You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாகிஸ்தானுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் ஏவுகணை மற்றும் வான் பாதுகாப்பு அமைப்பு எப்படிப்பட்டது?
- எழுதியவர், ரஜ்னீஷ் குமார்
- பதவி, பிபிசி நிருபர்
மே 6ம் தேதி நள்ளிரவில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் இருக்கும் காஷ்மீரில் இந்தியா தொடங்கிய ராணுவ நடவடிக்கை மேற்கொண்டது.
'ஆபரேஷன் சிந்தூர்' என்று பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையில் 'பயங்கரவாதிகள் மறைவிடங்கள் மீது' தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்தியா கூறுகிறது.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அண்மை பதற்றங்களுக்குப் பிறகு, இரு நாடுகளின் ராணுவத் திறன் என்பது சர்வதேச அளவில் பேசுபொருளாகிவிட்டது.
இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் உள்ள ஏவுகணைகள், அவற்றின் வான் பாதுகாப்பு அமைப்பின் திறன் என்ன என்பதை விரிவாக தெரிந்துக் கொள்வோம்.
இந்தியாவின் அக்னி-5 ஏவுகணை ஐந்தாயிரம் முதல் எட்டாயிரம் கிலோமீட்டர் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. மறுபுறம், பாகிஸ்தானின் ஷாஹீன்-3 ஏவுகணை 2,750 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டது.
ஆயுதங்களுக்காக இந்தியா பெருமளவில் ரஷ்யாவையே சார்ந்துள்ளது என்றால், பாகிஸ்தான் சீனாவை சார்ந்துள்ளது.
மேற்கத்திய நாடுகள் நீண்ட காலமாக இந்தியாவிற்கு ஏவுகணை தொழில்நுட்பத்தை வழங்குவதைத் தவிர்த்து வந்தாலும், பிரான்சும் இந்தியாவும் ஏவுகணை தொழில்நுட்பத்தில் இணைந்து பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவற்றில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளும் (Intercontinental ballistic missile – ICBM) அடங்கும். உலகில் ஏழு நாடுகளில் மட்டுமே இவை உள்ளன.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அமைப்பு
"பாலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பைக் கொண்ட சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று" என்று பாதுகாப்பு ஆய்வாளர் ஹாரிசன் காஸ் தி 'நேஷனல் இன்டரஸ்ட்'இல் எழுதியுள்ளார்.
''இந்தியா இரண்டு வகை ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை கொண்டுள்ளது. முதலாவது பிருத்வி வான் பாதுகாப்பு (PAD) ஏவுகணை, இது அதிக உயரத்தில் ஏவுகணைத் தாக்குதல்களை தடுக்கிறது. இரண்டாவது மேம்பட்ட வான் பாதுகாப்பு (AAD), இது குறைந்த உயரத்தில் வரும் ஏவுகணைத் தாக்குதல்களை இடைமறிக்கிறது. இந்தியாவின் பாலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு குறைந்தது 5,000 கிலோமீட்டர் தூரத்திலிருந்து வரும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தடுக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.'' என எழுதியுள்ளார் ஹாரிசன் காஸ்
ரஷ்யாவுடன் இணைந்து இந்தியா உருவாக்கியிருக்கும் பிரம்மோஸ் மற்றும் பிரம்மோஸ்-2 ஹைப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகள், நிலம், வான், கடல் மற்றும் கடலுக்கு அடியில் இருந்து ஏவக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.
"இந்தியாவிடம் வழக்கமான ஆயுதங்கள், அணு ஆயுத ஏவுகணைகள் உட்பட பல்வேறு தெரிவுகள் உள்ளன, அதேபோல, ஏவுகணை தாக்குதல்களைத் தடுக்கும் திறனும் இந்தியாவிடம் உண்டு" என்று ஹாரிசன் காஸ் கூறுகிறார்.
மறுபுறம், பாகிஸ்தானிடமும் இந்தியாவிடம் இருப்பது போன்ற அணு ஆயுத ஏவுகணை உட்பட வழக்கமான ஆயுதங்களும் உள்ளன.
இரு அண்டை நாடுகளும் பரஸ்பர அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, தத்தமது ஏவுகணைத் திறன்களை மேம்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால் இந்தியாவைப் போலன்றி, பாகிஸ்தானிடம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை இல்லை. பாகிஸ்தானுக்கு இதுபோன்ற ஏவுகணை பெரிய அளவில் பயன்படாது என்று பல பாதுகாப்பு ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.
சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே போர் நிகழ்ந்துள்ளது என்பதால், அதற்கேற்ப இந்தியாவும் தனது பாதுகாப்புத் திறன்களை வளர்த்து வருகிறது.
தற்போது இந்தியாவை மட்டுமே தனது எதிரியாக பாகிஸ்தான் கருதுகிறது.
"இந்தியாவை எதிர்கொள்வதற்கு பாகிஸ்தானுக்கு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் தேவையில்லை. பாகிஸ்தானின் ஏவுகணைத் திறன், பிராந்திய இலக்குகளை அடையும் திறன் கொண்டது" என்று ஹாரிசன் காஸ் கூறுகிறார்.
இந்த மோதல், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பயன்படுத்தும் நிலையை அடைந்தால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்படும் இந்தியாவின் பிரபல பாதுகாப்பு ஆய்வாளர் ராகுல் பேடி கூறுகிறார்.
