஊடகங்களில் காட்டப்படுவதாக தெரிவிக்கிறார் ரிவா கங்குலி, "அவாமி லீக் ஆதரவாளர்கள் மத்தியிலும் கோபம் உள்ளது, ஆனால் இத்தகைய சூழலில் அவர்கள் ஊடகங்களின் முன்பு பேச மாட்டார்கள்." என்றார்.

மாணவ அமைப்புகள்தான் தேர்தலுக்கு முன்பாக ஷேக் ஹசீனாவின் வழக்கை முடிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாக அவர் தெரிவித்தார். "அதனால்தான் இந்த வழக்கு இவ்வளவு விரைவாக முடித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை சர்வதேச நீதி தரத்திற்கு ஒப்பாக இல்லை என சிலர் தெரிவிக்கின்றனர்." என்றார்.

ஷேக் ஹசீனா, வங்கதேசம், முகமது யூனுஸ், இந்தியா, பாகிஸ்தான், சீனா

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்தப்படும் என முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.

ஷேக் ஹசீனா முன்பு உள்ள வாய்ப்புகள் என்ன?

ஷேக் ஹசீனாவுக்கு எதிராக தீர்ப்பு வந்ததைத் தொடர்ந்து அவருக்கான அனைத்து கதவுகளும் மூடப்பட்டுவிட்டதா, நாடு திரும்புவது தான் ஒரே வழியா என்கிற கேள்விகள் எழுகின்றன.

"அவாமி லீக்கிற்கு தற்போது வங்கதேசத்தில் சுதந்திரம் இல்லை. அக்கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எனினும் ஷேக் ஹசீனா தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு தனது கட்சியினருடன் தொடர்பில் இருக்க முயற்சித்து வருகிறார்," என்று தெரிவித்தார் எஸ்.டி.முனி

ஷேக் ஹசீனாவின் முந்தைய அரசின் மீது கடும் அதிருப்தி நிலவியதையும் நினைவில் கொள்ள வேண்டும் என அவர் தெரிவிக்கிறார். "எதிர்க்கட்சியும் மாணவர்களும் ஒடுக்கப்பட்ட விதத்தால் தற்போது அவர்கள் பழிவாங்கும் மனநிலையில் இருக்கிறார்கள். இது சரியில்லை. நீதிமன்றம் அவருக்கு ஆயுள்தண்டனை கொடுத்திருக்க வேண்டும், ஆனால் தற்போது வழங்கப்பட்டுள்ள தண்டனை பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது." என்றார்.

"இத்தகைய சூழலில் ஷேக் ஹசீனா எதுவும் செய்ய முடியாது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்போது அவாமி லீக் மீண்டும் வருவதற்கான சாத்தியங்கள் உள்ளன. முகமது யூனுஸ் உட்பட பலரும் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடத்த வேண்டும் என பேசி வருகின்றனர். ஆனால் தேர்தலில் இருந்து அவாமி லீக்கை எப்படி ஒதுக்கி வைக்க முடியும்?" என்றும் கூறினார்.

எனினும் ஷேக் ஹசீனா தனது ஆட்சிக் காலத்தில் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பை தடை செய்து தேர்தலில் இருந்து விலக்கி வைத்தார்.

ஷேக் ஹசீனா தவறு செய்துள்ளார் எனக் கூறும் முனி தற்போதைய வங்கதேச அரசும் அதையே செய்தால் எப்படி சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்த முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.

"அவாமி லீக் கட்சிக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அப்போது தான் அவர்கள் மீண்டு வர முடியும், இந்தியாவிற்கு அது முக்கியம்." என்றும் தெரிவித்தார்.

