காணொளி: குழந்தையின் சுவாசக்குழாயில் சிக்கியிருந்த எல்இடி விளக்கு
குஜராத்தில் குழந்தையின் சுவாசக்குழாயில் சிக்கிய எல்இடி விளக்கு 45 நாட்கள் கழித்து எடுக்கப்பட்டுள்ளது. பிபிசி குஜராத்தி மருத்துவரிடம் பேசி குழந்தைக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது பற்றி கேட்டது. மருத்துவர் ஹிரன் சோனி அது குறித்து பின்வருமாறு விளக்கினார்.
குழந்தையின் எக்ஸ்-ரே அறிக்கையில் சுவாசக் குழாயின் உள்ளே பொருள் ஒன்று இருப்பதாக தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அடுத்த நாள் லேப்ரோஸ்கோபிக் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள தீர்மானித்தோம்.
அறுவைச் சிகிச்சையின் போது, சுவாசக் குழாயின் உள்ளே ஒரு சிறிய கேமரா செலுத்தப்பட்டது. அதன் மூலம் உள்ளே ஒரு பொருள் இருப்பது கண்டறியப்பட்டது. அது உலோகத் துண்டு போலத் தோன்றியது. அதில் சுமார் 1 மிமீ அல்லது 2 மிமீ அளவு மட்டுமே தென்பட்டது.
இந்த உலோகத் துண்டு சுமார் 45 நாட்களாக சுவாசக் குழாயின் உள்ளே சிக்கியிருந்ததால், அதன் மேல் தோல் போன்ற ஒரு படலம் உருவாகி இருந்தது. 1 செ.மீ நீளமுள்ள எல்.இ.டி. பல்பின் சுமார் 2 மிமீ பகுதி மட்டுமே வெளியில் தென்பட்டது.
ஆப்டிகல் பிராங்கோஸ்கோப்பி (Optical Bronchoscopy) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அந்த உலோகத் துண்டை அடையாளம் கண்டு அகற்றினோம். இந்த சமீபத்திய தொழில்நுட்பத்தின் உதவியால் அதை பாதுகாப்பாக நீக்க முடிந்தது. அது ஒரு எல்.இ.டி பல்பு என பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது.
இந்த எல்.இ.டி பல்பு குழந்தையின் வாய்மூலம் உடலுக்குள் சென்று சுவாசக் குழாயில் தங்கியிருந்தது. அறுவை சிகிச்சைக்கு பிறகு குழந்தை இயல்பாக இருப்பதாகவும் எந்த பிரச்னையும் இல்லை என்று மருத்துவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



