You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டில் ஆசிரியர்கள், மாணவர்கள் வன்முறை அதிகரிக்க என்ன காரணம்?
- எழுதியவர், நடராஜன் சுந்தர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தவறைக் கண்டித்த தலைமை ஆசிரியரின் தலையில் ரத்தம் வரும் அளவிற்கு தாக்கியுள்ளார் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவர். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் தான் நடந்தது. மற்றொரு சம்பவத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் தாக்கிக் கொண்டதில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதுபோன்று மாணவர்கள் தொடர்புடைய வன்முறைச் சம்பவங்களுக்கு பின்னால் இருக்கும் உளவியல் என்ன? இதற்குத் தீர்வு என்ன?
சம்பவம் 1: தலைமை ஆசிரியர் தலையை உடைத்த மாணவன்
விழுப்புரம் கண்டமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மது போதையிலிருந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் ஒருவர் சக வகுப்பு மாணவியைத் தவறாகப் பேசியுள்ளார்.
இது குறித்து அப்பள்ளி தலைவர் ஆசிரியர் ம.சேவியர் சந்திரகுமாரிடம் மாணவி புகாரளித்தார். பின்னர் சம்மந்தப்பட்ட மாணவனை அழைத்து தலைமை ஆசிரியர் கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவன் தலைமை ஆசிரியரைத் தலையில் தாக்கிவிட்டு தப்பித்து ஓடினார். தாக்கியதில் தலைமை ஆசிரியரின் பின் தலையில் வெட்டு ஏற்பட்டு ரத்தம் அதிகமாகச் சிந்தியது. பிறகு அவரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு சிகிச்சை தரப்பட்டது. கடைசியில் தகாத செயலில் ஈடுபட்ட மாணவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதே பள்ளியில் கடந்த சில மாதங்களாக முன்பு 11 மாணவர்கள் கஞ்சா மற்றும் போதை வஸ்துக்களுக்கு அடிமையாகினர்.
இதை அறிந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக அவர்களுக்கு மருத்துவ உளவியல் ஆலோசனை வழங்க நடவடிக்கை எடுத்தார்.
பல மாத கலந்தாய்வுக்குப் பிறகு அந்த மாணவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கின்றனர்.
விழுப்புரம் கண்டமங்கலத்தில் மாணவனால் தாக்கப்பட்ட தலைமை ஆசிரியர் சேவியர் சந்திரகுமாரிடம் பிபிசி தமிழ் பேசியபோது, மாணவர்களின் பழக்க வழக்க முறைகள் முற்றிலும் மாறியுள்ளதாக தெரிவித்தார்.
"தவறு செய்தாலோ, தகாத விஷயங்களில் ஈடுபட்டாலோ அவர்களைக் கண்டிக்கும் சூழ்நிலை ஏற்படும் போது, அந்த தவறைச் செய்ததால் என்ன ஆகிவிட்டது என்று எதிர்வாதம் செய்து மரியாதையின்றி நடந்து கொள்கிறார்கள்.
ஆசிரியர் வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருக்கும் போது மாணவர்கள் இருக்கையில் ஒருவர் மீது ஒருவர் படுத்துக் கிடக்கிறார்கள், ஆசிரியர்களை ஒருமையில் பேசுகின்றனர், திட்டுகின்றனர். அவ்வாறு நடந்து கொண்ட மாணவனிடம் ஆசிரியை கண்டிக்கும் போது, அவரை வர்ணிக்கும் வகையில் தவறாக பேசியுள்ளனர். இதுபோன்ற செயல்பாடுகளை அன்றாடம் சந்தித்து ஒரு கட்டத்தில் மிகுந்த மன உளைச்சலாகி பல நாட்கள் தூங்காமல் இருந்துள்ளேன்,” என்கிறார் சேவியர் சந்திரகுமார்.
“இதுபோன்ற மாணவர்கள் செயல்பாட்டை முற்றிலுமாக மாற்ற பள்ளி சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். குறிப்பாகப் போதைக்கு அடிமையான மாணவர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்குவது, வல்லுநர்கள் மூலமாக ஊக்கமளிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்துள்ளோம். தொடர்ச்சியாக இதுபோன்று செய்வது வருவதன் விளைவாக நிறைய மாணவர்கள் அவர்கள் தவறைத் திருத்திக் கொண்டுள்ளனர்" என்கிறார் சேவியர் சந்திரகுமார்.
சம்பவம் 2: மாணவர்கள் இடையிலான மோதலில் ஒருவர் பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்புகள் முடிவடைந்தது பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அதில் இரண்டு மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
பின்னர் ஒரு மாணவர் மற்றொரு மாணவரின் தலையில் அடித்ததில் அவருக்கு வலிப்பு ஏற்பட்டு அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார். சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்துச் செல்லும் போது வழியில் உயிரிழந்து விட்டார். இந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட மாணவனைக் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
"மனிதம் குறைந்ததே காரணம்"
மாணவர்கள் ஏற்படுத்தும் சிக்கல்கள் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழுப்புரம் செஞ்சி பகுதிக்கு உட்பட்ட அரசு உதவிபெறும் ஆரம்ப பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜீவா ஜாக்குலின் அவரது கருத்துக்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார்.
"தற்போதுள்ள மாணவர்கள் சிலரின் மனநிலை மனிதம் அற்ற நிலையில் மாறியுள்ளது. பாடமெடுக்கும் ஆசிரியரை ஒரு மாணவன் எவ்வளவு தவறாகப் பேச முடியுமோ அவ்வளவு தவறான வார்த்தைகளால் திட்டுகின்றார். இப்படிச் செய்யும் போது இவர்கள் படித்தால் என்ன? படிக்காவிட்டால் என்ன? நாம் சொல்கின்ற கடமைக்குச் சொல்லி விடுவோம் என்று எண்ணும் சூழலுக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.”
“வகுப்பெடுக்கும் போது ஆசிரியர்கள் மீது மாணவர்களின் பார்வையே வேறு விதமாக இருக்கிறது. மாணவர்கள் நடவடிக்கைகள் குறித்துப் பெற்றோரிடம் தெரிவித்தால், அவர்கள் எங்கள் கூற்றை ஏற்க மறுக்கின்றனர். தற்போது இருக்கக்கூடிய மருத்துவர்கள், காவலர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள அனைவருமே ஆசிரியர்களிடம் இருந்து சென்றவர்கள். நாங்கள் கற்பிக்க என்றும் தயங்கியது இல்லை. எங்கள் வேலையைச் செய்யவிடாமல் தொடர்ந்து மன உளைச்சலைத் தான் ஏற்படுத்துகின்றனர்," என்றார் ஆசிரியை ஜீவா.
"ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டுள்ளன"
மாணவர்களைத் தண்டிக்க வேண்டும் என்ற மனநிலையில் எந்த ஆசிரியர்களுக்கும் இல்லை என்று கூறும் ஆசிரியை ஜீவா, "ஒவ்வொரு நாளும் மாணவர்கள் என்னென்ன புதுமையான விஷயங்களைக் கற்பிக்கலாம் என்ற ஆர்வத்துடன் வரும் தங்களுக்கு மன உளைச்சலை மட்டுமே தருகின்றனர்," என்கிறார்.
"எங்கள் மனநிலையை முற்றிலுமாக மாற்றி மன உளைச்சலைத் தான் ஏற்படுத்துகிறார்கள். இதுபோன்ற செயல்களால் நிறைய ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி விருப்ப ஓய்வு பெற்றுச் சென்றுள்ளனர்.
சிகை அலங்காரம், சீருடைகள் வரை எப்படி இருக்க வேண்டும் என்று அரசு கட்டுப்பாட்டு வழிமுறைகள் வழங்கியுள்ளது. ஆனால் மாணவர்களிடம் அதைப் பின்பற்ற வலியுறுத்தினால் பெற்றோரிடம் கண்டிப்பதாக கூறி அழைத்து வருகின்றனர். பெற்றோர் அதிகாரிகளிடம் புகார் அளிக்கின்றனர்.
அதிகாரிகளும் அவர்களிடம் எதையும் எடுத்துரைக்காமல் எங்களைக்கேட்கின்றனர். மாணவர்களை எதுவுமே சொல்லக்கூடாது கேட்கக்கூடாது என்று ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டுள்ளது," என்கிறார் ஜீவா ஜாக்குலின்.
அடிப்படை காரணம் என்ன?
மாணவர்கள் எதனால் இவ்வாறு நடந்து கொள்கின்றனர்? எவ்வாறு மாணவர்களை அணுகுவது என்று மருத்துவ உளவியலாளர் வி.சுனில் குமாரிடம் பிபிசி தமிழ் கேட்டது. அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அவர் அளித்த பதில்களையும் கீழே தருகிறோம்.
ஆராய்ச்சிகள் மற்றும் உளவியல் ரீதியாக மாணவர்களிடையே குறிப்பாக நான்கு வகையான பிரச்னைகள் கண்டறியப்பட்டுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கிறது.
1. பள்ளி சொத்தை சேதப்படுத்துவது மற்றும் அது தொடர்பான வன்முறை
2. போதைப் பொருட்களுக்கு அடிமையாகுதல் (substance abuse).