அவரது கருத்துப்படி, "கண்டம் விட்டு கண்டம் பாயும் ஐசிபிஎம்மின் பறக்கும் நேரம் 15 முதல் 20 வினாடிகள். ஐசிபிஎம் ஒரு வியூக ஆயுதம் ஆகும், சீனாவை மனதில் கொண்டு இந்தியா இதை உருவாக்கியுள்ளது. ஆனால் பாகிஸ்தானிடம் ஐசிபிஎம் இல்லை. ஏனென்றால் பாகிஸ்தானின் கவலை இந்தியாவைப் பற்றியது மட்டுமே. அதேபோல, இந்தியாவின் முக்கிய கவனம் சீனாவை மையமாகக் கொண்டது. 1998 இல் இந்தியா அணு ஆயுத சோதனைகளை நடத்தியபோது, பில் கிளிண்டனுக்கு எழுதிய கடிதத்திலும் அடல் பிஹாரி வாஜ்பாய் இதையே கூறியிருந்தார்".
சீனாவுடன் இணைந்து பாகிஸ்தான் ஷாஹீன் தொடர் ஏவுகணைகளை உருவாக்கியுள்ளது. பாகிஸ்தானின் ஷாஹீன் ஏவுகணைகள் குறுகிய, நடுத்தர மற்றும் தொலைதூர இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவை. இந்தியாவின் தாக்குதல்களை எதிர்கொள்ள, பாலிஸ்டிக் ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளை உருவாக்குவதில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது.
பாகிஸ்தானிடம் HQ-9BE இருப்பதாக ஹாரிசன் கூறுகிறார். இருந்தாலும், இந்தியா பிரம்மோஸைப் பயன்படுத்தினால் அதைத் தடுப்பது பாகிஸ்தானுக்கு எளிதாக இருக்காது.
பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை குறித்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பிகள் கவலை தெரிவித்திருந்தனர்.
2022 மே மாதத்தில், பாகிஸ்தானை நோக்கி தவறுதலாக தனது ஏவுகணை ஒன்று ஏவப்பட்டதாக இந்தியா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஏவுகணை ஏவப்பட்டதை கண்டித்த பாகிஸ்தானின் அப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மொயீத் யூசுப், "சூப்பர்சோனிக் ஏவுகணை ஒன்று பாகிஸ்தான் எல்லையில் விழுந்தது. 40 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விழுந்த ஏவுகணை, சர்வதேச மற்றும் உள்நாட்டு வணிக விமான நிறுவனங்களின் பாதைக்கு அருகில் சென்றது. இந்தியா இது குறித்து பாகிஸ்தானிடம் எதுவுமே தெரிவிக்காதது பொறுப்பற்றத்தனமானது" என்று கூறியிருந்தார்.
இந்திய எல்லையிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மியான் சானு என்ற சிறுநகரில் ஏவுகணை விழுந்ததாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
ஆபரேஷன் சிந்தூரின் விளைவு எப்படி இருக்கும்?
ராகுல் பேடியின் கருத்துப்படி, "இந்த முறை, பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்காமல், இந்தியா தனது சொந்தப் பகுதியிலிருந்து தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த முறை பாகிஸ்தானின் பிரதான நிலப்பகுதியான பஞ்சாபில் இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது என்பது மிகப்பெரிய விஷயம் ஆகும்.''
இந்தியா மற்றும் பாகிஸ்தானின் ஏவுகணைத் திறன் குறித்து பேசிய ராகுல் பேடி, "இந்தியாவிடம் BMD ஷீல்டுகள் எனப்படும் பாலிஸ்டிக் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன, பாகிஸ்தானிடம் அவை இல்லை. இருப்பினும், BMD ஷீல்டுகள் எப்போதுமே 100 சதவீதம் வெற்றி பெறுவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இஸ்ரேலின் இரும்பு டோம் சில சந்தர்ப்பங்களில் தோல்வியடைந்ததை பார்த்திருக்கலாம். எப்படியிருந்தாலும், பெரிய தாக்குதல்களைத் தடுப்பதில் BMD ஷீல்டுகள் பயனுள்ளதாக இருக்கும்". என்றார்
"இந்தியாவிடம் அக்னி போன்ற முக்கிய ஏவுகணை மற்றும் பிரம்மோஸ் போன்ற வழக்கமான ஏவுகணைகள் உள்ளன. பாகிஸ்தானின் கௌரி மற்றும் பாபருடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் ஏவுகணைகள் திறன் வாய்ந்தவை. மேலும், இந்தியாவின் கண்காணிப்பு அமைப்பும் இப்போது மேம்பட்டுள்ளது" என்றார் ராகுல் பேடி
"இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளான ஆகாஷ் மற்றும் எஸ்-400 மிகவும் பயனுள்ளதாக இருக்கும்" என்று டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக தேசிய பாதுகாப்பு மையத்தின் பேராசிரியர் லட்சுமண குமார் கூறுகிறார்.
''பாகிஸ்தானிடம் இந்தியாவைப் போன்ற அதி திறன்கொண்ட வான் பாதுகாப்பு அமைப்புகள் இல்லை. பாகிஸ்தான் இப்போது இந்திய ராணுவ தளங்களைத் தாக்கும் என்று தோன்றவில்லை. இருந்தாலும், அது பதிலடி கொடுக்கும் என்பது உறுதி'' என்று பேராசிரியர் லட்சுமண குமார் கூறுகிறார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு