You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஷமியை வைத்து ரோகித் சர்மா நடத்திய 'துல்லியத் தாக்குதல்'
- எழுதியவர், அபிஜீத் ஸ்ரீவஸ்தவா
- பதவி, பிபிசி நிருபர்
உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் 29ஆவது ஓவரில் கேன் வில்லியம்சனின் கேட்சை முகமது ஷமி தவறவிட்டார்.
ஆனால், தொடர்ந்து ஒன்பது ஆட்டங்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி வீரர்கள் கூட, நியூசிலாந்தின் கேன் வில்லியம்சனும், டேரல் மிட்செலும் ரன்கள் குவித்ததைப் பார்த்தவர்கள் சற்றுத் திணறிப் போனார்கள்.
இருவரும் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்தனர், ஒரு கட்டத்தில் இந்திய அணியின் வலுவான உறுதியும் கூட தடுமாறத் தொடங்கியது.
ஷமி கேட்ச்சை தவறவிட்டது மட்டுமின்றி, ரவீந்திர ஜடேஜாவும் பந்து வீசும்போது கிரீஸுக்கு வெளியே சென்று கொண்டிருந்தார். சூர்யகுமார் யாதவ் ‘மிஸ் ஃபீல்டு’ செய்து கொண்டிருந்தார், கே.எல்.ராகுல் கூட விக்கெட்டுக்குப் பின்னால் தவறுகளை செய்தார்.
நியூசிலாந்து தனது ரன் விகிதத்தை தொடர்ந்து மேம்படுத்தி, 32-வது ஓவரின் முடிவில், கிட்டத்தட்ட இந்தியா எடுத்திருந்த ரன்களை சமன் செய்திருந்தது.
ஆட்டத்தின் போக்கை மாற்றிய ஷமி
இந்தியா 32 ஓவர்களில் 226 ரன்களையும், நியூசிலாந்து அதே ஓவர்களில் 219 ரன்களையும் எடுத்திருந்தது. அதாவது ஏழு ரன் வித்தியாசம் மட்டுமே இருந்தது.
அந்தத் தருணத்தில் கேப்டன் ரோகித் சர்மா மீண்டும் ஒருமுறை பந்தை முகமது ஷமியிடம் ஒப்படைத்தார்.
நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரையும் ஆட்டமிழக்கச் செய்த ஷமி, இந்த ஓவரின் இரண்டாவது பந்தில், தான் தவறவிட்ட கேட்சுக்கு ஈடுகட்டும் வகையில், கேன் வில்லியம்சனை ஆட்டமிழக்கச் செய்து, அதற்கு இரண்டு பந்துகளுக்குப் பிறகு டாம் லேதமையும் பெவிலியனுக்குத் திருப்பியனுப்பினார். இது உலகக் கோப்பையில் ஷமியின் 50வது பலி ஆகும்.
இதன்பின் ஒட்டுமொத்த இந்திய அணியும் உயிர்பெற்றது. நியூசிலாந்து அணி அடுத்த ஐந்து (33-ஆவது முதல் 37-ஆவது) ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
ஷமியின் வேகம் இதோடு நிற்கவில்லை. ஏற்கனவே நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய ஷமி, டேரன் மிட்செலையும் ஆட்டமிழக்கச் செய்தார். பின்னர் மேலும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி, மொத்தம் ஏழு பேட்ஸ்மேன்களை பெவிலியனுக்குத் திருப்பினார்.
முழு மைதானமும் முகமது ஷமியின் பெயரால் எதிரொலிக்கத் தொடங்கியது.
ஷமி குறித்து மோதி என்ன சொன்னார்?
போட்டிக்குப் பிறகு ஷமிக்கு எல்லா இடங்களிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தன. எந்த அளவுக்கென்றால், மைதானத்திலும், மைதானத்திற்கு வெளியேவும், ஆன்லைன் செய்திகளிலும் விராட் கோலியின் 50-வது சதத்தையும், ஸ்ரேயாஸ் ஐயரின் சதத்தையும் மக்கள் மறந்துவிட்டனர்.
ஷமியின் ஆட்டத்தை பிரதமர் நரேந்திர மோதியும் பாராட்டினார்.
ஷமியின் சிறப்பான ஆட்டம் குறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் பகிர்ந்த பதிவில், "இன்றைய அரையிறுதி சில சிறப்பான ஆட்டங்களால் மேலும் சிறப்பு பெற்றது. இந்தப் போட்டியிலும், இந்த உலகக் கோப்பைத் தொடரிலும் முகமது ஷமியின் பந்துவீச்சு வருங்கால கிரிக்கெட் பிரியர்களால் நினைவுகூரப்படும். சிறப்பாக விளையாடினீர்கள் ஷமி!" என்று கூறியிருந்தார்.
கேப்டன் ரோகித் ஷர்மா, ‘ஷமி அற்புதமாக விளையாடினார்’ என்றார்.
ரசிகர் ஒருவர் , "இது அரையிறுதி அல்ல, 'ஷமி இறுதிப் போட்டி'” என்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மாறிய வரலாறு
2019-ஆம் ஆண்டு, ஜூலை 9-ஆம் தேதி
ஓல்ட் டிராஃபோர்ட் ஸ்டேடியம், மான்செஸ்டர்
உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டம்.
