You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்காவில் உயர் கல்வி பயில சென்று உயிரை பறிகொடுக்கும் இந்திய மாணவர்கள் - என்ன காரணம்?
- எழுதியவர், சவிதா படேல்
- பதவி, சான் பிரான்சிஸ்கோ
மிகுந்த மனச்சோர்வுடன் இருக்கிறேன் என்கிறார் அமெரிக்க மாகாணமான மிசோரியின், செயின்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஜெய் சுஷில்.
இந்தியாவை சேர்ந்த 34 வயது கிளாசிக்கல் நடனக் கலைஞரும், சுஷிலின் சக மாணவருமான அமர்நாத் கோஷ் கடந்த பிப்ரவரியில் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் இருந்து சுஷிலால் மீண்டுவர முடியவில்லை. உள்ளூர் காவல்துறையினர் இதைக் கொலை வழக்காக விசாரித்து வருகின்றனர்.
தனது பல்கலைக்கழகத்தில் இருந்து இதுகுறித்த தகவலை அறிவதற்கு முன்பு, இந்தியாவில் உள்ள ஒரு நண்பர் மூலம் கோஷ் மரணம் பற்றி அறிந்து கொண்டதாகக் கூறுகிறார் சுஷில்.
"இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் பல்கலைக்கழக நிர்வாகத்தினர் எங்களிடம் இதுகுறித்து சொன்னார்கள். நிர்வாகத்தின் பதிலில் மாணவர்களுக்கு திருப்தியில்லை. இந்தியர்களின் உணர்வுகளைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை என்ற ரீதியில்தான் அவர்களின் பதில் இருந்தது," என்கிறார் சுஷில்.
பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே உள்ள ஒரு தெருவில் கோஷ் சுட்டுக் கொல்லப்பட்டார். சட்ட அமலாக்கப் பிரிவினர் இறந்த மாணவரின் அடையாளத்தை உறுதிப்படுத்திய பின்னரே அவரது மரணம் குறித்து அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது என்று பல்கலைக்கழகம் தெளிவுபடுத்தியது.
அவ்வாறு அடையாளத்தை உறுதிசெய்ய குறிப்பிட்ட நேரம் தேவைப்படும், இறந்த மாணவரின் உறவினர் ஒருவரது ஒப்புதல் பெற்று இது நடைபெறும்.
11 இந்திய மாணவர்கள் மரணம்
இதுவொரு ‘பயங்கரமான துயரம்’ என்று கூறிய வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பியல் துறை துணைவேந்தர் ஜூலி ஃப்ளோரி, "அமர்நாத்திற்கு நெருக்கமானவர்களின் விருப்பப்படி இந்த சோகமான செய்தியை எங்களால் முடிந்தவரை வேகமாக பல்கலைக்கழக மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டோம்," என்றார்.
“இறந்த ஒருவரின் அடையாளத்தை உறுதிசெய்ய 48 மணிநேரம் ஆகும். பல சந்தர்ப்பங்களில், அதற்கு இன்னும் அதிக நேரம்கூட தேவைப்படும்" என்று செயின்ட் லூயிஸ் காவல்துறை கூறியது.
இந்த ஆண்டு இதுவரை அமெரிக்காவில் இறந்த 11 இந்திய மாணவர்கள் அல்லது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர்களில் அமர்நாத் கோஷும் ஒருவர். இது அங்கு வாழும் இந்திய சமூகத்திற்குள் பாதுகாப்பு குறித்த அச்சத்தைத் தூண்டியுள்ளது.
அதிக குளிர், தற்கொலை, துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொலை என இறப்புக்கான காரணங்கள் வெவ்வேறாக உள்ளன. இந்தச் சம்பவங்களுக்கு இடையே தெளிவான தொடர்பு இல்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு சோக நிகழ்வும் வளாகங்களில் எதிரொலிக்கும்போது, ஒருபக்கம் படிப்பையும் கவனித்துக்கொண்டு மறுபுறம் இந்த அச்சுறுத்தல்களையும் சமாளித்து, மாணவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துகிறார்கள்.
"இருட்டிய பிறகு வெளியே செல்வதைத் தவிர்க்கிறோம். நகரத்தில் இரவு வேளையில் பாதுகாப்பற்றதாக இருக்கும் பகுதிகளைக் கண்டறிந்துள்ளோம். வேறு என்ன செய்வது?" எனக் கேட்கிறார் சுஷில்.
அவரைப் போலவே, மற்றவர்களும் தங்கள் பல்கலைக்கழகங்கள் சரியான நேரத்தில் இந்த இறப்புகள் குறித்து அறிவிக்கவில்லை என்று கூறுகின்றனர். இந்திய ஊடகங்கள் மூலமாகவோ அல்லது வீட்டில் உள்ள உறவினர்கள் மூலமாகவோ இறந்தவர்களைப் பற்றி அவர்கள் அறிந்து கொள்கிறார்கள்.
