You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிரம்புடன் இரவு உணவுக்குச் சென்ற போது நடந்தது என்ன? அமெரிக்க நீதிமன்றத்தில் நடிகை சாட்சியம்
- எழுதியவர், கைலா எப்ஸ்டீன் மற்றும் மேட்லைன் ஹால்பர்ட்
- பதவி, பிபிசி செய்தியாளர்கள்
பாலியல் உறவு குற்றச்சாட்டு, அதுகுறித்து பேசாமல் மௌனம் காக்க டிரம்ப் சார்பில் அவரது பிரதிநிதியாக ஒருவர் பணம் கொடுத்தது ஆகியவை தொடர்பான போராட்டம் ஸ்டோர்மி டேனியல்ஸ் - டொனால்டு டிரம்ப் இடையே பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
டிரம்புக்கு எதிரான குற்றவியல் விசாரணையில், முதன் முறையாக நீதிமன்றத்தில் அவரை நேரடியாக எதிர்கொள்ளும் நிலைப்பாட்டை டேனியல்ஸ் எடுத்துள்ளார். பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான அந்தரங்க விவரங்கள், இந்த வழக்கைச் சுற்றியுள்ள ரகசியங்கள் என பல விஷயங்கள் செவ்வாய் கிழமையன்று நீதிமன்றத்தில் கசிந்தன.
'நான் குற்றமற்றவன்' - டொனால்டு டிரம்ப்
முன்னாள் திரை நட்சத்திரமான ஸ்டோர்மி டேனியல்ஸ், தளர்வான கறுப்பு ஆடைகளை அணிந்து அமர்ந்திருந்தார். முன்னாள் அதிபரை அடையாளம் காட்டுமாறு கூறியபோது மட்டுமே அவர் டிரம்பை பார்த்தார். மற்ற நேரங்களில் அவரைப் பார்ப்பதைத் தவிர்த்தார் ஸ்டார்மி டேனியல்ஸ்.
வழக்கின் குற்றச்சாட்டுகளுக்கும், டிரம்பின் சட்ட வல்லுநர் குழுவின் கடுமையான கேள்விகளுக்கும் காரணமாக இருந்த, டிரம்ப் உடனான தன் பாலியல் தொடர்பை விவரிப்பதில்தான் அவர் அதிக நேரத்தைச் செலவிட்டார்.
டேனியல்ஸ் தரப்பு வாதங்களை முன்வைத்தபோது, டிரம்ப் பெரும்பாலான நேரம் கோபமாகத் திட்டியவாறும், இல்லை எனும் வகையில் தலையை ஆட்டியவாறும் இருந்தார். அவரது இந்த செய்கைகளைக் கண்டித்து எச்சரிக்கை விடுத்தார் நீதிபதி.
போலியான வணிகப் பதிவுகளைச் சமர்ப்பித்ததாக 34 குற்ற வழக்குகளை டிரம்ப் எதிர்கொண்டுள்ளார். டிரம்புடனான தொடர்பு குறித்துப் பேசாமல் மௌனம் காப்பதற்காக, டேனியல்ஸுக்கு 1,30,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 1 கோடி ரூபாய்) கொடுத்ததாக கூறப்படும் விவகாரம்தான் இந்த விசாரணையின் மையமாக உள்ளது.
தான் குற்றமற்றவர் என்று கூறியுள்ள டிரம்ப், டேனியலுடன் எந்த வகையிலும் பாலியல் தொடர்பு இல்லை என்று மறுத்துள்ளார். இருப்பினும் தனது முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன், இந்த விவகாரத்தில் அமைதியாக இருக்க ஒரு தொகையை டேனியலுக்கு வழங்கியதை டிரம்ப் ஒப்புக்கொண்டார்.
பணத்தைப் பெற்ற டேனியல்ஸ் ஒரு கட்டத்தில் நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. செவ்வாய்க் கிழமையன்று அவர் அளித்த சாட்சியம் விசாரணையின் மிகவும் முக்கியமான அங்கமாக மாறியுள்ளது.
டிரம்ப் முன்னிலையில் நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் சாட்சியம்
டிரம்புடனான தனது தொடர்பு பற்றிய சில பரபரப்பான விவரங்களை வழங்கினார் டேனியல்ஸ். இதனால் முன்னாள் அதிபரின் வழக்கறிஞர்கள் இந்த விசாரணையை ‘தவறான விசாரணை’ என்று அறிவிக்குமாறு கூறினார்கள்.