ஷேக் ஹசீனா, வங்கதேசம், முகமது யூனுஸ், இந்தியா, பாகிஸ்தான், சீனா

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, அவாமி லீக் கட்சி நவம்பர் 13-ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. (கோப்புப்படம்)

வங்கதேச அரசியல் மீதான தாக்கம்

இடைக்கால அரசு பிப்ரவரி மாதம் வங்கதேசத்தில் தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளது. எனவே இந்த வழக்கின் தீர்ப்பு உள்ளுர் அரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

"1971 இனப்படுகொலையில் சம்பந்தப்பட்டவர்களை தண்டிப்பதற்காக ஷேக் ஹசீனா இந்த சர்வதேச குற்றங்கள் தீர்ப்பாயத்தை நிறுவினார். 2013-2016 காலகட்டத்தில் இந்த தீர்ப்பாயம் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பைச் சேர்ந்த பலருக்கு மரண தண்டனை விதித்திருந்தது. 2025-இல் இந்த தீர்ப்பாயம் அரசியல்மயமாகியுள்ளது." என்கிறார் கலோல் பட்டாச்சார்ஜி

"இடைக்கால அரசு தங்களுடைய திட்டத்தில் மூன்று விஷயங்களை வைத்திருந்தது. அவை, கடந்த ஆண்டு போராட்டத்தில் கொல்லப்பட்டதாக அவர்கள் கூறும் 1,400 இளைஞர்களுக்கு நீதி வழங்குவது. இரண்டாவது, சீர்திருத்தங்களை மேற்கொள்வது, மூன்றாவதாக தேர்தல்களை நடத்துவது." என்றார்.

ஷேக் ஹசீனாவும் அவாமி லீக் கட்சியும் தேர்தலில் போட்டியிட மாட்டார்கள் என வங்கதேசத்தில் பேசப்படுகிறது. அதை வைத்துப் பார்த்தால் இந்த தீர்ப்பு தேர்தல் விவாதங்களை தொடங்கிவிட்டது எனலாம்.

"இப்போது கேள்வி என்னவென்றால் ஷேக் ஹசீனாவின் கட்சியைத் தவிர்த்து மற்ற கட்சிகளான பங்களாதேஷ் நேஷனலிஸ்ட் பார்ட்டி (பிஎன்பி), ஜமாத்-இ-இஸ்லாமி, நேஷனல் சிட்டிசன்ஸ் பார்ட்டி (என்சிபி) ஒன்றாக வந்து நட்பான முறையில் தேர்தலில் போட்டியிட முடியுமா என்பது தான்." என்றார்.

வங்கதேசத்தில் அவாமி லீக் முக்கியமான கட்சியாக உள்ளது. ஆனால் அக்கட்சி இல்லாமல் தேர்தல் நடத்தப்பட்டால் சர்வதேச அளவில் அவை ஏற்றுக்கொள்ளப்படுமா என்கிற கேள்வி எழும்.

"சுதந்திரமான, நியாயமான மற்றும் வெளிப்படையான தேர்தல் நடத்தப்படும் என வங்கதேசம் தெரிவிக்கிறது. ஆனால் அனைவரையும் உள்ளடக்கிய தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கவில்லை. இது அவாமி லீக் சேர்க்கப்படுமா என்கிற கேள்வியை எழுப்புகிறது. ஆனால் இந்தியா அனைவரையும் உள்ளடக்கி தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறது," என்கிறார் கலோல் பட்டாச்சார்ஜி.

ஷேக் ஹசீனா திரும்பவில்லை என்றாலும் அவாமி லீக் போட்டியிடவில்லை என்றாலும் அவர்கள் இருப்பு வங்கதேசத்தில் இருக்கும் எனக் கூறுகிறார் கலோல் பட்டாச்சார்ஜி.

பிஎன்பி கட்சியின் தாக்கம் என்ன?

அவாமி லீக் கட்சியைத் தவிர்த்து வங்கதேசத்தின் இரண்டாவது பெரிய கட்சியாக பங்களாதேஷ் நேஷனலிஸ்ட் பார்ட்டி (பிஎன்பி)உள்ளது.

பொதுவாக தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் பலனடையும். ஆனால் சரியான தலைமை இல்லாததால் பிஎன்பி கட்சி அரசியல் ரீதியாக நல்ல நிலையில் இல்லை.

இதற்கான காரணங்களை விவரித்த ரிவா கங்குலி, "பிஎன்பி மிகப்பெரிய கட்சி, கீழ்மட்ட அளவில் தொண்டர்கள் உள்ளனர். ஆனால் அவாமி லீக் அரசு வீழ்ந்தபோது பிஎன்பி தொண்டர்கள் பல்வேறு அமைப்புகளை கட்டுப்பாட்டில் எடுத்தனர். இது அவர்களுக்கு அவப்பெயரை உண்டாக்கியது. ஆனால் என்ன விமர்சனம் வைத்தாலும் அவாமி லீக் உடன் போட்டிபோட பிஎன்பி கட்சியால் மட்டுமே முடியும். கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தேர்தலுக்கு முன்பு வந்தால் அக்கட்சியின் ஆதரவு அதிகரிக்கும். அவர் வரவில்லையென்றாலும் இந்த முறை பிஎன்பி கட்சிக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன." எனத் தெரிவித்தார்.