க்ளீவ்லேண்ட் ஸ்டேட் யுனிவர்சிட்டியின் (சிஎஸ்இ) 25 வயது மாணவர் முகம்மது அப்துல் அர்பாத். மார்ச் மாதம் காணாமல் போன இவர், இந்த மாதத் தொடக்கத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
அர்பாத் சேர்ந்த அதே நேரத்தில் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த பெயர் சொல்ல விரும்பாத ஒரு மாணவர், “அர்பாத் இறந்ததைத் தனது பெற்றோரிடம் இருந்து வந்த வாட்ஸ்அப் செய்தி மூலம் அறிந்து கொண்டேன்,” என்று கூறினார்.
"இதைப் பற்றிக் கூறி, என்னைப் பாதுகாப்பாக இருக்குமாறு என் பெற்றோர் அறிவுறுத்தினர்" என்று அவர் கூறினார்.
இந்தியர்கள் என்பதால் கொல்லப்பட்டார்களா?
கடந்த 2022-23ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 267,000 இந்தியர்கள் அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் சேர்ந்துள்ளனர். 2030ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை பத்து லட்சத்தை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
"அமெரிக்காவில் படித்து பட்டம் பெறுவது குறித்த ஆசை என்பது இந்தியாவில் அதிகமாக உள்ளது. அதுதான் பல இந்தியக் குடும்பங்களை அமெரிக்கா பக்கம் திருப்புகிறது," என்கிறார் நியூயார்க்கை சேர்ந்த கல்வி நிபுணர் ராஜிகா பண்டாரி.
நியூ ஜெர்சியில் உள்ள ட்ரூ பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியரான சங்கே மிஸ்ரா பேசுகையில், “இந்த இறப்புகளை இணைக்க ஒரு தெளிவான முறை என்று எதுவும் இல்லை. அவர்கள் இந்தியர்கள் என்பதால் மட்டுமே இது நடக்கிறது என்ற ஒரு மேலோட்டமான கதையில் சிக்காமல் கவனமாக இதை அணுகுவது முக்கியம். இவை இன விரோதம் அல்லது இனம் சார்ந்த தாக்குதல்கள் என்பதற்கான எந்த ஆதாரங்களையும் நான் பார்க்கவில்லை," என்று கூறுகிறார்.
அமெரிக்காவில் படிக்கும் தங்கள் பிள்ளைகளுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்க முயல்வதாகக் கூறுகிறார்கள் இந்தியப் பெற்றோர்கள்.
"இந்தியாவில் இருந்துகொண்டு இதுபோன்ற செய்திகளைக் கேட்கும் போதெல்லாம் அது எங்களை மிகவும் பயமுறுத்துகிறது” என்கிறார் மீனு அவல். இவரது மகன் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.
“யாரேனும் கொள்ளையடிக்க முயன்றால்கூட பதில் தாக்குதலில் ஈடுபடாமல், அவர்கள் கேட்கும் பணத்தைக் கொடுத்துவிடு என்று எனது மகனுக்கு அறிவுறுத்தினேன்,” என்று கூறுகிறார் மீனு அவல்.
ஜெய்ப்பூர் நகரைச் சேர்ந்த நீது மர்தா, நியூயார்க் பல்கலைக்கழகத்தில் படிக்கும் தனது மகளுடன் தினமும் பேசுவதாகவும், மகளது நண்பர்களின் தொலைபேசி எண்களை போனில் வைத்திருப்பதாகவும் கூறுகிறார்.
"தெரியாத நபர்களுடன் தனியாக வெளியே செல்ல வேண்டாம் என்று நான் அவளிடம் கூறியுள்ளேன்" என்கிறார் நீது. வெவ்வேறு வளாகங்களில் உள்ள மாணவர்களும் தங்கள் சொந்த பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுகிறார்கள்.
மாசசூசெட்ஸில் உள்ள டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய சங்கத்தின் இணைத் தலைவர்களான அனுஷ்கா மதன் மற்றும் இஷிகா குப்தா ஆகியோர், “சில பொதுவான பாதுகாப்பு விதிகள் உள்ளன, அதில் இரவில் வளாகத்தில் தனியாக நடக்கக்கூடாது என்ற விதியும் ஒன்று” என்று கூறுகிறார்கள்.
"பாஸ்டன் நகரம் மிகவும் பாதுகாப்பானதுதான். ஆனால் நாங்கள் இப்போது கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படுகிறோம். எங்கள் சுற்றுப் புறங்களைப் பற்றி அதிகம் தெரிந்து வைத்துக்கொள்ள முயற்சி செய்கிறோம்," என்றார் இஷிகா குப்தா.
உளவியல் தாக்கங்கள்
பாதுகாப்பு பிரச்னைகள் மட்டுமல்லாது, உளவியல் ரீதியாக மாணவர்களிடம் ஏற்படும் தாக்கத்தையும் பல்கலைக்கழகங்கள் அறிந்திருக்கின்றன.
"சர்வதேச மாணவர்கள் தொடர்ந்து மனநலப் பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர் என்பது தெளிவாகிறது. அவர்களின் விசா நிலை பாதிக்கப்படாமல் இருக்க, ஏற்கெனவே இருக்கும் பொருளாதார அழுத்தம் மற்றும் கல்வி அழுத்தத்துடன் இதுவும் ஒரு கவலையாக அவர்களுக்கு மாறியுள்ளது," என்கிறார் கல்வி நிபுணர் பண்டாரி.
"வீட்டிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருக்கும்போது, இதுவே ஒரு பெரிய உளவியல் சுமை" என்கிறார் அவர்.
பல்வேறு பொருளாதார மற்றும் கலாசார பின்னணியில் இருந்து வந்த மாணவர்கள், தங்களது வெளிநாட்டு வாழ்க்கையில் ஒரு வித்தியாசமான அனுபவத்தை எதிர்கொள்கிறார்கள் என்று மற்றவர்கள் குறிப்பிடுகின்றனர்.
"சர்வதேச மாணவர்கள் தங்களது வீடுகளை அல்லது நாடுகளை விட்டு வெளியேறி புதிய கலாசாரத்திற்குச் செல்லும்போது தனித்துவமான அழுத்தங்களை எதிர்கொள்கின்றனர்," என்கிறார் சிஎஸ்யூ தகவல்தொடர்பு நிர்வாக இயக்குநர் ரீனா அரோரா-சான்செஸ்.
அமெரிக்காவில் உள்ள மாணவர்களைத் தொடர்புகொள்வதற்கான வழிகாட்டுதல்களையும், வழக்கமான ஆன்லைன் மற்றும் நேரடி கலந்தாய்வுகளையும் இந்தியத் தூதரகம் வழங்குகிறது.
இந்தியா கிளப்பின் தலைவரான பிரதம் மேத்தா, ஜார்ஜியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் அதிகமாக இருக்கும் இந்திய மாணவர்களைச் சந்தித்துப் பேசியதாகக் கூறுகிறார்.
வளாகத்தில் பல்வேறு உளவியல் சிகிச்சை சேவைகள் உள்ளன, மேலும் பாதுகாப்பற்ற நிலையை உணரும் மாணவர்களுக்கு இந்திய துணைத் தூதரகத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தவும் கிளப் உதவுகிறது. கூடுதலாக, சிஎஸ்யூ பல்கலைக்கழகத்தின் காவல் துறையுடன் மாணவர்களை இணைக்கும் ஒரு செயலியையும் வழங்குகிறது. வளாகம் மற்றும் அருகிலுள்ள மாணவர் குடியிருப்புகளுக்குச் சென்று வர இலவச பாதுகாப்பு உதவி சேவையையும் வழங்குகிறது.
கல்லூரிகளைத் தேர்ந்தெடுப்பதில் பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்கம் எப்போதும் ஒரு முக்கியக் காரணியாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
பிப்ரவரியில், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, "இந்தியர்கள் பாதுகாப்பாகப் படிக்கவும் வாழவும், அமெரிக்கா ஓர் அற்புதமான இடம் என்பதை உறுதி செய்வதில் நாங்கள் மிகவும் அர்ப்பணிப்போடு இருக்கிறோம்" என்றார். ஆனால் சமீபகாலமாகப் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதால், இப்பிரச்னை தீவிர கவனம் பெற்றுள்ளது.
அமெரிக்காவில் கல்வி பயில ஆர்வம் காட்டும் இந்தியர்கள்
வெளிநாட்டில் படிக்க வேண்டுமென்ற ஆசை இந்திய மாணவர்களிடையே அதிகமாக இருப்பதை அமெரிக்க பல்கலைக் கழகங்கள் நன்றாகவே அறிந்திருக்கின்றன என பண்டாரி கூறுகிறார்.
"நிறுவனங்கள் இந்த ஆர்வத்தைப் பயன்படுத்திக் கொள்ள முயல்கின்றன. ஆனால் அதே நேரத்தில், மாணவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பைச் சுற்றி இருக்கும் பிரச்னைகள் குறித்தும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள்," என்கிறார் பண்டாரி.
பாதுகாப்பற்ற சூழ்நிலைகள் இருந்தாலும், இந்திய மாணவர்கள் விரும்பும் இடமாக அமெரிக்கா உள்ளது.
ஜெய்ப்பூரை சேர்ந்த ஸ்வராஜ் ஜெயின் ஆகஸ்ட் மாதம் நியூயார்க் பல்கலைக் கழகத்திற்குச் செல்லவிருக்கிறார். புதிய இடம் குறித்த உற்சாகம் மட்டுமல்லாது, அங்கு சந்திக்கவிருக்கும் சவால்களைப் பற்றிய தெளிவான புரிதலும் அவருக்கு இருக்கிறது.
"துப்பாக்கி கலாசாரம், வன்முறை மற்றும் குற்றங்கள் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். நான் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்," என்று அவர் கூறுகிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)