You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சிக்கன் மஞ்சூரியன் எந்த நாட்டில் பிறந்தது? இந்தியாவா, பாகிஸ்தானா என கிளம்பிய விவாதம்
சமோசா செய்யும் முறை இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டதா அல்லது பாகிஸ்தானில் இருந்ததா?
பிரியாணி, இந்தியாவின் ஹைதராபாத் நகருக்கு சொந்தமா அல்லது பாகிஸ்தானின் கராச்சி நகரத்திற்கு சொந்தமா?
இனி வரும் நாட்களில், இந்தியா, பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த சமூக ஊடக பயனர்கள் தங்கள் பக்கங்களில் உணவு முதல் கிரிக்கெட் வரை இது போன்ற ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி விவாதிக்கக்கூடும்.
அண்மையில் சீன உணவின் உள்ளூர் வடிவமான ஓர் உணவை முன்வைத்து சமூக ஊடகங்களில் இருநாடுகளை சேர்ந்த பயனர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
சிக்கன் மஞ்சூரியன் சாப்பிடும் போது அந்த உணவு எங்கிருந்து வந்தது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
இந்தியாவின் பெரிய உணவகங்கள் முதல் சாலையோர உணவகங்கள் வரை பல கடைகளின் மெனுவில் இந்த உணவின் பெயர் இல்லாமல் இருக்காது. அப்படியானால் இந்த உணவு ஒர் இந்திய சமையல்காரரால் முதன்முறையாக தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம்.
ஆனால் பாகிஸ்தானிய ஆன்லைன் பயனர்கள் இந்த உணவு லாகூரில் இருந்து உருவானது என்று கூறுகின்றனர். அவர்கள் இது இந்திய உணவு என்பதை ஏற்க மறுக்கின்றனர்.
ஏன் விவாதம்?
சமீபத்தில், 'நியூயார்க் டைம்ஸ்' என்ற அமெரிக்க நாளிதழ், சிக்கன் மஞ்சூரியன் தயாரிப்பதற்கான செய்முறையை ட்விட்டரில் பதிவிட்டு , " இது சீன மற்றும் பாகிஸ்தானிய உணவுகளின் கலவையாகும். தெற்காசியாவில் உள்ள சீன உணவகங்களில் மிகவும் பிரபலமானது சிக்கன் மஞ்சூரியன்," என்று குறிப்பிட்டு இருந்தது.
90களின் பிற்பகுதியில் பாகிஸ்தானின் லாகூரில் உள்ள 'சன் குவாங்' என்ற உணவகத்தில் பல சோதனைகளுக்குப் பிறகு சிக்கன் மஞ்சூரியனின் இந்த வடிவம் தயாரிக்கப்பட்டது என்று அமெரிக்க செய்தித்தாளில் பாகிஸ்தானிய எழுத்தாளர் ஜைனப் ஷா எழுதினார்.
ஆனால் இந்த உணவின் தொடக்கம் பாகிஸ்தான் என்பதை ஏற்க மறுத்து, 'நியூயார்க் டைம்ஸ்' பதிவின் கீழ் ஒரு கருத்து யுத்தமே வெடித்தது.
பாகிஸ்தானிய சைனீஸ் உணவு போன்ற சீன உணவு வகை உலகில் எங்கும் கிடைக்காது. இதை பாகிஸ்தானில் வாழும் சீன மக்களே ஒப்புக்கொள்வார்கள் என ஜோயா தாரிக் என்ற பயனர் பதிவிட்டுள்ளார்.
இது நெல்சன் வாங் என்ற இந்திய - சீன சமையல்காரரால் உருவாக்கப்பட்டது என்று நயனிகா என்ற பயனர் பதிவிட்டுள்ளார். அவரின் உணவகம் மும்பையில் இருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
கொல்கத்தாவின் சைனா டவுனில் பிறந்த நெல்சன் வாங், தனது குடும்பம் கனடாவுக்கு குடிபெயர்ந்த பிறகு மும்பையில் வசித்து வருகிறார் என ரூபாக் பதிவிட்டுள்ளார். விக்கிபீடியாவில் பார்த்து இருந்தாலே இந்த தகவல் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு தெரிய வந்திருக்கும் என மற்றொரு பயனர் பதிவிட்டு இருந்தார்.
'நியூயார்க் டைம்ஸ்' மீது மனிஷ் என்ற பயனர் குற்றம் சாட்டியுள்ளார். 'பத்திரிகையின் ஆசிரியர் பாகிஸ்தானை சேர்ந்தவராக இருந்தால், அந்த உணவு பாகிஸ்தானை சேர்ந்தது என்று அர்த்தம் இல்லை,' என அவர் பதிவிட்டுள்ளார்.
பேட்மேன் என்பவர், "இது நியூயார்க் டைம்ஸ் அல்ல, கராச்சி டைம்ஸ் போல இருக்கிறது" என்று நியூயார்க் டைம்ஸ் பதிவின் கீழ் கருத்திட்டுள்ளார்.
இந்த பதிவின் கீழ் இருக்கும் இந்தியர்களின் பதில்கள் எனக்கு சிரிப்பை வரவழைக்கின்றன. எப்போதும் இந்தியர்களின் மனதிலும், மூளையிலும் பாகிஸ்தான் குடியிருக்கிறது என்று சல்மான் ஜாவித் என்பவர் பதிவிட்டுள்ளார்.
உணவு விஷயங்களில் ஏன் இந்தியர்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்கின்றனர் என்று குஃப்ரான் காலிட் என்ற பயனர் கேள்வி எழுப்பி இருந்தார்..
அதற்கு பதிலளித்த இந்தியப் பயனர் ஒருவர், "நம் வாழ்வில் நமது உணவு மிகவும் முக்கியமானது. எங்கள் உணவைப் பற்றி நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். கிரிக்கெட்டை விட, மதத்தை விட இது அதிகமாக இருக்கும்."
"என் அம்மா இந்த உணவை உருவாக்கினார்" என ஒருவர் பதிவிட்டு இருந்தார்.
"என் நண்பர்களே! நீங்க நல்லா இருக்கீங்களா? இப்போ சிக்கன் மஞ்சூரியனுக்காக சண்டை போடலாமா? இந்திய-பாகிஸ்தான் போர் அடுத்து மஞ்சூரியனுக்காக நடக்குமா?" என கேலியாக பதிவிட்டு இருந்தார் ரோமா.
எங்களுடையது என நிரூபிக்க சிலர் அசோகர் காலத்து தகவல்களை கொண்டு வருகின்றனர். நிச்சயம் இது இரு நாட்டு எல்லைகளிலும் இருந்த உணவாக இருக்கும் என சுஹைர் என்பவர் பதிவிட்டு இருந்தார்.
நியூயார்க் டைம்ஸ் பதிவில் தொடங்கிய கருத்து மோதல் இந்த கட்டுரை எழுதும் வரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் இறுதிவரை சிக்கன் மஞ்சூரியன் இந்தியாவில் உருவாக்கப்பட்டதா அல்லது பாகிஸ்தானுக்கு சொந்தமானதா என்பதை முடிவு செய்ய முடியவில்லை
இரு நாட்டு பயனர்களும் அது தங்களுடையது என குறிப்பிட்டு பல்வேறு தரவுகளை சுட்டிக் காட்டுகின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்