ஜமாத்-இ-இஸ்லாமி கட்சிக்கு தொண்டர்கள் இருந்தாலும் அவை வாக்காக மாறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்கிறார் ரிவா கங்குலி. என்சிபி புதிய கட்சியாக இருந்தாலும் அவர்களின் செயல்பாடும் மோசமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி டாக்கா பல்கலைக்கழக தேர்தலில் வெற்றி பெற்றதை சுட்டிக்காட்டும் பேராசிரியர் முனி அவர்களை புறக்கணிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

"பிஎன்பி கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடப்பதற்கான சாத்தியங்கள் உருவாகும். ஆனால் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியுடன் அது சாத்தியம் இல்லை, என்சிபி கட்சி முழுமையாக ஒருங்கிணைக்கப்படவில்லை," என்றார்.

ஷேக் ஹசீனா, வங்கதேசம், முகமது யூனுஸ், இந்தியா, பாகிஸ்தான், சீனா

பட மூலாதாரம், AFP via Getty Images

இந்தியா உறவுகளை பராமரிப்பது எவ்வளவு கடினம்?

ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்ததில் இருந்து வங்கதேசத்தில் இந்தியா மீதான கோப உணர்வு இருந்து வருகிறது. இது வங்கதேசத்துடன் உறவை வளர்ப்பதில் இந்தியாவிற்கு சவாலாக உள்ளது.

இந்த விவகாரம் பற்றி பேசிய கலோல் பட்டாச்சார்ஜி, "உறவைப் பராமரிப்பதில் முக்கியமான விஷயம் எந்தக் கட்சியாக இருந்தாலும் பேச்சுவார்த்தையை தொடர்வது தான். இந்தப் பேச்சுவார்த்தைகள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள், வெளியுறவு அமைச்சர்கள் அல்லது இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் மற்றும் பிரதமர் மோதி இடையே இருக்க வேண்டும்." என்றார்.

இந்தியா அவாமி லீக்கின் எழுச்சிக்கு காத்திருந்ததது, ஆனால் அது நடக்கவில்லை என்கிறார் கலோல் பட்டாச்சார்ஜி. தற்போது இந்தியா ஹசீனா அரசுக்குப் பிறகான சூழலுக்கு தன்னை தயார்படுத்தி வருகிறது என்றும் தெரிவித்தார்.

வங்கதேசத்துடனான இந்தியாவின் உறவு நிதி, ஆற்றல், பாதுகாப்பு, உத்தி சார்ந்த மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் எனப் பலவற்றை உள்ளடக்கிய பன்முகத்தன்மை கொண்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியா முன் உள்ள வாய்ப்புகள் என்ன?

இந்தியாவில் உள்ள ஷேக் ஹசீனா நாடு கடத்தப்பட மாட்டார் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவின் வாய்ப்புகள் பற்றி கலோல் பட்டாச்சார்ஜி விவரித்தார். "இந்தியா ஒரு பிராந்திய சக்தி, நேபாளம் மற்றும் மாலத்தீவு போன்ற தெற்கு ஆசியாவில் உள்ள பல நாடுகளும் இந்தியாவின் அடுத்த நகர்வை பார்த்து வருகின்றன. ஷேக் ஹசீனா 15 ஆண்டுகளாக பல்வேறு விவகாரங்களில் இந்தியா உடன் கூட்டணி வைத்திருந்தார்." என்றார்.

"இந்தியா ஷேக் ஹசீனாவை கைவிட்டால், மோசமான நேரங்களில் தனது கூட்டாளியை இந்தியா ஆதரிக்காது என்கிற செய்தி தெற்கு ஆசிய நாடுகள் மத்தியில் பரவும். எனவே ஷேக் ஹசீனாவிற்கு இந்தியாவில் சட்டப்பூர்வ தஞ்சம் வழங்குவது முக்கியமானது. இது அவர் இந்தியாவில் சட்டப்பூர்வமாக தங்கலாம் என்பதை தெளிவுபடுத்தும்." என்றும் தெரிவித்தார்.