3. உறவுச் சிக்கல்கள்
4. தற்கொலை. ஆகியவை.
குறிப்பாக 9வது படிக்கும் 50 சதவீத மாணவர்கள் ஆரம்பநிலை போதை வஸ்துக்களை(Gateway drugs) பயன்படுத்துகின்றனர். தற்போது 13 வயதில் இந்த போதைப் பொருட்களை மாணவர்கள் கையாள்கின்றனர். இவை அடுத்த 3 ஆண்டுகளில் 11 வயதாகக் குறையும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அடுத்தாக 13வயதிலிருந்து 19 வயது வரை உள்ள மாணவர்களின் இறப்புக்குத் தற்கொலை முக்கிய காரணமாக உள்ளது. இவை அனைத்துமே உளவியல் ரீதியாக உலகளாவிய ஆராய்ச்சியின் முடிவுகள்.
பரவலாக ஆசிரியர்கள் சொல்வது எங்கள் காலத்தில் எங்களையெல்லாம் கடுமையாகக் கண்டித்தனர். அதனால் தான் இந்த அளவுக்கு வந்துள்ளோம். அடித்தால் தான் மாணவர்கள் நல்ல முறையில் வருவார்கள். இன்றைக்கு எங்களுடைய அதிகாரத்தை அரசு பிடுங்கி விட்டதால் மாணவர்கள் தான்தோன்றியாக இருக்கிறார்கள்.
மேலே குறிப்பிட்ட இந்த மூன்று புள்ளிகளுக்கும் அறிவியல் ரீதியான விளக்கமோ அல்லது அடிப்படை ஆதாரமும் இதுவரை உளவியல் ரீதியாக இல்லை. மாணவர்களை அடிக்க அடிக்க அவன் பயந்த குணம் உள்ளவனாக மாறுவான் அல்லது அதற்கு எதிர்மறையாக அடிக்க ஆரம்பித்து விடுவான்.
குறிப்பாக சில நேரங்களில் மாணவர்களை அடிக்கலாம், உருப்பட வைப்பதற்கு அடிக்கலாம், நான் பெரியவன் அவன் சிறியவன் அதற்காக அடிக்கலாம் என்று அடிப்பதை நியாயப்படுத்தி மாணவர்களுக்கு இதை ஒரு எடுத்துக்காட்டாகக் கொண்டு செல்வது போல் மாறிவிடும்.
அதிகரிக்கும் இடைவெளி
ஒரு மாணவருக்கு தன்னுடைய ஆசிரியர் நேர்மையாக இருக்கிறாரா இல்லையா என்பதை அந்த மாணவனால் சுலபமாக உணர முடியும். உண்மையாகவே அந்த ஆசிரியர் மாணவர்கள் இடையே அக்கறை கொண்டு உள்ளாரா, அவர் எனக்கான ஆசிரியரா என்பதை மாணவர்களால் சுலபமாகக் கண்டறிய முடியும்.
மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே இடைவெளி அதிகரிப்பதனால் தான் அவர்களுக்குள் சிக்கல்கள் ஏற்படுகிறது. இந்த இடைவெளியின் வெளிப்பாடுதான் ஆசிரியர்களுக்கு சில நேரம் அவமரியாதையாக வெளிப்படுகிறது.
ஒரு மாணவர் ஆசிரியரிடம் அவர் தன்னை சார்ந்தவராக, தனித்தன்மை உள்ளவராக, உணரும் வகையில் இருக்க வேண்டும். இவை இரண்டும் நடக்கவில்லை என்றால் அந்த மாணவன் இடையூறு விளைவிக்கும் நடத்தைகளை வெளிப்படுத்துவான்.
இதை நித்திய அதிகாரப் போராட்டம் (eternal power struggle) என்று கூறலாம். அதாவது ஆசிரியர் மாணவர் இருவருக்குமான நித்திய அதிகாரப் போராட்டத்தின் வெளிநாடு தான் இவர்கள் இருவரும் இடையே நடக்கும் முரண்பாடுகள்," என்று கூறுகிறார் உளவியலாளர் சுனில் குமார்.
மாணவர்களுக்கு ஏற்படும் பக்கவிளைவுகள்
"இப்போது இருக்கக்கூடிய மாணவர்கள் மிகவும் உணர்ச்சிவசப் படக்கூடியவர்களாக இருக்கிறார்கள், தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று கூறுவது தவறானது. உலகளாவிய அளவில் பெரும்பாலான மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றால், அவர்களுக்குக் கல்வி மற்றும் கல்வி சார்ந்த அழுத்தம் தான் காரணமாக உள்ளது.
தற்போதைய கால கட்டத்திற்கும் 30, 40 ஆண்டுகளுக்கு முன்பும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது 30 சதவீதம் தற்கொலைகள் அதிகரித்துள்ளன.
நாம் படிக்கும் காலத்தில் இந்த அளவுக்குப் படிப்பதற்குப் போட்டி இருந்ததா?
நாம் படித்த காலத்தில் 12ஆம் வகுப்பு முடித்தால் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவம் மற்றும் இதர படிப்புகள் சேர்ந்த காலகட்டம் இருந்தது.
தற்போது அது மாறி பயிற்சி நிலையங்களுக்குப் பணம் செலவழித்து, நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவம் படிக்க முடியும். இப்படி ஒவ்வொரு விதத்திலும் கல்வி ரீதியாக அழுத்தம் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது அதிகரித்துள்ளது.
இதை உணரலாம் எதற்கெடுத்தாலும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று அவர்கள் மீது பழியைச் சுமத்துவது தவறானது என்கிறார் உளவியலாளர்.
ஆசிரியர்கள் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும் ?
மாணவர்களுக்கும் கற்றல் இயல்பாக, இயற்கையாக, சந்தோஷமாக, மகிழ்ச்சியாக நடக்க வேண்டும். மாணவர்கள் கற்பிப்பதற்கான தளத்தை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். மாணவர்களிடம் நான் கற்பிக்கப் போகிறேன், நீ கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அணுகுமுறையைக் கையாண்டால் கற்றல் நடக்காது.
கற்பித்தல் என்பது ஒரு பழமையான முறையாகும். கற்றுக் கொள்பவர் தயாராக இருந்தால் மட்டுமே அங்கு கற்றல் நடைபெறும். ஆசிரியர்கள் கற்பித்தலை விடுத்து, கற்றல் என்ற அணுகுமுறையை கையாள வேண்டும்.
கற்றலுக்கான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது தான் சிறந்த ஆசிரியரின் பணியாக உள்ளது. ஆசிரியர்களுக்கு உண்டான பண்புகள் உளவியல் ரீதியாக இருக்க வேண்டும். அவை இல்லையென்றால் ஆசிரியர்களுக்குக் கற்பித்தல் கடினமாகத் தான் இருக்கும்.
பழைய குரு சிஷ்யன் கலாசார முறை நமது சமூகத்தில் நிலவுகிறது. மாணவர்கள் ஆசிரியர்களுக்கு அடிபணிந்து நடக்க வேண்டும் என்ற சூழல் கடந்துவிட்டது.
ஆராய்ச்சிகளில் கற்றல் இயற்கையாக நடக்கும் என்று கூறப்படுகிறது. அவை மகிழ்ச்சி மற்றும் நகைச்சுவை மிக்க வகையில் கற்றால் சுலபமாக கற்கலாம், குழுவாக கற்றால் வெகு சுலபமாக கற்கலாம், செய்முறைகளுடன் கற்றுக்கொள்ளும் போது அது மேலும் சுலபமாகிறது. இதனால் தான் தற்போது கற்பிக்கும் முறை ஆராய்ச்சியின் அடிப்படையில் மாறியுள்ளது
மாணவர்களின் மாறி வருகின்ற மனநிலை குறித்தும் நடத்தை கோளாறுகளைக் கையாள்வது குறித்து உளவியல் யுக்திகளை ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். இதை செய்யும்போது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இடையேயான இடைவெளி குறையும். இந்த இடைவெளி அதிகமானால் சிக்கல் அதிகரிக்கும். இந்த இடைவெளிக்கான சமூக காரணங்களை முறியடிக்க வேண்டிய சூழலில் தற்போது இருக்கிறோம்.
சமூகத்தின் கண்ணாடி தான் குழந்தைகள். அந்த குழந்தை சரியில்லை என்றால் சமுகம் சரியில்லை, சமூகம் சரியில்லை என்றால் குழந்தை சரியில்லை என்று அர்த்தம் என்கிறார் உளவியலாளர் சுனில் குமார்.
மாணவர்களுடைய வன்முறைக்கும் போதை பழக்கத்திற்கும் தற்கொலைகளுக்கும் உறவுச் சிக்கல்களுக்கும் அவர்கள் புறச் சூழலில் இருக்கக்கூடிய சமூக காரணிகள் அதிகமாக உள்ளதே ஆகும். இதனை ஒரு சாரார் மீது திணித்திட முடியாது.
இவை அனைத்தையும் மாணவர்கள், ஆசிரியர்கள், சமூகம் மற்றும் அரசு என அனைத்தின் கூட்டு முயற்சியால் சரி செய்திட முடியும் என்கிறார் மருத்துவ உளவியலாளர் சுனில் குமார்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்