You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சோழர்களின் ஆட்சி: இலங்கையின் தமிழர் பகுதிகள் எவ்வாறு இருந்தன?
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இலங்கையை சோழர்கள் கி.பி. 993ல் இருந்து சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்துள்ளதாக வரலாறு கூறுகின்றது.
இந்த நிலையில், சோழர்களின் இலங்கை வரலாறு மிக முக்கியத்துவம் வாய்ந்தது என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.
சோழ மன்னனான முதலாம் ராஜராஜன், கி.பி. 993ம் ஆண்டில் இலங்கை மீது படையெடுத்துள்ளார்.
இவ்வாறு இலங்கையை கைப்பற்றிய சோழர்கள், அநுராதபுரத்தை தலைநகராக பயன்படுத்தியுள்ளனர்.
அநுராதபுரம் உள்ளிட்ட இலங்கையின் வட பகுதி முழுவதும் சோழர்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
பின்னரான காலத்தில் அநுராதபுரத்தை கைவிட்ட சோழர்கள், பொலன்னறுவையை தமது ஆட்சியில் தலைநகராக அறிவித்துள்ளனர்.
அதன்பின்னர், கி.பி. 1070ம் ஆண்டு காலப் பகுதியில் ராஜேந்திர சோழன், இலங்கையின் தென் பகுதியையும் கைப்பற்றி, தமது ஆட்சியை இலங்கை முழுவதும் நிலைநிறுத்தியிருந்தார்.
சோழர்களின் இலங்கை வரலாறு அதன் ஊடாக மிக முக்கிய பங்கை வகிக்கின்றது.
தமது ஆட்சியை இலங்கையில் உறுதிப்படுத்திய சோழர்கள், தமிழ் மொழியை அரச மொழியாகவும், சைவ மதத்தை அரச மதமாகவும் அறிவித்து ஆட்சி செய்துள்ளனர்.
இதன் அடையாளங்களாக, இன்றும் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் சோழர்களினால் நிர்மாணிக்கப்பட்ட சிவன் ஆலயங்கள் மற்றும் கல்வெட்டுகளை காண முடிகின்றது.
குறிப்பாக பொலன்னறுவை பகுதியில் சோழர்களின் சிவன் ஆலயங்கள், கட்டடங்கள் மற்றும் கல்வெட்டுகளை அதிகளவில் காண முடிகின்றது.
இது தொடர்பில் ஆராய்வதற்காக பிபிசி தமிழ், பொலன்னறுவை பகுதிக்கு பயணம் மேற்கொண்டது.
பொலன்னறுவை நகரம் ஆரம்பிக்கும் எல்லை பகுதியிலேயே, சோழர்களின் அடையாளமாக திகழ்ந்த சிவன் ஆலயங்களின் சிதைவுகளை காண முடிகிறது.
சிவலிங்கம், சிவன் ஆலயத்தின் சிதைவுகள், கட்டடத்தின் சிதைவுகள் என பல்வேறு சோழர்களின் அடையாளங்களை பொலனறுவை எல்லை பகுதியில் காண முடிந்தது.
இந்த அனைத்து வரலாற்று சான்றுகளையும், இலங்கை தொல்பொருள் திணைக்களம் முறையாக பராமரித்து வருவதையும் கவனிக்க முடிந்தது.
அதேபோன்று, பொலன்னறுவை நகருக்குள் சென்றால், சோழர்களால் நிர்மாணிக்கப்பட்ட மேலும் பல ஆலயங்கள், கட்டடங்கள் ஆகியவற்றின் சிதைவுகளை, தொல்பொருள் திணைக்களம் பராமரித்து வருவதை அவதானிக்க முடிந்தது.
அதேபோன்று, சோழர்களினால் நிர்மாணிக்கப்பட்ட சிவன் ஆலயமொன்றில் இன்றும் பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டு வருவதை கவனிக்க முடிந்தது.
இந்த ஆலயத்தில் சிவலிங்கமொன்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கு பூஜைகள் நடத்தப்பட்டிருந்ததையும் பார்க்க முடிந்தது.
பொலன்னறுவை என்பது தற்போது பெரும்பாலும் சிங்கள மக்கள் வாழக்கூடிய பகுதியாக உள்ளது.
பௌத்த அடையாளங்கள் பொலன்னறுவை பகுதியில் பெரும்பாலும் காணப்பட்ட போதிலும், சோழர்களின் அடையாளமாக காணப்படுகின்ற சிவன் ஆலயங்கள் உள்ளிட்ட கட்டடங்கள் மற்றும் கல்வெட்டுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான நிலையில், சோழர்கள் இலங்கையின் தமிழர் பகுதிகளை எவ்வாறு ஆட்சி செய்தார்கள் என்பது தொடர்பிலும் பிபிசி தமிழ் ஆராய்ந்தது.
இது தொடர்பில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்று துறை சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஸ்பரட்ணத்தை சந்தித்து நாம் வினவினோம்.