ஷேக் ஹசீனா விவகாரம் இந்தியாவிற்கு அவ்வளவு கடினமானது இல்லை என்கிறார் ரிவா கங்குலி. "இத்தகைய கடினமான சூழல்களைக் கையாளும் திறன் இந்தியாவிடம் உள்ளது. முன்னரும் இதை செய்து காட்டியுள்ளது. எனினும் வங்கதேசத்தில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் நாடு கடத்துவது என்பது மிகவும் சிக்கலான நடைமுறை, இந்திய நீதித்துறையும் அதில் பங்கு வகிக்கும்." என்றார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்தியா - வங்கதேசம் இடையேயான வர்த்தக விவகாரங்கள்

ஷேக் ஹசீனாவைத் தவிர இருநாடுகளுக்கும் இடையே பல பிரச்னைகள் இருப்பதாக தெரிவிக்கிறார் ரிவா கங்குலி.

"பல கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் ஆகஸ்ட் 2024 - ஆகஸ்ட் 2025 இடையே இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் குறையாமல் அதிகரித்துள்ளது. இரண்டாவது மின் வர்த்தகம். வங்கதேசம் இந்தியாவிலிருந்து மிகப்பெரிய அளவில் மின்சாரத்தை வாங்குகிறது. நீண்டகாலம் திரிபுரா மற்றும் மேற்கு வங்கத்திலிருந்து 1000 மெகாவாட் மின்சாரம் வாங்கி வந்தது. அதானி பவர் நிறுவனத்திடமிருந்து 1000 மெகாவாட் வாங்கி வந்தது." என்றார்.

"ஆகஸ்ட் 5, 2024-இல் இருந்து இந்தியா, வங்கதேசம் மற்றும் நேபாளம் இடையே முத்தரப்பு ஒப்பந்தம் ஒன்று உள்ளது. அதன்படி வங்கதேசம் நேபாளத்திலிருந்து இந்தியாவின் மின்சார விநியோக அமைப்பை பயன்படுத்தி 40 மெகாவாட் மின்சாரம் வாங்குகிறது. அசாமிலிருந்து குழாய்கள் மூலம் அதிக வேக டீசலையும் வாங்குகிறது." என்று தெரிவித்தார் ரிவா கங்குலி.

சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு உள்ள வாய்ப்புகள் என்ன?

வங்கதேசத்தில் இடைக்கால அரசு உருவான பிறகு முகமது யூனுஸ் இந்தியா மீதான சார்பை கணிசமாக குறைக்க முயற்சித்தார்.

வங்கதேசத்தில் இந்தியாவின் ஆதிக்கத்தைக் குறைக்க சீனாவும் பாகிஸ்தானும் முயற்சி செய்யும் என பேராசிரியர் முனி தெரிவிக்கிறார்.

"வங்கதேசத்திலிருந்து பாதுகாப்பு மற்றும் உளவு அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கிறதா அல்லது குறைகிறதா என்பது பற்றி யூனுஸ் கவலைப்படவில்லை. தற்போது வரை அவர் பாகிஸ்தானின் ஆதிக்கத்தை அதிகரிப்பதற்கான கருவியாக இருந்து வந்துள்ளார்." எனத் தெரிவித்தார் முனி.

இந்தியா எந்த அளவிற்கு அங்கு ஜனநாயக சக்திகளை அணிதிரட்ட முடியும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று கூறுகிறார் பேராசிரியர் முனி.

"இந்தியா முன் உள்ள மிகப்பெரிய சவால், தன்னுடைய நலன்களைப் பாதுகாக்க வங்கதேசத்தின் அரசியலில் தனது செல்வாக்கை பாதுகாப்பது அல்லது அதிகரிப்பதில் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதுதான். இது அங்கு பாகிஸ்தான் அல்லது சீனாவின் ஆதிக்கம் எந்த அளவிற்கு அதிகரிக்கும் என்பதைப் பொருத்துதான் அமையும்." என்றும் தெரிவித்தார் பேராசிரியர் முனி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு