ரேபரேலியை ராஜினாமா செய்த இந்திரா காந்திக்கு நேர் மாறாக ராகுல் காந்தி முடிவு ஏன்?
ராய்பரேலி, வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் இருந்து எம்.பி.யாக தேர்வான காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தனது வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அங்கு காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர்களுள் ஒருவரான பிரியங்கா காந்தி போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராகுல் முடிவின் பின்னணி என்ன?
நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்தின் ராய்பரேலி, கேரளாவின் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். ராய்பரேலி தொகுதியில் சுமார் 3 லட்சத்து 90 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் வயநாடு தொகுதியில் சுமார் 3 லட்சத்து 64 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் அவர் வெற்றிபெற்றார். ஆனால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒருவர் ஒரு தொகுதியை மட்டுமே மக்களவையில் பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என்பதால் ராகுல் காந்தி இரு தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பாஜகவின் எழுச்சியால் காங்கிரஸ் நெருக்கடியில் இருந்த போது கைகொடுத்த வயநாடு தொகுதி எம்.பி,யாக நீடிப்பாரா? அல்லது அதிக எம்.பி.க்களைக் கொண்ட உத்தரபிரதேசத்தில் காங்கிரசை மீண்டும் வலுவான இயக்கமாக வளர்த்தெடுக்கும் முகமாக ரேபரேலியை தக்க வைப்பாரா? என்ற ஊகங்கள் அப்போது முதலே இருந்து வந்தன.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, இரண்டு தொகுதிகளில் இருந்து மக்களவைக்கு தேர்வான நபர் இரண்டில் எந்த தொகுதி எம்.பி.யாக நீடிப்பது, எதனை ராஜினாமா செய்வது என்பதை 14 நாட்களுக்கு அறிவிக்க வேண்டியது கட்டாயம். அதன்படி, இதற்கு ஜூன் 18ஆம் தேதியே கடைசி நாள் என்ற நிலையில், ஜூன் 17ஆம் தேதியான நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ராகுல் காந்தி வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்வார் என்றும் ராய்பரேலி தொகுதி எம்.பி.யாக அவர் தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டது. ‘ ராய்பரேலி, வயநாடு ஆகிய இரு தொகுதிகளின் மக்களுக்கும் தனக்கும் இடையே உணர்வுப்பூர்வமான பந்தம் இருப்பதாக கூறிய ராகுல் காந்தி, வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்தாலும் தொடர்ச்சியாக வயநாடுக்கு செல்வேன் என ராகுல் காந்தி தெரிவித்தார்.
வயநாடு தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி பேசும்போது, ‘ராகுல் காந்தி இல்லாததை வயநாடு மக்கள் உணர விடமாட்டேன் ' என குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
ராய்பரேலியை தக்க வைக்க முடிவு செய்தது ஏன்?
காங்கிரஸ் கட்சி நெருக்கடியான நேரத்தில் கைகொடுத்த வயநாடுக்கு பதிலாக, ராய்பரேலி தொகுதியை ராகுல் காந்தி தக்க வைத்துக்கொள்ள முடிவு செய்தது ஏன்?
இது குறித்து மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் பிபிசியிடம் பேசும்போது, ராகுல் காந்தி டெல்லி அரசியலில் தீவிரமாக ஈடுபட தீர்மானித்துவிட்டார் என்பதற்கான முன்னோட்டமாகவே இதனைக் கருதுகிறேன். ஆண்டின் 365 நாட்களிலும் தேசிய அரசியலில் முனைப்புடன் இருக்க அவர் தலைநகரிலேயே தொடர்ந்து இருக்க வேண்டியது அவசியம். அதற்காகவே, அவர் ரேபரேலியை தேர்வு செய்திருக்க வேண்டும்.” என்றார்
அரசியல் விமர்சகரும் எழுத்தாளருமான நீர்ஜா சௌத்ரி பார்வை வேறு விதமாக இருக்கிறது. பிபியிடம் பேசிய அவர், ‘ இது காங்கிரஸ் கட்சியின் நன்கு திட்டமிடப்பட்ட முடிவு என்று நினைக்கிறேன். உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் செயல்பட்ட விதத்தையும், பாஜக தோல்வியை சந்தித்த விதத்தையும் பார்க்கும்போது, உத்தரப் பிரதேசத்துக்கு நாங்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை தெரிவிக்கும் விதமாக இந்த முடிவை காங்கிரஸ் எடுத்துள்ளது’ என்றார்.
வயநாடு தொகுதியில் போட்டியிடுவதன் மூலம் பிரியங்கா காந்தி முதன்முதலாக நேரடியாக தேர்தல் அரசியலில் களமிறங்க உள்ளார். பிரியங்கா தனக்கு நன்கு பரிட்சியமான ராய்பரேலி தொகுதியில் போட்டியிடாமல் வயநாடு தொகுதியில் போட்டியிடுவது எப்படிபட்ட முடிவாக இருக்கும்? வயநாடு மக்கள் அவரை ஆதரிப்பார்களா?
‘பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்’ என்கிறார் நீர்ஜா சௌத்ரி. ’ராகுல் காந்தியின் முடிவை வயநாடு மக்கள் துரோகமாக எடுத்துக்கொள்வார்களா என்பதை பார்க்க வேண்டும். எனினும், பிரியங்கா அத்தகைய எண்ணம் ஏற்படாதவண்ணம் பார்த்துக்கொள்வார். தேர்தல் முடிவுகளை தனக்கு சாதகமாக மாற்றுவார்’ என்றும் அவர் தெரிவித்தார்.
’உண்மையில் பிரியங்கா காந்தி, ராகுல் காந்தியை விடவும் உறுதியான, மக்களைக் கவரும் தலைவர். நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் கூட, மோதிக்கு பதிலடி கொடுப்பதில் ராகுல் காந்தியை விடவும் பிரியங்காவே சிறப்பாக செயல்பட்டார்’ என்று கூறும் குபேந்திரன், ‘மோதியின் குடும்ப அரசியல் குறித்த குற்றச்சாட்டிற்குப் பதில் கொடுத்த பிரியங்கா, என்னுடைய பாட்டி, தந்தை ஆகியோர் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்திருப்பதை முன்னிறுத்தி என்றாவது நாங்கள் வாக்கு கேட்டிருக்கிறோமா என்று கேட்டார். இது மக்களிடையே அதிகம் கவனிக்கப்பட்டது. அவரது வருகையால் தென் இந்தியாவில் காங்கிரஸ் மேலும் பலம் பெறும்’ என்கிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