நீதிபதி ஜுவான் மெர்ச்சன், “சில அந்தரங்கமான விஷயங்களைச் சொல்லாமல் விட்டுவிடுவது நல்லதுதான்" என்று ஒப்புக்கொண்டார் மற்றும் அத்தகைய தனிப்பட்ட விவரங்களைக் கேட்க வேண்டாம் என்று வழக்கறிஞர்களை எச்சரித்தார்.
அவர் முன்பு பகிர்ந்துகொண்ட விவரங்களில், அவர்கள் ஆணுறை பயன்படுத்தவில்லை என்ற அவரது கூற்று, தனது மனைவி குறித்து டிரம்ப் டேனியல்ஸிடம் கூறியதாகக் கூறப்படும் பதில்கள் ஆகியவை அடங்கும்.
இந்த விசாரணை ஏற்கெனவே முன்னணி செய்தி நிறுவனங்கள் மற்றும் ஹாலிவுட் வழக்கறிஞர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் ஒரு வழக்கறிஞர் டேனியல்ஸுக்கு பணம் செலுத்துவதற்குத் தரகராகப் பணியமர்த்தப்பட்டார். எவ்வாறாயினும், செவ்வாய்க் கிழமையன்று அவர் அளித்த சாட்சியம் நீதிபதி மற்றும் டிரம்ப் தரப்புக்கு ஒரு படி அதிகமாகவே இருந்தது.
கடந்த 2006ஆம் ஆண்டில் இருந்ததாகக் கூறப்படும் டிரம்ப் உடனான பாலியல் தொடர்பு குறித்து டேனியல்ஸிடம் என்ன கேட்கலாம், என்ன கேட்கக்கூடாது என்பன குறித்து அரசுத் தரப்புக்கு சில வரம்புகளை விதிக்க வேண்டும் என்று நீதிபதி மெர்ச்சனிடம் டிரம்ப் தரப்பு வலியுறுத்தியது.
ஆனால், பணம் செலுத்தப்பட்டதற்கான நோக்கத்தை நிறுவுவதற்கு டேனியல்ஸிடம் சில கேள்விகளைக் கேட்பது அவசியம் என்று அரசுத் தரப்பு வாதிட்டது. வரம்புகள் இருந்தபோதிலும், டேனியல்ஸின் வழக்கத்திற்கு மாறான நீண்ட பதில்களில் அந்தரங்கமான விவரங்கள் மேலும் வெளிப்பட்டன.
டிரம்பை சந்தித்தது எப்படி?
டேனியல்ஸ், டிரம்புடனான பாலியல் சந்திப்பு குறித்த விவரங்களைப் பகிர்வது இது முதல் முறையல்ல. இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததில் இருந்து, அவர் தனது அனுபவத்தை தேசிய தொலைக்காட்சியில் அவரது பெயர் கொண்ட ஆவணப்படம் முதல் அமெரிக்காவின் மிகப் பிரபலமான காட்சி ஊடக பத்திரிகையாளர் மற்றும் அவரது சொந்த புத்தகமான ஃபுல் டிஸ்க்ளோசர் (Full Disclosure) ஆகியவற்றிலும் வெளிப்படுத்தியுள்ளார்.
ஆனால் சில அடி தூரத்தில் டிரம்ப் அமர்ந்திருந்தபோது, டேனியல்ஸ் இதைப் பகிர்வது இதுவே முதல் முறை. காலை அமர்வில், டேனியல்ஸ் பதற்றமாகத் தோன்றினார், மிகவும் வேகமாகப் பேசினார். வழக்கறிஞர் சூசன் ஹாஃபிங்கர் மற்றும் நீதிபதி மெர்ச்சன் இருவரும் அவரை மெதுவாகப் பேசும்படி கேட்டுக் கொண்டனர்.
சில நேரங்களில், வழக்கறிஞரான ஹாஃபிங்கர் கேட்ட கேள்விகளில் இருந்து அவரது சாட்சியங்கள் விலகிவிட்டதாகவும் தோன்றியது.
கடந்த 2006ஆம் ஆண்டு நடந்ததை நீதிமன்றத்தில் டேனியல்ஸ் நினைவுகூர்ந்தார். நட்சத்திரங்கள் பங்கேற்ற கோல்ஃப் போட்டியின் போது டிரம்பை முதன்முதலில் சந்தித்ததாகவும், அவர் தன்னுடன் சாப்பிட வருமாறு அழைத்ததாகவும் டேனியல்ஸ் கூறினார். டிரம்புடன் இரவு உணவுக்குச் செல்ல தான் விரும்பவில்லை என்று டேனியல்ஸ் நீதிமன்றத்தில் கூறினார்.
ஆனால், “சாப்பிட்டால் என்ன தவறு” என்று கூறி டிரம்பின் அழைப்பை ஏற்குமாறு அவரது விளம்பரதாரர் ஊக்கப்படுத்தியதாக டேனியல்ஸ் கூறினார். அவரது இந்தக் கூற்றைக் கேட்டு நீதிமன்றத்தில் இருந்த சிலர் சிரித்தனர்.
பின்னர் இரவு உணவிற்கு டிரம்பின் அறைக்கு தான் சென்றதை விவரித்தார். பட்டு பைஜாமா அணிந்திருந்த டிரம்ப் வாசலுக்கு வந்து தன்னை வரவேற்றதாகவும், அதன் பிறகு தான் குளியலறைக்குச் சென்று வந்தபோது, டிரம்ப் பாக்ஸர் ஷார்ட்ஸ் மற்றும் டி-சர்ட் மட்டுமே அணிந்து படுக்கையில் படுத்திருந்ததைக் கண்டதாகவும் அவர் கூறினார்.
பின்னர் அவர்கள் உடலுறவு கொண்டதாகவும், அது முழு சம்மதத்தின் பேரில் நடந்ததாகவும் அவர் கூறினார். இருப்பினும், அந்தச் சந்திப்பு தன்னை ஒரு குழப்ப நிலைக்குள் தள்ளியதாக நீதிமன்றத்தில் அவர் கூறினார்.
டிரம்ப் கூறியது என்ன?
டிரம்பின் வழக்கறிஞர்கள் டேனியல்ஸை குறுக்கு விசாரணை செய்வதற்கு முன்பு, அரசு வழக்கறிஞர்களின் கேள்விகளுக்குப் பல முறை எதிர்ப்பு தெரிவித்தனர்.
டேனியல்ஸின் சாட்சியத்தின் மீது நீதிமன்றம் விதித்திருந்த கட்டுப்பாடுகள் பறந்துவிட்டன என்றும், அரசு வழக்கறிஞர்கள்தான் அதற்குக் காரணம் என்றும் வழக்கறிஞர் டோட் பிளாங்க் கூறினார்.
டிரம்பை பற்றிய அவரது விவரங்கள் ‘பாரபட்சமானவை’ என்றும், குறுக்கு விசாரணையின்போது அவற்றைச் சரிபார்க்க முடியும் என்று தாங்கள் நம்பவில்லை என்றும் அவர் கூறினார், "இது மீண்டும் விசாரிக்க இயலாத ஒரு சாட்சியம்" என்று பிளாங்க் கூறினார்.
நீதிபதி மெர்ச்சன் இதை ஒரு தவறான விசாரணையாகக் கருதவில்லை என்றாலும், "சாட்சியைக் கட்டுப்படுத்துவது சற்று கடினமாக இருந்தது" என்று ஒப்புக்கொண்டார். தனது பதில்களைச் சுருக்கமாகக் கூறுவது குறித்து டேனியல்ஸிடம் ஹாஃபிங்கர் பேசுவார் என்றார்.
"நீங்கள் சொல்லும் விவரங்களின் அளவு தேவையற்றது," என்று அவர் கூறினார்.
டிரம்பின் வழக்கறிஞர் சூசன் நெச்செலஸ், டேனியல்ஸின் நோக்கங்களையும் கடந்த கால சம்பவங்கள் குறித்த சாட்சியங்களையும் சந்தேகத்திற்கு உட்படுத்தும் நோக்கில் ஒரு கடுமையான குறுக்கு விசாரணையை முன்னெடுத்தார். இரண்டு பெண்களும் சில நேரங்களில் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர்.
டிரம்பை பற்றிய டேனியல்ஸின் அறிக்கைகளை நெச்செலஸ் கொண்டு வந்ததால், அவரது வளர்ப்பை இது கேள்விக்குள்ளாக்கியது மற்றும் கடந்த காலத்தில் நடந்ததாக டேனியல்ஸ் கூறிய சில சம்பவங்கள் இட்டுக்கட்டியது என்று கூறியதால் விவாதங்கள் மேலும் மோசமாகின.
நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த டிரம்ப், செய்தியாளர்களிடம் பேசுகையில், நீதிமன்ற விசாரணை ‘சிறப்பாக நடக்கிறது’ என்று கூறினார்.
சாட்சியத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டு, இறுதியில் டேனியல்ஸின் சாட்சியம் தகுதியுடையதா என்று நீதிபதிகள் எடை போடுவார்கள்.
நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டதும், "திறந்த மனதுடன் இருக்க வேண்டும் என்பதை தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள்" என்று நீதிபதி மெர்ச்சன் தனது வழக்கமான அறிவுறுத்தலை மீண்டும் ஒருமுறை வழங்கினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)