டாஸ் வென்ற பிறகு, நியூசிலாந்து பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. ஆனால் புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரின் தலைமையில் வலுவாக பந்துவீச, நியூசிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 239 ரன்கள் மட்டுமே எடுத்தது.
புவனேஷ்வர் 3 விக்கெட்டுகளையும், மற்ற பந்துவீச்சாளர்கள் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
ஆனால் இந்திய அணியின் முறை வந்தபோது 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் 3 பேட்ஸ்மேன்கள் பெவிலியன் திரும்பினர்.
ரோஹித் சர்மா, கேப்டன் விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோர் தலா ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதன் பிறகு, மகேந்திர சிங் தோனி அரை சதம் அடித்தார், ஆனால் அதற்கு 72 பந்துகள் எடுத்துகொண்டார். இறுதியில் ரவீந்திர ஜடேஜா 59 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தார்.
ஆனால் இந்திய அணியின் வெற்றிக்கு இவை போதுமானதாக இருக்கவில்லை. ஒட்டுமொத்த அணியும் 221 ரன்களுக்கு ஆட்டமிழந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி, நியூசிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையே.
இம்முறை மும்பை மைதானத்தில் நடந்த போட்டி, இந்தியா 397 ரன்கள் எடுத்ததால், முடிவு தலைகீழாக மாறியது.
அரையிறுதியில் நியூசிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா, 2019 தோல்விக்கான பதிலடி கொடுத்தது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்த அரையிறுதிப் போட்டியில் என்ன நடந்தது?
இந்த முறை இரு அணிகளும் சந்தித்தபோது, விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் சதம் அடித்தனர், சுப்மான் கில் அரை சதம் விளாசினார்.
கோலி ஒருநாள் போட்டிகளில் 50 சதங்கள் அடித்து சாதனை படைத்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயரும் தனது இன்னிங்ஸின் போது ஒரு பெரிய சாதனையை படைத்தார்.
ஐயர் தனது இன்னிங்ஸின் போது எட்டு சிக்ஸர்களை அடித்தார். சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடித்து, உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார்.
கடைசி ஓவர்களில் கே.எல்.ராகுல் ரன்களை வேகமாகக் குவித்த போது ரோகித் சர்மா ஆட்டத்தில் வேகமான தொடக்கம் கொடுத்தார்.
இந்த இன்னிங்ஸால் இந்தியாவின் ஸ்கோர் போர்டில் 397 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து பேட்டிங் செய்ய வந்தபோது, அதன் தொடக்க வீரர்கள் விரைவில் வெளியேறினர்.
இங்கிருந்து கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் டேரல் மிட்செல் மிகவும் வலுவான நோக்கத்துடன் ரன்களை எடுக்கத் தொடங்கினர். இந்திய அணி மற்றும் அதன் ரசிகர்களைத் திணறடிக்கும் அளவுக்கு இருவரும் போட்டியை எடுத்துச் சென்றனர்.
இருவரும் 3வது விக்கெட்டுக்கு 181 ரன்களைச் சேர்த்தனர்.
நியூசிலாந்தின் இன்னிங்ஸில் முதலில் இரண்டு தொடக்க ஆட்டக்காரர்களும், பின்னர் கேப்டனும் மிட்செலும் ரன் குவித்தபோது, முகமது ஷமி அவர்களின் ஜோடியை உடைத்தார்.
இந்தப் போட்டியில் முகமது ஷமியின் வெற்றிக்குக் காரணம், அணிக்கு மிகவும் தேவையான நேரத்தில் விக்கெட்டுகளை எடுத்ததுதான்.
இந்தப் போட்டியில் நடந்த சாதனைகள்
- உலகக் கோப்பையின் நாக்-அவுட் சுற்றில் முதல் முறையாக ஒரு அணி 397 ரன்கள் எடுத்தது.
- முதல் முறையாக, உலகக் கோப்பையின் நாக்-அவுட் சுற்றில் ஒரு பந்துவீச்சாளர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- உலகக் கோப்பையில் ஒரு இன்னிங்சில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய ஐந்தாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையை ஷமி பெற்றார்.
- உலகக் கோப்பையில் முதல் முறையாக இந்தியாவைச் சேர்ந்த பந்துவீச்சாளர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
- ‘பிளேயர் ஆஃப் தி மேட்ச்’ ஆன ஷமி, இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
- இந்த உலகக் கோப்பையில் இதுவரை அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் ஷமிதான்.
- ஷமி உலகக் கோப்பையில் 17 போட்டிகளில் மட்டுமே 54 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். உலகக் கோப்பையில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியப் பந்துவீச்சாளர் இவர்தான்.
- விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் 50 சதங்களை அடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்களை முறியடித்தார்.
- இந்த உலகக் கோப்பையில் விராட் கோலி இதுவரை 711 ரன்கள் எடுத்துள்ளார். உலகக் கோப்பையில் அதிக தனிநபர் ரன்கள் எடுத்த சாதனை இதுவாகும்.
- ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து இரண்டாவது சதம் அடித்தார். அவர் தனது இன்னிங்ஸில் எட்டு சிக்ஸர்களை அடித்தார். உலகக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி அதிக சிக்ஸர்கள் அடித்த சாதனை இதுவாகும்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் என்ன சொன்னார்கள்?
பாகிஸ்தானின் ஜாம்பவான் கிரிக்கெட் வீரரும், வேகப்பந்து வீச்சாளருமான வக்கார் யூனிஸ் எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்த பதிவில், "பொறுமையே பலம். உங்களால் 'உணர்ச்சியையும் பசியையும்' வெல்ல முடியாது. உண்மையான போராளி, முகமது ஷமி பாராட்டுக்குத் தகுதியானவர்,” என்று கூறியிருந்தார்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் மொயின் கான், விராட் கோலியின் இன்னிங்ஸைப் பாராட்டி, “விராட் கோலி தனது இன்னிங்ஸை மிகவும் பொறுப்புடன் விளையாடியுள்ளார். அவர் இந்தியாவை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்தது போல் தோன்றியது,” என்று கூறியிருக்கிறார்.
‘சச்சின் 49 சதங்கள் அடித்த போது, இந்தச் சாதனையை அடுத்து யாரால் முறியடிக்க முடியும் என நினைத்தோம்.ஆனால், விராட் கோலி அதை செய்துள்ளார். நாம் விராட் கோலி காலத்தில் வாழ்ந்து வருகிறோம்,’ என வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.
போட்டி முடிந்ததும், ‘ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’ சோயப் அக்தர் சமூக ஊடகங்களில் பகிர்ந்த ஒரு வீடியோ பதிவில் இந்திய அணியை வெகுவாக பாராட்டிய அவர், கேப்டன் ரோகித் சர்மா சதம் அடிக்காததுதான் ஒரே புகார் என்று கூறியுள்ளார்.
“ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ரோகித் எதிரணியை விரட்டி அடிக்கிறார்,” என்று அவர் கூறினார்.
விரைவாகத் தொடங்கி வலுவான அடித்தளத்தை அமைக்கும் உத்தி
இந்த உலகக் கோப்பையில், கேப்டன் ரோகித் சர்மா விரைவான அடித்தளத்தை அமைக்கும் உத்தியைப் பயன்படுத்துவதால், அணி திடமான தொடக்கத்தைப் பெற்று விடுகிறது. இது அடுத்துவரும் பேட்ஸ்மேன்கள் அழுத்தத்திற்கு ஆளாகாமல் தங்கள் ஷாட்களை ஆட வாய்ப்பளிக்கிறது. எதிரணி இந்த அழுத்தத்தின் கீழ் தோற்கவும் நேரிடும்.
இந்த உத்தியின் மூளையாக இருந்தவர் ரோகித் சர்மா. தொடக்க ஆட்டக்காரராக வலுவான தொடக்கத்தை உருவாக்கி, பின்னர் ஒட்டுமொத்த இந்திய பேட்டிங்கிற்கும் வலுவான அடித்தளத்தை அமைக்கும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார்.
நியூசிலாந்துக்கு எதிராகவும் இதேதான் நடந்தது. ரோகித் 29 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகளுடன் 47 ரன்கள் எடுத்தார்.
இந்த உலகக் கோப்பையில் ரோகித் 550 ரன்கள் எடுத்துள்ளார். கிரிக்கெட் இணையத்தளமான கிரிக்இன்போ இணையதளத்தின் கணக்கீடுகளின்படி, இவற்றில் 226 ரன்கள் முதல் 20 பந்துகளில் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளன.
அதாவது, இந்த காலகட்டத்தில் இந்திய தொடக்க ஜோடி பவர்பிளேயை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பூஜ்ஜியம் அடித்ததன் மூலம் உலகக் கோப்பை தொடரை தொடங்கிய ரோகித், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 131 ரன்கள் எடுத்தார். பின்னர் மூன்று அரை சதங்கள் அடித்தார். அரைச்சத்தை ஒட்டி 48, 46, 87, 61, 40 மற்றும் 47 ரன்களையும் அவர் எடுத்திருக்கிறார்.
இந்த இன்னிங்ஸைப் பார்த்தால், அவர் எப்படியாவது அணியின் நலனை முதன்மைப்படுத்துகிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அரைசதத்தை நெருங்கினாலும், சதத்தை நெருங்கினாலும் ரோகித் தனது ஆக்ரோஷமான போக்கைக் கைவிடாததால்தான் இந்திய அணி தொடர்ந்து ஏழு அல்லது அதற்கு மேற்பட்ட ரன் ரேட்டுடன் களமிறங்குகிறது.
இப்போது இந்தியா ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா யாரை எதிர்கொள்ளும் என்பது வியாழக்கிழமை (நவம்பர் 16) முடிவு செய்யப்படும். தென்னாப்பிரிக்கா அல்லது ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளையும் லீக் ஆட்டங்களில் இந்தியா தோற்கடித்துள்ளதால், இறுதிப் போட்டியில் அதன் மனோபலம் மிக அதிகமாக இருக்கும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)