''சமீபமாக சில நம்பிக்கைவாய்ந்த ஆய்வுகளை பார்க்கின்ற போது, பொலன்னறுவையிலிருந்து சோழர்களின் ஆட்சி மறைந்தாலும், தமிழ் பிரதேசங்களிலே அவர்களின் ஆட்சி மேலோங்கியிருந்தது. தொடர்ந்தும் ஐரோப்பிய காலம் வரை நிலவியது என்பதை உறுதிப்படுத்தக்கூடிய பல நம்பகரமான கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக திருகோணமலை - கோமாரன்கடவலை என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு, பொலன்னறுவையிலிருந்து சோழர் ஆட்சி மறைந்தாலும், அவர்களுடைய ஆட்சி அங்கிருந்த தமிழர்களோடு இணைந்ததாக இருக்கலாம்.
இவர்களின் ஆட்சி கிழக்கிலங்கையில் தொடர்ந்து இருந்தது என்றும், அந்த காலக் கட்டத்திலே தமிழ் பிரதேசங்கள் மண்டலம், வள நாடு, நாடு, கூற்றம், பற்று என்ற பெயர்களினால் நிர்வகிக்கப்பட்டதையும், அப்பிரதேசங்களில் சில இந்து ஆலயங்கள் அமைக்கப்பட்டது பற்றிய செய்திகளையும் அது கொடுப்பதாக காணப்படுகின்றது.
சோழர் ஆட்சி முடிந்ததன் பின்னர் சோழர் ஆட்சியோடு வந்த படை வீரர்கள், கலைஞர்கள், பிராமணர்கள், ராணுவ வீரர்கள், நிர்வாகிகள் மீண்டும் தமிழகத்திற்கு செல்லாது, இலங்கையில் நிரந்தரமாக தங்கிக் கொண்டமையினால் தமிழர்கள் வாழ்ந்த பிரதேசத்தில் மேலும் மக்கள் தொகை அதிகரித்தது என்ற ஒரு கருத்தை பேராசிரியர் அரசரட்ணம் மிக ஆழமாக முன்வைக்கின்றார்.
1964ம் ஆண்டு முன்வைத்த கருத்து உண்மை என்பதை இப்போது கோமாரண்கடவலை, கோடலிபறிச்சான், முல்லைத்தீவில் பெரிய பற்று போன்ற இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் சோழர் ஆட்சியில் செல்வாக்கு பெற்ற படைவீரர்கள், இங்கிருந்த சுதேச மக்களோடு சேர்ந்தோ, தனித்தோ அதிகாரம் பெற்றிருந்ததையும் அந்த வழி வந்தவர்களே வன்னி சிற்றரசர்கள் என்றும் அந்த கல்வெட்டுக்கள் கூறுவதாக இருந்தது.
பொதுவாக வரலாற்று இலக்கியங்களிலும், கனிசமான கல்வெட்டுக்களிலும் பொலன்னறுவையும், கிழக்கிலங்கையும், மாதோட்டம் வட இலங்கை பற்றிய பல செய்திகள் காணப்பட்டாலும், இந்த சோழருடைய ஆட்சி யாழ்ப்பாணத்தில் செல்வாக்கு பெற்றிருக்கலாம் என்பதற்கும் சில கல்வெட்டு ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன.
குறிப்பாக யாழ்ப்பாணம் கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட ராஜேந்திர சோழனின் கல்வெட்டு, இங்கிருந்த ஒரு ஆலயத்திற்கு இலுப்பை பால், நெல், ஆடு என்பவற்றை ராஜேந்திர சோழன் காலத்தில் தானமாக வழங்கப்பட்ட செய்தியொன்றை சொல்வதாக காணப்படுகின்றது.
அதேபோன்று உரும்புராய் பகுதியில் பிள்ளையார் ஆலயமொன்றிலிருந்து இரண்டு கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. யாழ்ப்பாணத்தின் பல இடங்களில்; சோழ வம்சத்தை, சோழ நாட்டை நினைவுப்படுத்தக்கூடிய தனிநபர் பெயர்களும், ஆட்களின் பெயர்களும் காணப்படுகின்றன. குறிப்பாக வரணியில் சோழர் மாசேடி, செம்பியன்பற்று போன்றவை சோழர்களின் காலங்களில் முன்னிலைப்படுத்தப்பட்ட பெயர்களாக காணப்படுகின்றன.
சோழர் அநுராதபுரத்தை வெற்றிக் கொள்வதற்கு முன்னர், அவர்களுடைய ஆதிக்கம் வட இலங்கையின் யாழ்ப்பாணத்தில், திருகோணமலையில் முதலில் ஏற்பட்ட பின்னரே, அநுராதபுரம் அரசை வெற்றிக் கொண்டு, பொலன்னறுவையை தலைநகராக்கிக் கொண்டார்கள் என்பது பேராசிரியர் இந்திரபாலாவின் கருத்தாகும்.
அவ்வாறான நிகழ்வுகள் ஏற்பட்டிருக்கக் கூடிய சான்றுகளும் சிங்கள இலக்கியங்களில் காணப்படுகின்றன. ஆகவே சோழர் ஆட்சிக்கு முன்னரே இலங்கை தமிழர் இடையே ஒரு வலுவான ராணுவ அரச மரபு தோன்றியுள்ளது.
அதன்பின்னர் ஏற்பட்ட சோழர்களின் ஆட்சி, பெரும்பாலும் வடகிழக்கு இலங்கை, தமிழர்களின் பராம்பரிய பிரதேசம் என்ற கருத்தை மேலும் வலுப்படுத்த உதவியதாக காணப்படுகின்றது," என வரலாற்று துறை சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் தெரிவிக்கின்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்